மாநிலங்களவையில் தோழர் பி‌.ராமமூர்த்தி அவர்களின் சாதி வர்க்கம் குறித்த உரை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீட்டை நீட்டிக்கக் கோரும் அரசியல் சட்டத்தின் 45 -வது திருத்த மசோதா மீது பி.ஆர். மாநிலங்களவையில் 1980 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியன்று பேசியது.

“எனக்கு முன்னர் பேசிய மதிப்பிற்குரிய நண்பர் மரகதம் சந்திரசேகர் அவர்கள் மனமாற்றம் குறித்து பேசினார்கள். சாதி இந் துக்கள் மத்தியில் ஒரு மனமாற்றம் ஏற்படாதவரை இந்தப் பிரச் னையைத் தீர்க்க இயலாது. எனது அச்சம் எது வென்றால் ஒடுக்குபடு வர்களிடையே மனமாற்றம் ஏற்படுவதில்லை என்பதே. ஒடுக்குமுறை யாளர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொண்டதாக வரலாறு இதுவரை எந்த அற்புதத்தையும் படைக்கவில்லை. இங்குமங்குமாக பல தனிநபர் கள் வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். ஆனால் ஒரு வர்க்கம் என்ற முறையில் ஒடுக்குமுறையாளர்கள் தங்கள் மனதை ஒருபோதும் மாற் றிக் கொண்டதில்லை.

“ஒத்துழையாமை இயக்க காலத்திலிருந்து தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் குறித்து மகாத்மா காந்தி பேசிவந்தார். நீண்டகாலமாகவே சமூக சீர்திருத்தவாதிகள் இந்த நாட்டில் இதற்காக வாதாடி வந்துள்ளனர். வங்காளத்தில் சைதன்யர் இந்த இயக்கத்தை துவக்கினார். நாட்டின் வேறு பல பகுதிகளிலும், பலர் இதர பல சமூக சீர்திருத்த இயக்கங்களைத் துவக்கினர். இவை அனைத்தும் இருந்தபோதிலும் இந்து சமூகமானது இந்தக் கொடுமையிலிருந்து விடுபடவில்லை…..

இந்து சமூகத்தைப் பொருத்தமட்டில் சாதி என்ற கருத்தானது ஆரம்பத்திலிருந்தே வர்க்க ஒடுக்குமுறையாளர்களின் ஒரு ஆயுதமாகவே செயல்பட்டு வந்துள்ளது. அதன் பின்னர் ‘கீதை’ என்பது நால் வருண முறையைக் குறித்து பேசுகிறது. “இந்த வருணங்கள் அனைத்தும் என்னால் உருவாக்கப்பட்டவை” என்று கிருஷ்ணர் சொன்னதாகக் கூறப்படுகிறது. அந்த மோசமான கடவுள் இந்த நாட்டை, அனைத்து சாதிகளையும் உருவாக்குவதற்காக இந்த துரதிருஷ்டம் பிடித்த நாட்டை மட்டும் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது எனக்குப் புரியவில்லை. உலகில் உள்ள இதர நாடுகளை ஏன் அவர் தேர்ந்தெடுக்கவில்லை? ரஷியாவையோ, அமெரிக்காவையோ இங்கிலாந்தையோ அல்லது சீனாவையோ இதற்காக ஏன் தேர்ந்தெ டுக்கவில்லை ?

ஆகவே, மிகவும் அடிப்படையான பிரச்னை இது தான்: இந்த நாட்டின் சாதீயப் பிரிவினை என்பது இந்த நாட்டின் சொத்துடமை வர்க்கம் இந்த நாட்டின் உழைப்பாளி மக்கள் மீது ஒடுக் குமுறையைப் புரிவதற்காகவே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சமூக இயலாமை என்பது, இந்த சமூக அங்கஹீனம் என்பது இந்நாட்டில் ஒடுக்குமுறையாளர் கரங்களில் மிகவும் பயனுள்ள ஆயுதமாகவே இருந்து வருகிறது. இந்த நாட்டின் வலுவடைந்துள்ள சொத்துடமை வர்க்கங்கள் உழைப்பாளி மக்களைப் பிளவுப்படுத்தி அவர்களுடைய ஜனநாயக வளர்ச்சியை தடுத்துக் கொண்டு இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களைக் குறித்து பேசுகிறோம். அவர்களில் 99 சதவீதத்தினர் நிலமற்ற விவசாயத் தொழிலாளிகள். அவ்வப்போது பெயரளவுக்கு நிலச்சீர்த்திருத்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், அவைகளைக் கூட நிறைவேற்ற ஆளுங்கட்சிக்கு அரசியல் உறுதி இருந்ததா? தாழ்த்தப்பட்ட மக்களை வர்க்க அடிப்படையில் நாங்கள் திரட்டி அவர்களுடைய உரிமைக்காக போராடும் பொழுதெல்லாம் நிர்வாகமும், காங்கிரஸ் அரசாங்கமும் எங்கள் மீது பாய்கிறது. எங்களை சிறையில் தள்ளுகிறது. இதுதான் யதார்த்த நிலைமை.

“எனக்கு முன்னர் பேசிய பஸ்வான் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். மேற்குவங்கம், மட்டும்தான் ஒரு சில வருடங்களுக்குள் நிலச்சீர் திருத்தத்தை அமுல்படுத்திய மாநிலம் என குறிப்பிட்டார். ஆனால் இங்குள்ள மத்தியமைச்சர் ஒருவரோ அந்த அரசாங்கத்தை வங்காள விரிகுடாவில் தூக்கி எறிவேன் என்று கூறுகிறார். ஏன்? ஏனென்றால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமையளித்து, நலிவுற்றப் பகுதி மக்களுக்கு உரிமையளித்து நிலச்சீர்திருத்தங்களை அமுல்நடத்தும் அரசியல் உறுதி எங்களுக்கிருக்கிறது என்ற காரணத்தால்.

“சுயநல நோக்கான அரசியல் மனோபாவத்தை வைத்துக் கொண்டு, இந்த நிலச்சீர்திருத்தங்களை அமுல்நடத்த அரசியல் விருப் பமின்மையை வைத்துக் கொண்டு இந்த மக்களின் வாழ்க்கை நிலை மையை முன்னேற்றுவதற்கான வாய்ப்பு எங்கேயுள்ளது ? உங்கள் கட் சியில் ஏராளமாக உள்ள ஒடுக்கு முறையாளர்களின் மனதை மாற்றப் போகிறீர்களா? இது எப்படி நடக்கப் போகின்றது என்பது எனக்குத் தெரியாது. அடிப்படையான பிரச்னை என்னவென்றால், வர்க்கப் போராட்டம் என்பதுதான். இந்த மக்களை உயர்த்திவிட விரும்பும் அனைவரும், இந்த மக்களை அவர்கள் வர்க்க அடிப்படையில் அணி திரட்டி அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடவேண்டும். அவர்களுடைய பொருளாதார நிலைமைகள் உயர்த்தப்பட்டால் அவர்கள் அதை உணருவார்கள் என்பதுடன் சமூக ஒடுக்குமுறைக் கெதிராகவும் போராடுவார்கள். அவர்கள் ஒன்றுபட்டுவிட்டால், பூமி’யில் எந்த சக்தியும் அவர்களைத் தடுக்க இயலாது. இந்த நாட்டின் உழைப்பாளி மக்கள் ஒருமுறை ஒன்றுபட்டுவிட்டால், சமூக மற்றும் பொருளாதார ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் ஒன்றுபட்டுவிட்டால் இந்தப் பூமியில் அவர்கள் வழியில் எந்த சக்தியும் குறுக்கே நிற்க முடியாது. அந்த தீர்வு ஒன்றைத்தான் நான் நினைக்க முடிகிறது.

திருமதி மரகதம் சந்திரசேகர் : வன்முறை மூலமா?

பி. ராமமூர்த்தி: நீங்கள் வன்முறையை ஏவிவிட்டால், அதே வன்முறை மூலம் உங்களுக்குப் பதில் கிடைக்கும். அதைப்பற்றி நாங்கள் என்ன செய்ய முடியும்? வன்முறையில் இறங்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் நாங்கள். எங்கள் உரிமைகளுக்காகப் போராடும் பொழுது நீங்கள் வன்முறையை ஏவினால், மாநில போலீஸ்படையை பயன்படுத்தினால் வேறென்ன செய்யமுடியும். மாநில போலீஸ் படை தற்பொழுது ஓடுக்கப்பட்டுவரும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக ளைப் பாதுகாக்கிறதா அல்லது நிலப்பிரபுக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறதா?

திருமதி மரகதம் சந்திரசேகர்: திரு. ராமமூர்த்தி, அந்த மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு பொருளாதார நடவ டிக்கைகள் எடுக்கும்படி அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

பி. ராமமூர்த்தி: நீங்கள் அதைக் கூறியுள்ளீர்கள். ஆனால் ஒரு விஷயத்தை உங்களுக்கு நான் சுட்டிக் காட்டுகிறேன். கடந்த 30 ஆண்டுகளாக உங்களுக்கு ஏன் அந்த அரசியல் உறுதி இல்லை. உங்களுடைய கட்சியின் வர்க்க சேர்மானத்தின் காரணமாகத்தான் அந்த அரசியல் உறுதியின்மை ஏற்பட்டுள்ளது. அதை நாம் மறந்து விட முடியாது. எனவே, அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுவதால் மட்டும் பயன் ஏற்பட்டுவிடாது. அவர்கள் பல சட்டங்களை இயற்றலாம். ஆனால் அதனால் எவ்வித பலனும் இராது. அதைத்தான் உங்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.’

Leave a Reply