சுதந்திரப் போராட்ட வீராங்கனையும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான தோழர் பாப்பா உமாநாத் (Pappa Umanath) 91வது பிறந்த தினம் இன்று
(1931 ஆகஸ்ட் 5)
நமது புதுச்சேரியின் ஒரு பகுதியான காரைக்கால் அருகில் உள்ள கோவில்பத்து கிராமத்தில் பிறந்தார் (1931). இவரது இயற்பெயர் தனலக்ஷ்மி. ஒன்றரை வயதில் தந்தையை இழந்தார். எனவே அம்மா குழந்தைகளை அழைத்துக்கொண்டு திருச்சி பொன்மலை வந்து, அங்கு ரயில்வே தொழிலாளர் சங்கம் அருகே குடிசை அமைத்து, பலகாரங்கள் செய்து விற்று வாழ்ந்துவந்தார்.
பலகாரக் கடைக்கு கம்யூனிசத் தலைவர்கள் பலர் வருவார்கள். அந்தக் குடும்பத்துக்கு அவர்களுடன் நட்பு ஏற்பட்டது. சிறுமி தனலக்ஷ்மி பள்ளியில் படித்துக்கொண்டே தாயாருக்கு உதவி செய்வார். அப்போது அங்கு வரும் அனைவரும் சிறுமியை ‘பாப்பா’ என்று அழைக்கத் தொடங்கினர். இதுவே அவரது பெயராக நிலைத்துவிட்டது.
குடும்பச் சூழல் காரணமாக, 8-ம் வகுப்பு வரையில் மட்டுமே படிக்க முடிந்தது. உலகப்போர், இந்திய விடுதலைப் போராட்டம் குறித்து தலைவர்கள் பேசிக்கொண்டதை உன்னிப்பாக கேட்டு உலக நடப்புகளை அறிந்துகொண்டார். இடைவிடாத நூல் வாசிப்பு மூலம் தன்னைத் தானே பட்டைத் தீட்டிக்கொண்டார்.
ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் கலந்துகொண்டு, முழக்கமிட்ட 12 வயதே ஆன இந்தச் சிறுமி சிறை சென்றார். சிறுமி என்பதால் நீதிமன்றம் இவரை விடுதலை செய்தது. ரயில்வே தொழிலாளர்களுக்கு வழிகாட்ட, பொன்மலைக்கு வந்த கம்யூனிசத் தலைவர்களின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்டார்.
பாலர் சங்கத்தில் சேர்ந்து, சிறுவயதிலேயே தொழிலாளர்கள் போராட்டங்களின்போது அவர்களுடன் சேர்ந்து தானும் கொடியேந்தி, முழக்கமிட்டுச் செல்வார். அடக்குமுறைக் காலத்தில் அந்த இயக்கத் தலைவர்களுக்கு உணவு, தங்கும் இடம் ஏற்பாடு செய்வதில் தனது தாயுடன் இணைந்து உதவினார்.
கம்யூனிச இயக்கத்தின் இளம்தலைவர்களில் ஒருவரான உமாநாத்தைத் திருமணம் செய்துகொண்டார். இளம்வயதிலேயே சிறப்பான அரசியல் கட்டுரைகள் நிறைய எழுதியுள்ளார். ரயில்வே யூனியனின் ‘தொழிலரசு’ இதழின் துணையாசிரியராகவும் ‘மகளிர் சிந்தனை’ இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டார்.
கட்சித் தலைவர்களுள் ஒருவரான ஜானகி அம்மாளுடன் சேர்ந்து தமிழகத்தில் ‘அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை’த் தோற்றுவித்தார். அதன் நிறுவனத் தலைவராகவும் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவராகவும் செயல்பட்டார். நகைச்சுவையுடன் பேசுவதில் வல்லவர். நிறைய பழமொழிகளைப் பயன்படுத்துவார்.
தமிழகத்தில் எங்கே, எப்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடக்குமுறைகள் நடந்தாலும், பெண்களை அணி திரட்டி, போராட்டங்கள் நடத்துவார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்கவும் போராடினார்.
திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது, பொன்மலைப் பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வருவதில் முன்னின்று செயல்பட்டார். பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, சட்டப்பேரவையில் குரல் கொடுப்பது, அரசியல் கட்சித் தலைவர்களோடு பேசுவது, அதிகாரிகளைத் தொடர்பு கொள்வது என அத்தனை முனைப்புகளையும் மேற்கொண்டு வெற்றி பெற்றுவிடுவார்.
அதிகம் படிக்காத பெண் ஊழியர்களிடம் தலைமைப் பண்புகளை வளர்ப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டவர். இறுதிவரை பெண்களின் உரிமை, சுதந்திரம், கல்விக்காக அயராது பாடுபட்ட, அரசியல் போராளி பாப்பா உமாநாத், 2010-ம் ஆண்டு தமது 79-வது வயதில் மறைந்தார்.