நீங்க எத்தனை வேலை சாப்பிடு றீங்க, எத்தனை சேலை வச்சிருக்கீங்க, சைக்கிளா? இருசக்கர வாகனமா? வீட்டில டிவி இருக்கா? இது போன்ற கேள்விகளின் அடிப்படையில் புதுச்சேரியில் வறுமையில் உள்ளவர்களை கணக்கெடுப்பதற்கு 2013ஆம் ஆண்டில் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தினமும் இரண்டு வேலை உணவும், நான்கு சேலையும், ஓடு போட்ட வீடும் இருந்தால் ஒருவர் வறுமை கோட்டிற்கு மேல் வசதி படைத்தவர் ஆகிவிடுவார். அவருக்கு அரசின் உதவியோ, பொது விநியோக திட்டத்தின் சலுகைகளோ வழங்கத் தேவையில்லை என்ற அந்த கணக்கெடுப்பை மக்கள் மிகக் கடுமையாக எதிர்த்து திட்டத்தையே முறியடித்தனர். எப்படியாவது பொதுவிநியோகத்திட்டதை ஒழித்துவிடுவது என்று மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆளும் என்ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணியும் ஒன்றிய பாஜக அரசும் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது. வரலாறு விடுதலைக்கு முன்பும், பின்பும், இந்தியா பலமுறை உணவு பஞ்சங்களையும் வறட்சிகளையும் கண்டது. உணவு தானியத்திற்கு மேலை நாடுகளையும் சார்ந்திருக்க வேண்டிய நிலையும் இருந்தது. ஒரு கட்டத்தில் இந்தியாவின் உணவு உற்பத்தி பெருகியது. ஆனால் ஏழ்மை, வறுமை , பட்டினி நீடித்தது. இதற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மக்கள் நல இயக்கங்கள் தேசம் தழுவிய பந்த் உள்ளிட்ட வீரம் செரிந்த போராட்டங்களை நடத்தின. ஆட்சியாளர்களின் போலியான வாக்குறுதிகள், வெற்று கோசங்கள் மக்களின் பசியியை போக்கவில்லை. வெறும் வாய்பந்தல் போட்டு இந்திய மக்களை ஏமாற்ற முடியாது என்பதை இந்த போராட்டங்கள் உணர்த்தின.
இதன் அடிப்படையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அவசியப்பொருள்கள் தடையின்றி கிடைக்கவும் உணவுப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தவும் வகுக்கப்பட்ட மிகப்பெரிய அங்கம்தான் பொது விநியோக அமைப்பு. நமது சில்லறை வணிகமான மளிகை கடை, காய்கறி கடைகளை கபளீகரம் செய்ய அன்னிய பெரு முதலாளிகளும், இந்திய பெரும் முதலாளிகளும் புகுந்து மக்களை கொள்ளையடிக்க துவங்கின. இவர்களின் கொள்ளை லாப வியாபாரத்திற்கு இடையூறாக எதுவும் இருக்கக் கூடாது என்பதால் எப்படியாவது பொது விநியோக முறையை அழிக்கிற வேலை செய்து வருகிறது பாஜக அரசு. சோதனை களமாக புதுவை எந்த ஒரு மக்கள் விரோத திட்டத்தை முதலில் சோதனை செய்து பார்க்கிற இடமாக புதுச்சேரியை தேர்ந்தெடுத்து நாசமாக்கி வருகின்றனர். உதராணத்திற்கு மண்ணெண்ணெயை நிறுத்தினார்கள். ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற பெயரில் ரேசன் அரிசிக்கு வேட்டு வைத்தனர். ஆதார் அட்டையை அமலாக்கம் செய்தனர். தனியார் மருந்து கம்பெனிகளுக்காக சுகாதார அடையாள அட்டை திட்டத்தை அறிமுகம் செய்தார்கள். தொடர் போராட்டங்கள் உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காத்திருப்பு போராட்டத்தை நடத்தி முறியடித்தது. ஆனாலும், மக்களின் நலன்கள் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ரேசன் கடைகளை மூடிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஒன்றிய ஆட்சியாளர்கள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
அன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் அரசும் ஊசலாட்டம் காரணமாக இலவச அரிசி திட்டத்தை நிறுத்த முன்வந்தது. மீண்டும் மக்களை திரட்டிய மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. சட்டப்போராட்டத்தை நடத்தியது. கிரண்பேடி வலுக்காட்டயமாக திணித்ததை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. சிபிஎம் தொடர்ந்து நடத்திய போராட்டத்தால் ரேசன்கடைகளில் ஏழை மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 630 பேர் ரேசன் கடையில் ஊழியர்களாகவும் உதவியாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கமிஷன் அடிப்படையில் மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதால் இதுவரைக்கும் 9 தொழிலாளர்கள் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். ஆகஸ்ட் 2 இயக்கம் கடந்த காலத்தில் ஆட்சியாளர்களின் மோசமான மக்கள் விரோத நடவடிக்கைகள் தொழிலாளர்களின் போராட்டங்கள் மூலமாக முறியடிக்கப்பட்டது. தற்போது மக்களின் உணவில் கை வைத்து ஏழை எளிய மக்களை பசியின் துயரத்தை ரசித்துக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் போராட்டத்தினால் முறியடிக்கப்படும்.