மங்காத புகழ் பெற்ற மக்கள் ஊழியர் தோழர் பொ.மோகன்.

தமிழக மக்களின் நன்மதிப்பையும் பேராதரவையும் பெற்றவர் பத்தாண்டு காலம் மதுரை மக்களவை உறுப்பினராக நேர்மை, தூய்மை, எளிமை என்ற சொற்களுக்கு எடுத்துக்காட்டாய் செயல்பட்டவர். உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியை மதுரை மக்களுக்காக மட்டும் பயன்படுத்த வில்லை; தென் மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் அரசு ராஜாஜி மருத்துவ மனையின் மேம்பாட்டிற்கும் பயன்படுத்தியவர்; மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் முழங்கியவர். அவரது முழக்கமும், தொடர் போராட்டங்களும் இன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழி யாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் எனக் குரல் கொடுத்தவர். மதுரை தொழில் நகரமாக முன்னேற்ற வேண்டுமென தொடர்ந்து போராடியவர் என எல்லா பெருமைக ளுக்கும்சொந்தக்காரர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் தோழர் பொ.மோகன்.

பொ. மோகன் மதுரை மாவட்டம் சோழ வந்தானில் பிறந்தார். அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ படித்தார். 1973- ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதற்கு முன் இந்திய மாணவர் சங்கத்தில் பணியாற்றினார். கல்லூரி படிப்பை முடித்த அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றுபட்ட மதுரை மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தார். பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நகர் மாவட்டச் செயலாளராக வும் பொறுப்பு வகித்தார். மக்களின் பல்வேறு அடிப்படைப் பிரச்ச னைகளுக்காகவும், தொழிலாளி வர்க்கத் தின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை யின் வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி அவர் தலைமையில் நடத்திய போராட்டம் முக்கியமானது. இந்தப் போராட்டத்தின் போது பொ.மோகன் காவல்துறையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு நீண்ட காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டு களில் தொடர்ந்து இரண்டு முறை மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மக்க ளவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஒரு மக்களவை உறுப்பினராக தான் தேர்வு செய்யப்பட்ட தொகுதிக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் மக்களவையில் தொடர்ச்சியாக பேசியுள்ளார்.

பொ.மோகன் என்றால் மதுரை மக்களுக்கு முதலில் அவருடைய இரு சக்கர வாகனமும் அவருடைய எளிமையும் தான் நினைவுக்கு வரும். 2001- ஆம் ஆண்டு மதுரை மாவட்ட வீடியோ போட்டோ ஒளிப்பதிவாளர் சங்க நிகழ்ச்சிக்கு அவர் வந்துவிட்டு சென்றார். அவரை வழி அனுப்ப சங்க உறுப்பினர்கள் உடன் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வெளியில் வந்து வழி அனுப்பினார்கள். அப்போது தாங்கள் வந்த வாகனம் எங்கே என்று வழியனுப்ப வந்த சங்க நிர்வாகிகள் கேட்டார்கள். உடனடி யாக அவர் எம்.80 அருகில் வந்து இதுதான் என்னுடைய வாகனம் என்று கூறினார். அவர்களுக்கு பெரும் ஆச்சரியம். ஒரு “எம்.பி” இரு சக்கர வாகனத்தில் வந்து செல்கிறார் என்பது. அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன் மதிப்பையும் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு மதிப்பையும் மரியாதையை யும் பெற்றுத் தந்தவர். 1999 – 2009 ஆம் ஆண்டு வரை மக்கள் பணியை திறம்படச் செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றார். பொ.மோகன், மக்களவையில் தமிழை வழக்காடு மொழியாகவும், செம்மொழியாகவும் அறிவிக்கவேண்டும் என்று பேசியதைத் தொடர்ந்து ஆங்கில எழுத்தில் இருந்த ‘பி.மோகன்’ என்று எல்லோரும் அழைத்த பெயரை பொ.மோகன் என்று மாற்றிக்கொண்டார்.

2009 -ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது உடல்நல குறைவு காரணமாக தேர்தல் பிரச்சாரத்தில் முழு மையாக அவரால் ஈடுபட இயலவில்லை. அந்தத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து உடல் நலன் மிகவும் பாதிக்கப்பட்ட அவர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர் சிகிச்சை யிலிருந்த அவர் 2009- ஆம் ஆண்டு அக்டோபர் – 30- ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.

கட்டுரையாளர் தோழர் இரவிக்குமார்

Leave a Reply