வரதராஜிலு -ராஜபங்காரு தம்பதியரின் மகனாக பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி 1911 ஆம் ஆண்டு பிரெஞ்சிந்தியப் பகுதியான பாண்டிச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் கைலாச சுப்பையா என்பதாகும். இவர் கலவை கல்லூரி உயர்நிலை பள்ளியில் கல்வி கற்றவர். தனது 14வது வயதில் இருந்து சுதந்திர போராட்டத்தில் கலந்துக்கொள்ள துவங்கினார். 1927ல் கடலூர் வந்த காந்தியை போய் பார்க்க தனது நண்பர்களோடு சைக்களில் புதுவை சென்றார் சுப்பையா அதன்பின் 16வது வயதில் சக காங்கிரஸ் தலைவர்களுடன் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு புதுவையில் இருந்து சென்றார். அவர் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவராக இருந்தபொழுது மார்க்சிய சிந்தனையாளர் சிங்காரவேலர் எழுதிய நூல்களை படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது ‘லெனின் வரலாறு’ போன்ற சிங்காரவேலரின் நூல்கள் சுப்பையா மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதேபோன்று ரஷ்யப் புரட்சி போன்ற நூல்களும் அவர் மனதைக் கவர்ந்தன. பாண்டிச்சேரியில் ‘பிரஞ்சிந்திய வாலிபர் சங்கம்’, ‘ராமகிருஷ்ண வாசகசாலை’ போன்ற அமைப்புகளை உருவாக்கி மாணவர்களையும், இளைஞர்களையும் தேசிய இயக்கத்துக்கு ஆதரவாக திரட்டி வந்தார்.
ஆரம்பகால அரசியல்வாழ்வில் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டார். 1933 ஆம் ஆண்டு அரிஜன சேவா சங்கம் துவக்கினார். 1934 பிப்ரவரி 17ந்தேதி அதே சுப்பையா காந்தியை அழைத்து வந்து புதுவையில் கூட்டம் நடத்தினார். இது அவர் வாழ்வில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது. “சுதந்திரம்” என்ற பத்திரிகை நடத்தி வந்தார். புதுவை ஒன்றிய பிரதேசத்தின் தொழிற்சங்க இயக்கம் உருவாக்கப்பட்டதின் முன்னோடி இவர்.
கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கம்.
அமீர் ஹைதர்கான் கேட்டுக் கொண்டபடி தேச பக்தர் பாஷ்யம், சுப்பையாவை சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னை ராயப்பேட்டை இந்திய ஊழியர் சங்க கட்டிடத்தில் அச்சமயம் அமீர் ஹைதர்கான் தங்கியிருந்தார். அங்கே சுப்பையா அவரை சந்தித்துப் பேசினார். அன்று முழுவதும் ஹைதர்கான் மார்க்சியம் குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் தொழிலாளி வர்க்கத்தை அரசியல்ரீதியாக திரட்டி வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார்.
1936இல் எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட தொழிற்சங்க உரிமைகள் கோரி சவானா மில் ரோடியார் மில். கப்ளே மில் மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தை ஒடுக்க 1936 ஜூலை 30 அன்று பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ராணுவத்தின் துணையோடு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் அமலோற்பவநாதன். ராஜமாணிக்கம், கோவிந்தசாமி, ஜெயராமன், சுப்பராயன் சின்னையன், பெருமாள். வீராசாமி மதுரை, ஏழுமலை. குப்புசாமி, ராஜகோபால் ஆகியோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் இந்தியாமட்டுமில்லாமல் உலக நாடுகளின் கவனத்தைப் புதுச்சேரியின் பக்கம் திருப்பியது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் தோழர் வ.சுப்பையா அவர்களே. அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6இல் பிரெஞ்சு – இந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும்உரிமையும் வழங்கப்பட்டன. ஆசிய நாடுகளிலேயே 8 மணிநேர வேலை என்பது புதுச்சேரியில்தான் முதன் முதலாக அமுலாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக் கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் சமூகப் பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன.
1954ல் புதுச்சேரி இந்தியாவோடு இணைக்கப்பட்டன அப்போது அவரை நாடு கடத்தி வைத்திருந்தது பிரெஞ்ச் அரசாங்கம். 1955ல் புதுவைக்கு வந்தார் அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் அவரை வரவேற்றனர். அதன்பின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டு முறை எதிர்கட்சி தலைவர், கூட்டணி அமைச்சரவையில் 1969 முதல் 193 வரை விவசாயத்துறை மந்திரியாக என பதவி வகித்தார். பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு என்கிற தலைப்பில் அவரே நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
தோழர் வ.சுப்பையா 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ந்தேதி மறைந்தார். அவருக்கு புதுவையில் ஆளுயுற சிலை வைக்கப்பட்டது. அவரது இல்லம் காட்சியகமாக அரசு மாற்றியது. மக்கள் தலைவர் என புகழப்படும் அவருக்கு அவரது நூற்றாண்டு விழா ஆண்டான 2011ல் அவரது உருவம் தாங்கிய தபால் தலை வெளியிட்டு கவுரவிக்கப்பட்டது. இவரது மனைவி சர்ஸ்வதி அவரும் சுதந்திர போராட்ட காலத்தில் பெரிய போராட்டவாதியாக திகழ்ந்தார்.