ஊழல் மலிந்த பாண்லே : அல்லல்படும் உற்பத்தியாளர்கள்

புதுச்சேரி மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் முதன் முதலாக ஆரம்பிக்கப் பட்டது புதுவை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய மாகும் (பதிவு எண்: பி 1).  ஆரம்பித்ததிலிருந்து லாபகரமாக இயங்கி வந்த இந்த சங்கம் படிப்படியாக சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாண்டெக்ஸ், பான்பேப், கான்பெட், அமுதசுரபி, கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஸ்பின்கோ ஆகிய கூட்டுறவு நிறுவனங்கள் ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கையால் நட்டத்தை தழுவி தற்போது மூடு விழாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் பாண்லே நிர்வாகமும் ஊழலில் திளைத்து கொண்டிருக்கிறது. இதனை பால் உற்பத்தியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  புதுச்சேரியில் 103 கிராமப்புற பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. பாண்லேயின் மருத்துவக் குழு வாரவாரம் கால்நடைகளுக்கு இலவசமாக சினை ஊசி போடுவது, மருத்துவம் பார்ப்பதும் வழக்கம். அதுவும் படிப்படியாக நின்று விட்டது. பாண்லேயின் கால்நடை தீவனப் பிரிவு தட்டாஞ்சாவடியில் கால்நடை மருத்துவர்கள், 20க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு இயங்கி வந்தது தற்பொழுது அதுவும் மூடப்பட்டு விட்டது.

கால்நடை தீவனம்

உறுப்பினர்களுக்கு கால்நடை தீவனம் கிடைக்காமல் அதிக விலை (ரூ.1500) கொடுத்து வெளி மார்க்கெட்டில் வாங்கும் அவல நிலை உள்ளது. குறுமாம்பேட் பால்பண்ணையின் பின்புறம் உள்ள நிலத்தில் பயிரிடப்பட்ட பசும் புல் மற்றும் விதைக்குருணை மானியத்தில் வழங்கப்பட்டு வந்தது. அதையும் மூடி விட்டார்கள். ஆரம்ப காலத்தில் பாண்லே நிர்வாகம் செலவில் பாலை சேகரித்து பண்ணைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தற்போது தனது சொந்த செலவில் பாலை அருகாமையில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று கொடுத்து விடுகின்றன. இதற்கு பாண்லே நிர்வாகம் சங்கங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு (ஒரு லிட்டருக்கு) ஒரு பைசா என்று நிர்ணயித்து கொடுக்கிற மிக படுபாதக செயல் நடக்கிறது. இதன் மூலம் கிராமப்புற சங்கங்களை உறிஞ்சி பாண்லே கொழுக்கிறது. புதுவை அரசு பிரதமர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் வலுப்பெற கொடுத்த ஷேர் கேப்பிட்டலை பாண்லே வைத்துக் கொண்டு ஈவுத் தொகையையும் கொடுப்பதில்லை. இப்படி அரசு மானியத்தில் கறவை மாட்டுக் கடன் வழங்கி பால் உற்பத்தியை பெருக்குவதற்கு பதிலாக அண்டை மாநிலங்களில் இருந்து ஒரு லிட்டர் பால் ரூ. 47க்கு கொள்முதல் செய்து, ரூ.42க்கு விற்பனை செய்கிறோம் என கூச்சமில்லாமல் அரசு கூறுகிறது.

உற்பத்தியை பெருக்காமல் வெளி மாநில பாலை கொள்முதல் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவது முறைகேடுக்குதான் வழிவகுக்கும். தமிழகத்தில் பால் விலை தற்பொழுது உயர்ந்திருக்கக் கூடிய நிலையில் புதுவையில் பால் விலையை உயர்த்த வேண்டும் என மாநில முதலமைச்சரிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்தால் முறையான பதில் இல்லை. உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் ஆர்ப்பாட்டம் என முடிவெடுக்கும்பட்சத்தில் சட்டசபையில் அதிகாரிகள் கூட்டம் நடத்தி லிட்டருக்கு கொள்முதல் விலையில் 3 ரூபாயும், விற்பனை விலையில் 8 ரூபாயும் உயர்த்தலாம் என உத்தேசிக்கிறோம் என தெரிவிக்கின்றனர். இந்த போக்கு சரியில்லை. தீவன விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பசும் புல் தீவனம் தேவையான அளவு கிடைக்கவில்லை. பராமரிப்பு செலவு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், ஒன்றிய நிர்வாக குழு தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும், ஒன்றியத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டறிய விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அங்கமாக விளங்கும் புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்துவதோடு, புதன்கிழமை (டிச. 7) அன்று மேற்கூறிய கோரிக்கைளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

Anbumani cpim-இரா.அன்புமணி, செயலாளர்,
பால் உற்பத்தியாளர் சங்கம், புதுச்சேரி.

Leave a Reply