நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- சிபிஎம்

பத்திரிகை செய்தி- 11.7.2022

அரியாங்குப்பம் ஆட்டோ தொழிலாளி குடும்பம் தற்கொலை குறித்த நீதி விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் வாழ்க்கை, வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிப்போனதால் பிழைக்க வழியின்றி வருமானமும் இன்றி அன்றாட செலவுக்கே குடும்பம் நடத்த முடியாத நிலையில் தான் ஏழை எளிய மக்கள் சில தனியார் நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பட்டிருக்கின்றார்கள். கொரோனா கொடுமை குறைந்த பின்னும் அன்றாட செலவுக்கே சம்பாத்தியம் இல்லாத நிலையில் வாங்கிய கடன் அடைக்க முடியாமல் ஏழை எளிய மக்களின் நிலை உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பம் தபால்காரன் வீதியில் கடந்த 7.7.2022 அன்று ஒரு ஆட்டோ தொழிலாளியும் அவரது மணைவி மற்றும் இரு குழந்தைகள் என குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆட்டோக்களை சொந்தமாக வைத்து நல்ல நிலையில் வாழ்ந்து வந்த ஆட்டோ தொழிலாளி வரவுக்கு மீறிய செலவு செய்து கடன் வலையில் வீழ்ந்து உயிரையே மாய்த்துள்ளார் என்று தான் பெறும்பாலானோர் பேச்சு இருக்கின்றது. ஆனால் அப்பகுதியில் அக்கம் பக்கத்தில் நேரில் சென்று விசாரிக்கும் போது தினமும் வாசல் தெளித்து கோலம் போட முடியாதநிலையில், வெளி கதவை பூட்டி உள்ளுக்குள் வாழ்ந்து சீரழிந்த நிலையில் தான் அந்த குடும்பம் கந்து வட்டி கும்பல் வலையில் சிக்கி சீரழிந்திருப்பது தெரிய வருகிறது.

கடன் கொடுத்த கந்து வட்டிக்கும்பல் பலமுறை வீட்டில் உள்ள பெண்களை அவமரியாதையாக பேசுவது உன் கனவனை வெட்டிக் கொன்று விடுவோம் என்று மிரட்டுவது என்பதெல்லாம் நடந்திருக்கிறது என்ற அதிர்ச்சி சம்பவங்கள் அங்கு அரங்கேரியுள்ளது. மேலும் கந்து வட்டி கும்பல் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை வலு கட்டாயமாக தங்களது செல்பேசியில் புகைப்படம் எடுத்து வைத்தும் மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்தேறி வருகிறது.

ஈவு இரக்கமின்றி கடன் கொடுத்த தனியார் நுண் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியவர்கள் அவமானகரமாக பேசுவது, குறிப்பாக பெண்களை மிரட்டுவது சில நேரங்களில் அடித்து துன்புறுத்துவது என்று பல விதமான கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகைய கொடுமைகளை தாங்கமுடியாத பல குடும்பங்களில் இறப்பு என்பதே தீர்வு என்ற அவநம்பிக்கையில் உண்மை வெளியே தெரியபடுத்தாமல் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது.

விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

ஆட்டோ தொழிலாளியின் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அரியாங்குப்பம் காவல்நிலையம் எந்த அசைவும் இல்லாமல், மேற்கொண்ட விசாணையும் நடத்த வில்லை என்பது வேதனை அளிக்கிறது. காவல்துறையை சேர்ந்த ஒரு பகுதியினருக்கும், கந்துவட்டி கும்பலுக்கும் உள்ள தொடர்பு காரணமாக எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்பது தெரியவருகிறது. இது கண்டிக்கதக்கதாகும். இச்சம்வம் குறித்த மாவட்ட ஆட்சியர் விசாணைக்கு உத்தரவிட வேண்டும். இதேப்போல் 50க்கும் மேற்பட்ட நுண்நிதி கந்து வட்டி நிறுவனங்கள் புதுச்சேரியில் செயல்படுகிறது. இவர்களும் இதேநிலையில் தான் ஏழை எளிய மக்களை மிரட்டி வருகிறார்கள். அந்நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது.

இவண்,
ஆர்.ராஜாங்கம்,செயலாளர்,
சிபிஎம், புதுச்சேரி

Leave a Reply