புதுவை அரசே அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்திடுக. தேசிய கல்விக்கொள்கையை அனுமதியோம்!

12புதுச்சேரி மாநிலத்தில் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் முதல் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் பணியிடங்கள் வரை அதிக எண்ணிக்கையில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை தகுதி உள்ள ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பபட வேண்டும். தாய் மொழி வழி கல்வி மூலமே கல்வியின் தரத்ததை உயர்த்த முடியும். இதையும் புதுவை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

அரசுப் பள்ளி கட்டிடங்கள் சுகாதாரமும் இல்லாமல் சிதிலமடைந்திருக்கிறது. அவைகளை பழுது பார்த்து சீரமைப்பதுடன் கழிப்பறை வசதியுடன் கற்றலுக்கான குழலுடன் புணரமைக்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள இலவச பேருந்து திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும். சத்து இல்லாத சைவ உணவை வழங்கிடும் தனியாருக்கு விடப்பட்டிருக்கும் மதிய உணவு திட்டத்தை அரசே ஏற்று நடத்திட வேண்டும். இலவச ரொட்டி பால், காலை சிற்றுண்டி திட்டத்தை உடனடியாக மீண்டும் அமல்படுத்த வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் மிதிவண்டிகள் வழங்கப்படவேண்டும். அரசுப் பள்ளிகளை பாதுகாக்க இத்தகைய நடவடிக்கைகள் அவசியமானது என்று இம்மாநாடு கருதுகிறது.

அரசுப் பள்ளிகளில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை 12ஆம் வகுப்பு வரை நீட்டிப்பது தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான முதல் படி என்று கருதுகிறோம். மேலும் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் உயர் கல்வித்துத்துறையில் அனைத்து கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து, தொகுப்பு கல்லூரிகளாக மாற்றி அதன்மூலம் பல்துறை கல்வி நிறுவனங்கள் நிறுவி, தேவைப்படும் நேரத்தில் மாணவர்கள் படிப்பை நிறுத்தும்பட்சத்தில் பொருத்தமான சான்றிதழ் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு  தொழிற்கல்வி என்ற பெயரில் இடைநிற்றலை ஏற்படுத்தி சனாதனக் கல்வியை புகுத்தும் தேசிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியே. எனவே இத்திட்டம் புதுச்சேரி மாநிலத்திற்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் போராடிப் பெற்ற சமூக நீதிக்கும் எதிரானது என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

தற்போது உயர்கல்விக்குச் செல்லும் பள்ளி குழந்தைகள் சராசரி 54 % ஆகும். இது இந்திய சராசரி விகிதத்தை விட அதிகம். புதுச்சேரியில் மழலையர் கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை சிறப்பான நிலையில் உள்ளது. புதுச்சேரியில் தேசிய கல்விக் கொள்கை திணிக்கபடுமானால் இதற்கு பேராபத்து. ஆகவே எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டும், அதை எந்த வடிவத்திலும் புதுச்சேரியில் அனுமதிக்க கூடாது.

புதுச்சேரி மாநிலத்தின் மண்ணுக்கும், வரலாற்றுக்கும் பொருத்தமான பாடத்திட்டத்தை உருவாக்கி அதை, அவ்வப் போது பரிசிலித்து நடைமுறைப்படுத்த புதுச்சேரி மாநிலத்திற்கு கல்வி வாரியம் அமைத்திட வேண்டும். தாய் மொழி வழிக் கல்வியை உறுதிப்படுத்திட மீண்டும் தமிழ் வளர்ச்சிச் சிறகம் இயக்கப்பட வேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக்கொள்ளையை தடுத்து நிறுத்தி, கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை செயல்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை புதுவை அரசு செயல்படுத்திட இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

நவம்பர் 13. 2022ல் கம்பன் கலையரங்கில் கட்சியின்  பொதுச்செயலாளர் தோழர். சீத்தாரம்யெச்யூரி பங்கேற்ற புதுச்சேரி மாநில உரிமை சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

Leave a Reply