புதுச்சேரி பாஜக கூட்டணி ஆட்சியை அகற்றுவோம்

வி.பெருமாள்
V.Perumal

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வடிவத்தில் கூட்டணி ஆட்சி என்ற போதிலும் தன்மையில் பாஜகவே மாநிலத்தை ஆளுகிறது.  மாநில அரசின் முழு ஆட்சிப் பொறுப்பையும் கைகொள்ள பாஜக இடைவிடாது முயற்சிக்கிறது.  தென் இந்தியாவில் எஞ்சியுள்ள புதுச்சேரி பாஜக கூட்டணி ஆட்சியை அகற்றுவது அனைத்து மதச்சார்பற்ற இடதுசாரி, ஜனநாயக இயக்கங்களின் முன்னுரிமை கடமையாகும்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சபாநாயகர் என 3 அதிகார மையங்கள் உள்ளன. துவக்கத்தில் இருந்த முட்டல், மோதல் போக்குகள் தற்போது மட்டுப்பட்டுள்ளன. இதன் பொருள் இணக்கமான சூழல் என்ற பொருளில்லை. முதல்வருக்கும், துணைநிலை ஆளுநருக்கும் அல்லது ஒன்றிய அரசுடன் முரண்பாடு எழும்போது சபாநாயகர் உதவியுடன் ஒருவித புரிந்துணர்வு அடிப்படையில் சமரசம் செய்து கொள்ளப்படுகிறது. ஒன்றை விட்டுக் கொடுத்து, மற்றொன்றை பெறுவது, கமிஷன் அடிப்படையில் தீர்வு காண்பது என்பது வழக்கமாகிவிட்டது. அவரவர் அதிகாரத்துக்குட்பட்டு அனைத்து மட்டத்திலும் ஊழலும், முறைகேடும் மலிந்துவிட்டன. மக்கள் நலன், மாநிலத்தின் முன்னேற்றம் என்பதெல்லாம் வெறும் பேச்சு. முதல்வருக்கு பதவியும், பாஜகவினருக்கு அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வது, இந்துத்துவ அரசியலை விரிவுபடுத்துவதும் நோக்கமாகும்.

ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி அமைந்தால் தாராளமாக நிதி கிடைக்கும். மாநிலம் முன்னேறும் என்றனர். நிதியாண்டில் தான் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. என்றாலும் மாநில அரசு கோரிய வரவு-செலவு திட்ட மதிப்பீட்டுக்கு அனுமதியோ, மேலிட நிதி உதவியோ பெற முடியவில்லை. ஒன்றிய அரசின் கூடுதல் நிதி உதவி ரூ.1250 கோடி என்பது கண்கட்டி வித்தையாகும். கடந்த ஆண்டு ஒன்றிய பாஜக அரசால் மாநில அரசின் பெட்ரோல், டீசல் மீதான வாட் விரி குறைக்கப்பட்டது. 2022 ஜூன் மாதத்துடன் ஜிஎஸ்டி வருவாய் இழப்பு தொகை நிறுத்தப்பட்டுள்ளது. மேற்படி இழப்புகளை ஈடுசெய்ய பெறப்பட்ட நிதியாகும். என்றாலும் மாநில அரசின் திட்ட மதிப்பீட்டில் ஒன்றிய அரசின் 30% மானியத் தொகை என்ற இலக்கை தொடவில்லை. தேர்தல் கால வாக்குறுதிகள், சட்டமன்ற அறிவிப்பு திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

நடப்பு ஆண்டு (2023-2024) பட்ஜெட் கூட்டத்தொடர் 17 நாட்கள் நடந்தன. மாநிலத்தின் தீவிர பிரச்சனையாக உள்ள காலியாக உள்ள 10500 அரசுப் பணியிடங்களை நிரப்புவது, மூடிய பஞ்சாலைகள், சர்க்கரை ஆலைகளை திறப்பது, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது, மூடிய ரேஷன் கடைகளைத் திறப்பது ஆகிய பிரச்சனைகள் மீது திட்டவட்டமான முடிவு மேற்கொள்ளப்படவில்லை. மாறாக ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை, மத்திய பாடத்திட்டம் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அமலாக்கம். மின் துறை தனியார்மயம், போன்றவை பிடிவாதமாக அமலாக்கப்படுகிறது.

மறுபுறத்தில் நிதி ஒதுக்கீடு இல்லாமல் நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. இதனால் ஓரிரு திட்டங்கள் அறிவிப்போடு நின்றுபோனது. சில அமலாக்க நிலையிலே தடுமாறுவதும் தொடர்கிறது. காரைக்கால் துறைமுகம் அதானி குழுமத்திற்கு கைமாறியுள்ளது. இவர்கள் ஆட்சியில் அதானி குழுமத்தின் கன்ணில் படுகிற புதுச்சேரியின் வளங்கள் பறிபோகும் ஆபத்தை மாநிலம் எதிர்நோக்கி உள்ளது.

2002-2003ம் நிதியாண்டில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி திட்டம் அறிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டு (2024-24) பட்ஜெட்டுக்கு முன்னதாக அவசர அவசரமாக 2023 ஜனவரி 23ல் 13,300 குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.  1,83,000 சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களில் 71000 பேர் தகுதியானவர்கள் என கணக்கிடப்பட்டது. இதில் 50000 பேர்களுக்கு பிப்ரவரி முதல் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் துவக்கி ஒரு மாதம் வழங்கியதோடு நிறுத்தப்பட்டுவிட்டன.

மேற்படி திட்டத்தின் கீழ் நிதி உதவிப் பெற்ற கட்டுமான மற்றும் முறைசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினராக உள்ள ஏழை குடும்ப தலைவிக்கு நலவாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நலவாரிய பயன்கள் வேண்டுமா அல்லது ஆண்டுக்கு ரூ.12,000 கிடைக்கும் திட்டம் வேண்டுமா என விளக்கம் கோரப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் சட்டப்பயனாக கிடைக்கும் சேமநல திட்டத்தை அரசின் நேரடி உதவியாக கருத முடியாது. திட்டம் உருவாக்கத்திலும் செயல்படுத்துவதிலும் தெளிவான வரையறையோ, தொலைநோக்கு பார்வையோ ஆட்சியாளர்களிடம் இல்லை. சென்ற நிதியாண்டின் (2022-23) பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட +1 மற்றும் +2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணிணி வழங்கும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று தெரியவில்லை.

நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் (2023-24) சமையல் எரிவாயு மானியம் ரூ.300, முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.50000 வைப்பு நிதி திட்டம் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ஆகியன அறிவிக்கப்பட்டன. திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்து இரண்டரை மாதம் கடந்தும், அரசாணை வெளியிடப்படவில்லை. ஆனால் அரசு அலுவலக பெண்கள் பூஜை செய்வதற்கு மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகளில் தலா 2 மணி நேர வேலை குறைப்பு செய்து ஒரே நாளில் (27.04.2023) கவர்னர் தலையீடால் அரசு ஆணை வெளியிடப்படுகிறது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் புதுச்சேரியில் 18.81% பெண்கள், கணவனை இழந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறது. ஆனால் மன உறுத்தலின்றி புதுச்சேரி மதுச்சேரியாக மாற்றப்படுகிறது. பெண்கள் நலன் பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்பதெல்லாம் தேர்தல் அரசியல், வெற்று முழக்கம் என்பது புரியும்.

ஒன்றியத்தில் பாஜகவும், மாநிலத்தில் என்ற என். ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2015 செப்டம்பர் முதல் ரேஷன் கடைகள் முடக்கப்பட்டன. அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கும் திட்டம் செயல்முறைக்கு வந்தது. மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக ஆட்சி அமைந்தால் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்ற வாக்குறுதி தேர்தல் அறிவிப்போடு நின்றுவிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் உறுதிமிக்க போராட்டத்தால் ரேஷன் கடைகளை திறப்பது என மாநில அமைச்சரவை 27.09.2022ல் முடிவு செய்தது. அமைச்சரவை முடிவின் மீது ஒப்புதலோ அல்லது ஒன்றிய அரசின் முடிவிற்கு பரிந்துரைக்கவோ கவர்னர் முன்வரவில்லை. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் கபட நாடகம் அம்பலமானதைத் தொடர்ந்து 2023 ஜனவரி 4வது வாரத்தில் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டன. இதுவரை மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அரிசி வழங்கப்படாத காலத்திற்கு பணமும் வழங்கப்படவில்லை.  நிர்பந்தம் காரணமாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பல மாத சம்பளம் நிலுவையில் 5 மாதங்களுக்கு மட்டும் 7.9 கோடி ரூபாய்கள் வழங்கியுள்ளது.

கிராமப்புற 100 நாள் வேலைத்திட்டம் பெயரளவிற்கு அமலாக்கப்படுகிறது. 2021-2022ல் 8 லட்சம் மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டன. ஒரு குடும்பத்திற்கு வருடத்தில் 11 நாட்கள் மட்டுமே கிடைத்தது. தற்போது 19.64 இலட்சம் மனித வேலை நாட்கள் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் 26 நாட்கள் வேலை கிடைக்கும். விலைவாசியும். வேலையின்மையும் வளர்ந்துள்ள சூழலில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பதிவு செய்துள்ள 75406 பயனாளிகள் குடும்பத்திற்கு 7540600 மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட வேண்டும். கூலி ரூ.600 என வழங்கிட வேண்டும். இதன் மூலம் கிராமப்புற வறுமையை கட்டுப்படுத்த முடியும்.

மத்திய, மாநில அரசுகளின் கொள்கையால் விவசாயம் நொடித்துவிட்டது. 2010ல் புதுச்சேரி மாநிலத்தில் 30130 ஹெக்டேராக இருந்த விவசாய நிலப்பரப்பு  வெகுவாக குறைந்துவிட்டது. விவசாய விளைப் பொருட்களை கொள்முதல் செய்யவும் ஏற்பாடில்லை. விவசாயம் சார் தொழில்களான கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி ஆகியவையும் சரிந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து பால் இறக்குமதி செய்யும் நிலைக்கு மாநிலம் தள்ளப்பட்டுவிட்டது. விவசாயத்தை இலாபகரமான தொழிலாக மாற்ற பொறுத்தமான கொள்கை உருவாக்க வேண்டும். சூழ்நிலை காரணமாக விவசாயி நிலத்தை விற்க முன்வரும் நிலையில் அரசே நேரடியாக கொள்முதல் செய்திட மாநில நில வங்கியை உருவாக்க முன்வரவேண்டும். நில வணிகத்தை தொழிலாகக் கொண்டவர்கள ஆட்சியில் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியே.

தொழிலாளர் நலன்கள் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் இதுவரை அமைக்கப்படவில்லை. உரிய நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை. இ-ஷரம் திட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும் பதிவு செய்வதன் வழியாக ஒன்றிய அரசு நேரடியாக மாநில அதிகாரத்திற்குள் நுழைகிறது.

தொழிலாளர்களுக்கு அரசு நிதி தொகுப்பில் இருந்து ஓய்வூதியம் வழங்க முன்வரவில்லை. தொழிலாளர்களின் மாதாந்திர பங்களிப்புடன் ஓய்வூதிய திட்டத்தில் சேர கட்டாயப்படுத்தப்படுகிறது. 2010க்குப்பின் குறைந்த பட்ச கூலி திருத்தி அமைக்கப்படவில்லை. கூடுதல் மணி நேர உழைப்பு, அடிமாட்டுக் கூலி என தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். தொழிலாளர் துறை முடங்கிக் கிடக்கிறது.

என்.ஆர். காங்கிரஸ் பாஜக ஆட்சியில் மக்கள் பெரும் துன்ப துயரங்களுக்கு உள்ளாகின்றனர். அனைத்து துறைகளிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கமிஷனும், முறைகேடும் ஆட்சியின் எழுதப்படாத சட்டமாகிவிட்டது.

ஆகவே, என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணியை அதிகாரத்தில் இருந்து அகற்றுவது முன்னுரிமை அரசியல் பணியாகும். இதன் மூலம் மாநிலத்தில் மக்கள் நலன் சார்ந்த அரசை ஏற்படுத்துவதோடு, தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி இல்லாத அரசுகள் என்ற வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியும்.

தோழர். வெ.பெருமாள், புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐஎம்

Leave a Reply