சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களை மேகக் கூட்டங்கள் ஒருபோதும் மறைக்க முடியாது. தொழிலாளர்களின் விடிவெள்ளியாக, வழிகாட்டியாக, தொழிற்சங்கங்களின் நிறுவனத்தந்தையாக மக்கள் தலைவர் வ. சுப்பையாவின் வலது கரமாகத் திகழ்ந்த சிம்மக்குரலோன் டி.கே. இராமானுஜம், ரங்கசாமி செங்கேணி அம்மாள் தம்பதியருக்குப் பிறந்த கிருஷ்ணசாமி நாயக்கரின் மூத்த மகனாகப் பிறந்தவர்தான்.
இவர்தம் தாயார் ஆண்டாள் அம்மாள். கிருஷ்ணசாமி நாயக்கர் பெங்களூருக்கு அருகில் உள்ள கோலார் தங்கச் சுரங்கத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். 1920 ஆகஸ்டு 7ஆம் நாள் பிறந்த இராமானுஜம் கோலார் பள்ளியிலும் பின்னர் பெங்களூர் பொறியியல் கல்லூரியிலும் B.E. (Mechanical Engineering) பயின்றார்.
கல்லூரியில் பயின்றபோது தேசிய உணர்வாலும் தொழிலாளர் நலனிலும் நாட்டம் கொண்டு தொழிலாளர் உரிமைக்குக் குரலெழுப்பினார்.
1942 ஆகஸ்டு 7ஆம் நாள் பெங்களூரில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முன்னின்று நடத்தினார். இதன் மூலம் கோலார் தங்க வயல் 25,000 தொழிலாளர்களின் பேரணியைத் தலைமையேற்று நடத்தி ஆங்கிலேயக் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொழிலாளர்களிடையே சங்கம் அமைத்தார். தொழிலாளர் உரிமைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் செலுத்தினார். 1943இல் இந்தியாவில் முறைப்படி கம்யூனிசக் கட்சி பதிவு செய்யப்பட்ட பிறகு, 1944ஆம் ஆண்டில் தமிழகக் கம்யூனிச இயக்கத்தின் சார்பில் புதுச்சேரிக்கு அனுப்பு வைக்கப்பட்ட இராமானுஜம், சுப்பையா இல்லத்திற்கு வந்து தங்கினார்.
பிரெஞ்சிந்தியாவில் இயங்கி வந்த சவானா, எனி, ரோடியர் பஞ்சாலைகளின் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியம் பங்காற்றினார். 1947 ஆகஸ்டில் இந்தியா விடுதலை அடைந்தவுடன் பிரெஞ்சிந்தியாவில் விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. உடனடியாகப் பிரெஞ்சிந்தியப் பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டுமெனக் குரல் எழுப்பினார். இப்போராட்டத்தை வ. சுப்பையாவுடன் தலைமையேற்று நடத்திய குற்றத்திற்காக ‘விரும்பத்தகாத அயல் நாட்டினர்’ எனக் குற்றம் சாட்டப்பெற்று இரண்டாண்டு சிறைத் தண்டனை பெற்றார். அப்போது நீதிபதிகளாக இருந்த சிவாவும் ரெக்குவின் என்பவரும் இப்போராட்டம் உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும் இடையிலானது, இதில் நீங்கள் வெற்றி பெற்றால் நாங்கள் பெரிதும் மகிழ்வோம் என்று குறிப்பிட்டனர்.
தலைமறைவு வாழ்க்கை,
தொழிலாளர்களை ஒன்று திரட்டுதல், பிரெஞ்சு ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டத் திட்டமிடல் எனத் தீவிரப் பங்காற்றினார். 1950 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 14 ஆம் நாள் சுப்பையா வீடு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் அரியாங்குப்பம் வயல்வெளியில் மின்விசை நீர் இறைக்கும் இடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் பிரெஞ்சுக் காவல்துறையினரும் குபேர் ஆட்களும் இராமானுஜத்தைக் கைது செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து ‘கோணி ஊசி’யில் உடம்பெல்லாம் குத்தி சித்திரவதை செய்தனர். உடல் முழுக்க இரத்தம் பீறிட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட தியாக வரலாற்றுக்குச் சொந்தக்காரர்.
ஒவ்வொரு நாளும் பிரெஞ்சிந்திய விடுதலைக்காகத் தாம் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றில் பதிவு செய்யப்படாவிட்டாலும் பிரெஞ்சிந்தியத் தொழிலாளர்கள் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வழிகாட்டியாகவும் சங்கம் அமைத்து உரிமைக்குரல் எழுப்பும் ஆற்றலையும் உருவாக்கியவர். சுழல் துப்பாக்கி, கையெறிகுண்டு தயாரிப்பதில் பயிற்சி பெற்றிருந்த இவர் பொதுவுடைமை கருத்துக்களைப் பரப்புவதில் மிகுந்த அக்கறை கொண்டவர்.
பிரெஞ்சிந்திய விடுதலைக்குப்பின் தொழிற்சங்க முன்னோடியாகச் செயல்பட்ட இவர் அகில இந்திய தொழிற்சங்க மாநாட்டினை 1955 இல் புதுச்சேரியில் ஏற்பாடு செய்தார். இம்மாநாட்டில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து கம்யூனிசத் தலைவர்கள் வருகைதந்து பங்கேற்றனர். குறிப்பாக பி. ராமமூர்த்தி, பாலதண்டாயுதம், ஜீவா, உட்பட பலரும் பங்கேற்றனர். இம்மாநாட்டில் இவருடைய திருமணமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அனாவசியம் முனிசாமி நாயக்கரின் மகள் ஆதிலட்சுமியை இல்லத் துணைவியாக ஏற்றார். இவருக்குச் சர்க்கரை என்ற தங்கராசு, கிருஷ்ணராஜ், ராகவன் ஆகிய மூன்று மகன்களும் கபிலா, வள்ளி, சாந்தி, கல்பனா ஆகிய நான்கு மகள்களும் உள்ளனர்.
தியாகத்தின் திருவுருவாகத் திகழ்ந்த இவர் 1959ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று, சட்டப்பேரவை உறுப்பினரானார். அத்தருணத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கிடையில் உரையாற்றும் போது புதுச்சேரியில் வீதிகள் ஒழுங்காக உள்ளன நீதி ஒழுங்கில்லை எனக் கூறிய குற்றத்திற்காக 1960 இல் சிறைத் தண்டனை பெற்றார். இந்தியப் பிரதமர் சவகர்லால் நேருவின் பரிந்துரையினால் அவர் சிறைத் தண்டனையின்றி விடுதலையானார்.
தீவிர சிந்தனையாளராகத் திகழ்ந்து பஞ்சாலைகளில் நவீன யுத்திகளை புகுத்துவதற்கான அரிய ஆலோசனைகளை வழங்கினார். தொழிலாளர் போற்றும் தலைவராகத் திகழ்ந்தார். அரசியல் தலைவர்களுக்கு அறிவுரை கூறிடும் அரிய மனிதராகத் திகழ்ந்தார். வெள்ளை மனத்துடன், கபடமற்ற தூய்மையான பொதுவுடைமை அரசியல் பொது வாழ்வை மேற்கொண்டவர், தொழிற்சங்க சாணக்கியராகத் திகழ்ந்த இவரை ரோடியர் பஞ்சாலையின் பொது மேலாளராகப் பணி அமர்த்தினால் பஞ்சாலை நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என்றெண்ணி வ. சுப்பையா இராமானுஜத்தை அணுகிய போது இப்பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். “நான் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவன். எந்தச் சூழலிலும் முதலாளி வர்க்கத்தில் சேர விரும்பவில்லை” என்று மறுத்து விட்டார்.
1977இல் புதுச்சேரி யூனியன் பிரதேசப் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைத்து விடலாம் என்று கூறிய பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு எதிராகப் புதுச்சேரியில் 1977 ஜனவரி 26ஆம் நாள் நடைபெற்ற இணைப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தெ. இராமச்சந்திரன், எம்.ஓ.எச்.பாரூக், டி.கே. இராமானுஜம் போன்றார் கைது செய்யப்பட்டுக் கடலூர் கேப்பர் மலைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சிறைச்சாலையில் ஆயுள் தண்டனைக் கைதிகளும், குற்றவாளிகளும் அடைக்கப்படுவது வழக்கம். எனவே அரசியல் கைதிகளாக்கி இங்கே சிறை வைத்ததை எதிர்த்து இராமானுஜம் புதுவை மாநிலத் தலைமைச் செயலாளருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கில் இருந்த நியாயமான நிலையைச் சட்டச்செயலர் சந்திரசேகர மேனன் மூலம் அறிந்து கொண்ட தலைமைச்செயலர் பார்த்தசாரதி, பின்னர் ராமானுஜத்தின் வீட்டிற்குச் சட்டச் செயலருடன் சென்று தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இவர்தம் தியாகத்தைப் போற்றி இந்திய அரசு முதன்முதலாகத் தாமிரப்பத்திர விருது வழங்கிச் சிறப்பித்தது. இவ்விருதைப் பெறுவதற்காக நேரில் வருமாறு பாரதப்பிரதமர் இந்திரா காந்தி விடுத்த அழைப்பை ஏற்க மறுத்து அதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி கடிதம் எழுதினார். இத்தகைய கொள்கை பிடிப்புடன் தம் வாழ்நாளெல்லாம் தியாகமே என்று வாழ்ந்து இன்றைய இளைய தலைமுறையினருக்கும் தக்கதோர் வழிகாட்டியாய்த் திகழ்ந்தவர்.
பிரெஞ்சிந்திய விடுதலைப் பிதா மகன்களில் மூத்தவரான டி.கே. இராமானுஜம் பிரெஞ்சிந்திய விடுதலைப் போராளி மட்டுமல்ல, பிரெஞ்சிந்தியத் தொழிற்சங்கத்தை நிறுவிய தந்தை எனில் மிகையன்று.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > தலைவர்கள் > புதுச்சேரி தொழிற்சங்கத் தந்தை டி. கே. இராமனுஜம்
புதுச்சேரி தொழிற்சங்கத் தந்தை டி. கே. இராமனுஜம்
posted on
You Might Also Like
புதுச்சேரியில் போலி மருந்து மாஃபியா
December 20, 2025
உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் புதுச்சேரி ஆட்சியாளர்கள்
October 27, 2025









