புதுவையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் -1
புதுச்சேரி என்றும் பாண்டிச்சேரி என்றும் அழைக்கப்படுகிற நகரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்தது. காலப்போக்கில் கடல் வணிக நகரமாக மாறியது.
கீழ்த்திசை மற்றும் மேல்திசை நாடுகளுடன் வாணிபம் செய்யும் நகரமாக அது விளங்கியுள்ளதை அரிக்கமேடு அகழ்வாராய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் ஆட்சி செய்த பல்வேறு மன்னர்களின் ஆளுகையின் கீழ் பாண்டிச்சேரி இருந்து வந்துள்ளதை வரலாற்று ஏடுகள் கட்டிக்காண்பிக்கின்றன.
காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர்கள். அவர்களுக்குப்பின் சோழர்கள். பாண்டிய மன்னர்கள். பின்னர் விஜயநகரப் பேரரசர்கள். அவர்களைத் தொடர்ந்து தஞ்சை நாயக்க மன்னர்கள். அவர்களுக்குப்பின் பீஜப்பூர் சுல்தான் ஆட்சி என்று பல ஆட்சிகளின் கீழ் பாண்டிச்சேரி இருக்க வேண்டியிருந்தது.
கி.பி.15ம் நூற்றாண்டுகளுக்குப்பின் ஐரோப்பாவில் இங்கிலாந்து. பிரான்ஸ், போர்ச்சுக்கல் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் வர்த்தகப்பிரிவினர் தோன்றினர். அவர்கள் தங்கள் நாட்டு தயாரிப்புப் பொருட்களை பிற நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்கவும். அந்த நாடுகளின் தயாரிப்புப் பொருட்களை தங்கள் நாட்டுக்குகொண்டு வந்து விற்கவும் கடல் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். கடல்போக்குவரத்துடன் கூடவே கடல் கொள்ளையும் துவங்கியது. இதில் இங்கிலாந்து வலிமைமிக்கதாக விளங்கியது. அதற்கு அடுத்தாற்போல் பிரான்ஸ் நாடு இருந்தது. கி.பி.16ம் நூற்றாண்டில் பாண்டிச்சேரி தஞ்சை நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பொழுது முதன்முறையாக போர்த்துக்கீசியர்கள் வணிகத்திற்காக அங்கே வந்தனர். கடல்படை வலிமை பெருகப் பெருக முன் சொன்ன ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும் பிற நாடுகளை தங்கள் காலனி நாடாக, பகுதியாக மாற்றுவதற்கு ஒன்றோடொன்று யுத்தம் செய்யத் துவங்கின. இவ்வாறுதான் வர்த்தகம் என்ற பெயரில் இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் போர்த்துக்கீசியர் மற்றும் டச்சுக்காரர்களை விரட்டிவிட்டு தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர்.
டெல்லியில் முகலாய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் ககிழக்கிந்தி கம்பெனி என்ற பெயரில் நுழைந்த ஆங்கிலேயர்கள் தங்கள் யுக்தியாலும். இந்திய மன்னர்களிடையில் மோதல்களைத் தூண்டிவிட்டும் இரண்டு நூற்றாண்டு காலத்திற்குள் இந்திய நாட்டின் பெரும் பகுதியை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.
17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவிற்குள் நுழைந்த பிரெஞ்சுக்காரர்கள் சூரத் நகரில் தங்கள் வணிகத்தைத் துவக்கினர். பின்னர் பல பகுதிகளுக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் ஆங்கிலேயரின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. வங்காளத்தின் பிளாசியில் நடைபெற்ற யுத்தமும். ஆற்காட்டில் நடைபெற்ற யுத்தமும் ஆங்கிலேயருக்கு பெரும் வலிமையைக் கொடுத்தன.
சூரத்திற்குப்பின் பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் வர்த்தகத்தைத் துவக்கினர். மராட்டிய மன்னர் சிவாஜியின் ஆதரவு அவர்களுக்குக்கிடைத்தது. பின்னர் 1697ம் ஆண்டில் போர்த்துக்கீசியர் வசம் இருந்த பாண்டிச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் விலை கொடுத்து வாங்கினர். ஒளரங்கசீப் ஆட்சிக்காலத்தில் மேலும் சில பகுதி பிரெஞ்சுக்காரர்களுக்குக் கிடைத்தன.
1749ம் ஆண்டில் ஆற்காடு நவாப் அன்வர் உத்தீனுக்கும் அவரது எதிரி சந்தா சாஹிப்புக்குமிடையே கர்நாடக அரசை யார் ஆள்வது என்ற பிரச்சனையில் போர் மூண்டது. சந்தா சாஹிப் பாண்டிச்சேரியிலிருந்த பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார். பிரெஞ்சுப் படைகள் அவருக்கு உதவின. ஆம்பூரில் நடந்த போரில் சந்தா சாஹிப், அன்வர் உத்தீனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார். பிரெஞ்சுக்காரர்கள் செய்த உதவிக்கு கைமாறாக அவர் பாகூர் முதலிய ஊர்களைக் பிரெஞ்சுக்காரர்களுக்கு கொடுத்தார். ஆற்காட்டில் பிரெஞ்சு செல்வாக்கு பரவியது. சில ஆண்டுகளுக்குப்பின் வந்தவாசி எனுமிடத்தில் ஆங்கிலேயப் படைகளுக்கும் பிரெஞ்சுப்படைகளுக்கும் போர் மூண்டது. இதில் ஆங்கிலேயர் வெற்றிபெற்றனர். பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் தகர்ந்துபோனது.
19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி முழுமை பெற்றபொழுது பிரெஞ்சுக்காரர்கள் வசம் இருந்தது பாண்டிச்சேரி. காரைக்கால், கேரளாவில் மாகே ஆந்திராவில் ஏனாம் வங்காளத்தில் சந்திரநாகூர் ஆகியவையே!
ஐரோப்பாவில் இங்கிலாந்தும். பிரான்சும் பரம்பரை எதிரி நாடுகள் எனவே அங்கே நடக்கும் மோதல்கள் இங்கேயும் பிரதிபலிக்கும் சென்னையை ஆங்கிலேயரிடமிருந்து பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றுவதும், பாண்டிச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றுவதும் மாழி மாறி நடந்தது. இறுதியாக 1816ம் ஆண்டிற்குப்பிறகு பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் ஆளுகையின்கீழ் வந்தது. அதிலிருந்து 138 ஆண்டுகள் அவர்கள் பிடியில் இருந்தது.
பாண்டிச்சேரி யாருடைய ஆதிக்கத்தின் கீழ் இருந்தாலும் அந்த மக்களின் தாய்மொழியான தமிழ்மொழி, தமிழ்க்கலை. தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவை பெரும் அளவில் பாதிக்கவில்லை. அதன் வேர்கள் பலமாக இருந்தன. பாண்டிச்சேரியின் எல்லைகளாக ஒருபுறம் செங்கல்பட்டு மாவட்டமும், மறுபுறம் தென்னாற்காடு மாவட்டமும் இருந்ததால் தமிழகத்துடனான அதன் தொடர்பு மிக நெருக்கமாக இருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டு வந்த அரசியல் கலாச்சார தாக்கங்கள் பாண்டிச்சேரியிலும் தொடர்ந்து பிரதிபலித்தது. ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து நாடு விடுதலையடைய வேண்டும் என்ற எண்ணம் தமிழகத்தில் அதிகரித்து வந்ததைப்போலவே பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து பாண்டிச்சேரி விடுதலையடைய வேண்டும் என்ற எண்ணம் அங்கே வலுவாக உருவாகத் தொடங்கியது. இந்திய தேசிய இயக்கத்தின் வளர்ச்சி அங்கேயும் பிரதிபலிக்கத் தொடங்கியது.
தொடரும்….