புதுச்சேரி மாநிலத்தில் தொடரும் நில மோசடிகள் ஆட்சியாளர்களின் அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளை.

Puducherry temple land grabபுதுச்சேரி மாநிலத்தில் கோவில் நிலங்கள், அரசு புறம்போக்கு மற்றும் தனிநபர் நிலங்கள் குறிப்பாக பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்களை போலிப் பத்திரம் தயார் செய்து கபளீகரம் செய்வது என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதை பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும், சில காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து செய்து கொண்டே இருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நகரின் மையப் பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலம் போலி பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு விற்கப்பட்டிருக்கன்றன. ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினரும் தனது குடும்பத்தினரின் பெயரிலும் நிலத்தை பதிவு செய்திருக்கிறார்.

கோவில் நில மோசடி வரலாற்றின் பின்னணி

புதுச்சேரி மாநிலம், உழவர்கரை நகராட்சி, சாரம் வருவாய் கிராமம் ரீ சர்வே எண் 292/4 ,292 / 5, 64,000 சதுர அடி கொண்ட சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலம் புதுச்சேரி காமாட்சியம்மன் கோவிலுக்குச் சொந்தமானது.

மோசடி  எண் 1

2011 ஆம் ஆண்டு சபரி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கண்ட நிலத்தின் ஒரு பகுதியை திருவான்மியூர் ரத்தினவேல், மோகனசுந்தரி தம்பதிகளிடமிருந்து வாங்கியதாக உரிமை கோருகின்றனர். ஆனால் இவர்கள் அனுபவ உரிமையின் அடிப்படையில் விற்பதாகவும் ,வாங்கியதாகவும் கூறப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட பத்திரம் 3127 /2010 ,தேதி 7 9 2010 உடன் மூலப்பத்திரம் எதுவும் இல்லாமல் எவ்வாறு பதிவு செய்யப்பட்டது? இப்படி பதிவு செய்ய முடியுமா? இதுபோன்று எத்தனை பத்திரங்கள் பதிவு நடந்திருக்கின்றன? போன்ற கேள்விகளுடன் நில மோசடி தொடங்குகிறது.

மோசடி 2.

சபரி கல்வி நிறுவனம், பெரம்பூர் மனோகரன் என்பவரிடமிருந்து பெற்ற கடனுக்காக, இந்த நிலத்தை அடமானம் வைத்ததாகத் தெரிகிறது. பின்னர் இந்த நிலத்தை அவரிடமே கிரையம் கொடுத்து விடுகிறது. மேலும் மனோகரன் இந்நிறுவனத்தின் தாளளராகவும், மேனேஜிங் டிரஸ்டியாகவும் செயல்படுகிறார். மேற்கண்ட மனோகரன் அரசியல் செல்வாக்கு உடையவர்களின் பினாமியாகவும் செயல்படுவதாகவும், அத்துடன் பெரிய அளவில் சீட்டுக் கம்பெனி நடத்தி வந்ததாகவும் அறியப்படுகிறது.

மனோகரன் அவர் தனது சீட்டு கம்பெனியில் ஒரு கோடி ரூபாய் சீட்டில் சேர்ந்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை, அவ்வாறு திருப்பி கொடுக்க முடியாதவர்களுக்கு பணத்திற்கு பதிலாக புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் நிலத்தின் ஒரு பகுதியை சுமார் 32 ஆயிரம் சதுர அடியை கிரயம் கொடுக்க முன்வருகிறார். சீட்டு கட்டி ஏமாந்தவர்களும் பணத்திற்கு பதிலாக இதுவாவது கிடைக்கிறது என்று ஒப்புக் கொண்டார்கள். அப்போது சதுர அடி மார்க்கெட்டில் 5000/ அளவிற்கு போய்க்கொண்டிருந்தது. இவர்களுக்கு சதுர அடி 3000 ரூபாய்க்கு, விலை பேசப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இவரிடமும் எந்த விதமான மூலப்பத்திரமும் இல்லாமல் பிளாட்டுகள் பிரிக்கப்பட்டு ரிஜிஸ்டர் செய்யப்படுகிறது.

பின்னர் இந்த நிலத்தை வாங்கியவர்களுக்கு இது கோவில் நிலம் என்று தெரிய வந்தவுடன் கோவில் நிலத்திற்கு நாங்கள் ஏதேனும் பணம் கொடுத்து விடுகிறோம், என்று புலம்பி வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இந்தச் சொத்தின் பூர்வ வரலாறு

1930 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி அப்போதைய பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த, காபந்து அடமான அலுவலகத்தில் ,இந்த இடம் குறித்த வழக்கு நடந்திருக்கிறது .புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள வேதாசலம் முதலியார் என்கிற திருவேங்கட முதலியார் குமாரர்கள் ,பாலசுப்பிரமணிய முதலியார் ,ஆறுமுக முதலியார், கனகசபை முதலியார் ஆகியோருக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது .மேற்கண்ட இடம் அந்த அறிக்கையின்படி உழவர்கரை ,சாரம் கிராமத்தில் கதாஸ்தர் எண் 156, பைமாஷ் எண் 285 ,அடங்கிய இந்தச் சொத்து பாலசுப்ரமணிய முதலியாருக்கு சொந்தமானது என்று அறியப்படுகிறது. இந்த அறிக்கையில் ,இவர்கள் பொற்கொல்லர் முத்துசாமி ஆசாரியார் அவர்களிடம் 3000 ரூபாய் கடனாக போக்கியம் பெற்று திருப்பி கொடுக்கப்படாததால் அதை ஒட்டிய வழக்கு என்று பதிவாகி இருக்கிறது. இந்த வழக்கிற்கு பின்னர் மேற்கொண்ட சொத்துக்களை இந்த மூன்று சகோதரர்களும் பிரித்துக் கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட இந்தச் சொத்து பாலசுப்ரமணியம் முதலியாருக்கு சொந்தமானதாக் கருதப்படுகிறது . பின்னர் அவர் அன்றாடம் தான் வழிபட்டு வந்த காமாட்சி அம்மன் கோவில் தேவஸ்தானத்திற்கு உயில் மூலம் எழுதி வைத்துவிடுகிறார். இது வரலாற்றின் ஒரு பகுதி.

புதிய உயில் உருவானது, மோசடி 3.

 1995 ஆம் ஆண்டு இன்னொரு உயில் கண்டறியப்படுகிறது .இது நோட்டரி ஹலீல் பாஷா முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாலசுப்ரமணியம் முதலியாரின் இடதுகை பெருவிரல் ரேகை பதிந்ததாகத் தெரிகிறது. இதில் முத்துசாமி ஆசாரி 3000 /ரூபாய் கடன், போக்கியம் ஆகிய விவகாரங்கள் எல்லாம், சொல்லப்பட்டுள்ளது .மேலும் எங்களுக்கு வாரிசு இல்லாததால் முத்தியால்பேட்டை லூர்துசாமி அவர்களின் மகன் பெரியநாயக சாமி ஆகியோர் இந்த சொத்துக்களை அனுபவிக்க உரிமை உள்ளவர்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.

அனால் பாலசுப்ரமணியம் முதலியார் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருக்கோவிலூரில் இறந்ததாக இறப்புச் சான்றிதழ் தெரிவிக்கிறது. இது உண்மையானதா என்ற சந்தேகமும் நீடிக்கிறது! இந்தச் சான்றிதழ் படி இவர் இறப்புக்கு மூன்று மாதங்கள் முன்புதான் இந்த உயிலை செப்டம்பர் 95ல், எழுதியதாக சொல்லுகிறார்கள்.

மேற்கண்ட இந்த மோசடி உயில், தற்போது  அம்பலம் ஆகியுள்ளது .மேலும் 1944 ஆம் ஆண்டுக்கு முன்னர் எழுதிய உயிலை ரத்து செய்து விட்டதாகவும் சொல்கிறார்கள். ஏன் ரத்து செய்தார்? என்பதும் தெரியவில்லை, அதற்கான ஆவணங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.

மீண்டும் புதிய கதைக்கு வருவோம்

சீட்டு கம்பெனியில் ஏமாற்றப்பட்டு பிளாட்டுகளைப் பிரித்த 32,000 சதுர அடி போக, எஞ்சிய 32,000 சதுர அடியில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஆசை வந்துவிட்டது .ஏற்கனவே பள்ளமான பகுதியாக இருப்பதால் அதை மண்ணைக் கொட்டி நிரப்ப ஆரம்பித்து விடுகின்றனர். இதை கேள்விப்பட்ட கோவில் நிர்வாகம், சொத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறது. இதில் முன்னணியில் இருந்த கோவில் நிர்வாகி திரு ராஜகோபால் அவர்கள் உடனடியாக இந்த 32 ஆயிரம் சதுர அடியை சுற்றி  மிகப்பெரிய வேலியுடன், மிகப்பெரிய கதவையும் போட்டு கோவிலுக்குச் சொந்தமானது என்ற அறிவிப்புப் பலகையும் அங்கே நிர்மாணிக்கிறார்.

ஆனால் இது இரண்டு நாட்களில் முழுவதுமாக சிதைக்கப்பட்டு, கதவுகளும் வேலிகளும் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதை முன்னின்று நடத்தியது தொகுதியின் பாஜகவின் புதிய வருகைச் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜான்குமார் அவர்களே. தனக்குப் பின்னர் அதிகாரமும்,  மத்திய அரசும் இருப்பதால் இப்படிப்பட்ட அடாவடித் தனத்தைச் செய்தார்.

32 ஆயிரம் சதுர அடியில் ஒரு பகுதியை தனது தந்தை, மகள், மற்றும் உறவினர்களின் பெயரில் நான்கு பிளாட்டுகளை உடனடியாக ரிஜிஸ்டர் செய்கிறார். கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் கைமாறுகிறது .அது மட்டுமின்றி சாதாரண பொதுஜனம் நிலங்களையும், வீடுகளையும் வாங்கி பட்டா பெயர் மாற்றுவதற்காக ஆண்டுக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கும் போது, இவருக்கு மட்டும் மூன்றே மாதத்தில் இவரது பெயரில் பட்டாக்கள் எல்லாம் மாற்றி வழங்கப்படுகின்றன.  வருவாய் துறை அதிகாரிகளும் வெகு வேகமாகவே செயல்பட்டதை நாம் அறிய முடிகிறது .

இவர் வாங்கிய இந்தப் பத்திரத்தில் மணிகண்டன் என்பவர் பவர் ஏஜென்ட் என்று கையெழுத்துப் போடுகிறார். இந்த மணிகண்டன் முன்னாள் ராணுவ வீரர். ஆனால் இவர் இந்த இடத்திற்கு பவர் ஏஜென்ட் என்கிறார். நான் முழுமையாக கிரயம் பெற்று விட்டேன் என்கிறார். நானே உரிமையாளர் என்கிறார் .யாராவது என்னை மீறி வர முடியுமா என்று சவால் விடுகிறார்

பா.ஜ.க.,ச.ம.உ.ஜான் குமார்  தான் வாங்கிய பிளாட்டுகளுக்கு  உடனடியாக மிகப்பெரிய வேலியையும் ,கதவுகளையும் போடுகிறார் .ஆனால் இதில் பிரச்சனை உருவானதும் அனைத்தையும் உடனடியாக பிரித்து விடுகிறார் .இந்த கோவில் நிலங்களைப் பாதுகாப்பதில் கோவில் நிர்வாகிகளில் ஒருவரான ராஜகோபால் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் அவர் சமீபத்தில் மரணம் அடைந்து விட்டார். அவரது மரணத்திலும் சந்தேகம் இருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் இந்தச் சொத்தை விற்ற  மணிகண்டன்  போலி ஆவணங்களை வைத்துக்கொண்டு, காமாட்சியம்மன் கோவிலுக்கு இந்த சொத்து சொந்தமானது என்று நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்தார். மாஃபியாக்கள், அடியாட்கள் இருப்பதால் யாரும் இதற்கு முன்வர மாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும் .அந்தத் தைரியத்தில் சில நாட்கள் கழித்து, மீண்டும் சமூக ஊடகங்கள் பத்திரிகையாளர்கள் முன்னணியில் நிரூபித்தால் 3 கோடி ரூபாய் தருவதாக அறிவிக்கிறார்.

முன்னாள் ராணுவ வீரரான இவர், இந்த சொத்துக்கு முழு உரிமையாளர் என. கிரையம் வாங்கியதாக அறிவிக்கிறார். பவர் ஏஜென்ட் என்று கையெழுத்துப் போடுகிறார். இவரது சொத்து மதிப்பு மற்றும் வருமானம் எவ்வளவு ? இவர் மூன்று கோடி ரூபாய் பரிசு எப்படி கொடுப்பார்?. இவர் ஆட்சியாளர்களில், அதிகாரிகளில் யாருடைய பினாமியாக இருக்கிறார்? என்ற சந்தேகம் எழுகிறது.

ஆனால் இவருக்கு ஓரு உண்மை தெரியவில்லை. இந்த சொத்து உள்ள இடத்திற்கு அருகில் உருவாகி இருக்கும் அன்னை நகர் பகுதியில்  வாங்கிய பிளாட்டுகளுக்கு ஒவ்வொருவருடைய பத்திரத்திலும் எல்லை குறிப்பிடப்பட்டுள்ளது. (சக்குபந்தி) காமாட்சியம்மன் கோவில் நிலத்திற்கு மேற்கே என்று போடப்பட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

தூக்கம் கலைந்த புதுவை அரசு

காமாட்சியம்மன் கோவில் நிலம் அபகரிப்பு வழக்கில் விசாரணை தொடங்கி இருக்கிறது .சார் பதிவாளர் , மணிகண்டன், அருள்ராஜ் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .இரண்டு வருவாய் துறை உயர்மட்ட அதிகாரிகளும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் .ஆனால் விசாரணை மிகவும் மந்த கதியிலேயே போய்க் கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

GRஇதில் சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகளையும் பாரபட்சம் இல்லாமல் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் .காவல்துறை நேர்மையாக செயல்பட வேண்டும். இதில் முக்கிய பின்புலமாக இருக்கக்கூடிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .இவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயக்கம் காட்டுவது ஏன்?

மேலும் பத்திர பதிவுத்துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவு ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போய் இருக்கின்றன. நில மோசடி வழக்கு விசாரணை நடைபெறும் சூழலில் ஆவணங்கள் காணாமல் போயிருப்பதில் அதிகாரிகளின் சதி  இருப்பதாகக் கருதுகிறோம். இதற்கு ஆட்சியாளர்கள் அதிகார பின்புலம் இல்லாமல் செய்திருக்க முடியாது என்ற சந்தேகம் வலுக்கிறது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த ஆவணங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பாரபட்சமில்லாமல் கைது செய்யப்பட வேண்டும் .

மேலும் கோவில்களில் உள்ள அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தும் மின்னணு முறையில் ஆவணப்படுத்தவும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் பதிவேற்றவும் செய்ய வேண்டும். பத்திரப்பதிவுத்துறைக்கு மாநில முதல்வர் தான் பொறுப்பு என்ற அடிப்படையில் 2011 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் பத்திரப்பதிவுத்துறையில் நடந்துள்ள மோசடிகள் குறித்து விசாரிக்க வேண்டும்.

தொடர்ந்து விடுதலைக்குப் பிறகு மாநில அரசிடம் இருந்த மொத்த அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் தற்போது உள்ள நிலங்கள் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மேலும் .

காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மோசடிகள் நடைபெற்று வருவதும் அம்பலமாகி இருக்கும் சூழலில் விசாரணை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட வேண்டும். இச்சொத்துக்களை முழுமையாக அரசு கையகப்படுத்த வேண்டும். இந்துக் கோவில்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதாக பாஜக கூக்குரல் எழுப்புகின்றனர். ஆனால் கோவில் சொத்துக்களை சூறையாடுவதில் முன்னணியில் இருப்பது பாஜகவினரே என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

புதுவை மாநிலத்தில் இலவச மனைப் பட்டா வழங்கியவர்களுக்கு நிலம் கொடுக்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆனால் ஆட்சியாளர்களோ பொதுச் சொத்துக்களை அபகரிப்பவர்களை கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

காமாட்சி அம்மன் கோவில் நில அபகரிப்பு வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 11 .7 .2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது . கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஜி ராமகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்கிறார். அரசு நிலங்கள், கோவில் நிலங்கள் கபளீகரம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி ஒரு தொடக்க நடவடிக்கையாக இதை மேற்கொள்கிறது.

புதுடெல்லியில் துணை முதல்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் .பக்கத்து மாநிலத்தில் ஊழல் செய்ததாக அமைச்சர் விசாரிக்கப்படும் சூழ்நிலையிலேயே அதிகாரம் இல்லாவிட்டாலும் ஆளுநர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்குகிறார் .

ஆனால் புதுச்சேரியில் நேரடியாக ஊழல் நடவடிக்கைகள் ஈடுபட்டாலும் கோவில் சொத்தை தன் பெயருக்கு பட்டா போட்டுக் கொண்டாலும்  கண்டும் காணாமல் இருக்கிறது மத்திய அரசின் உள்துறை. உள்துறையின் பிரதிநிதி, மூத்த சகோதரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் அம்மையாரோ மீளா உறக்கத்தில் இருக்கிறார். ஊழல் செய்தவர்கள் பாஜகவில் அதனுடைய ஆதரவு பெற்றிருப்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்ற அதிகார ஆணவம் உச்ச நிலையில் புதுச்சேரியில் நிலவுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

SR1எஸ். ராமச்சந்திரன், சி பி எம் செயற்குழு உறுப்பினர், புதுச்சேரி.

Leave a Reply