இடதுசாரி கட்சிகளின் சட்டமன்ற முற்றுகை போராட்டம்

என்.ஆர்.காங்கிரஸ் – பிஜேபி அரசு சமர்ப்பித்த மக்களுக்கு பயனில்லாத 2025 பட்ஜெட்டை கண்டித்தும் மாற்று திட்டங்களை வலியுறுத்தியும்- பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஊழல் மற்றும் இலஞ்சத்தை கண்டித்தும்

இடதுசாரி கட்சிகளின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
நாள்: 25-03-2025 செவ்வாய் காலை 10 மணி
இடம்: புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு

அன்பார்ந்த பெரியோரே

புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ்-பிஜேபி அரசின் 2025-26க்கான வரவு செலவு (பட்ஜெட்) திட்டத்தை முதலமைச்சர் திரு.என்.ரங்கசாமி 12.3.2025 அன்று சமர்பித்தார்.

பட்ஜெட் காலத்திற்கு முன்பாகவே பல வரிகளை உயர்த்திவிட்டு வரியில்லா பட்ஜெட் என்கிறார்கள். எதிர்கால தேர்தலையொட்டி சில சலுகைகள் இடம் பெறுகின்றன.ஆனால் உண்மையிலேயே….
வேலையின்மையாலும், விலைவாசி உயர்வாலும், வருமானம் இல்லாததாலும் சிக்கித் தவிக்கின்ற ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்கள் இந்த பட்ஜெட்டில் ஏதாவது விமோசனம் கிடைக்காத என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.

பல்வேறு பட்ட படிப்புகளை முடித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய எந்த திட்டமும் இல்லை.

பல மாதங்களாக சம்பளம் இல்லாமல் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் அரசு பொதுத்துறை, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கி மீண்டும் இந்த நிறுவனங்களை நடத்துவதற்கான திட்டமும் இல்லை அக்கறையும் இல்லை.

அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் ஆகியோருக்கு வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பு இல்லை.

ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அளித்த உறுதி மொழி காற்றில் பறக்கவிடப்பட்டு லட்சக்கணக்கான தாய்மார்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தீர்ப்பதற்கான முயற்சி எதுவும் இல்லை.

மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்தும் அல்லது மானியம் வழங்கும் திட்டம் இல்லை.

தலித் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான உருப்படியான திட்டம் இல்லை.

பிற்படுத்தப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கான திட்டமும் இல்லை.

சுமார் 4 ஆண்டு கால இவர்களது ஆட்சியில் இதுவரை எந்த புதிய தொழிற்சாலையும் திறக்கப்படவில்லை.

திரும்பிய பக்கமெல்லாம் மதுபானக் கடைகள், ரெஸ்டோ பார்களும் நிரம்பியிருக்கிறது புதுச்சேரியில் இன்னும் புதிய மதுபானக் கடைகள் திறந்திடவும், புதிய மதுபானத் தொழிற்சாலைகளும் திறப்பது மட்டும்தான் இந்த என்.ஆர்.காங்கிரஸ் பிஜேபி அரசின் கொள்கையாகும். இது புதுச்சேரி எதிர்கால சமுதாயத்திற்கு பெரும்கேட்டை விளைவிக்கும்.

இந்த நிலைமைகளுக்கு மாற்றாக…

ஏஎப்டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளின் இடத்தை பயன்படுத்தி ஜவுளிப்பூங்கா அமைத்தால் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். புதுச்சேரியில் பொருளாதாரமும் வளரும். இதற்கான திட்ட அறிக்கையை (Project Report) ஒன்றிய அரசுக்கு அனுப்புவது.

★ பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு நிதி ஒதுக்குவது, நுண் நிதி நிறுவனங்களில் கடன் வட்டியில் அல்லல்படுகிற பெண்களுக்கு அரசு நிதி உதவி அளிப்பது.

உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கான முயற்சி எடுப்பது.

கரசூர்-சேதராப்பட்டில் உள்ள 800 ஏக்கர் நிலத்தில் சுற்றுப்புற சூழல் பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகளை கொண்டு வருவது, சேதராப்பட்டு, தட்டாஞ்சாவடி, மேட்டுப்பாளையம், திருபுவனை, காட்டுக்குப்பம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளின் மூடியிருக்கிற தொழிற்சாலை இடங்களில் புதிய சிறு குறு தொழிற்சாலைகளை கொண்டு வருவது. அதில் உள்ளுர் இளைஞர்களுக்கு 75% வேலைவாய்ப்புகள் வழங்குவது.

நலிவடைந்த அமுதசுரபி, பாசிக், பாப்ஸ்கோ இன்னும் இதர நிறுவனங்களுக்கு போதுமான நிதி அளித்து மீண்டும் திறந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்க்கை வளம் பெறச் செய்வது.

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து விவசாய உற்பத்திக்கு விரிவான திட்டம் கொண்டு வருவது. நலிவடையும் விவசாயத் தொழிலை மேம்படுத்துவது.

சுகாதாரமான குடிநீர் வழங்க புதிய திட்டம் கொண்டு வருவது.

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான (MNREGA) ஒன்றிய அரசிடமிருந்து நிதியைப் பெற்றிட விரிவான திட்டம் தீட்டுவது.

சமூக நலத்திட்டங்களுக்கு கூடுதலான நிதியை ஒதுக்குவது.

பொருளாதார வசதி இல்லாத அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் உருவாக்குவது.

சமூக வளர்ச்சியை பின்னோக்கி இழுக்கும் புதிய கல்வி கொள்கையை ரத்து செய்வது.

தமிழ், ஆங்கிலம் – மலையாளம் ஆங்கிலம் – தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய இரு மொழிக் கொள்கையை கடைபிடிப்பது.

இது போன்ற… மக்களின் தினசரி வாழ்க்கையில் முன்னேற்றம் காண்கிற அரசு நல திட்டங்கள் அமைய வேண்டும் என்று வற்புறுத்தி நடைபெறவுள்ள இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்.

இவண்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ)
புதுச்சேரி மாநிலம்

Leave a Reply