புதுச்சேரியின் விடுதலை எழுச்சி வீர வரலாறு! –

நாடு முழுவதும் இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் இந்த 2022ஆம் ஆண்டில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மட்டும் விடுதலை பெற்று 68 ஆண்டுகள் ஆகிறது என்பது வரலாற்று உண்மை. இந்தியாவுக்கு கடல்வழியே வாணிபம் செய்வதற்கு வந்த ஐரோப்பிய நாடுகளைச்  சேர்ந்த போர்ச்சுகிசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷார்கள் போன்றவர்களில், ஆங்கிலேயர்கள்  என்று நாம் அழைக்கக் கூடிய பிரிட்டிஷ்காரர்களே இந்திய நாட்டின் பெரும் பகுதியை கைப்பற்றி தமது காலனி நாடாக சுமார் 300 ஆண்டுகாலம் ஆண்டு வந்தனர்.  அதேசமயம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், சந்திர நாகூர் போன்று சிறு சிறு பகுதிகளில் வணிக நிலையங்கள் அமைத்து வியாபாரம் செய்து வந்த பிரெஞ்சு இந்தியக் கம்பெனி,  இந்த புதுச்சேரி  பகுதிகளை   சுமார் 280 ஆண்டுகள், அடிமைப்படுத்தி தனது காலனி நாடாக வைத்திருந்தது.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாக வியாபாரம் செய்ய வந்தவர்கள்  பிரிட்டன் அரசாக உரிமை கொண்டு இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டு, பல பகுதியில் மன்னர்களின் எதிர் போராட்டங்களையும், காந்தி, நேரு போன்றவர்களின் போராட்டங்களையும், மக்கள் போராட்டங்களையும் எதிர் கொண்டு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்து வெளியேறினார்கள். ஆனால் புதுச்சேரியை  தலைமையிடமாகக் கொண்டு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், சந்திரநாகூர் பகுதி களை ஆட்சி புரிந்த பிரெஞ்சுக்காரர்கள், இந்திய அரசின் பிரதிநிதி கேவல்சிங்கும் , பிரெஞ்சுஅரசின் பிரதிநிதி பெரிலாந்தியும் கையொப்பம் இட்ட உடன்படிக்கையின்படி 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள்தான் புதுச்சேரிக்கு விடுதலை அளித்தனர்.அன்றுதான் புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பறந்து கொண்டிருந்த பிரெஞ்சுக் கொடி இறக்கப்பட்டு, இந்திய தேசிய மூவர்ணக்  கொடி ஏற்றப்பட்டது. புதுவை நகரம் விழாக் கோலம் பூண்டது .

கம்யூனிஸ்ட்  இயக்கத்தின் பெருமை

புதுச்சேரி சுதந்திரப்போராட்ட வரலாறு என்பது முழுக்க கம்யூனிஸ்டுகளின் வீரம் செறிந்த தியாக வரலாறே !. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலில் பிரெஞ்சு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் தலைவர் தோழர் வ.சுப்பையா அவர்கள் தளபதியாக செயல்பட்டது. அவரின் ஒருங்கிணைப்பில் விவசாய சங்கப் போராட்டங்கள், ஆலைத் தொழிலாளர்களுக்கு 12மணி நேர வேலையை 8 மணி நேரமாகவும், உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டியும் நடத்திய போராட்டங்கள். காந்தி, வி.பி. சிந்தன், மேஜர் ஜெய்பால்சிங், சி. கோவிந்தராஜன், நல்லசிவம், ஆகியோர் புதுச்சேரிக்கு வந்து நிரந்தர விடுதலைக்கு நடத்திய போராட்டங்கள், கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் திருபுவனை, மாகே, நெட்டப்பாக்கம், சந்திர நாகூர் ஆகிய பகுதியில் நடைபெற்ற புரட்சிகரமான ஆயுதம் தாங்கிய போராட்டம் போன்றவை புதுச்சேரி விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் ஆகும்.  ஆங்கில  அரசின் அடக்குமுறைகளை சமாளிக்க  வேண்டி 1908 இல் பாரதியார் புதுச்சேரிக்கு வந்து தங்கி கவிதை  பாடியதும், பத்திரிகை நடத்தியதும், 1910இல் அரவிந்தர், வ.வே.சு அய்யர் ஆகியோர் புதுச்சேரிக்கு வந்து தங்கியதும் புதுச்சேரி சுதந்திரப்போராட்டவீரர்களுக்கு உத்வேகம் அளித்தது.

பொது வாக்கெடுப்பு

1947இல் ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு சென்ற பின்பும் பிரெஞ்சு அரசு விடுதலை கொடுக்க மறுத்தது. பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்தி பிறகு விடுதலை தருவது பற்றி முடிவெடுக்கலாம் என்று மழுப்பியது. விடுதலைப் போராட்டத்தில் பிரெஞ்சு இந்தியக் காங்கிரஸ் கட்சி,  பிரெஞ்சு இந்தியசோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடர்கழகம்  இணைந்த முற்போக்கு ஜனநாயக அணி என்ற மூன்று அணிகளும் முன்னணியில் இருந்தன. வாக்கெடுப்பு நடந்தபோது குபேர் தலைமையிலான ‘சோச லிஸ்ட் கட்சி’ வெற்றி பெற்றதாக   பிரெஞ்சு அரசுஅறிவித்தது. மாஹேவில் ஐ.கே.குமரன் தலைமையிலான மகாஜனசபாவும்,ஏனாமில் காமிச்செட்டி தலைமையிலான மகாஜனசபையும் களம் கண்டது. மாஹேவில் வெற்றியும், ஏனாமில்  தோல்வியும் கிடைத்தது. பிரெஞ்சுகாரர்களின் ஆதரவு பெற்ற சோசலிஸ்ட் கட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றி யது. 1950இல் சந்திரநாகூர் இந்தியாவுடன் இணைந்தது. பின்னர் சில வருடங்களில் சோசலிஸ்ட் கட்சியின்  குபேர்  மனம் மாறி அவரும் பொதுவுடமைக் கட்சியைப்போல,  காங்கிரஸ் கட்சியைப்போல உடனடியாக புதுச்சேரி இந்திய யூனியனுடன் இணைய வேண்டும் என்று  கொள்கை முடிவு எடுத்ததால், கீழர்  என்ற கிராமத்தில் நகரமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பிரதிநிதிகளின் வாக்கெடுப்பு நடத்தப் பட்டு வெற்றி பெற்று புதுச்சேரி விடுதலை அடைந்தது.

நவ. 1இல் விடுதலை

1954 ஆம் ஆண்டு நவம்பர் 1  ஆம் நாள் புதுச்சேரி  விடுதலை அடைந்த பின்னரும் பிரெஞ்சு இறையாண்மை யின்படியே பிரதிநிதிகளால்  ஆட்சி  நடந்தது.1962 ஆகஸ்ட் 16 ஆம் நாள் இந்திய பிரதமரும், பிரெஞ்சு தூது வரும் இணைந்து செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி புதுச்சேரியின் நான்கு  பகுதிகளும் சட்டப்பூர்வமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 14ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டது. புதுச்சேரிக்கு ஒரு அமைச்சரவையுடன் சட்டமன்றமும், ஒரு மக்களவை உறுப்பினரும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரும், துணைநிலை ஆளுநரும் ஒதுக்கப்பட்டது. 1964இல் தான் புதுச்சேரிக்கு முதலாவது சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அதனால் புதுச்சேரி இந்திய ஒன்றியத்துடன் இணைந்து 60 ஆண்டுகளே நிறைவுறுகிறது.

பிரெஞ்சு நிர்வாகத்தில்…

பிரெஞ்சு நிர்வாகத்தின் ஆரம்பத்தில் வெள்ளையர்கள் – இந்தியர்கள் என்ற நிறவெறி இருந்தது. வெள்ளை நகரம் என்ற பகுதி முழுவதும் பிரெஞ்சு மக்களே வசித்தனர். இந்தியர்கள் காலில் செருப்பணிந்து வெள்ளை நகரத்தில் நடக்க முடியாத அளவுக்கு கட்டுப்பாடு இருந்தது. அதேபோல கல்விக் கூடங்களில் வெள்ளையர் பிள்ளை களும் இந்தியப் பிள்ளைகளோடு சேர்ந்து கல்விகற்க மறுத்த னர். ஆரம்பத்தில் ஜெய்சூத் என்கிற மதபோதனை பாட சாலையாகவே இருந்து, பிரஞ்சு மொழி கட்டாயமாக்கப் பட்டது. பாடங்கள் பிரெஞ்சு மொழியிலேயே  இருந்தன . பின்னர் 1820 வாக்கில் நிலைமையை புரிந்து கொண்ட பிரெஞ்சு அரசு பொதுப்பள்ளியைக் கொண்டு வந்தது. ஏழைக்குழந்தைகளுக்கு  மதிய உணவுத் திட்டத்தை இந்தியாவிலே முதன் முதலாக அமல்படுத்தியது. திண்ணைப் பள்ளிகளை ஒழித்து  பொதுக்கல்வியையும் வலுப்படுத்தியது.  புதுச்சேரியில் மிகப் பெரிய மூன்று பஞ்சாலைகளைக் கொண்டு வந்தது. ஏரியின்  மதகுகளைக்கட்டி நீர் பாசன முறையை ஒழுங்குபடுத்தியது. பிரான்சில் நெப்போலியன் அமைத்தது போல் புதுச்சேரி வீதிகளை அமைத்தது. குடிநீர்வசதி, வாய்க்கால் வசதி போன்ற வற்றை சீரமைத்தது போன்றவை குறிப்பிடத்தக்கது.  பெண்கள் கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.  பின்னர் வந்த அரசுகள் புதுச்சேரி தொழில்வளம், பாசனம், விவசாயம், மின்சாரம், குடிநீர்,சாலைவசதியை ஏற்படுத்தியதும் உண்மை தான். 1980 வாக்கில் பிப்டிக் என்ற கட்டமைப்பை உருவாக்கி தொழில் துறையில் புதுச்சேரி  வளர்ச்சி அடைந்தது.  ஆனால் சென்டாக் மூலம் ஒற்றை சாளர முறையில் மருத்துவம், பொறியியல் துறைகளில் மாணவர்கள் கல்வி பயில வசதி  ஏற்படுத்தியது.

தற்போதைய அவலம்

ஆனால் தற்போது புதுச்சேரியில் சுதந்திரம் அடையும் போது இருந்த 54 ஆயிரம் ஹெக்டேர் விவசாய  நிலங்கள் 20 ஆயிரம் ஹெக்டேராக குறைந்து போயுள்ளன.  பாரம்பரியம் மிக்க சுதேசி,பாரதி,ஏ.எப்.டி ஆகிய மூன்று பஞ்சாலைகள் மூடப்பட்டு திறக்கப்படாமல் உள்ளன. இதனால் நேரிடையாக 17000 பேர் வேலை யிழந்துள்ளனர். விடுதலைக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும், அரசு உதவிபெறும் கூட்டுறவு நிறுவனங்கள் இயங்காததாலும் 40 சதவீதம் பேர் வேலை இழந்து உள்ளனர். தற்போது புதுச்சேரி அரசின் சொத்தான மின்துறை தனியாருக்கு விற்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.  இந்தியாவிலேயே ரேசன்கடைகள் மூடப்பட்ட முதல் மாநிலமாகவும் புதுவை உள்ளது.  சாலைகள் கடந்த 7 ஆண்டுகளாக சீரமைக்க முடியாத நிலையும்  உள்ளது. மாணவர்கள் காலை உணவு  நிறுத்தம், இலவசப் பேருந்து நிறுத்தம் இப்படி தான் புதுச்சேரி யின் நிலை உள்ளது.போராட்டம் தொடர வேண்டியுள்ளது.

கட்டுரையாளர் தோழர். ஆர்.தட்சணாமூர்த்தி.

Leave a Reply