மக்கள் தான் வரலாறுகளை படைக்கிறார்கள். வரலாற்றுப் போக்கில் மாமனிதர்களும், தனிமனித ஆளுமைகளும் உருவாகிறார்கள். கடந்த கால வரலாறுகள் புரட்சிகர சக்திகளுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கின்றன. அந்த வகையில் வெண்மணி தியாகிகளின் வீர வரலாறு உழைக்கும் மக்களுக்கு உந்து சக்தியாக திகழ்கிறது. புதுச்சேரியிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வழிகாட்டுதலில் தொழிலாளி வர்க்கம் பெருமைப் படக்கூடிய அடையாளங்களை, பாரம்பரியத்தை கொண்டுள்ளன.
புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம், சந்திரநாகூர் ஆகிய இந்தியப் பகுதிகள் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் கீழ் நீண்ட காலம் அடிமைப்பட்டு கிடந்தன. ஏகாதிபத்தியங்கள் தங்களுக்குள் உலக சந்தைகளை பங்கிட்டு கொள்வதற்காக முதலாம் உலக மகா யுத்தம் (1914-1918) நடந்து முடிந்தது. இதே காலகட்டத்தில் சோவியத் யூனியனில் தோழர் லெனின் தலைமையிலான அக்டோபர் புரட்சி ஜார் மன்னனை வீழ்த்தி சோசலிசத்தை மலரச் செய்தது. இப்புரட்சி காலனிய நாடுகளில் விடுதலைக்காக போராடுகிற சக்திகளுக்கு உத்வேகம் அளித்தன. இந்திய விடுதலை இயக்கத்தை உந்தி தள்ளியது. இத்தகைய புறச்சூழல் புதுச்சேரியிலும் தாக்கத்தை ஏற்படுத்தின.;
பிரஞ்சு இந்திய பகுதிகளில் விவசாயமும், புராதன தொழில்களும் பிரதானமாக இருந்தன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கப்பட்ட ரோடியர் மில் (AFT), சவானா மில் (சுதேசி மில்) மற்றும் கேப்ளா மில் (ஸ்ரீபாரதி மில்) ஆகியவை மட்டுமே இருந்தன. பஞ்சாலை தொழிலாளி வர்க்கம் தான் சுரண்டலுக்கு எதிராக, 8 மணி நேர வேலை உரிமைக்காக, விடுதலைக்காக போராட வேண்டிய நிலை இருந்தது.
பஞ்சாலை தொழிலாளர்கள் சூரிய உதயத்திற்கு முன் வேலைக்கு சென்று சூரியன் மறைவிற்கு பின்தான் வீடு திரும்ப முடியும். அன்றாடம் 14 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. அடிமட்ட கூலி, கடுமையான அடக்குமுறைகள் இருந்தன. இவ்வாறு அடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் இலக்கான தொழிலாளர்கள் மத்தியில் இளைஞர் சுப்பையா செயல்பட்டுவந்தார்.
தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்க தோழர். அமீர் ஹைதர் கான் பொறுப்பாக்கப்பட்டார்.. அப்போது சென்னையில் தலைமறைவாக இருந்த தோழர் அமீர் ஹைதர்கான் அவர்களிடம் புதுச்சேரியில் கட்சியை உருவாக்க இளைஞர் சுப்பையா அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டுதல்படி சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர்.
1936 ஜூலை 30ஆம் தேதி சவானா மில் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமைக்காக உள்ளிருப்பு போராட்டம் துவங்கினார்கள். கடும் கோபம் கொண்ட பிரஞ்சு ஏகாதிபத்தியம் பீரங்கி, துப்பாக்கிகளோடு ராணுவத்தால் ஆலையை சுற்றிவளைத்தது. ரோடு ரோலர் கொண்டு சுற்றுச்சுவரை இடித்து உள்ளே நுழைந்த ராணுவம் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. தொழிலாளர் சிதறி ஓடினார்கள். பலர் கையில் கிடைத்ததை கொண்டு ராணுவத்தை எதிர்கொண்டனர். துப்பாக்கி சூட்டில் 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் கை, கால் போன்ற உடல் உறுப்புகளை இழந்தனர். புதுச்சேரியில் பிரதான சாலையில் இரத்தம் தோய்ந்து சிவப்பேறியிருந்தது.
ராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு எதிரக உலகில் பல நாடுகள் கண்டனம் செய்தன. பிரஞ்சு நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட்கள் வலுவான கண்டன குரல் எழுப்பினர். தோழர் சுப்பையா, ஜவஹர்லால் நேருவின் சிபாரிசு கடிதத்துடன் பிரான்சு சென்றார். இந்தப் பின்னணியில் 8 மணி நேர வேலை உரிமை சட்டமாக்கப்பட்டது. தெற்கு ஆசியக் கண்டத்தில் புதுச்சேரியில்தான் முதன்முதலில் 8 மணி நேர வேலை உரிமை பெறப்பட்டது மிக முக்கிய வரலாற்று நிகழ்வாகும். இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஜூலை 30 தியாகிகள் தினத்தை புதுச்சேரி தொழிலாளி வர்க்கம் கடைபிடித்து வருகிறது.
தொழிலாளி வர்க்கத்தின் உரிமை போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரி விடுதலை என்ற முழக்கத்தோடு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தன. புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கப்பட்டது. 1947ல் இந்திய விடுதலையை தொடர்ந்து புதுச்சேரி விடுதலை இயக்கம் தீவிரமடைந்தன. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அகில இந்திய தலைமை புதுச்சேரி விடுதலைக்கு வழிகாட்டியது.
பிரஞ்சு அரசும், குண்டர்களும் கம்யூனிஸ்டுகள் மீது கொடூர தாக்குதல் நடத்தி விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க முயன்றனர். 1950ல் தோழர் சுப்பையாவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. பல முன்னணி தலைவர்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன. ஆலைத் தொழிலாளர்கள் குடியிருப்புகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளை மீறி கம்யூனிஸ்டுகள் விடுதலை போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டுதல்படி புதுச்சேரியில் தங்கியிருந்து கட்சி மற்றும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க தோழர் வி.பி.சிந்தன் பொறுப்பாக்கப்பட்டார். ஆலைத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்த தோழர் வ.சுப்பையாவுடன் தொடர்பு கொண்டும், இணைந்தும் விடுதலை இயக்கம் முன்னெடுக்கப்பட்டன.
1954 ஏப்ரலில் கட்சி வழிகாட்டுதல்படி திருபுவனை காவல்நிலையத்தை கைப்பற்றி திருபுவனை கொம்யூன் சுதந்திரப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. திருபுவனை கொம்யூனை சுதந்திர பகுதியாக அறிவித்த போதும் இந்த நிலை நீடிக்க விரும்பவில்லை. புதுச்சேரி விடுதலை இயக்கத்தை விரிவான பரந்துபட்ட முன்னணியாக உருவாக்க திட்டமிடப்பட்டது. தொழிலாளர்களின் எழுச்சிமிக்க போராட்டங்கள், கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் போராட்டங்கள், தீயென பற்றிப் பரவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு என விடுதலைக்கான பல்முனை போராட்டங்கள் பிரஞ்சு ஆதிக்கத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. 1954 நவம்பர் 1ல் பிரஞ்சு இந்திய ஒப்பந்தப்படி, புதுச்சேரி விடுதலைப் பெற்று இந்தியாவுடன் இணைந்தது. 1962 ஆகஸ்ட் 16ல் பிரஞ்சு இந்திய பகுதிகள் சட்டப்பூர்வமாக இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட்க் கட்சியின் வழிகாட்டுதல், தோழர் வ.சுப்பையா தலைமையில் தோழர்கள் வி.பி.சிந்தன், பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், உள்ளிட்ட தலைவர்களின் பங்களிப்பும், வெகுமக்கள் பங்கேற்பும் புதுச்சேரி விடுதலைக்கு வழிவகுத்தன. புதுச்சேரி விடுதலைக்குப் பின்பும் இடதுசாரி இயக்கங்கள் மகத்தான பங்களிப்பை செய்துள்ளன.
புதுச்சேரி சுதந்திரம் அடைந்த பின்பு 1955ல் மக்கள் பிரதிநிதித்துவ சபைக்கான முதல் தேர்தல் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மக்கள் முன்னணி 21 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. கம்யூனிஸ்டுகள் தலைமையில் ஆட்சி அமைவதை விரும்பாத காங்கிரஸ் கட்சி, மத்திய ஆட்சியதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரை கட்சி தாவச் செய்து ஆட்சியை கைப்பற்றியது. இத்தகைய அரசியல் சதி, சாகச அரசியல் இன்றளவும் தொடர்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வணிக யுக்தியைப் போல புதுச்சேரி மாநிலம் மத்திய ஆட்சியில் உள்ள கட்சிக்கு இலவச இணைப்பாகவே மாற்றப்பட்டுவிட்டது. இரட்டை ஆட்சி முறையால் புதுச்சேரி மாநில வளர்ச்சி, மக்கள் நலன் பின்னடைவை சந்தித்துவருகிறது. தற்போதைய மத்திய பாஜக மாநில துணைநிலை ஆளுநர் வழியாக மாநில ஆட்சியை முடக்கி சமூகநலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு தடைபோட்டு வருகிறார். மறுபுறத்தில் புதுச்சேரியில் பாஜக காலூன்ற விதை ஊன்றிவருகிறார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஓரிடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக மத்திய ஆட்சியை பயன்படுத்தி நேரடியாக 3 நியமன MLAக்களை நியமித்துள்ளது. இதனால் இந்திய கூட்டாட்சி கோட்பாடு, மக்களின் ஜனநாயக கடமையின் ஒரு பகுதியான வாக்குரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கொல்லைப்புற நியமன MLA தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் புதுச்சேரி மத்திய அரசின் சொத்து என்பதால், மத்திய அரசு நேரடி நியமனம் செல்லும் அதிகாரம் உண்டு என்று 2018 டிச.6ல் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை எதிர்த்த, ஜனநாயக உரிமை மீட்பு போராட்ட பாரம்பரியம் கொண்ட புதுச்சேரி மக்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. புதுச்சேரி மீது நவீன அடிமை முறையினை திணிக்கும் நீதிமன்றட் தீர்ப்பை மக்கள் ஏற்கவில்லை. இவ்விஷயத்தில், இந்திய கூட்டாட்சி கோட்பாடு – மாநில சுயாட்சி புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து என்ற இலக்கை நோக்கி வெகுமக்களை ஒருங்கிணைக்க வேண்டியது இடதுசாரிகள் முன் உள்ள பிரதான கடமையாகும். வீரம் விளைந்த கடந்த கால வரலாற்று நிகழ்வுகளில் இருந்து உற்சாகத்தோடும், நம்பிக்கையோடு மாற்றத்தை நோக்கி முன்னேறுவோம்
வெ. பெருமாள்
மாநிலக்குழு உறுப்பினர்
சிபிஐஎம், புதுச்சேரி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > மாவட்டங்கள் > ஏனாம் > புதுச்சேரியின் சிற்பிகளாக கம்யூனிஸ்டுகள்
புதுச்சேரியின் சிற்பிகளாக கம்யூனிஸ்டுகள்
posted on