மார்க்சிய மேதை இராகுல சாங்கிருத்தியாயன்


இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ல் கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , பண்டகா என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கேதார்நாத் என்பதாகும். இவரின் இளம் வயதிலேயே இவரின் பெற்றோர்கள் இறந்து விட இவர் தனது பாட்டியால் வளர்க்கப்பட்டார். 1897 ஆம் ஆண்டுப் பஞ்சம் பற்றி இவர் எழுதியதே இவரின் ஆரம்பகால வாழ்க்கை நினைவாகும்.

இராகுல்ஜி ஆரம்பப்பள்ளி வரை படித்தார். ஆனால் தன் வாழ்வில் பல்வேறு மொழிகளையும் தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய் விளங்கினார். இவர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, இந்தியோடு, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம் போன்ற இந்தியாவில் பேசப்படும் மொழிகளும், சிங்களம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி ஆகிய பிற நாட்டு மொழிகளும் கற்றவராகத் திகழ்ந்தார். அத்தோடு புகைப்படக்கலையையும் படித்திருந்தார்.

இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார். இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில் இருந்தவை ஆகும். ஆகவே ராகுலைப் பெருமைப்படுத்தும் வகையில் பாட்னா அருங்காட்சியகம் இப்பொருட்களைச் சிறப்புப் பிரிவொன்றில் காட்சிப்படுத்தி உள்ளது.

இருபது வயதில் எழுத ஆரம்பித்த இராகுல்ஜி பல்வேறு துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய நூல்களில் அனைவரும் அறிந்தது ‘வால்கா முதல் கங்கை வரை’ எனும் வரலாற்றுப் புனைவு நூலாகும்.
மனித குல வரலாற்றை நாவலாகத் தரும் இந்நூல் புகழ் வாய்ந்தது.
கி.மு. ஆறாயிரத்தில் துவங்கும் இந்நூல் கி.பி. 1942ல் முடிகிறது. இந்நூல் கண முத்தையா என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தெலுங்கு மற்றும் மலையாள மொழிபெயர்ப்புகளும் அம்மொழிகளில் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.அவற்றுள்
‘பொதுவுடமைதான் என்ன?’
‘வால்காவிலிருந்து கங்கை வரை’
‘சிந்து முதல் கங்கை வரை’ குறிப்பிடத்தக்கவை.

இராகுலை சொகுசாக வாழ்ந்து வெறுமனே பேசிக் கொண்டு திரிந்த அறிவாளி என்று சொல்ல முடியாது. வாழ்க்கை நெடுக ஏதாவதொரு இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டி ருந்தார். பழமையை பகுத்தறிவினூடாகப் பார்ப்பது என்பதைத் தம் நடைமுறையிலும் பின் பற்றினார். பழமை யிலிருந்து பெற்றதாகப் பெருமைப்படுவதையும், மூடப்பழக்கங் களையும் எதிர்த்து தொடர்ந்து போராடினார். அதேசமயம் ஆர்யசமாஜ இயக்கத்தில் முனைப்புடன் பங்கு பெற்றார். பிராமணிய பழமைத்தளத்தின் கொடுந்தன்மையை வெளிப்படுத்தினார். ஆர்ய சமாஜ்ய வாதிகளின் கருத்துக்கள் சமூக சமநிலைக்கு ஒத்துவரவில்லை என்பதை உணர்ந்தவுடன் பௌத்தரானார் 1930களில் மார்க்சிய சோசலிச கருத்துக்களால் மிகவும்  தாக்கப்பட்டு காந்தியவழியில் தேசிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதைக் கடுமையாக விமர்சித்தார். ‘ஏன் கம்யூனிசம் என்று இந்தியில் எழுதப்பட்ட அவருடைய நூல் 1934-இல் வெளி வந்தது. இராகுல் பீகாரில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். 1940-இல் சரன் மாவட்டத்தின் அம்பரி உழவர் இயக்கத்தில் பங்கு பற்றினார். நிலப் பிரபுக்களால் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு உழவர்களுக்கு தரவே இப்போராட்டம் நடத்தப்பட்டது. போலீசாரால் தாக்கப்பட்டு, தலையில் கடுமையான காயமடைந்தார்.

சோசலிச இந்தியா’ எனும் பார்வையை அவர் எப்போதும் கொண்டிருந்தார். அதற்கான விவாதக்களத்தை 1934-இல் எழுதிய ஒரு நூலில் அமைத்திருந்தார். சோசலிசத் தேடலின் விளைவாகவே 1924-இல் இந்தியில் எழுதிய இருபத்திரண்டாம் நூற்றாண்டு எனும் நூலில் உடோப்பியா சமூகத்தை வடித்திருந்தார். நவ இந்தியாவின் புதிய தலைவர்கள் எனும் மற்றொரு நூலை எழுதினார். இதில் பல மக்கள் தலைவர்கள் பற்றியும், பல அரசியல் -சமூக-செயலாளிகள் பற்றியும் எழுதப்பட்டது. அவற்றுள் சகஜானந் சரஸ்வதி, முசாபர் அகமது, பிசி.ஜோசி, அஜய்கோஷ், கல்பனா தத்தா போன்றோரும் அடங்குவர். இத்தலைவர்கள் புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப முடியும் என்று இராகுல் கனவு கண்டார். அந்தப் புதிய இந்தியாவில் சமூக-பொருளாதார நீதியின் அடிப்படையில் மக்கள் மறு சமூக அமைப்பை உருவாக்குவார்கள் என்று நம்பினார்.கொள்கைகளை பேசித் திரிவதால் மட்டுமல்ல வெவ்வேறு வகையான மக்கள் இயக்கங்களிலும் பங்கு பெறுவதன் மூலமே சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்று சிந்தித்தார். தம்மை முழுமையாகப் பகுத்தறிவிற்காகவும், சோசலிசத்திற்காகவும் அர்ப்பணித்துக் கொண்டார். எவ்வித விட்டுக் கொடுத்தலுக்கும் அவர் இலக்காகவில்லை.

1943இல் பாட்னாவில் அவர் வெளியிட்ட மனவா சமாஜ் எனும் நூலில் மனித சமூகத்தின் வெவ்வேறு படிநிலைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூலைப் போன்றே பிற வரலாற்றுத் தொடர்பான அவருடைய எல்லா நூல்களிலும் மரபு வழிப்பட்ட மார்க்சியப் பின்னணியில் சமூக பரிணாமத்தைத் திட்டமிட்டு காண்பார். தொல்-கம்யூனிசம் என்பது முதல் கட்டம், அடிமை நிலை இரண்டாம் கட்டம், நில மானியம் மூன்றாம் கட்டம், முதலாளியம் நான்காம் கட்டம், சோவியத் -ரஷ்யாவின் மூலம் சோசலிசமே இறுதியான கட்டம் என்பதாக அவர் கருதினார். இந்த ஐம்பதாண்டு காலத்தில் வரலாற்றுச் சட்டவரையில் எத்தனையோ தெளிவுகள் பிறந்துள்ளன. ஆனால் அவையெல்லாம் எந்தக் குறிப்பிட்ட வரலாற்றாய்விற்கும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், மார்க்சிய சிந்தனை என்பதைப் பொறுத்தவரையில் மனவா சமாஜ் என்ற நூல் 1940-களில் ஒரு முன்னோடியான எடுத்துக்காட்டாகும். இந்தியில் இதுபோன்ற நூல் வரிசையில் இதுவே முதலானது. வரலாற்று இயங்கியல் கொள்கையின் அடிப்படையில் இராகுல் இந்திய சமூகத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்கைப் பார்த்ததை ஒரு முக்கியமான வளர்ச்சியாகக் கொள்ளலாம்.

இராகுல் அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் தலையாயப் பணியினை ஆற்றியுள்ளார். இவ்வியக்கம் இந்தியா முழுவதுமாக ஒரு மறுமலர்ச்சி தோன்றுவதை கட்டியம் சொன்னது. இவ்வியக்கத்தின் தாக்கத்தால், இராகுல் இடைக்கால சித்தாந்த கருத்துக்களை முதன்மைப்படுத்தினார். 1958 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருது ‘மத்திய ஆசியாவின் இதிகாசம்’ எனும் இவரது நூலிற்கு வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

இராகுல்ஜி முறைப்படிக் கல்லாதவரெனினும் அவரது நுண்மாண் நுழைபுலத்தைக் கருதி சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்திய தத்துவயியல் பேராசிரியராய் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply