ரஜனி பால்மே தத்

ரஜனி பால்மே தத்தின் (1974-1896), தந்தையார் டாக்டர். உபேந்திர கிருஷ்ண தத், இந்தியர், வங்காளி. பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பகுதியில் தொழிலாளர் பகுதியில் அவர்களுக்கான மருத்துவராக காலம் முழுவதும் பணியாற்றியவர். தாயார் அன்னா பால்மே, சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஒரு நீதிபதி. ஏனைய உறவினர்கள் எல்லோரும் கூட மேட்டுக்குடியினர். ஒரு சகோதரனின் பேரன்தான் பின்னாளில் ஸ்வீடனின் பிரதமராக இருந்து கொலையான உலஃப் பால்மே (Olaf Palme). குடும்பத்தினரின் நிறபேதம், வர்க்க பேதம், ஆகியவற்றுக்கு எதிராகத்தான் அன்னா திருமணம் செய்துகொண்டார்.

CP Great Britain: Writers Section

கிளமன்ஸ் பால்மே தத், ரஜனி பால்மெ தத்திற்கு மூன்று வயது மூத்த சகோதரர். இருவருமே பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB- Communist Party of Great Britain) இல் தீவிரமாக செயல்பட்டவர்கள். பெற்றோரின் தாக்கத்தில்தான் சகோதரர்கள் இருவரும் (ஒரு சகோதரி எல்லியும்…) இடதுசாரிகளாக உருவாயினர். தந்தையாரைப் போலவே மூவரும் சிறந்த படிப்பாளிகள். கல்வி உதவித்தொகை பெற்று உயர் கல்வி கற்றனர். பலகலைக் கழகத்திற்குள் நுழையும்போதே மூவரும் ஆழமான சோசலிசக் கருத்துகள் கொண்டவர்களாக இருந்தனர். எல்லியும் கிளெமன்ஸும் கேம்பிரிட்ஜ் பலகலைக் கழகத்தில் பயின்றனர். ரஜனி, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் பலியோல் கல்லூரியில் செவ்வியல் இலக்கியம் பயின்றார். போதாத கல்வி உதவித் தொகை. பெரும்பாலும் வரட்டு ரொட்டியில்தான் வாழ்க்கையே நடந்துள்ளது. ஆப்பிரிக்கா குறித்த கட்டுரைப் போட்டியில் 10 பவுண்டுகளை வென்றபோது அதனைக் கொண்டு ஒரு சூடான முழுச் சாப்பாட்டிற்குப் பதிலாக தொகையை ஆக்ஸ்ஃபோர்ட் யூனியனின் வாழ்நாள் சந்தா கட்டுவதற்கு பயன்படுத்தியுள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்டில் இருந்த இடதுசாரிக் குழுக்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஐ.எல்.பி எனப்படும் சுதந்திரத் தொழிலாளர் கட்சியில் (ILP – Independent Labour Party) இணைந்தார். அது பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியில் உள்ளே இருந்து பணியாற்றியது. 1914 ஆம் ஆண்டு உலகப் போர் வெடித்த போது, ஐ.எல்.பி போர் எதிர்ப்பு நிலைபாட்டை எடுத்தது. ஏனைய ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள், தத்தம் நாட்டின் தீவிர தேசபக்தர்களாக மாறினர். பால்மெ தத் சகோதரர்களும் அவர்களது தோழர்களுமான சிறுபான்மைதான் போர் எதிர்ப்பாளர்களாக தொடர்ந்தனர். அன்றைக்கு போர் எதிர்ப்பில் உறுதியாக இருந்த லெனினது போல்ஷ்விக் கட்சியால் ஈர்க்கப்பட்டனர். மார்க்சியம் கற்றனர். அக்டோபர் புரட்சிக்கு முன்பே போல்ஷ்விக் ஆதரவாளர்களாக மாறினர்.

1916 ஆம் ஆண்டு அரசு அவரைக் கட்டாய ராணுவச் சேவைக்குப் பணித்தது. அதுவரை பேசிய போர் எதிர்ப்பை சற்றும் தயங்காது செயலில் காட்டினார். ஆக்ஸ்ஃபோர்ட்டில் இருந்து ஆல்டர்ஷாட் ராணுவச் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கும் போர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தார். சிறை மற்றும் சிறை மருத்துவமனையின் மோசமான நிலை குறித்து அவரது அறிக்கை சிறையிலிருந்து ரகசியமாக வெளியேறி பின்னர் பாராளுமன்றத்திலும் பேசுபொருள் ஆனது. ரஜனிக்கு அப்போதும் 20 வயதுதான். சிறையில் அவர் நடத்தப்பட்ட விதத்தால் உடல்நிலை மோசமானது. அரசு அவரை பால்வினை நோயாளிகள் நிரம்பிய ஒரு ராணுவ வார்டில் கொண்டுபோய் போட்டது. அவர் அப்போதும் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. அரசு அவரை வெவ்வேறு ராணுவச் சிறையிலும் மாறி மாறிப் பந்தாடியது. ஒவ்வொரு சிறை நிர்வாகமும் அவர் சிறைக்கு வருவதை நினைத்து அச்சம் கொண்டது. வேறு சிறைக்கு மாற்றப்பட்ட போது நிம்மதிப் பெருமூச்சு விட்டது. கடைசியில் அரசே இனி அவர் எந்தவொரு நாளும் ராணுவத்திற்குள் நுழையத் தடை விதித்து விடுதலை செய்தது. அவர் ஆக்ஸ்ஃபோர்ட் மீண்டார்.

1917 பிப்ரவரியில் நடந்த முதல் ரஷ்யப் புரட்சியும் ஜார் தூக்கி எறியப்பட்டதும் ரஜனியின் போர் எதிர்ப்பிற்கு ஒரு புதிய அர்த்தத்தை அளித்தன. 1917 மார்ச் மாதத்தில் ரஷ்யாவில் இரண்டாவது புரட்சிக்கும் போர் நிறுத்தத்திற்கும் ரஜனி அறைகூவல் விடுத்துள்ளார். ஆக்ஸ்ஃபோர்ட் மாணவர் சங்கத்தில் அவர் பேசியபோது போர் ஆதரவு தேச பக்த சிகாமணிகள் ரவுடித்தனம் செய்துள்ளனர். ஆனால் அதற்குத் தயாராக இருந்த ரஜனியின் தோழர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். கூட்டம் நடந்து முடிந்துள்ளது. வெளியேறியவர்கள் ஜன்னல் கதவுகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளனர். ஆனால் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம் அவரை பல்கலைக் கழகத்திலிருந்து தூக்கி எறிந்தது. அவர் தேர்வெழுத வேண்டியிருந்தபோது அவர் முதல் நாள் இரவுதான் ஆக்ஸ்ஃபோர்ட் நகரியம் வரவேண்டும்; தேர்வு முடிந்த இரவு வெளியேறிவிட வேண்டும்; தேர்வுக்காகத் தங்கியிருக்கும் நாட்களில் எந்தக் கூட்டத்திலும் பேசக் கூடாது எனும் நிபந்தனைகளின் பேரில்தான் அனுமதி வழங்கியது. ஆனால் அவர் தேர்வெழுதி 14 பாடங்களில் ஆல்ஃபா (Alphas – தனிச் சிறப்பு; இந்தியப் பலகலைகழகங்கள் சில அளிக்கும் டிஸ்டிங்ஷன் போன்றது). அவருக்கு அளிக்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் அவரது கல்விப் புலமையை வானளவிற்குப் புகழ்ந்தே ஆகவேண்டியிருந்தது. ஆனால் அவரது அரசியல்சார்புகளை எடுத்துக்கூறி அவரை இந்தியா போன்ற நாட்டில் இளம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க நியமிக்க நினைப்பவர்கள் சற்று யோசிக்க வேண்டும் என்று நீட்டி முழக்கியது. பிரிட்டிஷ் அரசாங்கம் அதுபோன்ற சிரமங்களை இந்திய கல்வி நிலையங்களுக்கு அளிக்கவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட கடவுப் புத்தகத்தில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் எந்தவொரு நாட்டிற்கும் பயணிக்கச் செல்லாது என முத்திரை குத்தித்தான் தந்தது. அத்தோடு அவரது வேலை வாய்ப்பிற்கான அனைத்துப் பாதைகளையும் மூடியது.

ரஜனி பால்மே தத், 1919 இல் சர்வதேச  தொழிலாளர்  அமைப்பான, ஐ.எல்.ஓ வின் தேர்வில் வெற்றிபெற்று அதில் பணியேற்கத் தயாரானார். கட்சி அப்போது தொழிலாளர் ஆய்வுத் துறை (LRD – Labour Research Department ) என்ற ஒன்றை ஆரம்பித்து அதில் பணியாற்ற அவரை வேண்டியது. சர்வதேச அமைப்பின் பணி ஆணையைப் பெற்றும் அதனைப் புறக்கணித்து சொற்ப ‘அலவன்ஸில்’ கட்சிப் பணியை ஏற்றார். 1920 இல் கட்சியை எந்த அகிலத்துடன் இணைப்பது என்ற பிரச்சினை முன்வந்தது. பெரும்பான்மை சமூக ஜனநாயகக் கட்சிகளால் தலைமைதாங்கி நடத்தப்பட்ட 2 ஆம் அகிலத்தில் இணைப்பது என முடிவெடுத்தனர். ரஜனி, கிளமென்ஸ் உள்ளிட்ட இடதுசாரிகள் லெனின் தலைமையிலான மூன்றாம் அகிலத்தில் இணைய விரும்பினர்.

இதற்கிடையில் 1920 ஆம் ஆண்டில் ஐ.எல்.பிக்கு வெளியிலிருந்த மார்க்சியக் குழுக்கள் ஒன்றிணைந்து கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியை (CPGB – Communist Party of Great Britain) தொடங்கினர். அவர்கள் மூன்றாம் அகிலத்தில் இணையவும் முடிவு செய்தனர். 1921 ஆம் ஆண்டு இடதுசாரி ஐ.எல்.பி கட்சியினர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். ரஜனி, கிளமென்ஸ் பால்மே தத், சபூர்ஜி சக்லத்வாலா, எமிலி பர்ண்ஸ், வால்டன் நியூபோல்ட் போன்றோர் இதில் அடங்குவர்.

ரஜனி இந்தப் பணிகளில் ஈடுபட்டு வந்தபோது கம்யூனிஸ்ட் அகிலத்தின் சார்பில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவுவதற்காக 1920 ஆம் ஆண்டு சல்மே முர்ரிக் லண்டன் வந்து சேர்ந்தார். எஸ்தோனியாவைச் சேர்ந்தவரான அவர் லெனினாலேயே தேர்வுசெய்யப்பட்டு நேரடியாக அவருக்குக் கீழ் இயங்குபவராக இருந்தார். 32 வயதான அவரும் 24 வயதே ஆன ரஜனியும் காதல் வயப்பட்டனர். பின்னர் திருமணமும் செய்துகொண்டனர். சல்மா 1905 ஆம் ஆண்டிலிருந்து போல்ஷ்விக். 1905 ஆம் ஆண்டு புரட்சியின் போதே ஜார் அரசால் சைபீரியாவிற்கு அனுப்பப்பட்டவர். பின் அக்டோபர் புரட்சிக்குப் பின் ஃபின்லாந்தில் இருந்து உள்நாட்டுப் போரில் ஃபின்லாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போரிட்டவர். பிரிட்டிஷ் கம்யூனிசத்திற்கு உதவ ஒரு வலுவான பிரதிநிதி தேவை என லெனின் நினைத்தபோது அவரது தேர்வு சல்மே முர்ரிக்.

சல்மே நீண்ட போராட்ட, புரட்சி அனுபவமும், மார்க்சியப் புரிதலும் கொண்டவர். 1922 ஆம் ஆண்டு நடந்த கட்சிக் காங்கிரஸில் ஹாரி போலிட்டும், ரஜனியும் அதிக வாக்குகள் பெற்று கட்சியின் தேசிய செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1923 இல் ரஜனி முதன் முறையாக சோவியத் யூனியன் சென்றார். கொமிண்டார்னில் பிரிட்டனுக்கான துணைக்குழுவில் கார்ல் ராடேக், ஜினோவிவ், புகாரின், கூசினென் ஆகியோரோடு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார். 1923 இல் கட்சியின் வார இதழான ’கம்யூனிஸ்ட்’. ‘தொழிலாளர் வாராந்தரி’ (Workers Weekly) என்று பெயர் மாற்றப்பட்டு, ரஜனி அதன் பொறுப்பாளர் ஆக்கப்பட்டார். 8 வாரங்களில் அதன் சந்தா 19 ஆயிரத்தில் இருந்து 51 ஆயிரம் ஆக உயர வழிவகுத்தார்.

இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தினசரியான டெய்லி வொர்க்கர் (Daily Worker) 2 லட்சம் பிரதிகள் விற்பனையாகியது. கட்சியின் பிரசுரங்கள் ஒரு ஆண்டில் 10 லட்சம் பிரதிகள் விற்றதும் உண்டு. கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை மீறிய அறிவுப்புல செல்வாக்கோடு இருந்தது.

1924 ஆம் ஆண்டு அவரும் சல்மே முர்ரிக்கும் முதலில் ஸ்டாக்ஹோமுக்கும் அங்கு நடந்த திருமணத்திற்குப் பிறகு ப்ருஸெல்ஸ் நகருக்கும் வந்தனர். இருவரும் 1936 ஆம் ஆண்டுவரை அங்குதான் இருந்து பணியாற்றினர்.

1924 இல் கொமிண்டார்னின் காலனிய நாடுகளுக்கான உபகுழு பாரிஸில் செயல்படத் தொடங்கியபோதிருந்து அதன் முக்கியமான உறுப்பினராக, எம்.என்.ராய் உடன் இணைந்து பணியாற்றினார். பாரிஸிற்கும் ப்ருஸெல்ஸுக்கும் பெர்லினுக்குமாய் அலைந்தார். அப்போதிருந்து இந்தியாவில் பொதுவுடமை இயக்கத்தைக் கட்டுவதற்கான கடமை, இந்த உபகுழுவிற்கும் பிரிட்டிஷ் கட்சிக்குமான வேலையென ஆனது. எம்.என்.ராயின் இதழ்கள், பிரசுரங்கள் இந்தியாவில் விநியோகிக்கப்படவும், பிரிட்டீஷ் கம்யூனிஸ்டுகள் சிலர் இந்தியா வந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை ஒருங்கிணைக்கப் பணியாற்றியதில் சக்லத்வாலாவோடு ரஜனிக்கும் பெரும் பங்கு உள்ளது.

1936 ஆம் ஆண்டு ரஜனியும் சல்மெயும் பிரிட்டனுக்கு நிரந்தரமாகத் திரும்பினர். அங்கு ஆக்ஸ்ஃபோர்டிலும் கேம்பிரிட்ஜிலும் ஏனைய உயர் கல்வி நிலையங்களிலும் படித்த இந்திய மாணவர்கள் மத்தியில் ஆற்றிய பணி, இந்தியப் பொதுவுடமை இயக்கத்திற்கு எண்ணற்றத் தலைவர்களை உருவாக்கியது. ரஜனியின் ’இந்தியா இன்று’ (India Today) 1940 ஆம் ஆண்டு வெளியானது. இன்றைக்கும் காலனித்துவ கால இந்தியாவின் பொருளாதாரம் குறித்த நூல்களில் தலையாயது என்றே அது மதிக்கப்படுகின்றது.

உலகப் போர்காலத்தில் தீவிர ஃபாசிச எதிர்ப்பு பேசி எழுதி வந்தார்.   2 ஆம் உலகப் போரின் முடிவில் சோவியத் யூனியன் மீது பிரிட்டிஷ் தொழிலாளர் மத்தியில் அனுதாபமும் பாராட்டுகளும் இருந்தன. கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையும் முதன்முறையாக அதற்கு முந்தைய உச்சமான 18 ஆயிரம் என்பதைத் தாண்டி 50 ஆயிரத்தைத் தொட்டது. பல ஆண்டுகள் கழித்து 1945 இல் இரு கம்யூனிஸ்டுகள் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

1946 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிரிட்டனின் தொழிலாளர் கட்சி அரசு, ரஜனி இந்தியா செல்வதற்கு 30 ஆண்டு காலமாக இருந்த தடையை நீக்கியது. 1946 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஜனி பால்மெ தத் முதன்முறையாக தன் தந்தையின் நாட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த நான்கு மாதங்களில் இந்தியாவில் சுமார் 45 கூட்டங்களில் உரையாற்றினார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் போக காந்தி, நேரு, ஜின்னா ஆகியோரோடும் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். பாகிஸ்தான் பிரிவினையைத் தடுக்க முயற்சித்தார். சென்ற இடங்களிலெல்லாம் அவர் ஒரு மாபெரும் வீரனுக்கு, தலைவனுக்கு உறிய வரவேற்பைப் பெற்றார். ஜூலை மாதம் அவர் லண்டனுக்குத் திரும்பும் முன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிலும் உரையாற்றினார்.

சல்மே முர்ரிக் 1964 ஆம் ஆண்டு மரணமடைந்தார். 1965 இல் ரஜனி பால்மெ தத் கட்சிப்பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 1975 ஆம் ஆண்டு ஜனவரி மாத லேபர் மந்திலி (Labour Monthly) இதழுக்கு, ஐரோப்பிய நாடுகள் பொதுச் சந்தையை ஏற்படுத்தப்போகிறோம், முந்தைய காலனி நாடுகளின் வளர்ச்சிக்கு உதவப் போகிறோம் என்று கதையளப்பதை விமர்சித்து கட்டுரை எழுதினார். அதை, “…கடைந்தெடுத்த ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களது ஞானத்தின் தொடக்கம் கம்யூனிசம் குறித்த அச்சத்தில்தான் பிறக்கிறது!’ என முடித்திருந்தார். ஆனால் அந்த இதழ் வருவதற்கு முன்பே, டிசம்பர் 20, 1974 இல் அவர் இயற்கையெய்தினார்.

Leave a Reply