புதுச்சேரி மாடல் ரங்கசாமியின் வினோத அரசியல் வித்தைகள்!

“புதுச்சேரியில எல்லாம் ஒரு மாடல்” என்று ஆரம்பித்து, “தில்லி சொல்றத கேட்டாத்தான் எல்லாம் நடக்கும்” என்று முடித்திருக்கிறார் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, அவர் அளித்துள்ள நேர்காணல் புதுச்சேரி அரசியலில் ஒரு புதுவிதமான ‘சரண்டர்’ அரசியலை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

அதிகாரம் இல்லாத ‘அதிகாரப்’ பதவியா?

நேர்காணல் முழுவதும் ரங்கசாமியின் பிரதான புலம்பல் ‘அதிகாரம்’ பற்றியே இருக்கிறது. ஒரு முழுமையான மாநில அந்தஸ்து இல்லாததால், சின்னச் சின்ன கோப்புகளுக்கும் துணை நிலை ஆளுநர் அலுவலகத்திற்கு (Raj Nivas) போய் காத்துக்கிடக்க வேண்டியிருப்பதாகக் குமுறுகிறார்.

கடந்த காலங்களில் கிரண்பேடி – நாராயணசாமி இடையே நடந்த மோதலைப் பார்த்த புதுச்சேரி மக்கள், “தங்களுக்குள்ளேயே ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தால் இணக்கம் இருக்கும்” என நம்பினர்.
ஆனால், ரங்கசாமி தலைமையிலான தற்போதைய என்.டி.ஏ (AINRC-BJP) ஆட்சியில் கூட, அதிகாரிகள் நியமனம் முதல் பட்ஜெட் ஒதுக்கீடு வரை அனைத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தை (MHA) எதிர்பார்த்து நிற்கும் நிலையே நீடிக்கிறது.

கூட்டாட்சி’யா அல்லது ‘கூஜா’ தூக்கும் தத்துவமா?

எந்த பாஜக ஒன்றிய அரசு “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர முடியாது” என்று நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்ததோ, அதே பாஜகவுடன் தான் ரங்கசாமி கூட்டணியில் இருக்கிறார். “மத்தியில் ஆளும் கட்சியுடன் இணக்கமாக இருந்தால் தான் வளர்ச்சி நடக்கும்” என்பது இவருடைய தாரக மந்திரம்.
ஆனால், நிதிப் பகிர்வில் புதுச்சேரிக்கு 15-வது நிதி ஆணையத்தில் உரிய பங்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ளது.

இதைப் பற்றிப் பேசத் தயங்கும் ரங்கசாமி, தில்லியுடன் இணக்கமாக இருப்பதை மட்டுமே பெருமையாகப் பேசுகிறார். இது ‘கூட்டாட்சி’ தத்துவமா அல்லது தில்லிக்கு அடிபணியும் ‘கூஜா’ தத்துவமா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


புதுச்சேரியில் மூடப்பட்ட பஞ்சாலைகள் (AFT) திறக்கப்படவில்லை, புதிய ஐடி பூங்காக்கள் கனவாகவே உள்ளன.
அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளில் புதுச்சேரி பின்தங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினால், “எல்லாவற்றுக்கும் தில்லியின் அனுமதி தேவை” என்று ஒரே போடாகப் போட்டு தப்பித்துக் கொள்கிறார் ரங்கசாமி.

இது எப்படியிருக்கிறது என்றால், “வீட்டுக்கு நான்தான் எஜமான், ஆனால் சாவி பக்கத்து வீட்டுக்காரரிடம் இருக்கிறது” என்று சொல்வது போல் இருக்கிறது.

கொள்கை (Ideology) vs வசதி (Alignment)
தேர்தலில் வெற்றிபெற ‘ஐடியாலஜி’ (கொள்கை) முக்கியமில்லை, தில்லியுடன் இருக்கும் ‘அலைன்மென்ட்’ (இணக்கம்) தான் முக்கியம் என்று ரங்கசாமி வெளிப்படையாகப் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கொள்கை என்பது வெறும் அலங்காரப் பொருள், அதிகாரத்தில் அமர தில்லி போடும் கட்டளைதான் நிஜம் என்பது அவர் வாதம்.

தேர்தல் நேரத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஏன் புதுச்சேரியை மட்டும் கேட்கிறீர்கள், இது எல்லா இடங்களிலும் தான் நடக்கிறது” என்று ‘பஞ்சாயத்து’ பாணியில் பதிலளித்து, ஜனநாயகத்தின் மீதான விமர்சனங்களை மிகச் சாதாரணமாகக் கடந்து சென்றுள்ளார். அதுவும் அவர் பணம் கொடுத்ததாக கையும் களவுமாக தேர்தல் ஆணையம் வீடியோ வெளியிட்டு இருக்கும்போது.

சுயாட்சி முழக்கமும்… தில்லி அடிமையும்!

“முழு அதிகாரம் கொண்ட அரசு வேண்டும்” என்று ஒருபுறம் தனது ஆதரவாளர்களிடம் பேசிக்கொண்டே, மறுபுறம் அதிகாரத்தை மொத்தமாக தில்லியிடம் ஒப்படைத்துள்ள பாஜக கூட்டணியில் ரங்கசாமி இருப்பதுதான் ‘புதுச்சேரி மாடல்’ அரசியலின் உச்சக்கட்ட நகைச்சுவை.

மக்களின் முதல்வர்’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ரங்கசாமி, தில்லியின் ‘நோடல் ஏஜென்ட்’ ஆக மாறிப்போனது புதுச்சேரியின் தன்னுரிமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து, பாஜக மண்ணை கவியது போல தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிச்சயம் மண்ணை கவ்வ செய்வார்கள், புதுச்சேரியை மீட்டு எடுப்பார்கள் என்ற  பேச்சே எங்கும் நிறைந்திருக்கிறது .

Leave a Reply