செங்கொடி ஏந்தி வாரீர் – தொழிலாளர் ஒன்றாய்ப் பொங்கும் புது உலகப் புரட்சிப் போராட்டந்தன்னில் (செங்கொடி)
அனுபல்லவி
எங்கும் உழைக்கும் மக்கள்
ஏந்திப் போராடும் கொடி
நம்கொடி உரிமைகள் நல்கும் புனிதக்கொடி (செங்கொடி)
சரணங்கள்
அன்றுசெய்த தியாகங்கள் அவர்க்கு நினைவில்லையா? அடக்குமுறைத் துரோகங்கள் அனைத்தையும் மீளலையா? ஒன்றுபட்டுக் கொடுங்கோலை ஒடித்தெறிய வில்லையா? உலகக்கொடி செங்கொடி கலகக் கும்பல்தொலைய (செங்கொடி).
முன்னர் முதலாளிக் கூட்டம் மோதி முறிக்கப்பார்த்தார் மூர்க்க ஜாரும் ஹிட்லரும் முடிந்தவரைக்கும் பார்த்தார் என்னென்ன கொடுமைகள் இழைத்தோ ஒழிக்கப்பார்த்தார் எல்லோரும் தோற்றுவிட்டார் ஏறுது வெற்றிக் கொடி (செங்கொடி)
தொழிலாளி விவசாயி தோழமை காட்டுங்கொடி சுத்தியும் அரிவாளும் துலங்கும் செந்நிறக்கொடி எளியவர் உடையவர் இல்லையென் றாக்கும் கொடி
என்றும் எதிர்ப்பவரை வென்று உயரும்கொடி (செங்கொடி)
இந்தப் பாடலுக்கு ஜீவா எழுதியிருக்கும் குறிப்பு: வாய் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று கேட்பார்கள், செங்கொடி நிந்தனையாளர்களுக்கு வாய்தான் புளித்தது என்பதைச் சர்வ சாதாரணமாக உழைப்பாளி மக்கள் உணரச்செய்ய வேண்டிய பணி, தொழிலாளர் இயக்க ஆரம்பத்தில் பெரும் பணியாக இருந்தது. அந்தக் காலத்தில் செங்கொடி உணர்வை உண்டுபண்ணப் பல பாடல்கள் எழுந்தன. அவற்றில் ஒன்று இது.