இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்ட நூறாவது ஆண்டினை இந்தியா முழுவதும் கொண்டாடுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு மேற்கொண்டுள்ளது. 1920 அக்டோபர் 17 அன்று தாஷ்கண்ட் நகரில் முதல் கம்யூனிஸ்ட் கிளை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் உருவாக்கப்பட்டு மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளை 1936ம் ஆண்டு சென்னையில் துவங்கப்பட்டது. இந்த கட்சி கிளையில் பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், ஜீவா, ஏ.எஸ்.கே. அய்யங்கார், சி.எஸ். சுப்பிரமணியம், கே. முருகேசன், நாகர்கோவில் சி.பி. இளங்கோ, டி.ஆர். சுப்பிரமணியம், திருத்துறைப்பூண்டி முருகேசன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தார்கள். கூட்டத்தினுடைய நிகழ்ச்சிகளை எழுதிய சி.எஸ். சுப்பிரமணியம் செயலாளராக இருந்தார். இவ்வாறு உருவாக்கப்பட்ட கட்சிக் கிளை உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்ட ஆர்வலர்கள் மட்டுமல்ல; 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், அந்நிய முதலாளிகள், அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்த உள்ளூர் முதலாளிகள், கிராமங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த கந்து வட்டிக் கொடுமைக்காரர்கள், ஜமீன்தார்கள்- என இவர்களை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி அதில் அடுக்கடுக்கான அடக்குமுறைகள், கைது, சித்ரவதைகளைச் சந்தித்த அர்ப்பணிப்பு மிக்கத் தோழர்களைக் கொண்ட கிளையாக அந்த கிளை அமைந்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கிளை உருவாக்கம் ஒரு தியாக வரலாற்றை உள்ளடக்கியதாகும்.
1917 நவம்பர் மாதம் சோவியத் நாட்டில் லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி ஜார் மன்னனின் ஆட்சியைத் தூக்கியெறிந்து, உழைப்பாளி மக்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய மகத்தான யுகப்புரட்சியானது உலகத்தையே புரட்டிப் போட்டது. சோவியத் புரட்சியின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பல கட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த, விடுதலைப் போராட்ட வீரர்கள் மத்தியிலும் முத்திரையைப் பதித்தது. தமிழ்நாட்டில் விடுதலைப் போரின் குரலாக விளங்கிய மகாகவி பாரதியின் சிந்தனைகளில் நவம்பர் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊடகங்கள், தொலைத்தொடர்புகள் எதுவும் இல்லாத அக்காலத்தில் மறுபக்கம், மார்க்சியம், லெனினியம், உழைப்பாளி வர்க்கம், புரட்சி இவைகளைப் பற்றியெல்லாம் அறிந்திராத நிலையில் கீழ்க்கண்டவாறு சங்கநாதம் எழுப்பினார் பாரதி::
“மாகாளி பராசக்தி உருசியநாட்
டினிற்கடைக்கண் வைத்தாள், அங்கே,
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்,
இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்
ஜாரெனும்பே ரிசைந்த பாவி”
புரட்சிக்குப் பின்னர் சோவியத் நாட்டில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் குறித்த செய்திகள் இந்தியாவில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதிசயமாக இருந்தது. அதே பாரதி,
“முப்பது கோடி ஜனங்களின் சங்க
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பில்லாத சமுதாயம்
உலகத்துக்கு ஒரு புதுமை-வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே”
என்று பாடினார்.
சென்னை தொழிலாளர் சங்கம்
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப்பட்டார்கள். இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் என்பதே நியதியாக இருந்தது. கொடும் சுரண்டலுக்கு உட்பட்ட தொழிலாளர்களுக்கு நாட்டிலேயே முதல் தொழிற்சங்கம் சென்னை தொழிலாளர் சங்கம் (மெட்ராஸ் லேபர் யூனியன்) 1918ல் சென்னையில் துவக்கப்பட்டது. இச்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொழிலாளர் உரிமைகளுக்கு போராடுகிற பணியில் செல்வபதி செட்டியார், ராமனுஜ நாயுடு, திரு.வி.க., சிங்காரவேலர், வ.உ.சி., போன்றவர்கள் குரல் கொடுத்து வந்தனர். 1920ம் ஆண்டு பி அண்ட் சி மில்லில் வெடித்த போராட்டத்தில் இரண்டு தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகினர். 1921ம் ஆண்டு ஜூன் மாதம் இதே தொழிலாளர்கள் போராட்டத்தின் மீது கண்மூடித்தனமான அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் 7 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இவர்களது உடல்களை சிங்காரவேலர் தனது தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்தார். தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குச் சென்று- போராடும் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சந்தித்து மேலும் உத்வேகமூட்டினார்.
சிங்காரவேலர்
தோழர் ம.சிங்காரவேலர் சென்னையில் ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்து வழக்கறிஞராக தொழில் புரிந்து வந்தார். லண்டன் மாநகருக்குச் சென்று அங்கு கம்யூனிச கொள்கைகளில் தொடர்புள்ளவர்களைச் சந்தித்து மார்க்சிய கொள்கைகளை புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் தொழிலாளர்களுக்கு உரிமைகள் வேண்டும் எனக் கூறி வந்த சிங்காரவேலர், முதலாளிகளின் சுரண்டல், தொழிலாளிகளின் கொடுபடாத சம்பளமே முதலாளிகளின் உபரி லாபம் என்பதையெல்லாம் புரிந்து கொண்டு தமிழகத்திற்கு வந்து மார்க்சிய கோட்பாடுகள் அடிப்படையில் தொழிலாளர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். தமிழக வரலாற்றில் கம்யூனிச லட்சியத்தை பரப்புவதில் சிங்கார வேலரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
கயா காங்கிரஸ் மாநாட்டில்…
1922ம் ஆண்டு பீகார் மாநிலம், கயா நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் பேசிய சிங்காரவேலர், தன்னை ஒரு கம்யூனிஸ்ட் பிரதிநிதி என பகிரங்கமாக பிரகடனப்படுத்திக் கொண்டு உரையாற்றினார். கம்யூனிச லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு தனிக் கட்சியும், தனி பத்திரிகையும் வேண்டுமென விரும்பிய சிங்கார வேலர் இந்துஸ்தான் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சி என்ற கட்சியையும் அதற்கான ஒரு பத்திரிகையும் உருவாக்கினார். இதோடு மட்டுமின்றி உலகத் தொழிலாளர்களின் உரிமை தினமான மே தினத்தை நாட்டிலேயே முதன்முறையாக 1923ம் ஆண்டில் சிறப்பாக கொண்டாடினார். அதுவே, நாடு முழுவதும் உழைப்பாளிகள் தினமான மே தினத்தை கொண்டாடுவதற்கு அறைகூவல் விடுத்த தினமாக அமைந்தது.
கான்பூர் சதி வழக்கு
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் வேர்விடுவதை முளையிலேயே கிள்ளி எறிய விரும்பிய பிரிட்டிஷ் அரசு பல சதி வழக்குகளை புனைந்தது. அதில் கான்பூர் சதி வழக்கு புனையப்பட்டு 13 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் சிங்கார வேலரும் ஒருவர். இந்த வழக்கு விசாரணை முடிவில் சம்பந்தப்பட்டவர்களுக்கு 4 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்காரவேலர் கடும் உடல்நிலை பாதிப்பால் கைது செய்யப்படாமல் ஜாமீனிலேயே இருந்தார். உடல்நிலை ஓரளவு தேறிய பின்னர், தனது உடல்நிலை தேறிவிட்டது; தன்மீதான வழக்கு விசாரணையை தொடரலாம் என கவர்னர் ஜெனரலுக்கு கடிதம் எழுதிய உடன் கான்பூர் நீதிமன்றத்தை நோக்கி பயணமானார். ஆனால் பிரிட்டிஷ் அரசு ஏற்கனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டதால், விசாரணை தொடர வேண்டாமென முடிவு செய்து இவர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ததால் வழியிலேயே சென்னைக்கு திரும்பினார்.
1925ம் ஆண்டு டிசம்பர் 26ந் தேதி கான்பூரில் கம்யூனிஸ்ட்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சிங்காரவேலர் தலைமை ஏற்று உரையாற்றினார். அதில் சோவியத் நாட்டின் புரட்சியைப் பற்றியும், லெனின் பங்களிப்பை பற்றியும், ரஷ்யாவில் சோசலிச ஆட்சியை வலுப்படுத்த அவருடைய முயற்சி எதிர்காலத்தில் மானுட சமுதாயத்திற்கு அளப்பரிய பங்கினை ஆற்றும் எனவும் குறிப்பிட்டார்.
ரயில்வே தொழிலாளர்கள் எழுச்சி
முதலாம் உலக யுத்தம் முடிவுற்ற நிலையில் பிரிட்டிஷ் அரசாங்கம் தொழிலாளர்களது உரிமைகளை பறிப்பது, கடும் அடக்குமுறைகளை ஏவுவது என நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனை எதிர்த்து 1918ம் ஆண்டு ரயில்வே தொழிலாளர்களுடைய மகத்தான போராட்டம் நாடு முழுவதும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. பொன்மலை, நாகப்பட்டினம், போத்தனூர், திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அரசின் அச்சுறுத்தல்கள் மற்றும் கைதுகளுக்கு பணியாமல், நெஞ்சை நிமிர்த்திப் போராடினார்கள். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். சிங்காரவேலரும், ரயில்வே தொழிற்சங்க செயலாளரான முகுந்தலால் சர்க்கால், இந்த போராட்டத்தினை தலைமை தாங்கி நடத்தினார்கள். இப்போராட்டத்தையொட்டி முகுந்தலால் சர்க்கார், சிங்காரவேலர் ஆகிய 16 பேர் மீது ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்த குற்றச் சாட்டுக்கள் உள்ளிட்ட வழக்குகளை ஆங்கிலேய அரசு பதிவு செய்தது. இந்த சதி வழக்கில் 14 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், பெருமாள் என்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை இரண்டாண்டுகளாக குறைத்த உயர்நீதிமன்றம், பெருமாள் என்ற தொழிலாளிக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைக்க மறுத்துவிட்டது. இரண்டாண்டு கடுங்காவல் தண்டனையை திருச்சி சிறையில் அனுபவித்து விட்டு சிங்காரவேலர் விடுதலையாகும் போது அவருக்கு வயது 70-ஐ தாண்டிவிட்டது.
லயோலா கல்லூரியில் சுந்தரய்யா
இருப்பினும், தொடர்ந்து தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், பெரியார், ஜீவா அவர்களோடு இணைந்து சமதர்ம பிரச்சாரத்தையும், பகுத்தறிவு பிரச்சாரத்தையும் தீவிரமாக மேற்கொண்டார். திருச்சி சிறையில் சிங்காரவேலர் இருக்கும் போது பம்பாயில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த ஹெச்.டி. ராஜா என்ற இளைஞரோடு தொடர்பு ஏற்பட்டது. இவர் பம்பாயிலிருந்து சென்னையில் இளைஞர்களை, மாணவர்களை கம்யூனிஸ்ட்டுகளாக்கும் பணிக்காக சென்னைக்கு வந்தவர். இவரது முன்முயற்சியில் லயோலா கல்லூரியில் மாணவர்களோடு தொடர்பு கொண்டு மார்க்சிய லட்சியங்களை விளக்கினார். இதன் விளைவாகவே தோழர் பி. சுந்தரய்யா, வி.கே. நரசிம்மன், சத்திய நாராயணா போன்றவர்கள் பின்னாட்களில் கம்யூனிஸ்ட்டுகளாக மாறினார்கள். கம்யூனிஸ்ட் கட்சியில் ஈர்க்கப்பட்ட பி. சுந்தரய்யா தனது படிப்பை துறந்து, 1930ம் ஆண்டு வாக்கில் தீவிரமான சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் கைது செய்யப்பட்டு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 18 வயது நிரம்பாததால் தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அதன் பின்னர் திருச்சி சிறைக்கும், ராஜமகேந்திரபுரம் சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டார். சிறைச்சாலையில் சுந்தரய்யா இருக்கும் போது பலரை மார்க்சியத்தின் பால் ஈர்ப்பதற்கான வகுப்புகளை நடத்தினார்.
அமீர் ஹைதர் கான் சென்னை வருகை
இதேகாலத்தில் பிரிட்டிஷ் அரசு முன்னணி கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் 32 பேர் மீது மீரட் சதி வழக்கு என்ற வழக்கினை பதிவு செய்து பலரை கைது செய்தது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் ஹைதர் கான் சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி கப்பல் தொழிலாளியாக பல நாடுகளுக்கு பயணம் சென்றார். அதையொட்டி அமெரிக்காவில் அவர் தங்கியிருந்த போது பஞ்சாப் புரட்சி வீரர்களை, இந்துஸ்தான் கதார் கட்சித் தோழர்களை சந்தித்துப் பேசிய போது கம்யூனிஸ்ட்டாக மாறினார். பின்னர் இந்தியா திரும்பிய பிறகு கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுகிற பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மீரட் சதி வழக்கில் அமீர் ஹைதர் கானை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்ய முயன்ற போது தலைமறைவாகி சென்னைக்கு வந்தார். சென்னையில் அவருக்கு அறிமுகமோ, ஆதரவோ இல்லாத சூழ்நிலையில் அவர் ஒவ்வொரு நாள் தங்குவதற்கும், ஒவ்வொரு நாள் உணவிற்கும் விவரிக்க முடியாத கஷ்டங்களை சந்தித்தார். இருப்பினும் அனைத்து கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு இளைஞர்களை கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கிற பணியை மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டர்களாக பணியாற்றிய பலரை சந்தித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்ப்பதற்கு முயற்சித்தார். இவருடைய முன்முயற்சியினால் சத்தியநாராயண ராவும், நீதிக்கட்சியைச் சார்ந்த ராஜ வடிவேலுவும் முழுநேர ஊழியராக மாறினார்கள். அந்நிய துணி புறக்கணிப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தோழர் பி.ராமமூர்த்தியைச் சந்தித்து பேசி அவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டார். பெங்களூரில் தங்கியிருந்த பி. சுந்தரய்யாவைச் சந்தித்து கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக மாற்றினார்.
இந்த நிலையில் அமீர் ஹைதர் கானை தீவிரமாக தேடிய காவல்துறை அவரை கைது செய்து சென்னை மத்திய சிறைச்சாலையின் தனிமைச் சிறைச்சாலையில் அடைத்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் போராட்ட வீரர்களோடோ, பிற கைதிகளோடோ சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. உண்ணாவிரதம் உள்ளிட்டு பல கட்டப் போராட்டங்களை நடத்திய பின்பு அந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சுபாஷ் சந்திரபோஸ் தலையீட்டின் பேரிலேயே மற்றவர்களோடு பழகுவதற்கு அனுமதிக்கப்பட்டது. சக சிறைவாசிகளோடு காந்தியின் போராட்ட முறை உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி கடுமையாக விமர்சித்தார். துடிப்புள்ள இளம் போராட்ட வீரர்கள் ஹைதர்கானின் பேச்சில் ஈர்க்கப்பட்டனர். அப்போது சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பி. சீனிவாசராவை சந்தித்துப் பேசி கம்யூனிச புத்தகங்களை படிக்கச் செய்து கம்யூனிஸ்ட்டாக மாற்றப்பட்டார். பிறகு 18 மாத சிறைத்தண்டனைக்குப் பிறகு ஹைதர் கான் விடுதலை செய்யப்பட்டார்.
பிரிட்டிஷ் அரசு ஆத்திரம்
விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்ற இளைஞர்கள் பலர் ஹைதர்கானின் பேச்சில் கவரப்பட்டு கம்யூனிச சிந்தனையில் ஈர்க்கப்பட்டிருந்த நேரத்தில் பிரிட்டிஷ் அரசு கம்யூனிஸ்ட்டுகளை அழித்தொழிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு 1933ம் ஆண்டு ராஜதுரோக வழக்கை பதிவு செய்து 20 பேரை கைது செய்தது. இவர்கள் மீது அதிகாரிகளை கொலை செய்வது, அரசாங்க கஜானாக்களை கொள்ளையடிப்பது உள்ளிட்ட மோசமான குற்றச்சாட்டுக்கள் பொய்யாக பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் முகுந்தலால் சர்க்கார், அருணாசலம், கோபால் சாஸ்திரி, டி.ஆர். சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தீவிர காங்கிரஸ் ஊழியராக இருந்த பி.ராமமூர்த்தி, வழக்கறிஞர் மூலம் உதவிகளை மேற்கொண்டு வந்தார். விசாரணை முடிவில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இரண்டாண்டுகள் முதல் ஆறு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு உதவி செய்த பி. ராமமூர்த்தி கம்யூனிச புத்தகங்களை படித்து படிப்படியாக மார்க்சிய சிந்தனைக்கு ஈர்க்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் மீண்டும் ஹைதர் கான் கைது செய்யப்பட்டு இந்தியாவின் பல சிறைகளுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த சுந்தரய்யா, சென்னையில் இளம் தொழிலாளர்களை தொடர்பு கொண்டு கம்யூனிஸ்ட்டுகளாக மாற்றி கட்சியை உருவாக்கும் பணியை மேற்கொண்டார்.
தடை விதிப்பு
1934ம் ஆண்டு ஆங்கிலேயே அரசாங்கமானது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது தடை விதித்தது. கம்யூனிஸ்ட்டுகள் தலைமை தாங்கிய இளைஞர் அமைப்புகள் தடை செய்யப்பட்டதுடன், பத்திரிகைகளுக்கும் வாய்ப்பூட்டு போடப்பட்டது. இந்நிலையில் “தொழிலாளர் பாதுகாப்புக் குழு” என்கிற புதிய அமைப்பினை உருவாக்கி பி.சுந்தரய்யா, கே. சத்தியநாராயணா, ஏ.எஸ்.கே. அய்யங்கார், ராஜவடிவேலு, ரஷ்ய மாணிக்கம் ஆகியோரைக் கொண்ட தொழிலாளர்கள் சங்கம் செயல்பட ஆரம்பித்தது.
காங்கிரஸ் – சோசலிஸ்ட் கட்சி
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட பின்னணியில் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த சோசலிச மனோபாவம் உடைய தீவிர காங்கிரஸ்காரர்களைக் கொண்ட மாநாடு ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் பாட்னாவில் நடைபெற்று, “காங்கிரஸ் – சோசலிஸ்ட் கட்சி” என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் பி.ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ் போன்ற தமிழகத்தைச் சார்ந்தவர்களும், இ.எம்.எஸ்., பி. கிருஷ்ணபிள்ளை, ஏ.கே. கோபாலன் ஆகிய கேரளத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு கூட்டத்தில் சில வழிகாட்டு கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது. அதன்படி கட்சி உறுப்பினர்கள், கட்சியிலிருந்து கொண்டே காங்கிரசில் சேர்ந்து, அதனுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஒருபக்கம் கம்யூனிஸ்ட்டுகள் என்ற முறையில் ரகசியமாக சந்தித்து திட்டங்களை உருவாக்குவது, காங்கிரஸ் உறுப்பினர் என்ற முறையில் கூட்டங்கள், மாநாடுகள், இயக்க வேலைகளில் பங்கெடுப்பது, காங்கிரஸ் சோசலிஸ்ட் உறுப்பினர் என்கிற முறையில் அதன் மாநாடுகளில் கலந்து கொள்வதோடு வெகுஜன அமைப்புகளை உருவாக்கி தீவிரமாக பணியாற்ற வேண்டுமென மூன்றுவித கடமைகளை நிறைவேற்றினார்கள். இந்த பணியில் பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கு வகித்தனர். இவர்களோடு பம்பாய் மாகாணத்திலிருந்து அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்ட எஸ்.வி. காட்டேவும் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதிலும், தொழிற்சங்கங்களை அமைக்கும் பணியிலும் ஈடுபடுத்திக் கொண்டனர்.
பெரியார் – ஜீவா
சோவியத் நாட்டில் பயணம் செய்து திரும்பி வந்த தந்தை பெரியார், பகுத்தறிவு கொள்கைகளுடன் சமதர்ம கொள்கைகளையும் இணைத்து பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்தார். இவரோடு ஜீவாவும், சிங்காரவேலரும் இணைந்து பிரச்சாரங்களை மேற்கொண்டனர். ஆனால் 1934ம் ஆண்டு வாக்கில் சமதர்ம பிரச்சாரத்தை தந்தை பெரியார் கைவிட்ட நிலையில் கருத்து வேறுபாடு கொண்டு ஜீவா தனித்து செயல்பட்டு வந்தார். இவரைத் தொடர்பு கொண்டு எஸ்.வி. காட்டே, பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ் ஆகியோர் பல நாட்கள் விவாதத்திற்குப் பிறகு ஜீவா காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைத்தார்; கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் சிறந்த கம்யூனிஸ்ட் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
போர்க்களமாக மாறிய தமிழகம்
1935-36ம் ஆண்டுகளில் தமிழகம் போர்க்களமாக மாறியது என்றால் மிகையல்ல. எண்ணற்ற தொழிலாளர்கள் போராட்டங்கள், விவசாயப் போராட்டங்கள், மாணவர்கள் – இளைஞர்கள் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. இப்போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்திய பெருமை காங்கிரஸ் – சோசலிஸ்ட் கட்சியில் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட்டுகளையே சாரும். கள் இறக்கும் தொழிலாளர்கள் போராட்டம், சென்னை டிராம் தொழிலாளர்கள் போராட்டம், அச்சுத் தொழிலாளர்கள் போராட்டம், கோவை, திருச்சி, சேலம், மதுரை, தென்னாற்காடு, வடஆற்காடு மாவட்டங்களில் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டங்கள், அரசின் அடக்குமுறைகளை மீறி நடைபெற்றன.
எம்.ஆர்.வெங்கட்ராமன்
இப்போராட்டங்களுக்கு தேவையான சட்ட உதவிகள் செய்யும் பணியில் சிறந்த வழக்கறிஞரான எம்.ஆர். வெங்கட்ராமன் ஈடுபட்டார். பின்னர் அவரும் கம்யூனிஸ்ட் கொள்கைகளின் பால் ஈர்க்கப்பட்டு வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு கட்சியின் முழுநேர ஊழியராக மாறினார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில் உடல்நலம் குன்றியிருந்த அவரது துணைவியாரை பார்ப்பதற்கு பரோலில் வெளியே வந்த எம்.ஆர்.வெங்கட்ராமன், துணைவியாரைப் பார்த்து ஆறுதல் கூறிவிட்டு சிறைக்கு திரும்ப இருந்த நேரத்தில் கட்சித் தலைமையிடமிருந்து அவருக்கு ஒரு தகவல் வந்தது. அவர் தலைமறைவாகச் சென்று கட்சிப் பணியாற்ற வேண்டுமென்றும், சிறைக்கு திரும்ப வேண்டாமெனவும் அந்த தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அவர் தலைமறைவாகச் சென்று இயக்கப் பணிகளில் ஈடுபட்டார். அடுத்த சில நாட்களில் அவரது துணைவியார் மரணமடைந்தார். தலைமறைவான எம்.ஆர். வெங்கட்ராமனை கைது செய்ய காவல்துறை அவரது வீட்டைச் சுற்றி காத்திருந்த காரணத்தினால் மனைவியின் இறுதி நிகழ்ச்சியில் கூட எம்.ஆர். வெங்கட்ராமன் கலந்து கொள்ளவில்லை.
முத்துராமலிங்கத் தேவர்
கோவையில் லட்சுமி மில் தொழிலாளர்கள் போராட்டம், மதுரையில் மகாலெட்சுமி மில் தொழிலாளர்கள் போராட்டங்கள் வெடித்தன. மதுரையில் தொழிற்சங்கத் தலைவராக இருந்த முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜீவா, பி. ராமமூர்த்தி ஆகியோர் மதுரைக்குச் சென்று அந்தப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தினர். இதேகாலத்தில் நெல்லிக்குப்பம் பாரி மிட்டாய் தொழிற்சாலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
கீழத் தஞ்சையில்…
மறுபக்கம் கிராமப்புறங்களில் ஜமீன்தார்கள், பண்ணையார்கள் செய்த கொடுமைகள் தாங்காமல் விவசாயப் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. கந்து வட்டி கொடுமையையும் எதிர்த்தும், குத்தகை விவசாயிகள் நிலவெளியேற்றம், பண்ணையார் அடக்குமுறை, சமூக ஒடுக்குமுறை உள்ளிட்டவற்றை எதிர்த்தும் பல போராட்டங்கள் நடைபெற்றன. கீழத்தஞ்சையில் இக்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் திரட்டுகிற பணியில் பி. சீனிவாசராவ் ஈடுபட்டார். கண்மூடித்தனமான கொடுமைகளுக்கு உள்ளாகியிருந்த பண்ணை அடிமைகளையும், குத்தகை விவசாயிகளையும் திரட்டி வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய பெருமை பி. சீனிவாசராவ் அவர்களையே சாரும். சாணிப்பால், சவுக்கடிக்கு உள்ளான இம்மக்களை “அடித்தால் திருப்பி அடி” என ஆவேச முழக்கமிட்டு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். தனது இறுதி மூச்சு வரை இப்போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாணவர் எழுச்சி
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இதர மக்களைப் போலவே மாணவர்களும் களமிறங்கி போராடத் துவங்கினர். இதேகாலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்திய போராட்டங்களில் பல மாணவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பாலதண்டாயுதம், கே. முத்தையா, ஆர். உமாநாத் போன்றவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் அவர்கள் படிப்பைத் துறந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முழுநேர ஊழியராக மாறினார்கள். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டங்களுக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என். சங்கரய்யா தலைமை தாங்கி மாணவர்களைத் திரட்டி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். தோழர் என். சங்கரய்யா மற்றும் மாணவர் தலைவர்களும் படிப்படியாக கம்யூனிஸ்ட்டுகளாக மாறி, முழுநேர ஊழியர்களாகி மக்கள் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டனர். இத்தகைய பிரம்மாண்டமான மக்கள் எழுச்சி போராட்டக் களத்தில் பூத்த மலராகவே 1936ம் ஆண்டு முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளை உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் வேர்விட்டு மலர்ந்தது.
கம்யூனிஸ்ட்டுகள் ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து இந்திய நாட்டை மீட்டெடுக்கவும், அதேசமயம் உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளின் சுரண்டல் கொடுமைகளிலிருந்து தொழிலாளர்களையும், நிலப்பிரபுத்துவ பண்ணையடிமை முறையை தகர்த்து கிராமப்புற விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளிகளையும் விடுவிக்கும் மகத்தான போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தினார்கள். அரசின் அடக்குமுறைகள், தடைகள், சிறைச்சாலைகள், தண்டனைகள், காவல்துறை நேரடித் தாக்குதல்கள் அனைத்தையும் நெஞ்சுறுதியுடன் எதிர்த்துப் போராடிய வீரப்பாரம்பரியம் மிக்கதே கம்யூனிஸ்ட் கட்சியாகும்.
தொடக்கம் முதல் இன்று வரை இந்த மகத்தான தியாக பாரம்பரியத்தில் பயணித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் வீர வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பினை இந்த நூற்றாண்டு முழுவதும் நிறைவேற்ற பாடுபடுவோம்.
தோழர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐஎம், தமிழ்நாடு மாநில செயலாளர்.