இவ்வாண்டு கிறிஸ்துமஸ் விழா முடிந்து இரண்டாவது நான் இந்த வரிகளை எழுதுகிறேன். கடந்த காலங்களைப் போலவே இவ்வாண்டும் உலகெங்குமுன்ன கிறிஸ்தவர் உற்சாகமாகக் கொண்டாடும் விழாவாக இருந்தது கிறிஸ்துமஸ்.
இந்த நேரத்தில் ஆதிகால கிறிஸ்துவ சமுதாயத்தைக் குறித்து ஏங்கல்ஸ் எழுதிய கட்டுரை முக்கியமானதாகத் தோன்றுகிறது. மாஸ்கோவில் ஒரு நூல் வெளியீட்டகம் 1957ல் வெளியிட்ட, “மதத்தைப் பற்றி மார்க்கம் ஏங்கல்ஸ்” என்ற நூலின் ஆங்கிலப் பதிப்பின் 313வது பக்கத்தில் இக்கட்டுரை ஆரம்பமாகிறது.
ஆரம்பகால கிறிஸ்துவ மதத்திற்கும் நவீன தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கும் இடையிலான ஒத்த தன்மையினை சுட்டிக்காட்டிக் கொண்டுதான் ஏங்கல்ஸ் தன்னுடைய கட்டுரையைத் தொடங்குகிறார். அவர் கூறுகிறார்: “நவீன தொழிலாளி வர்க்க இயக்கத்தைப் போலவே கிறிஸ்துவ மதமும் தொடக்கத்தில் சுரண்டப்பட்ட மக்களின் ஒரு இயக்கமாக இருந்தது. அடிமைகளின் விடுதலையைத் தேடிய பழங்கால அடிமைகளையும், அதைப் போலவே உரிமைகள் ஏதுமில்லாத தரித்திரர்களையும், ரோமானிய சக்கரவர்த்திகளால் அடக்கி ஒடுக்கப்படவும் வேட்டையாடப்படவும் செய்தவர்களின் மதமாகத்தான் அது ஆரம்பமாகியது. நவீன தொழிலாளி வர்க்கத்தின் சோஷலிசத்தைப் போல கிறிஸ்துவ மதமும் மனிதனுக்கு அடிமைத்தனத்திலிருந்தும் வறுமையிலிருந்தும் கிடைக்கப்போகின்ற சுதந்திரத்தை முன்வைத்தது. அந்த சுதந்திரம் மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்தில் கிடைக்கும் என்றுதான் கிறிஸ்துவ மதம் கூறியது. சோஷலிசமானது இந்த உலகத்தில் உள்ள மனித சமுதாயத்தின் செயல்பாட்டை ஆதாரமாகக் கொண்டிருந்தது. இரண்டும் ஒடுக்குமுறைகளுக்கு இரையாகின. அவைகளின் ஆதரவாளர்கள் அவமதிப்புக்கும் அடக்கு முறைகளுக்கும் இரையாயினர் – ஒன்று மனித சமுதாயத்தின் எதிரிகள் என்ற முறையில், இன்னொன்று அரசு அமைப்பினுடையவும், குடும்பத்தினுடையவும், சமுதாய அமைப்பினுடையவும் எதிரிகள் என்ற முறையில். ஆனால் இந்த அடக்குமுறைகள் எல்லாம் நடைபெற்றும் அவைகளால் உந்தப்பட்டு இரண்டும் வெற்றி கரமாக முன்னேறியது, பிறந்து 300 ஆண்டுகளுக்குப்பிறகுதான் கிறிஸ்துவ மதம் என்ற மதம் ரோமானிய சாம்ராஜ்யத்தின் அதிகாரபூர்வமான மதம் என்ற அஸ்தஸ்தைப் பெற்றது. சோஷலிசம் அறுபதே ஆண்டுகளில் எதிர்கால வெற்றியை உறுதிப்படுத்தும் ஒரு நிலையை எட்டிவிட்டது.” ஏங்கல்சைத் தொடர்ந்து மற்ற மார்க்சீய அறிஞர்களும் கிறிஸ்துவ மதத்தை விஞ்ஞான ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். புராதன காலத்தில் சுரண்டப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுடைய உணர்வுகளையும் சிந்தனைகளையும் உருவகப்படுத்தி ஆயிரக் கணக்கான தியாகிகளைத் தோற்றுவித்த அந்த மதம், பிற்காலத்தில் நிலப்பிரபுத்துவ ஆதிக்க காலத்திலும் முதலாளித்துவ காலத்திலும் சுரண்டும் வர்க்கத்தினரின் கைக்கருவியாக மாறிவிட்டது என்ற உண்மையை மார்க்சிஸ்டுகள் எடுத்துக்காட்டினர். புராதன காலத்தில், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும், வறுமையிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்து நின்ற மக்கள் நவீன காலத்தில் சோஷலிச இயக்கத்தைத்தான் சார்ந்து நிற்கின்றனர் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
நிலப்பிரபுத்துவ ஆதிக்க காலத்திலும் முதலாளித்துவக் காலத்திலும் கிறிஸ்துவ மதமே நிலப்பிரபுத்துவ முதவாணித்துவ வர்க்கங்களின் கையில் ஒரு ஆயுதமாக மாறிவிட்டது. அதனால் தான் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் நிறுவனத் தலைவர்களான மார்க்சும் ஏங்கல்சும் மதத்திற்கெதிரான போராட்டத்தில் மற்ற பொருள்முதல்வாதிகளுடன் இணைந்து நிற்க வேண்டியிருந்தது. அதனாலேயேதான் அமைப்பு ரீதியான தொழிலாளி வர்க்க இயக்கம் வளர்ந்து வரத் தொடங்கியபோது அது மதத்தின் முகமூடி அணிந்து வந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் ஆக்கிரமிப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. உலகில் முதலில் தோன்றிய சோஷலிச அரசுக்கு-சோவியத் யூனியனுக்கு நிலவு டைமையாளர்களையும் பூர்ஷ்வாக்களையும் எதிர்த்துப் போராடியதைப் போலவே மத ஆதிக்கக்காரர்களுக்கெதிராகவும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
கிறிஸ்துவ மதத்தைப் போலவே மற்ற மதங்களிலும் மறைந்திருக்கின்ற இந்த உண்மைகள் ஏதாவது ஒருவிதத்தில் சுரண்டும்-சுரண்டப்ப டும் வரக்கங்களுக்கிடையிலான போராட்டத்தில் பிரதிபலிக்கிறது என்ற உண்மையை வெளிப்படுத்த முயற்சிப்பது மார்க்சிஸ்டு-லெனினிஸ்டுகளின் கடமையாகும். இதனை நிறைவேற்றிக் கொண்டுதான் நவீன தொழிலாளி வர்க்க இயக்கத்தை கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுடனும், சிந்தனைகளுடனும் இணைக்க முடியும்.
இத்திசையில் சில காரியங்களை இந்திய நாட்டின் மார்க்சீய தத்துவ சிந்தனையாளர்களும் வரலாற்றாசிரியர்களும் தொடங்கியுள்ளனர். கோசாம்பி, தேவிபிரசாத் சதோபாத்யாய, தாமோதரன், சர்தே சாய், ருமீளா தாப்பர், ராம்சரன் சர்மா முதலான பல இந்திய மார்க்சீய அறிஞர்களும் செய்துள்ள ஆராய்ச்சிகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக மார்க்சிய விஞ்ஞானத்திற்கே விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகும்.
இந்திய மார்ச்சிய அறிஞர்களின் இந்த வரிசையில் முன்னேறி வருகிற ஒரு இளம் அறிஞர் டாக்டர் தர்மராஜ் ஆடாட். அவர் எழுதிய இரண்டு சிறு நூல்கள்-மார்க்சீயமும் பகவத் கீதையும், கௌதம புத்தன் வாழ்க்கையும்-தத்துவமும் ஆகியவை என் முன்னால் உள்ளன. மலை யாளத்தில் எழுதப்பட்டுள்ளதனால் இவை கேரளத்திற்குள் மட்டுமே பிரபலமடைந்துள்ளன. இருந்த போதிலும் அனைத்திந்திய அளவில் அங்கீகாரம் பெறத் தகுதியான நூல்கள் இவை.
மற்ற எல்லா மார்க்சிய அறிஞர்களையும் போல டாக்டர் ஆடாட் டும் பகவத் கீதையினுடையவும் புத்த தத்துவத்தினுடையவும் அடியில் ருக்கிற சமூக உண்மைகளிலிருந்துதான் ஆரம்பிக்கிறார். நூலாசிரியர் கூறுகிறார்: “ரிக்வேதத்தின் கடைசி கட்டங்களில் ஆரம்பமான பழைய சமூக, பொருளாதார அமைப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி யஜுர் வேதம் வழியாகக் கடந்து பிராமணத்தை எட்டியபோது மிகவும் கடுமையாகியது. சித்தாந்த ரீதியாக சிந்திப்பதற்கும் சமுதாயத்தின் உழைப்பாளர்களை அடக்கி ஆளத்திறமையுள்ள ஒரு ஆளும் வர்க்கம் பிராமணர்களுக்கு சமமாக பலமடைந்து வந்தது. இவர்களின் முக்கிய பிரச்சனை இயற்கையை வெல்லுவதைக் காட்டிலும் பெரும்பான்மையினரான அடிப்படை வர்க்கத்தை-மனிதர்களை வெல்லுவதாக இருந்தது. கால கட்டத்தின் தவிர்க்க முடியாத நிலை மதத்தை உருவாக்குவதற்கும் ஆட்சி அதிகாரத்தை-அரசை-அமைப்பதற்கும் அவர்களைக் கொண்டு சென்றது. அதன் மூலமாக ஜனங்களை பயப்படக்கூடியவர்களாக மாற்றுவதில் அவர்கள் வெற்றி பெற்றனர்.”
இந்த வரலாற்று நிகழ்ச்சிப் போக்கில் உருவான இரண்டு தத்து வஞானிகள்தான் வேதயின் ஆசிரியரும், ஸ்ரீ புத்தனும். இந்த இருவரையும் இந்தியாவின் மதாச்சாரியர்களாக பல நூற்றாண்டுகள் மக்கள் கருதி வந்தனர். ஆனால் மதாச்சாரியர்கள் என்ற முறையில் அவர்கள் பெற்றிருந்த அஸ்தஸ்து புராதன இந்தியாவில் உருவாகியிருந்த வர்க்க சமுதாயத்தின் முரண்பட்ட சக்திகளின் பிரதிநிதிகள் என்ற முறையில்தான். இந்த உண்மையைத்தான் இரண்டு நூல்களின் மூலமாக டாக்டர் ஆடாட் வெளிப்படுத்தியிருக்கிறார்.
புராதன கிரேக்க நாட்டிலும் ரோமாபுரியிலும் ஏற்பட்ட வடிவத்தில் அடிமைமுறை புராதன இந்தியாவில் வளரவில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அடிமை முறையைக் காட்டிலும் கொஞ்சம் கூட கொடுமை குறையாத ஓர் அமைப்பு (சதுர்வர்ணம்) நான்கு வருணமுறை இங்கு உருவாகியது – அடிமை முறை என்பதுபோலவே நான்கு வருண முறையிலும் அடக்குவோரும் சுரண்டுவோரும் ஒருபக்கம், அடக்கப்படுவோரும் சுரண்டப்படுவோரும் மறு பக்கம் என்ற முறையிலான வேறுபாடு ஏற்பட்டது. அதில் அடக்குவோரின் சுரண்டுவோரின் பிரதிநிதியாக கீதையின் ஆசிரியர் இருந்தார். புத்தர் அடக்கப்பட்டவர்களையும் சுரண்டப்பட்டவர்களையும் பிரதிநி தித்துவப்படுத்தினார். இந்த உண்மையைத்தான் இரண்டு நூல்களின் மூலமாக அவர் நிலை நாட்டியுள்ளார். முதல் நூலைக் குறித்து அவர் இவ்வாறு கூறுகிறார்:
“எல்லா மதநூல்களும், பாடுபடுவோரை படை திரட்டுவதிலிருந்து தடுப்பதற்கே அழுத்தம் கொடுத்துள்ளன. கீதையும் அதைத்தான் செய்துள்ளது. வருண அமைப்பின் பாதுகாவலனாக இருந்த கீதாசிரியருக்கு தன்னுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து பாடுபடும் அடித்தட்டு வர்க்கத்தின்பால் இருந்து வந்த வெறுப்பை பிழிந்தெறிய முடியவில்லை. வருண அமைப்பின் உடன்பிறப்பான ஆண் ஆதிக்க சிந்தனையிலிருந்து உருவான, பெண்களின்பாலான புறக்கணிப்பிலிருந்து கீதாசிரியரும் அன்னியமாகியிருக்கவில்லை. இக்காரணங்களினால்தான் பெண்களையும் வைசியர்களையும், சூத்திரர்களையும், சண்டாளர்களையும் ஒரே பட்டியலில் சேர்க்கும் நிர்ப்பந்தம் கிருஷ்ணனுக்கு ஏற்பட்டது. கிரு ணனைப் பொறுத்தவரை அவர்கள் எல்லாம் பாவயோனிகளைச் சார்ந் தவர்கள்.”
புத்தரை டாக்டர் ஆடாட் மார்க்சுடன் ஒப்பிடுகிறார். ஆரம்ப கால கிறிஸ்தவ மதத்திற்கும் நவீனகால தொழிலாளி வர்க்க இயக்கத்கிற்கும் இடையில் ஒத்த தன்மையைக் கண்ட ஏங்கல்சைப் போல புத்தரும், மார்க்கம் வாழ்ந்தது, ஆதரவற்றவர்களுக்காகத்தான். மக்களின் சமத்துவத்தை இருவரும் அங்கீகரித்தனர். எல்லா மனிதர்களுக்கும் சமமான உரிமை, சமமான வாய்ப்பு, எல்லோருக்கும் சமம்; எல்லோரும் சமம் என்னும் தத்துவம் நடைமுறை வாழ்க்கையில் மக்களுக்கிடையில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது?
இந்தப் பிரச்சனையில் புத்தருக்கும் மார்க்சுக்கும் இடையிலான ஒத்தநிலையை சுட்டிக் காட்டியபின் அவர்கள் இருவருக்கும் இடையி லான வேறுபாட்டை டாக்டர் ஆடாட் சுட்டிக்காட்டுகிறார். புத்தரும். மார்க்சும் ஒன்றுபோல உயர்த்திப் பிடித்த லட்சியங்கள் நடைமுறைப்பு டுத்துவது சாத்தியமல்லாத ஒரு சூழ்நிலையில் தான் புத்தர் வாழ்ந்தார். ஆனால் மார்க்ஸ் அவர் முன் வைத்த சோஷலிச சமூகம் யதார்த்தமாவதற்குச் சாதகமான சூழ்நிலை வளர்ந்து வந்த காலத்தில் வாழ்ந்தார். அதனால் மரணத்திற்குப் பிறகாவது தன்னுடைய சித்தாந்தங்கள் நடை முறைப்படுத்துவதில் மார்க்கக்குக் கிடைத்த வெற்றிதான் அவரை புத்த ரிலிருந்து வேறுபடுத்துகிற முக்கிய அம்சம். அன்று மார்க்கக்கு அது சாத்தியமாகியது. அவர் உருவாக்கிய சித்தாந்தங்கள் துல்லியமானதாகவும் எதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததும் ஆகும். அது மட்டுமின்றி தனது சித்தாந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வா லாற்றின் இயக்கச் சக்திகளைக் கண்டறியவும் அவரால் முடிந்தது. அது மனித சக்தியின் உருத்திரண்ட வடிவமான தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு ரீதியான சக்திதான்.
(1993 ஜனவரி 12 தேசாபிமானி வார இதழில் எழுதியது)
தமிழில் பி.ஆர்.பி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > ஆவணங்கள் > சிறப்புக் கட்டுரைகள் > மத சமுதாயங்களின் வர்க்க உள்ளடக்கம் – இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்
மத சமுதாயங்களின் வர்க்க உள்ளடக்கம் – இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்
posted on
You Might Also Like
செங்கொடியே எம் கொடியே – பாடல்கள்
December 12, 2024
பிரஞ்சியரின் ஆட்சியில் புதுச்சேரி (1816-1954) கால வரிசை
November 10, 2024
அன்னியமாதல்
October 20, 2024
கீழூர் வாக்கெடுப்பு
October 18, 2024