புதுச்சேரி மாநிலத்தில் மூடப்பட்ட ரேசன் கடைகளை திறக்கக் கோரி இன்று (19.02.2024) முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கவுள்ளது. 2021 தேர்தலில் ஆட்சிக்கு வந்த என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு, ரேசன் கடைகளை திறக்க மறுத்து வருகிறது. இதனால் ஏழை, எளிய – நடுத்தர மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தின் மக்கள் தொகை 15 லட்சம். அங்கு வழங்கப்பட்டுள்ள ரேசன் கார்டுகள் 3 லட்சத்து 52 ஆயிரத்து 382. இவற்றில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 211 சிவப்பு அட்டைகள். (வறுமைக்கோட்டுக்கு கீழிருக்கும் முன்னுரிமைக் குடும்பங்கள்). 1 லட்சத்து 66 ஆயிரத்து 142 மஞ்சள் அட்டைகள் (வறுமைக் கோட்டுக்கு மேலி ருப்பவை). இவர்களுக்கு புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமுள்ள 515 ரேசன் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில்தான், ஒன்றிய பாஜக அரசின் வலியுறுத்தலின் பேரில் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் (2015) அரிசிக்கு பதிலாக மானியத்தை பணமாக வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடுமையான எதிர்ப்பால் மீண்டும் அரிசியே வழங்கப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு, அரிசிக்கு பதிலாக பணப்பட்டுவாடா திட்டத்தை எதிர்த்தபோதும், ஆளுநர் கிரண்பேடியும் ஒன்றிய பாஜக அரசும் சேர்ந்து கொண்டு புதுச்சேரியில் பணப்பட்டுவாடாவை அமலாக்கினர்.
நிர்மலா சீதாராமன், ரங்கசாமி, தமிழிசையின் வாக்குறுதிகள் என்ன ஆனது?
கடந்த 2021-இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேசன் கடைகளை திறப்போம் என என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வாக்குறுதி அளித்தார். நடைமுறை யில் உள்ள ரேசன் கடைகளுக்குப் பதிலாக நடமாடும் நியாய விலைக் கடைகளை ஏற்படுத்துவோம் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரியில் வெளி யிட்டார்.
எல்லாவற்றிற்கும் மேலாக தற்போதைய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குடியரசு தினத்தில் தேசிய கொடி ஏற்றுகிறபோது, காரைக்காலில் உள்ள கூட்டு றவு நியாய விலைக் கடைகளை சூப்பர் மார்க்கெட்டு களாக தரம் உயர்த்துவோம் என பேசினார். ஆனால், இவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை.
2021-இல் ஆட்சிக்கு வந்த ‘டபுள் என்ஜின்’ என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு (மத்தியிலும் பாஜக, மாநிலத்திலும் பாஜக பங்கேற்கும் கூட்டணி அரசு) ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த அரிசிக்கு பதிலாக பணப்பட்டுவாடாவை நிறுத்தி விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்திற்குப் பிறகு தற்போது பணப்பட்டுவாடா நடைமுறையில் உள்ளது.
உணவுப் பாதுகாப்பே உயிர்ப் பாதுகாப்பு..
பொது விநியோக முறை திட்டமே, ஏழை, எளிய – நடுத்தர மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத்தான். இதற்காக 2013-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பாஜகவும் ஆதரித்தது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது – ‘உணவை ஓர் அடிப்படை மனித உரிமையாக உறுதி செய்வதாகும். இது ஏழை மக்களின் அடிப்படை உணவுத் தேவை களை நிறைவு செய்வதை நோக்கமாக கொண்டது’. உணவு மனிதனுடைய அடிப்படை உரிமை என்று ஐ.நா. மன்றம் பிரகடனப்படுத்தியது. இந்த அடிப்படை மனித உரிமையை காலில் போட்டு மிதிக்கும் அள வுக்கு பாஜக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு, ரேசன் கடைகளை திறக்க மறுத்து வருகிறது.
புதுச்சேரி மக்களுக்கு பெரும் இழப்பு
2018 ஆம் ஆண்டிலிருந்து வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு (பி.பி.எல்) 20 கிலோ அரிசிக்குப் பதிலாக மாதம் 600 ரூபாயும், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கு (ஏ.பி.எல்) 10 கிலோ அரிசிக்கு பதிலாக மாதம் 300 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் அரிசி விலை கடுமை யாக உயர்ந்துள்ளது.
அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரிசிக்குப் பதிலாக வழங்கப்படும் பணத்தைக் கொண்டு ஏற்கெனவே ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வந்த 10 கிலோ மற்றும் 20 கிலோ அரிசியை இன்றைய விலையில் வெளி மார்க்கெட்டில் வாங்கிட இயலாது. இதனால் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் உத்தரவாதம் செய்யப்பட்ட உணவு, புதுச்சேரி மாநில மக்களுக்கு மறுக்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் அரிசிக்கு அடுத்ததாக சர்க்கரை, பாமாயில், பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. புதுச்சேரி மாநிலத்தில் ரேசன் கடைகள் இல்லாததால் மேற்கண்ட மானிய விலையிலான உணவுப் பொருட்களும் புதுச்சேரி மக்களுக்கு கிடைப்பதில்லை.
3 மாநில எல்லையில் சிக்கித் தவிக்கும் மக்கள்
உதாரணமாக மண்ணாடிப்பட்டு கொம்யூனில் உள்ள பி.எஸ். பாளையம் கிராமம் தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையில் உள்ளது. வாதானூர் ஊராட்சிக்குட்பட்ட பி.எஸ். பாளையம் கிராமம் ஒரு பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மறுபகுதி புதுச்சேரி எல்லையிலும் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பி.எஸ். பாளையம் கிராம மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் அரிசி வழங்கப்படுவதோடு சக்கரை, பாமாயில், துவரம் பருப்பு, டீ தூள் போன்ற அத்தியாவசிய பண்டங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. புதுச்சேரி யில் உள்ள பி.எஸ்.பாளையம் கிராம மக்களுக்கு ரேஷன் கடை இல்லாததால் அரிசியும் கிடைப்ப தில்லை, மானிய விலையிலான மற்ற உணவுப் பொருட்களும் கிடைப்பதில்லை. அரிசிக்கு பதிலாக பணப்பட்டுவாடா புதுச்சேரி மாநிலத்தில் துவங்கிய பிறகு, புதுச்சேரி மாநிலம் பி.எஸ்.பாளையம் கிராமத்தை சார்ந்த ஒரு பகுதியினர் தமிழக பி.எஸ்.பாளையத்திற்கு தங்களது ரேஷன் அட்டைகளை மாற்றிக் கொண்டனர். அந்த அவலநிலைமை பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தலைவர்களுக்கு நன்கு தெரியும்.
பாதிக்கப்படும் மாஹி, ஏனாம், காரைக்கால் பகுதி மக்கள்
புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான மாஹி அருகில் உள்ள கேரள கிராமங்களில் ரேசன் கடைகளில் அரிசிக்கு அடுத்ததாக 14 வகையான அத்தி யாவசியப் பொருட்கள் மானிய விலையில் கிடைக் கின்றன. மானிய விலையிலான அதே உணவுப் பொருட்கள் மாஹி மக்களுக்கு மறுக்கப்படுகிறது.
நாகை மாவட்டத்தின் அருகில் காரைக்காலை சார்ந்தவர்களுக்கும் இதே நிலைமைதான். மேலும், நாகை மாவட்டத்தில் சம்பா, குறுவை அறுவடையின்போது விவசாயிகள் கொள்முதல் மையங்களில் நெல்லை விற்க முடியும். ஆனால் அந்த உரிமை காரைக்கால் விவசாயிகளுக்கு மறுக்கப்படு கிறது. ஆந்திராவில் ரேசன் கடைகளில் கிடைக்கும் பொருட்கள் ஏனாம் பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை.
கடந்த 2017 ஜூலை 31 அன்று, பிரதமர் தனது உரை யில் சண்டிகர் மற்றும் புதுச்சேரியில் உணவுப் பொருள் விநியோகத் திட்டம், முழுமையாக நிறுத்தப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியத் தொகை ரொக்கமாக நேரடியாக வங்கிக் கணக்கில் போடப்படு கிறது எனக் கூறியிருந்தார். மேலும், இதே முறை யினை நாடு முழுவதிலும் எல்லா மாநிலங்களிலும் அம லுக்கு கொண்டு வரப்போவதாகவும் கூறியிருந்தார்.
நேரடி எரிவாயு மானியம் போல் அரிசி மானியம் என்பதும் ஏமாற்றே!
இப்படித்தான், மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கு பதிலாக, மானியத்தை ரொக்கமாக வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை மோடி அரசு அமலாக்கியது. தற்போது சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியம் முற்றாக நிறுத்தப்பட்டு விட்டது. இத்தகைய முறை யில்தான் அரிசிக்குப் பதிலாக பணப்பட்டுவாடா என்று முதலில் கூறி, காலப்போக்கில் புதுச்சேரி மாநில அரசு அந்தப் பணப்பட்டுவாடாவையும் நிறுத்தியது. புதுச்சேரி மாநிலத்தை ஒன்றிய பாஜக அரசு ஒரு பரிசோதனை எலியாகத்தான் பயன்படுத்துகிறது.
ரேசன் அரிசி விநியோகத்தை நிறுத்திவிட்ட மோடி அரசு, வரலாற்றிலேயே இல்லாத வகையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குக் கூட ஜிஎஸ்டி விதித்தது கொடுமையிலும் கொடுமை. விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரேசன் கடைகள் மூலம் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. ரேசன் கடைகளை மூடுவதன் மூலம் கொள்முதலும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயி களும் பாதிக்கப்படுகின்றனர்.
வறுமையில் வாடுவோர் புதுச்சேரியில் அதிகரிப்பு
ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் நாசகரமான பொரு ளாதாரக் கொள்கையால் புதுச்சேரி மாநிலத்தில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடலுழைப்பை நம்பி வாழ்கின்ற முறை சாரா தொழிலாளர் குடும்பங்களும், ஏழை – எளிய குடும்பங்களும், வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து, வருமானம் இன்றி விளிம்பு நிலைக்கு தள்ளப் படுகின்றனர். இத்தகைய அவல நிலைமைக்குப் பிறகும் கூட, பாஜக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வர், அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்களிடத்தில் ‘நாங்கள் என்ன செய்ய? ஒன்றிய அரசு ரேசன் கடைகளை திறக்க மறுக்கிறது’ என்று கூறியிருக்கிறார். பதவியும், அதி காரமும் மக்களுக்கு சேவை செய்வதற்குத்தானே?
மக்கள் நலனில் அக்கறை இல்லாத டபுள் என்ஜின் அரசு
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வருமான வரிச் சட்டம், கம்பெனிச் சட்டம், 1934-இல் இயற்றப்பட்ட ரிசர்வ் வங்கிச் சட்டம் ஆகிய நான்கு சட்டங்களை திருத்தி தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி திரட்டும் திட்டத்தை மோடி அரசால் கொண்டுவர முடிகிறது. அதன்மூலம் பல்லாயிரம் கோடி ரூபாயை நிதியாகப் பெற்று பாஜக-வால் கொள்ளையடிக்க முடிகிறது. இவ்வாறு சட்டங்களை வளைத்து பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டிய பாஜக தலைமை, புதுச்சேரி மாநில மக்களுக்கு, உணவுப் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்த ‘அரிசிக்கு பதிலாக பணப்பட்டுவாடா’ என்ற கொள்கையை மாற்ற முடியாதா? ரேசன் கடையைத் திறக்க முடியாதா? ஏழை மக்களுக்கு உணவிட முடியாதா?
“தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்”
என்று பாடிய பாரதி வாழ்ந்த புதுச்சேரி மண்ணில்தான் ஒட்டுமொத்த மக்களையும் பட்டினிப் போடுகிறது ‘டபுள் இன்ஜின்’ அரசு. இந்த வஞ்சனைக்கு எதிராக களமிறங்குவோம்.
மக்கள் நலன் காத்திட புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புதுச்சேரி மாநிலத்தில் மூடப்பட்ட ரேசன் கடைகளை திறந்திடக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி 19 முதல் காத்திருக்கும் போராட்டத்தை நடத்து கிறது. இப்போராட்டத்தை வெற்றிகரமாக்கிட, கோரிக்கைகள் வென்றிட புதுச்சேரி மக்களை அறைகூவி அழைக்கிறோம்.