விடுதலைப்போரும் RSSசும்

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இருந்து விலகி நின்று வேடிக்கை பார்த்தது ஆர் எஸ் எஸ். மட்டுமின்றி அந்த நூற்றாண்டில் 1920-1950 வரையான காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடந்த எந்த ஒரு இயக்கத்திலும் அது பங்கு பெற்றதில்லை. பெருந்தியாகிகள் ஆன பகத்சிங், அவரது தோழர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்டபோதும் கப்பற்படைப்புரட்சியின்போதும் கூட ஆர்எஸ்எஸ் விலகியே இருந்தது.

1942 வெள்ளையனே வெளியேறு இயக்க காலகட்டத்தில் அவரைச் சந்திக்க வந்த மக்கள் “இந்த இயக்கத்தின் பலனாக விடுதலை அடைவது உறுதி, சங் இப்போராட்டங்களில் இருந்து விலகி நிற்கக்கூடாது” என்று கூறியிருக்கின்றார்கள்.அவர்களில் ஒருவர் தான் சிறை ஏகவும் ஆயத்தமாக உள்ளதாக கூறிய போது, “நல்லது, சிறை செல், உன் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்?” என்று டாக்டர்ஜி ஹெட்கேவர் கேட்டார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மத வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒற்றுமையுடன் நடத்திய எந்த ஒரு இயக்கத்தையும் ஆர் எஸ் எஸ் வெறுப்புடன்தான் பார்த்தது. மூவர்ணக்கொடி சிறந்த உதாரணம். 1929 டிசம்பரில் லாகூர் காங்கிரஸ் மாநாட்டில்தான் முழுமையான சுதந்திரமே லட்சியம் என்றும், 1930 ஜனவரி 26ஆம் நாளை இந்திய சுதந்திர தினமாக கொண்டாடி மூவர்ணக்கொடியை ஏற்ற வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர் என்ற பொறுப்பில் இருந்த ஹெட்கேவார், பாக்வா ஜண்டாவை (காவிக் கொடி) ஏற்றி வழிபடுமாறு அனைத்து சாகாக்களுக்கும் சுற்றறிக்கை அறுப்பினார்.

ஆர்எஸ்எஸ்சின் எந்த ஒரு நிகழ்விலும் இதுவரை மூவர்ணக்கொடியோ தேசியக்கொடியோ இன்றுவரை இடம்பெற்றதில்லை.

1946 ஜூலை 14 அன்று நாக்பூரில் குருபூர்ணிமா கூட்டத்தில் பேசியே கோல்வால்கர், காவிக்கொடிதான் தங்களது கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக கூறினார். காவியில் கடவுள் உருவத்தைக் காண்பதாக கூறினார். “இறுதியில் இந்த ஒட்டுமொத்த தேசமும் காவிக் கொடி முன் தலைவணங்கி நிற்கும் என உறுதியாக நம்புகின்றோம்”.

1947 விடுதலைக்குப் பின்னும் கூட மூவர்ணக்கொடியை தேசியக்கொடி என ஆர்எஸ்எஸ் ஒப்புக் கொள்வதில்லை. Bunch of thought என்ற நூலில் கோல்வாக்கர் சொல்கின்றார்: நம் தலைவர்கள் ஒரு புதிய கொடியை நம் தேசத்திற்கு உருவாக்கி உள்ளார்கள். என்ன அவசியம் வந்து விட்டது? இது போலித்தனமானது. பழமை வாய்ந்த மகத்தான இந்த தேசத்திற்கு மிகப்பிரகாசமான வரலாறு உண்டு. அப்படி இருக்க நமக்கென்று சொந்தமாக ஒரு கொடி இருந்திருக்க முடியாதா என்ன? பல ஆயிரம் வருட வரலாற்றில் நமக்கென்று ஒரு தேசியச் சின்னம் (national emblem) இருந்திருக்க முடியாதா? உறுதியாக உள்ளது. அப்படி எனில் நமது மூளைகள் ஏன் இப்படி வெறும் கூடாக, உள்ளீடற்றுப் போய்விட்டன?”

1948 பிப்ரவரி 4 அன்று ஆர் எஸ் எஸ் தடைசெய்யப்பட்டதற்கான பல காரணங்களில் தேசியக்கொடி மீதான அவர்களுக்கு இருந்த வெறுப்பும் ஒன்று. காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே இருந்த சங் ஆதரவாளர்கள் இந்தத் தடையை நீக்கச் செய்ய முயற்சி செய்த போது, மத்திய உள்துறை அமைச்சகம் நவம்பர் 14 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ஆர் எஸ்எஸ்சுடன் தொடர்புடைய நபர்களின் பல்வேறு வடிவிலான நடவடிக்கைகள் தேசவிரோத நடவடிக்கைகளாக உள்ளன. அவை ஆபத்தானவை, வன்முறை நடவடிக்கைகள். இத்தேசத்தில் பேரழிவை விளைவிக்கும் நோக்கத்துடன் தொடர் நடவடிக்கைகளில் ஆர் எஸ் எஸ் ஈடுபட்டு வருகின்றது.”

ஆர் எஸ் எஸ்சுக்குள் “சுத்திகரிப்பு “நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற முன்மொழிவை நிராகரித்த உள்துறை அமைச்சகம், “பிரதமருக்கும் உள்துறை அமைச்சகத்துக்கும் கோல்வாக்கர் எழுதியுள்ள கடிதங்களில் மதச்சார்பற்ற ஒரு நாடாக இந்தியா இருப்பதை ஆர் எஸ் எஸ் முற்றாக ஏற்றுக்கொள்கின்றது என்றும் தேசியக்கொடியை ஏற்றுக்கொள்கின்றது என்றும், எனவே பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் வேன்டியுள்ளார். ஆனால் சங்கின் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளும் ஆர்எஸ்எஸ் தலைவர் கூறுவதும் முற்றிலும் நேர் எதிராக உள்ளன. எனவே ஆர் எஸ் எஸ் மீதான தடையை நீக்குமாறு மாகாண அரசுகளுக்கு அறிவுறுத்துவது என்பது இயலாத ஒன்று. இப்பின்னணியில் பிரதமரைச் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டி கோல்வாக்கர் விடுத்த வேண்டுகோளை பிரதமர் நிராகரிக்கின்றார்.

அரசியல்சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பதாகவும் தேசியக்கொடியை மதிப்பதாகவும் கோல்வாக்கர் எழுத்து வடிவில் விண்ணப்பித்த பின்னரே 1949 ஜூலை 11 அன்று தடை நீக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஆர்எஸ்எஸ் இயக்கம் இன்று வரை அரசியல் சட்டத்தையோ தேசியக்கொடியையோ மதிப்பதில்லை என்பதே நடைமுறை யதார்த்தம்.

ஆர் எஸ் எஸ் இயக்கத்தாலும் சரி, அதன் தலைவர்களாலும் சரி, பிரிட்டிஷார் மீது அவர்களுக்கு இருந்த காதலை ஒருபோதும் மறைக்க முடிந்ததில்லை. 1947க்கும் பின் 13 வருடங்கள் ஆன பின்பு 1960 இல் இந்தூரில் நடந்த ஒரு கூட்டத்தில் கோல்வாக்கர் பேசினார்: பிரிட்டிஷாரை வெளியேற்றுவதன் மூலம் இத்தேசம் விடுதலை பெறும் என்ற உத்வேகத்துடன் மிகப்பலர் பாடுபட்டனர். பிரிட்டிஷார் வெளியேறியபின்னர் இந்த உத்வேகத்தில் சுணக்கம் ஏற்பட்டது. உண்மையில் இந்த அளவுக்கு உத்வேகம் கொள்ள அவசியம் இல்லை. நமது மதத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதால் மட்டுமே விடுதலை அடைய முடியும் என்று நமது உறுதிமொழியில் ஒரு பகுதியாக நாம் உரையாடி உள்ளோம் என்பதை நினைவில்கொள்க. நமது உறுதிமொழியில் பிரிட்டிஷாரின் வெளியேற்றம் பற்றி எங்குமே நாம் பேசவில்லை (Shri Guruji Samagar Dharshan, Vol.4, page 2).


சம்சுல் இஸ்லாம்
(முன்னாள் பேராசிரியர், அரசியல் விஞ்ஞானத்துறை, டெல்லி பல்கலைக்கழகம்)
(The freedom Struggle and the RSS, Shamsul Islam, The Hindu, 22.8.1999)
தமிழில் மு இக்பால் அகமது

Leave a Reply