கடந்த திங்கட்கிழமை அன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் நமது புதுவையை சேர்ந்த மாணவர்கள் 92.68 சதவிகிதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் சேர்ந்த 154 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 66 பள்ளிகள் 100% தேர்ச்சி விழுக்காட்டை எட்டியுள்ளன. இந்த நூறு சதவிகித தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளிகளில் இரண்டு அரசு பள்ளிகள் அடங்கும். ஏனைய பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகள். அது மட்டும் அல்லாமல் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு தேர்ச்சி சதவிகிதம் 3.45% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு குறைந்ததற்கான காரணங்களை பற்றி அலசும் ஓர் பதிவே இது.
மார்ச் மாதம் 2011ம் ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விழுக்காடு 83.05 சதவிகிதமாக பதிவாகி உள்ளது. அவ்வாண்டில் இருந்து தொடர்ந்து மார்ச் 2012, மார்ச் 2013, மார்ச் 2014 வரை தேர்ச்சி சதவிகிதம் 89.67 ஆக உயர்ந்து காணப்பட்டது. அதற்குப் பிறகு மேல்நிலை வகுப்புகளின் தேர்ச்சி சதவிகிதம் தொடர்ந்து சரிவை கண்டுள்ளது. மார்ச் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 88.16 சதவிகிதமும், மார்ச் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 87.74%, மார்ச் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 86.68%, என தொடர்ந்து தேர்ச்சி விழுக்காடு இறங்கு முகத்தை கண்டுள்ளது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டில் இருந்து தேர்ச்சி சதவிகிதம் சிறிது சிறிதாக உயர்ந்து கடந்த ஆண்டு 96.13 சதவிகிதமாக தேர்ச்சி விகிதம் உயர்ந்திருந்தது. இவ்வாண்டு 92.68% மாக பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 3.45% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவை ஒருபுறம் இருக்க அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தை பற்றி பார்க்கலாம்.
2015 ஆம் ஆண்டு 77.49 சதவீதமாக இருந்த அரசு பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 2017, 2018 ஆண்டுகளில் 73.7 விழுக்காடாக குறைந்துள்ளதை நம்மால் காண முடிகிறது. அதற்கு அடுத்த ஆண்டு 2018 -19 ல் இச்சதவிகிதம் 85.62 உயர்ந்துள்ளது. தற்போது இவ்வாண்டு இச்சாதவிகிதம் 85.40 ஆக பதிவாகியுள்ளது. சென்ற ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு 6.56 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு அரசு பள்ளிகளில் குறைந்தே காணப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்தமைக்கும் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதம் 6 விழுக்காடிற்கு மேல் குறைந்ததற்கும் முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் முழு பொறுபேற்று விளக்கமளிக்க வேண்டும்.
இதற்கு முன்பு முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் முதல்வராக இருந்த காலகட்டத்தில் யாருடனும் கலந்த ஆலோசிக்காமல், மக்களிடம் கருத்து கேட்காமல், பெற்றோர்களிடம் ஒப்புதல் பெறாமல் அவசரகதியில் தடாலடியாக 2014-15 ஆம் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகள் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை பின்பற்றும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து 2014-15ஆம் ஆண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியை பின்பற்றி வந்த அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அவ்வாண்டே புதுவையில் இருந்த சுமார் 167 தமிழ் வழி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மட்டும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகள் ஒவ்வொரு வகுப்பாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட முதல் பேட்ச் மாணவர்கள் கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி வெளியேறினர். தற்பொழுது தேர்வு எழுதி இருப்பவர்கள் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் பேட்ச் மாணவர்களாகும். எனவே சிபிஎஸ்சி பாடத்திட்டம் வந்தால் கல்வியின் தரம் உயரும் மாணவர்கள் நன்றாக படிக்க ஆரம்பிப்பார்கள் என்று அன்று முதல்வர் ரங்கசாமி கூறிய காரணங்கள் பொய்யாகி போய் விட்டனவோ? சிபிஎஸ்சி பாடத்திட்ட அறிமுகத்தால் கல்வியின் தரம் உயரும் என்ற ரங்கசாமியின் வாக்குறுதி நிறைவேற்ற முடியாமல் போனதை முதல்வர் ஒப்புக் கொள்கிறாரா? கல்விக்கும்- தரத்திற்கும்- சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கும் உள்ள தொடர்பை அவர் மறு ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என விரும்புகிறோம்.
அத்தோடு சேர்ந்து 2020- 21 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்த பெறாமல் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்ததால் இம்மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே இவர்களுக்கு இதுவே முதல் பொதுத் தேர்வு அனுபவமாக இருந்திருக்கிறது. ஆனால் இதே சூழ்நிலை தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இருந்தது தானே அவர்களின் தேர்ச்சி சதவிகிதம் வெகுவாக குறையாத போது அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் மட்டும் குறைவதை பார்க்கும் வேலையில் அரசு ஏதோ மாணவர்களின் கல்வி விஷயத்தில் சற்று மெத்தனமாக இருந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கொரோனா பீதியில் இருந்து ஒட்டுமொத்த மனித குலமே தற்போது தான் மீண்டு வந்து கொண்டு உள்ளது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் சரிவர தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்துள்ளது. கொரோனா ஏற்படுத்தி விட்டுப் போன கல்வி இடைவெளிகள் அதிகமாக இருந்தது. இது போன்ற பல எச்சரிக்கை அலாரங்கள் கண்முன்னே அடித்துக் கொண்டிருக்க, அதனோடு சேர்த்து மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அபாயகரமான நீட் என்ற தேர்வும் இருக்க மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதத்திலும், மதிப்பெண் விஷயத்திலும் அரசு போதிய அக்கறை செலுத்தாமல் மெத்தனமாக இருந்தது துரதிஷ்டவசமானது.
முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் பாவம். அவர்கள் என்ன செய்வார்கள்? மூன்றாண்டு காலமாக வழங்கப்படாமல் இருந்த சீருடைகளை மாணவர்களுக்கு வழங்குவதற்கே கல்வி ஆண்டின் இறுதிவரை பாடுபட வேண்டி இருந்தது அவர்களுக்கு. இதில் தரமான கல்வியைப் பற்றி எல்லாம் சிந்திக்க கல்வி துறைக்கும், கல்வி அமைச்சருக்கும், மாநில முதல்வருக்கும் அக்கறை இருப்பது கேள்விக்குறிதான்.
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் மதிப்பெண் விஷயங்களிலும் ஏனோ தானோ என்று செயல்பட்டிருக்கும் புதுவை அரசு தேசிய கல்விக் கொள்கையை நிறுவுவதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருவது இங்கே அடிக்கோடிட்டு காட்ட விரும்புகிறோம். மாணவர்களுக்காக கல்வி கொள்கையா, அல்லது கல்வி கொள்கைக்காக மாணவர்களா? எந்த கொள்கையாக இருப்பினும் அதன் இறுதி நோக்கம் மாணவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக, நல்ல மனிதர்களாக, தனது எதிர்காலத்தை நல்வழியில் அமைத்துக் கொள்ளும் திறனோடு வெளிவர வேண்டும் என்பது தானே. நோக்கம் அப்படி இருக்க அன்று அவசரகதியில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை ஐந்தாம் வகுப்பு வரை அமல்படுத்திய இதே முதலமைச்சர் தற்போது அக்குழந்தைகள் தேர்ச்சி விழுக்காடு குறைந்துள்ளதற்கு தான்தான் காரணம் என்று பொறுப்பேற்பாரா? அன்று அவர் செய்த அதே தவறை தற்போதும் மீண்டும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்புக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை அமல்படுத்த போகிறோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் அவசர கோலம், இன்னுமோர் 10 ஆண்டு காலங்கள் புதுவையின் மாணவர்களின் கல்வி சீரழிய இருப்பதை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகிறது.
யாரை சமாளிக்க, யாரை திருப்தி படுத்த இந்த முடிவுகளும், இந்த செயல்பாடுகளும்.
இவ்வாறு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதிலும், பள்ளிகள் முழுவதையும் சிபிஎஸ்சி-ன் கீழ் கொண்டு வருவதிலும் புதுவை அரசு தனது முழு கவனத்தையும் செலுத்தி வரும் வேளையில் பள்ளியின் வகுப்பறைகள் செயல் இழந்து கிடக்கின்றன. ஆம் வகுப்பறைகளை செயல்படுத்துவதற்கான போதுமான ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் இல்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர்களிடமிருந்தும் மாணவர்களிடம் இருந்தும் எழுந்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து அரசு தரப்பில் இருந்து கூறப்படும் பதில் ‘தேவைக்கும் அதிகமான ஆசிரியர்கள் எங்களிடம் உள்ளனர்’ என்பதே. தேவையான அளவு ஆசிரியர்கள் இருந்தும், சரியான தளவாட வசதிகள் இருந்தும் தேர்ச்சி விகிதங்கள் குறைவதற்கு காரணம் என்ன என்பதை மக்களுக்கு கூற முதல்வரும் கல்வி அமைச்சரும் கடமைப்பட்டுள்ளனர்.
உயர்நிலைப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆசிரிய பற்றாக்குறை இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதுவும் மேல்நிலை வகுப்புகளில் ஒரே ஆசிரியர் மூன்று நாட்கள் ஒரு பள்ளியிலும், இரண்டு நாட்கள் வேறொரு பள்ளியிலும் பாடம் எடுக்க நியமிக்கப்படும் முறை பல ஆண்டுகளாக புதுவையில் பின்பற்றப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமி சென்ற முறை முதல்வராக இருந்தபோது இதே சிக்கல் இருந்து. இதேபோல் தேர்ச்சி விழுக்காடு வெகுவாக குறைந்தது. அப்போது இச்சிக்கல் விரைவில் சரி செய்யப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதும் அதே சூழ்நிலை நிலவுவதை முதலமைச்சர் அறிவாரா என்பது தெரியவில்லை. குறைந்தது கல்வி அமைச்சருக்காவது இத்த தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். ‘சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்’. எனவே வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாமல் தேர்வில் விழுக்காடு பெற்று விட முடியாது. ஆசிரிய பற்றாக்குறையில் உள்ள குறைபாடுகளை நிறைவு செய்வதை அரசு உடனடியாக செய்ய வேண்டும்.
புதுவையின் கல்வி அமைச்சருக்கு ‘காவி அமைச்சர்’ என்ற பெயர் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் முக்கியமான துறையான கல்வித்துறையை வாங்கி கையில் வைத்துக் கொண்டு, கல்வித் துறையை முழுவதும் காவி மயமாக்கும் வேலையை மட்டுமே பார்த்து வருகிறார். பள்ளியின் மதிய உணவு திட்டத்தை அட்சய பாத்திரம் நிறுவனத்திடம் ஒப்படைத்து காவிமயமாக்குதல், பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ க்கு மாற்றி காவிமயமாக்குதல் என ஒவ்வொரு படியாக காவி பூசும் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால் மாணவர்களின் படிப்பிலும், ஆசிரிய பற்றாக்குறையை போக்குவதிலும், தேர்ச்சி விழுக்காடை அதிகப்படுத்துவதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகிறது அவருக்கு.
புதுவையின் கல்வித்துறை லஞ்ச லாவண்யங்கள் இல்லாத துறை என்ற பெருமை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது அப்பெருமையை வாயில் போட்டு விழுங்கிவிட்டார் நமது காவி அமைச்சர். தற்காலிக பணியமர்த்தப்பட்டிருந்த ஆசிரியர்களை பணம் பெற்றுக் கொண்டு நிரந்தரம் செய்தலில் தொடங்கி முறைகேடாக ஆசிரியர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு பணியிட மாறுதல்கள் அளித்தல் போன்றவைகள் கல்வித் துறையில் தற்போது நடந்தேறி வருகின்றன. இவ்வாறு கல்வித்துறைகள் சீர் கெட்டு இருப்பதை பார்க்கும்போது மாணவர்களின் கல்வித் தரம் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதே நமக்கு வெட்ட வெளிச்சமாக்குகிறது