1930 அக்டோபர் காந்திஜி அறைகூவல் விடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால் சமரேந்திரலால் என்ற பள்ளி மாணவனையும் மச்சுனன்பரின் முகர்ஜியையும் பிரிட்டிஷ் போலீஸ் கைது செய்து கொல்கத்தா பிரெசிடென்சி ஜெயிலில் அடைத்தது. ஹெளரா மாவட்டத்தின் பிதாம்பர் பள்ளி மாணவர்களான இவர்களை, வகுப்பைப் புறக்கணித்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக பிரிட்டிஷ் போலீஸ் கைது செய்தது. காங்கிரஸ் ஊழியர்களான அரசியல் கைதிகளுடன் 17வயது நிரம்பாத சமரேந்திரலாலுக்கும் பரினுக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் சமரேந்திரலாலின் ஆரம்ப நாட்கள்.மூன்றாம் வகுப்பு சிறைக் கைதிகளை ஒடுக்குவதற்காக நியமிக்கப்பட்ட கொடூரனாகிய ஹவில்தார் ஃபக்தே பகதூர்சிங்கின் மேற்பார்வையில் இந்த 17வயது இளைஞன் இருந்தார். இந்த கொடூர சிறை அதிகாரி உள்பட மற்ற அதிகாரிகள் வரும்போது சிறைக் கைதிகள் “சலாம் சர்க்கார்’’ என்று மிகப் பணிவுடன் கூறவேண்டும் என்பது சட்டம்.
அரசியல் கைதிகள் இந்தச் சட்டத்தின்படி நடந்து கொள்ள வேண்டியதில்லை என்று சமரேந்திரலாலும் பரினும் மறுத்தனர். இதைக் கேள்வியுற்ற மற்ற சிறைக்கைதிகளுக்கும் துணிவு பிறந்தது. சிறைச் சட்டங்களை மீறுவதற்கு துணிவு வந்த ஒரு அரசியல் கைதி. அந்த சிறை அதிகாரியான ஃபக்தே பகதூர் சிங்கை கீழே தள்ளிவிட்டார். ஆனால் இந்தச் சம்பவத்தால் மற்றொரு முறை அவர் சிறை அதிகாரியால் தாக்கப்பட்டார். கொல்கத்தாவில் தில்குஷ் தெருவின் 1ஆம் நம்பர் வீட்டில் வாழ்ந்த மறைந்த மாமனிதர்தான் அன்றைய சமரேந்திரலால். இப்போது அவருடைய பெயர் பழைய சுரேந்திரலால் அல்ல. காங்கிரஸ் ஆடையை எப்போதோ களைந்து விட்டார். பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடிய அவர் இப்போது காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்துப் போராடுகிறார்.
பிரிட்டிஷ் கம்பெனியின் ஊழியராக இருந்த சசீந்திரலால் முகர்ஜி-கொலாப் சுந்திரி தேவி ஆகியோரின் மகனாக 1913 நவம்பர் 7ல் பிறந்த சமரேந்திரலால் என்ற திருமணமாகாத இவரின் 85 ஆண்டுகால போராட்ட வாழ்க்கை மற்ற போராளிகளுக்கு ஒரு பாட நூலாகும். சிறை அனுபவங்கள் சமரேந்திரலாலை ஒரு புரட்சியாளனாக உருவாக்கியது. 1931ல் காந்தி-இர்வின் சந்திப்பின்படி சமரேந்திராவும் அவரைச் சேர்ந்தோரும் விடுதலை செய்யப் பட்டார்கள். என்றாலும் பள்ளிகளில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன்பிறகு கொல்கத்தா பௌ பஜார் பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்ந்து படித்தார். சொந்த ஊரான ஆம்தயில் உள்ள காங்கிரஸ் கமிட்டிச் செயலாளராக செயல்பட்ட போதுதான் மெட்ரிக் குலேசன் படிப்பில் அவர் தேர்ச்சி பெற்றார். பிறகு கொல்கத்தா பல்கலைக் கழகத்திலிருந்து அதிக மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1930களில் இந்திய அரசியலில் அலையடித்த சிவப்புக் காற்றில் வங்கமும் கலந்தது. அந்தச் செங்காற்று சமர் முகர்ஜியின் சிந்தையிலும் அலை வீசியது. அது காங்கிரஸ் நடவடிக்கைகளில் அவருக்கு அதிருப்தி ஏற்பட்ட காலமாகும். இயல்பாக அவர் கவனமெல்லாம் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் பக்கம் திரும்பியது. தொடர்ந்து அவர் படிப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி வந்துவிட்டார். அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியராக இருந்த பினாய்ராயுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு காரணமாக கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின்பால் அவர் ஈர்க்கப்பட்டார்.
1936 முதல் ஹெளரா சணல் மில் தொழிலாளர்களையும் சணல் விவசாயிகளையும் ஒன்று திரட்டுவதில் அவர் கவனம் செலுத்தினார். 1938ல் அகில இந்திய மாணவர் சங்கத்தின் ஹெளரா மாவட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியுடனான நெருக்கம் மேலும் மேலும் அதிகரித்தது. 1940ல் அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். சணல் மில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தலைமை வகித்ததற்காக கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
1946ல் கொல்கத்தா நகரத்தில் நடந்த திட்டமிட்ட இந்து-முஸ்லீம் வகுப்புக் கலவரத்திலிருந்து சாமான்ய மனிதர்களை பாதுகாக்க சமர்முகர்ஜி நடத்திய தீரம் மிக்க பணிகள் வங்க வரலாற்றின் ஒரு பகுதியாகும். 1947ல் தேசம் விடுதலை பெற்றதைத் தொடர்ந்து கிழக்கு வங்கத்திலிருந்து வந்த அகதிகளுக்கு உதவுகிற பணிகளை அவர் சிறப்பாகச் செய்தார். 1948ல் கொல்கத்தாவில் நடந்த கட்சியின் இரண்டாவது மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.
அக்காலத்தில் கட்சி தடை செய்யப்பட்டபோது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறைதண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். பின்னர் கட்சியின் மீது அடக்குமுறை ஏவப்பட்டதால் அவர் தலைமறைவாக இருந்து கட்சிப் பணியாற்றினார்.1957ல் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1962ல் இந்திய- சீனப் போரின்போது கம்யூனிஸ்ட்டுகள் அநியாயமாக வேட்டையாடப்பட்டனர். அப்போது அவர் மீண்டும் தலைமறைவானார். 1964ல் கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் 7வது அகில இந்திய மாநாட்டிற்கான தயாரிப்புப் பணிகளில் தீவிரமாய் இருந்தபோது அவர் கைது செய்யப்பட்டு மித்னாபூர் சிறையில் அடைக்கப்பட்டார். அகில இந்திய மாநாட்டின் பிரதிநிதியாக இருந்தபோதும்கூட அவரால் மாநாட்டில் பங்கேற் இயலவில்லை.
1964ல் சமர் முகர்ஜி கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரானார். 1978ல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரானார். 1992-2002 காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டுக்குழு தலைவராகப் பணியாற்றினார். 1957ல் அவர் சட்டமன்ற உறுப்பினரானார். 1971ல் ஹெளரா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏகேஜியுடனான தனது நாடாளுமன்ற அனுபவங்களை உணர்ச்சிப் பூர்வமாக சமர் முகர்ஜி இன்றும் நினைவு கூறுவார். சிஐடியுவின் வளர்ச்சியிலும் சமர் முகர்ஜி முக்கியப் பங்களிப்பினைச் செய்தார். சிஐடியுவின் பொருளாளராகவும் பின்னர் பொதுச் செயலாளராகவும் இருந்தார். கடந்த ஜீலை மாதம் 13ந்தேதி 2013 ஆம் ஆண்டு தனது 101வது வயதில் இயற்கை ஏய்தினார்.