புல்வாமா படுகொலையில் வீரர்களின் உயிர் பறிபோவதற்கு காரணமே பிஜேபி மோடி அரசே காரணம்

Pulwama Terror Attack2019 டிசம்பரில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. 40 வீரர்களின் உயிர்களைப் பறித்து தேசத்தையே உலுக்கிய அந்த பயங்கர சம்பவத்தை பயன்படுத்தி, இந்திய மக்களை திசைதிருப்பி, தனக்குத் தானே தேசபக்த பட்டம் கொடுத்துக் கொண்டது மோடி அரசு. ஆனால் 40 வீரர்களின் உயிர் பறிபோவதற்கு காரணமே மோடி அரசுதான் என்ற உண்மையை, அவர்களது கூட்டத்திற்குள்ளேயே இருக்கும் ஒருவர் பகிரங்கமாக உடைத்திருக்கிறார்.

தி வயர் இணைய இதழில் பிரபல பத்திரிகையாளர் கரண் தாப்பர் நடத்திய நேர்காணலில் மோடி ராஜ்ஜியத்தின் அராஜகங்களை அம்பலப்படுத்துகிறார்  ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர்

சத்யபால் மாலிக்,நேர்காணல் தமிழ் சுருக்கம் : அ.அன்வர் உசேன்.

கரண் தாப்பர்: ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்ட 3  மாதங்களில் புல்வாமா தாக்குதல் நடந்தது. பல உளவுத்துறை  தகவல்கள் சாலை வழியாக சிஆர்பிஎப்  வீரர்களை அழைத்துச் செல்வது விரும்பத்தக்கதல்ல  என கூறிய பிறகும் நமது வீரர்கள்  சாலை வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் தாக்குதலுக்கு இலக்காயினர்.  நீங்கள் அப்பொழுது ஆளுநர். இது எப்படி  அனுமதிக்கப்பட்டது?

சத்யபால் மாலிக்: நான் உங்களுக்கு உண்மைகளை சொல்கிறேன். சிஆர்பிஎப் தமது வீரர்களை அழைத்துச் செல்ல உள்துறை அமைச்சகத்திடம் விமானங்களை கேட்டனர்.  அது நிராகரிக்கப்பட்டது. என்னிடம் கேட்டிருந்தால் நான் ஏற்பாடு செய்திருப்பேன். அவர்களுக்கு 5 விமானங்கள்தான் தேவைப்பட்டன.  அவர்கள் விமானங்களை தந்திருந்தால் நமது வீரர்களின் உயிரை காப்பாற்றியிருக்கலாம். நான் இதனை பிரதமரிடமும் சொன்னேன். நமது தவறின் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறினேன். அவர் இதனை வெளியில் சொல்ல வேண்டாம் எனவும் என்னை வாய் மூடிக் கொண்டு இருக்குமாறும் கூறிவிட்டார்.  பிரதமர் மட்டுமல்ல; பாதுகாப்பு ஆலோசகர் அஜித்  தோவலும் இது பற்றி எதுவும் சொல்ல வேண்டாம்  என கூறினார். நான் மேலும் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் இதனை கையாண்ட விதம், நமது வீரர்கள் தாக்கப்பட்ட இந்த சம்பவத்தில் எங்கே நம்மிடம் தவறு நடந்தது என பார்ப்பதைவிட இதனை பாகிஸ்தானுக்கு எதிராக திசை திருப்பிவிடுவது என அவர்கள் முடிவு செய்ததாகவே இருந்தது.

தாப்பர்: அதாவது நம்மிடம் இருந்த தவறை சரி செய்வதைவிட இந்த கோர சம்பவத்தை பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தவும் அதன் மூலம் தேர்தல் ஆதாயங்கள் அறுவடை செய்யவும் பயன்படுத்திக் கொண்டனர் என சொல்கிறீர்களா?

சத்யபால்: ஆம்.மிகச்சரியாக அதுதான் நடந்தது.

Pulwama Martyrs

தாப்பர்: பிரதமரிடம் சொல்லியும் அவர் இவ்வாறு நடந்து கொண்டாரா?

சத்யபால்: ஆம். எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.  அவர் தேசிய வன கார்பட் பூங்காவில் படப்பிடிப்பில் இருந்தார். அங்கு அலைபேசி சிக்னல் கிடைக்க வில்லை. அவர் வெளியில் வந்து என்னிடம் என்ன நடந்தது என கேட்டார். நான் நம்மிடம் உள்ள தவறு காரணமாகவே புல்வாமா தாக்குதல் நடந்தது என்று  கூறினேன். விமானங்களை நாம் தந்திருந்தால் நமது வீரர்களின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என அவரிடம் கூறினேன். அவர் இது குறித்து யாரிடமும் பேச வேண்டாம் என்று சொன்னார்.

தாப்பர்: நீங்கள் ஒரு யூ டியூப் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் நமது வீரர்கள் செல்லும் சாலை முறையாக கண்காணிக்கப்படவில்லை எனவும் பாதுகாக்கப்படவும் இல்லை எனவும் கூறினீர்கள். அதனை விளக்க முடியுமா?

சத்யபால்: அந்த பாதையில் 8 முதல் 9 சந்திப்பு சாலைகள் இருந்தன. ஒரு சந்திப்பு சாலையில் கூட பாதுகாப்பு இல்லை. அந்த பாதைகளில் பயங்கரவாத தாக்குதல் ஆபத்து இருந்தன. அப்படியிருந்தும் அங்கு பாதுகாப்பு இல்லை. எந்த ஒரு சந்திப்பிலும் கண்காணிப்பு இல்லை. பாதுகாப்புக்காக ஆட்கள் போடப்படவில்லை.  இது சிஆர்பிஎப் நிர்வாகத்தின் தவறு. அவை அனைத்தும் அவர்கள் பொறுப்பில்தான் இருந்தன. அவை  கண்காணிக்கப்படவில்லை. பாதுகாப்பு வளையத்தில் இருக்கவில்லை. இந்த பலவீனத்தையும் நான் சம்பந்தப் பட்டவர்களிடம் சொன்னேன். இது உள்துறை அமைச்சகம் மற்றும் சிஆர்பிஎப் நிர்வாகத்தின் தவறு; உதாசீனம். நமது திறமையின்மை காரணமாக 40 விலை மதிப்பற்ற ராணுவ வீரர்களின் உயிர்கள் பலியாக்கப்பட்டன.

தாப்பர்: இந்த புல்வாமா தாக்குதலை பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தி தேர்தல் ஆதாயம் தேடிக்கொள்வது என ஆட்சியாளர்கள்  முடிவு செய்ததாக கூறினீர்கள். பாகிஸ்தான் ராணு வம் அல்லது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்த தாக்குதலில் பொறுப்பு இருந்ததா?

சத்யபால் : புல்வாமா தாக்குதலில் 300 கிலோ வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த கார்  முழுவதும் வெடி பொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன. இந்த அளவுக்கான வெடிபொருட்கள் இங்கேயே கிடைப்பது  சாத்தியமல்ல. பாகிஸ்தான்தான் இந்த வெடி பொருட்களை ஏற்பாடு செய்து இங்கே அனுப்பியது. ஆனால் நமது திறமையின்மையும் உதாசீனமும்தான் அந்த வெடிபொருட்கள் வெடித்து உயிர்ப் பலிக்கு காரணம். அந்த கார் 10 நாட்கள் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தது. யாரும் எங்கேயும் அதனை கண்டுபிடிக்க வில்லை. தடுத்து நிறுத்தவில்லை.  இது 100 சதவீதம் உளவுத்துறையின் தவறு. நம்  தவறு! நமது சிஸ்டத்தின் தவறு. நான் என்னையும் சேர்த்தே சொல்கிறேன். அரசுக்கு முழு விவரங்களும் தெரியும். ஆனால் அரசாங்கம் மறைப்பது என முடிவு செய்துவிட்டால் எப்படி வெளிவரும்!

370ஆவது பிரிவு நீக்கமும்  மாநில அந்தஸ்து பறிப்பும்

தாப்பர்: 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு வருவோம். அன்றுதான் காஷ்மீருக்கான 370ஆவது பிரிவு நீக்கப்பட்டது. அதற்கு இரு நாட்களுக்கு முன்பு நீங்கள் அளித்த ஒரு பேட்டியில் 370ஆவது பிரிவு நீக்கப்படும் என்பது  வெறும் வதந்தி என்று ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு கூறினீர்கள். ஆனால் இரு நாட்கள் கழித்து 370வது பிரிவு நீக்கப்பட்டது மட்டுமல்ல; காஷ்மீர் மாநிலம் எனும் அந்தஸ்தையும் இழந்தது. எது உண்மை? 370  நீக்கப்படும் என்பது உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா? ஒன்றிய அரசிட மிருந்து யாரும் உங்களிடம் பேசவில்லையா? அவர்கள் உங்களை நம்பவில்லையா? அல்லது உண்மை தெரிந்து கொண்டே நீங்கள் பொய் சொன்னீர்களா?

சத்யபால்: அந்த பேட்டி கொடுத்த பொழுது எனக்கு எதுவும் சொல்லப்படவில்லை. இதனை நான்  மெஹபூபாவிடமும் கூறினேன். 370ஆவது பிரிவு நீக்குவது  என்பது ஏதோ ஒரு துண்டு காகிதத்தை பாக்கெட்டிலிருந்து எடுத்து வீசுவது போல அல்ல! நாடாளுமன்றம் உட்பட பல இடங்களில் விவாதிக்க வேண்டும். எனவே எனக்கு எவரும் எதுவும் சொல்லவில்லை என்பதே உண்மை.  4ஆம் தேதி இரவுதான் உள்துறை அமைச்சர்  என்னை அழைத்தார். ஒரு தீர்மானம் அனுப்பியுள்ள தாகவும் அதனை அங்கு கமிட்டியில்  வைத்து அங்கீகரித்து அடுத்த நாள் 11 மணிக்குள் அனுப்புமாறும் என்னிடம் சொல்லப்பட்டது. அப்பொழுதுதான் ஆகஸ்ட் 5ஆம் தேதி 370ஆவது பிரிவு நீக்கப்படப்போகிறது என  எனக்கு தெரியும்.

சத்யபால்: அந்த பேட்டி கொடுத்த பொழுது எனக்கு எதுவும் சொல்லப்படவில்லை. இதனை நான்  மெஹபூபாவிடமும் கூறினேன். 370ஆவது பிரிவு நீக்குவது  என்பது ஏதோ ஒரு துண்டு காகிதத்தை பாக்கெட்டிலிருந்து எடுத்து வீசுவது போல அல்ல! நாடாளுமன்றம் உட்பட பல இடங்களில் விவாதிக்க வேண்டும். எனவே எனக்கு எவரும் எதுவும் சொல்லவில்லை என்பதே உண்மை.  4ஆம் தேதி இரவுதான் உள்துறை அமைச்சர்  என்னை அழைத்தார். ஒரு தீர்மானம் அனுப்பியுள்ள தாகவும் அதனை அங்கு கமிட்டியில்  வைத்து அங்கீகரித்து அடுத்த நாள் 11 மணிக்குள் அனுப்புமாறும் என்னிடம் சொல்லப்பட்டது. அப்பொழுதுதான் ஆகஸ்ட் 5ஆம் தேதி 370ஆவது பிரிவு நீக்கப்படப்போகிறது என  எனக்கு தெரியும்.

சத்யபால்: நான் அங்கு பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே இது என்றாவது ஒரு நாள் நடக்கும் என எனக்கு தெரியும். என்னை கலந்தாலோசிக்க வேண்டிய  சட்ட தேவை உள்ளது என அவர்களுக்கும் தெரியும். எனினும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. நான் அது குறித்து கவலைப்படவுமில்லை. அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது. அவர்கள் செய்தனர். என்னிடம் ஆலோசிக்கவில்லை. அதுதான் உண்மை. காஷ்மீரின் மிகப்பெரிய சோகம் என்னவெனில் மத்திய அரசாங்கம் எதை நினைக்கிறதோ அதனை அங்கு நடத்திவிட முடியும் என அவர்கள் நினைத்தார்கள். அங்கு யார் என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களுக்கு கவலையில்லை. காஷ்மீரில் வன்முறை மூலம் எதுவும் சாதிக்க முடியாது. பேச்சு வார்த்தைகள் மூலம் எதுவும் சாதிக்க முடியும். இதனை தான் நான் திரும்பத் திரும்ப கூறினேன்.

தாப்பர்: 370ஐ நீக்க வேண்டும் என்பது பா.ஜ.க. வின் நீண்ட நாளைய கோரிக்கை. ஆனால் அதனுடன் சேர்த்து ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தையும் நீக்கியது அந்த மக்களை திட்டமிட்டு இழிவுபடுத்தியதாக அமையாதா?

சத்யபால்: ஆம்! 370ஆவது பிரிவு நீக்கத்தைவிட மாநில அந்தஸ்து பறித்தது என்பதைதான் அந்த மக்கள்  மிகப்பெரிய அநீதியாகவும் அவமானமாகவும் பார்க்கின்றனர்.

தாப்பர்: மாநிலத்தை பிரித்தது மற்றும் அந்தஸ்தை  பறித்தது இரண்டுமே தவறு என சொல்கிறீர் களா?

சத்யபால்: ஆம். இரண்டும் தவறுதான். எனினும் லடாக் மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் இணைந்திருப்பதை சிறிதும் விரும்பவில்லை. எனவே லடாக்கை பிரித்தது என்பது நான் பெரிய தவறு என சொல்லமாட்டேன்.

ரிலையன்சுக்கு  ஆதரவாக சங் பரிவாரம்

தாப்பர்: இன்னொரு முக்கியமான பிரச்சனை க்கு வருவோம். நீங்கள் தந்த பேட்டியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராம் மாதவ் உங்களை சந்தித்தது பற்றி கூறினீர்கள். ரிலையன்ஸ் நிறு வனம் காஷ்மீரில் ஒரு காப்பீடு திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அமலாக்க முயன்றதாகவும் அது பற்றி பேச ராம் மாதவ் அதிகாலை 7 மணிக்கு உங்களை சந்திக்க வந்ததாகவும் கூறினீர்கள். குளிக்காமல் கூட நீங்கள் ராம் மாதவை சந்தித்தீர்கள் என கூறினீர்கள். சத்யபால்: ஆம்! குளிக்காமல் நான் யாரையும் சந்திப்பது இல்லை. ஆனால் ராம் மாதவை சந்திக்க வேண்டி வந்தது.

தாப்பர்: அப்பொழுது நீங்கள் ராம்மாதவிடம்  “நான் முறைகேடாக எதுவும் செய்ய மாட்டேன்” என்று கூறியதாக பேட்டியில் கூறினீர்கள். நீங்கள்  குறிப்பிட்ட முறைகேடு என்ன?

சத்யபால்: ஆம்! இது பற்றி ராம் மாதவ் எனக்கு நட்ட  ஈடு கேட்டு வழக்கறிஞர் நோட்டீசும் அனுப்பியுள்ளார்.  அது ரிலையன்ஸ் காப்பீடு திட்டம். முதலில் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.8500 தர வேண்டும் என நிபந்தனை இருந்தது. இதனை அரசு ஊழியர்கள் கடுமையாக எதிர்த்தனர். இரண்டா வது, பணி ஓய்வு பெற்றவர்கள் 20,000 தர வேண்டும். இதுவும் நியாயமற்றது என நினைத்தேன். மூன்றாவது, அந்த திட்டத்தில் இணைக்கப்பட்ட மருத்துவமனைகள் அனைத்தும் மூன்றாம் தரமானவை! தரமற்றவை! இவ்வளவு குறைகளுடன் ரிலையன்ஸ் திட்டத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

தாப்பர்: நீங்கள் அந்த பேட்டியில் ரிலையன்சுக்கு ஆதரவாக செயல்பட்டால் ரூ.300 கோடி உங் களுக்கு தர முன்வந்தனர் என கூறியுள்ளீர்கள்.

சத்யபால்: நான் அப்படி சொல்லவில்லை. நீங்கள் கவனமாக அந்த காணொலி பேட்டியை பாருங்கள். அந்த  இரு திட்டங்கள் இன்சூரன்ஸ் மற்றும் புனல் மின் நிலையம் அந்த இரண்டிலும் ரூ. 300 கோடி யாருக்கோ  கிடைக்கும் சூழல் இருந்தது என்றுதான் கூறியுள்ளேன். இரண்டு திட்டத்தையும் நான் நிறுத்திவிட்டேன். இரண்டிலுமே பாரபட்சம் இருந்தது. உண்மையில் நான் காஷ்மீர் செல்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு அந்த இரண்டு திட்டங்களும் அங்கீ கரிக்கப்பட்டன. நான் அந்த கோப்புகளை மீண்டும் வரவழைத்து ஆய்வு செய்தேன். பிறகுதான் நிராகரித்தேன். இதனை அறிந்த பின்னர்தான் ராம் மாதவ் என்னை சந்திக்க வந்தார்.  இதில் சம்பந்தப்பட்ட அம்பானி/ராம் மாதவ்/ ஹசீப்  திரபு (முன்னாள் காஷ்மீர் நிதி அமைச்சர்) ஆகியோர் பிரதமருக்கு நன்கு அறிந்தவர்கள். நான் நிராகரித்த புனல் மின் நிலையத்தை ஹசீப் திரபு பின்னர் யாரையோ பிடித்து அங்கீகாரம் வாங்கினார்.

தாப்பர்: இந்த முறைகேடுகளில் பிரதமருக்கும் பங்கு உள்ளது என சொல்கிறீர்களா?

சத்யபால்: நான் அப்படி சொல்லவில்லை. ஆனால் ஒன்றை நான் உறுதியாக சொல்ல முடியும். ஊழல் ஒழிப்பு  குறித்து பிரதமர் அதிகமாக கவலைப்படுவது கிடை யாது.

தாப்பர்: நீங்கள் சொல்வது அதிர்ச்சியாக உள்ளது. பிரதமர் நாள்தோறும் ஊழலுக்கு எதிராக  பேசுகிறார். காங்கிரசும் பல மாநில கட்சிகளும் ஊழலில் திளைக்கின்றன எனவும் நான் ஊழலை ஒழிக்காமல் ஓயமாட்டேன் எனவும் கூறுகிறார். ஆனால் நீங்கள் அவருக்கு ஊழல் ஒழிப்பு பற்றி அக்கறை இல்லை எனக் கூறுகிறீர்களே?

சத்யபால்: ஹசீப் திரபு ஊழல் பேர்வழி! ஆனால் அவரை சந்தியுங்கள் என என்னிடம் பலமுறை பிரதமர்தான் கூறினார். நான் பிரதமரிடமே ஹசீப் திரபு ஒரு முறைகேடு மனிதர் என கூறினேன். கோவாவுக்கு நான் ஆளுநராக மாற்றப்பட்ட பொழுது அங்கு முதல் அமைச்சரின் வீட்டிலேயே பணம் கை மாறுகிறது;  ஊழல் மலிந்துள்ளது என பிரதமரிடம் தெரிவித்தேன். ஆனால் அதனை பிரதமர் மறுத்தார். நான் ஆதாரங்களை கொடுத்தேன். ஆனால் ஒரே வாரத்தில் மேகாலயாவுக்கு தூக்கி அடிக்கப்பட்டேன். இதற்கு என்ன பொருள் நீங்கள் சொல்லுங்கள்!

தாப்பர்: கோவா பிரச்சனையை மட்டும் வைத்துக் கொண்டு பிரதமருக்கு ஊழல் ஒழிப்பில் அக்கறை இல்லை என சொல்கிறீர்களா? சத்யபால்: அது மட்டுமில்லை. சிலர் பிரதமர் அலுவலகம் பெயரை சொல்லி சில முடிவுகளை எடுக்க வற்புறுத்துகின்றனர். உதாரணத்துக்கு ஜிதேந்திர சிங் எனும் நபர். இதனையும் நான் பிரதமரிடம் சொன்னேன். ஆனால் நடவடிக்கை இல்லை.

தாப்பர்: நீங்கள் பிரதமர் மீது குற்றம் சொல்கிறீர்கள்.  மக்கள் இதனை பார்க்கின்றனர். அரசாங்கமும் இதனை கவனிக்கும். பிரதமரின் கவனத்துக்கு கூட இது செல்லலாம்.

சத்யபால்: இன்னும் ஒரு மணி நேரத்தில் பிரதமரின் கவனத்துக்கு சென்றுவிடும்.

Pulwama bjpதாப்பர்: இந்த பேட்டிக்கு பின்னர் மோடியின் கோபம் உங்கள் மீது இன்னும் அதிகரிக்கும் அல்லவா?

சத்யபால்: ஆம்! சில சமயம் உண்மை பேசும் பொழுது அப்படி நடக்கத்தான் செய்யும்.

தாப்பர்: பிரதமரை பற்றி உங்கள் மதிப்பீடு என்ன?

சத்யபால்: உலகத்தில் உள்ள பலருக்கும் உள்ள மதிப்பீடு எனக்கு பிரதமர் குறித்து இல்லை. அந்த பதவிக்குரிய விவரங்களும் அறிவும் அவரிடம் போதுமானதாக இல்லை. அவர் முழுமையான விபரங்கள் கிடைக்கப் பெறாதவராக உள்ளார்.

தாப்பர்: முஸ்லீம்கள் நடத்தப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

சத்யபால்: அவர்கள் நடத்தப்படும் விதம் தவறு. அவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகமானவர்கள். அவர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு வெளியே  துரத்த முடியாது. ஆகவே அவர்களை சமாதானப் படுத்துவது அவசியம். அவர்கள் அந்நியப்படும் வகையில் நடந்து கொள்வது சரியல்ல. அவர்களுடன் இருக்க வேண்டும் எனில் அன்புடன், சமாதானத்துடன் இருங்கள்.

தாப்பர்: பி.பி.சி. பிரச்சனையில் பிரதமரின் அணுகுமுறை சரியா?

சத்யபால்: இல்லை. முற்றிலும் தவறு. பி.பி.சி. ஒரு புகழ்பெற்ற மரியாதை பெற்ற ஊடகம். அதனை இப்படி நடத்தக் கூடாது.

அதானி ஊழல் பா.ஜ.க.வுக்கு கேடு

தாப்பர்: அதானி ஊழல் போன்று இந்தியாவில் நடந்ததே இல்லை. அரசும் பிரதமரும் வாய் மூடி மவுனிகளாக உள்ளனர். இது சரியா?

சத்யபால்: முற்றிலும் தவறு. நான் பிரதமர் இடத்தில் இருந்தால் இந்த ஊழல் வெளிவந்த அன்றைக்கே அதானியை கை கழுவி இருப்பேன். அதானி பிரச்சனை  மோடி அரசுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. கீழ்மட்டம் வரை இந்த பிரச்சனை சென்றுவிட்டது. கிராமத்து மக்கள் தங்கள் மொழியில் அதானி  ஊழல்  பற்றி பேசி காணொலிகளை வெளியிட்டு வருகின்றனர்.  அத்தகைய ஒரு பாடல்: “இவர் டீக் கடை சொந்தக்காரரும் இல்லை; பசுவுக்கு சொந்தக் காரரும் இல்லை; இவர் அம்பானி/அதானியின் ஏவலாள்; தேசத்தை விற்றுவிடும் ஆள்”. – எப்பொழுது மக்கள் தமது மொழியில் இப்படி பேச அல்லது பாட ஆரம்பித்து விட்டனரோ அப்பொழுது அரசு தனிமைப்பட்டுவிட்டது என்று பொருள்.

தாப்பர்: 2024இல் அதானி பிரச்சனையால் மோடிக்கு பாதிப்பு ஏற்படுமா?

சத்யபால் :  நிச்சயமாக! அதானி பிரச்சனை தேர்தலில் எதிரொலிக்கும். குறிப்பாக பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒரே வேட்பாளர் – நேரடி மோதல் இருக்குமானால் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய தோல்வி காத்திருக்கிறது.

தாப்பர்: ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச விடாதது குறித்து ஒரு கேள்வி.

சத்யபால்: அவரை பேச அனுமதித்திருக்க வேண்டும். அது அவரது உரிமை.

தாப்பர் : அவருக்கு அனுமதி மறுத்தது சபாநாய கரின் முடிவா? அல்லது மேலிடத்தில் எடுக்கப் பட்ட முடிவா?

சத்யபால்: அங்கு யாராவது முடிவு எடுக்க முடியுமா? உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நான் ஆளுநராக இருந்த பொழுது ஜனாதிபதியுடன் எனக்கு சந்திக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. நான் அங்கு சென்று கொண்டிருந்தேன். திடீரென இந்த சந்திப்பு ரத்து என எனக்கு தகவல் வந்தது. பின்னர் நான் விசாரித்த  பொழுதுதான் தெரிந்தது. ஜனாதிபதியுடன் யார் சந்திக்கிறார்கள் எனும் பட்டியல் கூட பிரதமர் அலுவல கத்தில் முடிவு செய்யப்படுகிறது என்று!

தாப்பர்: நீங்கள் ஒரு பேட்டியில் ஆளுநரை தேர்வு செய்வதில் ஒரு முறை இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். விளக்க முடியுமா?

சத்யபால்: ஆம்! யார் ஆளுநர் என ஓரிருவர் முடிவு செய்யக்கூடாது. வெளிப்படைத்தன்மை தேவை.  இன்று மூன்றாம்தர நபர்கள் எல்லாம் ஆளுநர்களாக நியமிக்கப்படுகின்றனர். கடந்த இரு வருடங்களில் மத்திய பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தர் களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒருவர் கூட சங்  பரிவாரத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் இல்லை. ஒரு பள்ளிக்கு முதல்வராக இருப்பதற்குக் கூட தகுதி யில்லாதவர்கள் மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தராக நியமிக்கப்படுகின்றனர்.

தாப்பர் : உங்கள் பேட்டிக்கு மிக்க நன்றி. இது சில பூகம்பங்களை ஏற்படுத்தக்கூடும். பலரும் உங்கள் மீது கோபம் கொள்ள முயல்வர். உங்கள்  மீது வழக்குகள் கூட பாயலாம். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.

சத்யபால்: நன்றி! உங்கள் ஆசிர்வாதத்தில் நான் பாதுகாப்பாக இருப்பேன்.

முழு வீடியோவையும் காண

👇👇👇

https://www.youtube.com/watch?v=b8wmHUhLvOI&ab_channel=TheWire

 

Leave a Reply