நிலைமாறும் புதுச்சேரி பொருளாதாரம்- தடுமாறும் மக்கள் வாழ்வு – வெ.பெருமாள்

V.Perumal

பெருமை மிகு அடையாளங்களைக் கொண்ட புதுச்சேரி மதுப்பிரியர்களின் சொர்க்கபுரியாக மாறி வருகிறது. 2023 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இணையவழி இடம் தேர்வில் புதுச்சேரி முதன்மையான இடத்தைப் பிடித்தது. புத்தாண்டில் வெளியில் இருந்து வந்தவர்களின் வருகை உச்சம் தொட்டது. மது விற்பனையும் அரசின் இலக்கை தாண்டியிருக்கக் கூடும். 1992-1993 நிதியாண்டில் எதிர்பார்க்கப்பட்ட கலால் வருவாய் ரூ. 17 கோடி உயர்ந்து 2002இல் அது ரூ.62 கோடியாக இருந்தது. கிஸ்தி, வரிசீரமைப்பு படிப் படியாக உயர்ந்து 2019இல் ரூ.800 கோடியாக இருந்தது. 2021-2022இல் ரூ. 1063 கோடி என கலால் துறை வருவாய் உயர்ந்தது. இது 33 சதவீத உயர்வாகும். நடப்பு 2022-23 ஆண்டிற்கு ரூ.1400 கோடி முதல் ரூ.1500 கோடி வரை அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது மாநில வரி வருவாயில் 25 சதவீதம் ஆகும். இந்த இலக்கை ஈடு செய்ய அரசின் கொள்கையும், நடை முறையும் முரட்டுத்தனமாக அமலாக்கப்படுகிறது. மாநில அரசின் மதுக்கொள்கையால் நிலையற்ற பொருளாதாரம் கட்டமைக்கப்படுவதோடு, மக்களின் வாழ்க்கையும் தடுமாறி வருகிறது.

ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பாஜக கூட்டணி அரசே அதிகாரத்தில் இருந்தபோதிலும் கூடுதல் நிதி உதவி ஒன்றும் கிடைத்துவிடவில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பால் எஞ்சியிருந்த வருவாயும் பறிபோனது. ஜிஎஸ்டி இழப்பீடு தொகை 2022 ஜூன் மாதத்துடன் நிறுத்தப்பட்டுவிட்டது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டதால் 14சதவீதம் வரை இழப்பீடு பெற்ற தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 பெரிய மாநிலங்களும், 10 சதவீதம் அளவிற்கு இழப்பீடு பெற்றுவந்த புதுச்சேரி உள்ளிட்ட சிறிய மாநிலங்களும் நெருக்கடியை சந்திக் கக்கூடும் என எச்சரித்துள்ளது. இவ்வாறான சூழலில் நீடித்து, நிலைத்த சமூகநீதி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்கு ஒன்றிய பாஜக அரசு உதவ வில்லை. மாறாக சீரழிவுக் கொள்கை திட்டங்களை வகுத்து செயல்படுத்தப்படுகின்றன.

அமித்ஷா வருகையும் சீரழிவு பொருளாதார திட்ட திறவுகோலும்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 24.04.2022 இல் புதுச்சேரிக்கு வந்தார். அவரின் வருகை சமயத்தில் புதுச்சேரி பாய்ச்சல் வேகத்தில் முன்னேறும் என ஆரவார அறிவிப்புகள், விளம்பரங்கள் செய்யப் பட்டன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களில் முடிந்த, இறுதிக் கட்டத்தில் உள்ள மற்றும் துவக்க நிலையில் உள்ள 362.91 கோடி ரூபாய்க்கான திட்டங்களை துவக்கிவைத்தார். புதிய திட்டங்கள் எதை யும் கொண்டு வரவில்லை. மாறாக மின் துறை தனியார் மயத்திற்கு அடிகோலினார். இதன் மூலம் மாநில அரசு மின் துறைக்கு வழங்கிவரும் மூலதனச் செலவை நிறுத்திக் கொள்ள வழி காட்டியது. மேலும் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது, சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் மதுவிற் பனையை விரிவுபடுத்துவது, நகராட்சிக்கு சொந்தமான பயன்படுத்தாத இடங்களை தனியாருக்கு விற்று பணமாக்குவது, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தனியார் கப்பல் போக்குவரத்தை அனுமதிப்பது என்ற சந்தைப் பொருளாதார திட்டமிடலுக்கு புதுச்சேரி திருப்பி விடப்பட்டது. புதுச்சேரி பொருளாதாரம் பஞ்சாலைகள், சர்க்கரை ஆலை, விவசாயம், நெசவு, மீன்பிடி, வணிகம், சிறு குறு நடுத்தரத் தொழில்கள் மற்றும் சிறிய அளவில் மதுபானக் கடைகள் என்ற தன்மையில் இருந்தன. தற்போது சுற்றுலா மற்றும் மதுபான வணிகம் சார்ந்த பொருளாதாரமாக தடம் மாறி யுள்ளது. இது சமூக சீரழிவுகளை கொண்டுவரும். மேலும், நீடித்து நிலைத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவி செய்திடாது.

மதுப்பழக்கத்தின் கோர விளைவுகள்

இந்திய அளவில் சாலை விபத்து உயிரிழப்பிலும், விதவை பெண்களின் எண்ணிக்கையிலும் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கணவனை இழந்த பெண்கள் விகிதம் புதுச்சேரியில் 18.82 சதவீதம். தமிழ்நாட்டில் இது 16.61 சதவீதமாகும். மதுபானம் முழு முதல் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் மதுபானக் கடைகள் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து இடம் பெயர்ந்தன. சில மாநில அரசுகள் மாவட்ட சாலை களாக வகைமாற்றி மதுக்கடைகள் இடம் பெயர்வதை தவிர்த்தது. இச்சூழலில் 2017இல் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம், மேலையூர் கிராமத்தில் தலித் மக்கள் வாழும் பகுதியில் மதுபானக் கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. முக்கிய அரசியல் பிரமுகருக்கு சொந்தமான கடை என்பதால் அனுமதியும் வழங்கப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எதிர்த்தது. காரைக்கால் பகுதி தலைவர் ஆர்.மகாராணி, செயலாளர் எஸ். மணி மேகலை ஆகியோர் விரிவான புகார் மனுவை தேசிய அட்டவணை இனத்தவர் ஆணையம், கலால்துறை, மக்கள் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு அளித்தனர். அதில் “125 குடும்பங்கள் வாழும் கிராமத்தில் 82 பெண்கள் கணவனை இழந்தவர்கள், இதில் சரி பாதிக்கும் மேல் இளம் பெண்கள் என்பது அதிர்ச்சிய ளித்திட்ட உண்மையாகும்”. தந்தையை இழந்த பிள்ளைகளின் எதிர்காலம் தற்குறியானது. குடும்பத்தின் மீது சமூகச் சூழல் ஏற்படுத்துகிற தாக்கத்தைப் பொறுத்தே விளைவுகள் இருந்திடும். இது சமூகத்தை எதிர்நோக்கியுள்ள மிகப்பெரும் சவாலாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

மதுக்கொள்கை – ஒரு பார்வை

Local Administration in Puducherry, Municipalities of Puducherry

புதுச்சேரி கலால் சட்டம் மற்றும் விதிகள் 1970இன் கீழ் கள்ளுக்கடை, சாராயக் கடை பிராந்திக் கடைகள் செயல்பட்டு வந்தன. ஒன்றிய ஜனதா ஆட்சியில் பிரதமர் மொரார்ஜி தேசாய் 18.01.1979இல் அண்டை மாநிலங்க ளுடன் புதுச்சேரி பகுதிகள் இணைக்கப்படும் என அறிவித்தார். ஒட்டுமொத்த மாநில மக்களும் எதிர்த்தனர். இணைப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது என்றா லும் ஒன்றிய அரசின் நேரடி தலையீடுகள் தொடர்ந்தன. ஒன்றிய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக புதுச்சேரி கலால் துறை அலுவலரால் நிர்வாக உத்தரவின் மூலம் 01.05.1979 முதல் பூரண மதுவிலக்கு அறிவிக்கப்பட்டது. இது கூட்டாட்சி முறைக்கு எதிரான மற்றும் மது விலக்கு நடவடிக்கைக்கு ஏதுவான சூழலை உரு வாக்காமல் திடீரென அறிவித்த முறையால் கடும் எதிர்ப்பை சந்தித்தது. மதுமரத் தொழிலாளர்கள் போராடினார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தால் மதுவிலக்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இந்திய குடியரசு தலைவரால் யூனியன் பிரதேசங்களுக்கு மதுவிலக்கு அமலாக்க ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டது. 16.05.1979இல் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மதுவிலக்கு துணைநிலை ஆளுநரால் அறிவிக்கப்பட்டது. மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு விலக்க ளிக்கப்பட்டது. கள்ளச் சந்தையும், கலப்பட மதுவும் பெருகியது. சாராய உற்பத்தி குடிசைத் தொழிலாக மாறியது.

1980இல் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தபின் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. 496சதுர கிமீ பரப்பளவு கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் அதிகமான மதுக்கடைகள் அனுமதிக்கப்பட்டன. சமூ கக் குற்றங்கள் பெருகின. இந்நிலையில் 12.06.1689இல் மாநில அரசு தனிநபர்களுக்கு மதுக்கடை உரிமம் வழங்க தடைவிதித்து அரசாணை வெளியிட்டது. 2002-2003 பட்ஜெட் கூட்டத் தொடரில் பாப்ஸ்கோ, பாசிக், அமுதசுரபி உள்ளிட்ட அரசு சார்பு நிறுவ னங்களுக்கு மதுக்கடை உரிமை வழங்கலானது. அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள் இதை கடுமையாக எதிர்த்தன. காங்கிரஸ் ஆட்சியில் முந்தைய தடை ஆணையை ரத்து செய்து 22.02.2010இல் ஜிஓஎம்எஸ் No:1 எண்ணிட்ட தனி நபர்களுக்கு புதிய (FL2) மதுக்கடை உரிமம் வழங்க வகை செய்யும் அரசாணை வெளியிடப் பட்டது. புதுச்சேரியில் 74, காரைக்காலில் 16 என புதிதாக 90 பிராந்திக் கடைகளுக்கு அனுமதி வழங்க அரசு முடிவெடுத்தது. சிபிஐஎம் கட்சி சார்பில் வெ. பெருமாள் பெயரில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் தோழர் அபிமன்யூ ஸ்டாலின் ஆஜரானார். வழக்கு விசாரணை யில் மாநில அரசு தனி நபர்களுக்கு மதுக்கடை உரிமம் வழங்காது என உறுதியளித்தது. மாநில அரசின் உறுதிமொழியை பதிவு செய்து கொண்ட உயர்நீதி மன்றம் வழக்கை முடித்துவைத்தது. 1989க்குப் பின் 34 ஆண்டுகளில் தனிநபர்களுக்கு பிராந்திக் கடை உரிமம் வழங்கப்படவில்லை.

விரிவடையும் மதுவணிகம்

என்.ரங்கசாமி -பாஜக கூட்டணி ஆட்சியில் நகரத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் ரெஸ்டோ பார் மற்றும் ரெஸ்ட்டோ பப்புகளின் விளம்பர பலகைகள் கவனத்தை ஈர்க்கின்றன. மாநிலத்தில் 6 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன. 2022 மே 30இல் 6 புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க அறிவிப்பு செய்யப்பட்டது. அறிவித்த சில தினங்களி லேயே மதுபான சாம்ராஜ்ஜிய அதிபர்களால் தொழிற்சாலை துவங்கிட அனுமதியும் பெறப்பட்டது. மாநிலத்தில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் மதுபான தொழிற்சாலைகள் 12 ஆக பெருகியுள்ளது. அனைத்து கலால் உரிமங்கள்/ லஞ்ச விலைப்பட்டியல் எழுதப்படாத நடைமுறை விதியாகி விட்டது. 6 மதுபான தொழிற்சாலை அனுமதிக்கு மட்டும் ரூ.90 கோடி பணம் கைமாறியதாக ஆளும் கட்சி எம்எல்ஏவே குற்றம் சாட்டுகிறார். மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்கும் பொறுப்பையும் தட்டிக் கழிக்கிறது.

அரசு தன்னாட்சி நிறுவனங்கள் கீழ் இயங்கி வந்த 33 எஃப்எல் 2 மதுபான கடைகளை, தனியாருக்கு விடுவது என அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இது அரசின் முந்தைய கொள்கை முடிவிற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் இறுதி முடிவிற்கும் எதிரானதாகும். விதிமுறைகளை மீறி குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகள் இடம் பெயர்வதும் அனுமதிக்கப்படுகிறது. போராடும் மக்களை காவல்துறை கொண்டு ஒடுக்குவதும், பொய் வழக்கு புனைந்தும் முரட்டுத்தனமாக மதுவணிகத்தை விரிவுபடுத்துகிறது. புதுச்சேரி மாநிலத்தில் சாராயக் கடைகள் 80, கள்ளுக்கடைகள் 50, அந்நிய மதுபான கடைகள் 450, மொத்த விற்பனை உரிமங்கள் 39 என மொத்தம் 600 மதுபானக் கடைகள் உள்ளன. என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் 180க்கும் மேற்பட்ட ரெஸ்டோ பார், ரெஸ்டோ பப்புகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியம் குறித்து ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. மாறாக அரசின் கஜானாவும், அதிகாரவர்க்கத்தின் கல்லாப் பெட்டியும் நிரப்பிக் கொள்வதில் முனைப்பாக உள்ளனர்.

பெண்களுக்கு மதுபானம் இலவசம்: பப் விளம்பரம்

resto pub pondicherry

உணவு விடுதியில் மது பரிமாறப்படும். விருப்ப முள்ளவர்கள் செல்ல முடியும். பப் என்பது மங்கிய வெளிச்சத்தில் அதிரும் இசையும், நடனமும் கொண்டது. 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் ஜோடியாக அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு பப் நிறுவனம் மது அருந்தும் பெண்களுக்கு மதுபானம் இலவசம் என்று விளம்பரமும் செய்திருந்தது. கல்வி குவிமையாக உள்ள புதுச்சேரியில் மாணவர்களை, இளைஞர்களை குறிவைத்தே இத்தகைய கலாச்சாரம் அரங்கேற்றப்படுகிறது. மேற்கத்திய கலாச்சாரம் மெல்ல பரவி மதுப்பழக்கம் குடிமைச் சமூகத்தின் பொதுத்தன்மை கொண்டதாக மாற்றப்படுகிறது. அரசியலமைப்பு சட்டம் அட்டவணை 47 வழி காட்டும் நெறிமுறையில் அனைவருக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு, பொது ஆரோக்கியம் வாழ்க்கைத் தரத்தை வலியுறுத்துகிறது. ஆனால், ஆட்சியாளர்கள் மக்களின் ஆரோக்கியமான வாழ்வை கூட உறுதிப் படுத்திடவில்லை.

2022இல் உலக பட்டினி நிலை குறித்த ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் 121 நாடுகளின் வரிசையில் இந்தியா 107ஆவது இடத்தில் உள்ளது. படுமோசமான நிலையில் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் உள்ளதை அம்பலப்படுத்துகிறது. சமீபத்தில் டவுன் டு எர்த் (Down to Earth) மற்றும் சிஎஸ்இ (Centre for Science Environment) ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கிராமப்புறங்களில் 71 சதவீத மக்கள் ஊட்டச்சத்துள்ள உணவுப் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது. மேலும் இத்தகைய குறைபாட்டால் நோய் தொற்று ஏற்பட்டு ஆண்டுக்கு 1.7 மில்லியன் இந்திய மக்கள் இறப்பதாகவும் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்த பின் 2015 செப்டம்பர் முதல் புதுச்சேரி ரேஷன் கடைகள் மூடப்பட்டுவிட்டன. மாநில அரசின் இலவச அரிசி திட்டம் பணபரிமாற்ற திட்ட மாக மாற்றப்பட்டுவிட்டது. மக்களின் வாழ்நிலைமை களை மேலும் பாழாக்கும் வகையில் மதுபான வணிகம் ஆட்சியாளர்களால் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. புதுச்சேரி மக்களின் எதிர்ப்பை திசை திருப்பிடும் வகையில் அரசு உதவி பெறாத 14,000 குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் 2023 ஜனவரியில் துவங்கப்பட்டுள்ளது. இது மக்களின் உண்மையான பிரச்சனைகளை தீர்க்க உதவிடாது.

ஆகவே, கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக புதுச்சேரி மாநில அரசு மதுவணிகத் தின் மீது கட்டமைக்கும் பொருளாதாரம் ஆபத்தானது. மாறாக முந்தைய சமூகப் பொருளாதார கட்டமைப்பு க்கு புத்துயிர் அளித்திட வேண்டும். சமூகநீதியும், பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்த மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கிட வேண்டும். ஒன்றியத்தில் பாஜக நீடிப்பதும், பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு மக்கள் நலன் சார்ந்த கொள்கை உருவாக்குவதும் சாத்தியமில்லாத ஒன்று. மேலும் 2023 மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டுக்கு முன்னதாக அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தறிந்து செயல்பட முன்வர வேண்டும். மதுக்கொள்கையில் மாற்றமும், மக்கள் நலன் சார்ந்த சமூகநலத்திட்ட முதலீடுகளை அதிகரிப்பதும் பொறுப்புள்ள அரசின் கடமையாகும்.

கட்டுரையாளர் : வெ. பெருமாள்,
புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

Leave a Reply