வீரஞ்செறிந்த கையூர் தியாகிகளின் போராட்டம்

Kayyur martyrsகையூர், 1940களில் உலக கம்யூனிஸ்டுகளால் பேசப்பட்ட ஊர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கி எடுத்த விடுதலைப் போராட்ட வரலாற்றில், உழைக்கும் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்திய போராட்டங்கள் சில மட்டுமே, தெபாங்கா விவசாயிகளின் எழுச்சி, தெலங்கானா விவசாயிகளின் எழுச்சி, வோர்லி பழங்குடி மக்களின் வீரம் மிக்க போராட்டம், புன்னைப்புரா, வயலார் விவசாயத் தொழிலாளிகளின் போராட்டம், கப்பற்படை எழுச்சி என்ற போராட்ட வரிசையில், கையூர் விவசாயத் தொழிலாளிகளின் வீரஞ்செறிந்த போராட்ட வரலாறும் இடம் பெறும்.
1940களில் பொதுவாக இந்தியாவில் இருந்த நிலப்பிரபுக்களின் ஆதிக்கம், சுரண்டல், ஏகாதிபத்தியத்துடன் இணைந்து கொண்டு நடத்திய கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களே, நாம் மேலே பட்டியலிட்டவை. மிகப் பெரிய விவசாய எழுச்சி, நிலப்பிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு இடையிலான கூட்டணியை போராட்ட களத்தில் அம்பலப்படுத்தியது. அன்றைய சென்னை ராஜதானிக்கு உட்பட்ட, வடக்கு மலபார் பகுதியில் அமைந்த கையூர் கிராம விவசாயிகளும் மேற்படி போராட்ட வரலாற்றை அரங்கேற்றினர்.
நிறைந்த, நீரோடு, அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் தேஜஸ்வினி நதிக் கரையில் அமைந்தது கையூர் கிராமம். செழிப்பான விவசாயத்திற்கு அன்றைக்கும், இன்றைக்கும் வாய்ப்பு இருக்கும் பகுதி. இன்றைக்கே இந்தியாவில், நிலம் பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆள்வோர் தலையசைக்க மறுக்கிற போது, அன்றைக்கு எப்படி சம்மதிப்பார்கள்? அன்றைக்கு நிலச்சீர்திருத்தம் என கோரிக்கை கூட வைக்க இயலாத, வாயற்ற ஜீவன்களாக, விவசாயத் தொழிலாளர்கள் கையூரில் இருந்தார்கள். அவர்களுக்கு பேசும் சக்தியையும், கேள்வி கேட்கும் திறனையும், போராட்ட உணர்ச்சியையும்  கொடுத்தது,  கம்யூனிஸ்ட் இயக்கமும், விவசாய சங்கமும் ஆகும். அந்த காலத்தில், புரட்சிக்காரர்கள் என்ற வார்த்தையை சிறுவர் முதல் பெரியவர் வரை அறிமுகம் செய்திருந்தார்கள். இளைஞர்கள், “புரட்சிக் காரர்களுக்குரிய நற்குணங்கள் தங்களுக்கு உண்டு என்பதைத் தெரிந்து கொண்ட போது பெரும் மகிழ்ச்சியடைந்து பரவசப்பட்டு இருக்கிறார்கள்’’ குறிப்பாக கையூர் பகுதி நிலப்பிரபுக்களை எதிர்த்து போராட முடியும் என்கிற நம்பிக்கையை மிகப் பெரிய அளவில் முன்னிறுத்தியவர்கள் இளம் விவசாயத் தொழிலாளர்கள் ஆவர். மிகக் குறைவான கூலியைப் பெற்று, அதிகமான நேரம் உழைக்க வேண்டும் என்கிற எழுதப்படாத சட்டத்தை பின்பற்றினார்கள் கூலித் தொழிலாளர்கள். மனிதனுக்குரிய எந்த உரிமையும் பெற முடியாத விவசாயத் தொழிலாளர்களுக்கு, இளம் கம்யூனிஸ்டுகள் தான், அடிப்படை மனித உரிமையைப் பெற்றுத் தந்தார்கள்.
ஆனால் வரலாறு, மனித உயிர்களைக் குடிக்காமல் உரிமைகளை கொடுத்ததில்லை. கையூர் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளும் பலி பீடத்திற்கு பின்னர்தான் பெறக்கூடியதாக அமைந்தது.
மடத்தில் அப்பு,
சிருகண்டன்,
குஞ்ஞம்பு,
அபுபக்கர்
ஆகிய நால்வரின் உயிரை அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இரக்கமற்று குடித்தது. “அந்தப் போலிஸ்காரனை அடித்துக் கொன்றவர்கள், இந்தக் கோர்ட்டின் முன் இல்லாமல் இருக்கலாம். ஆயினும் அவனுடைய மரணத்திற்கு இவர்களும் தான் பொறுப்பாளிகள் என்று கூறி, செஷன்ஸ் நீதிபதி அவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனையை விதித்தார்.’’ சென்னை உயர்நீதி மன்றமும் அந்த தண்டனையை ஊர்ஜிதம் செய்தது. இந்தியாவின் விடுதலைப் போரில் எண்ணற்ற இளைஞர்கள் தூக்கு கயிற்றிற்கு இரையாகி இருந்த போதிலும், இந்த நால்வருக்கும் கொடுக்கப்பட்ட தண்டனையை, உலகம் முழுவதிலும் இருந்த மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும், பிரிட்டிஷாரும், நிலப்பிரபுக்களும் உறுதியாக இருந்தனர்.
இருபத்தைந்து வயதுக்குட்பட்ட அந்த நால்வரின் தூக்கு தண்டனையை எதிர்த்து, கம்யூனிஸ்ட் இயக்கம், நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது. நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, வைசிராயும், பிரிவி கவுன்சிலும் நிராகரித்த போது, நால்வரும் நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில்,’’ …… சிறையில் ஒவ்வொரு நிமிடமும தேசிய கீததங்களைப் பாடி வருகிறோம். பகத்சிங்கைப் போன்ற தேச பக்தர்களின் வீரம், எங்களுக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது. ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சியைப் புரட்சியின் மூலம் நிர்மூலம் ஆக்குவதற்கு முன்னே, தோழர். லெனின் அனுபவித்த சிரமங்களையும் நாங்கள் மறக்கவில்லை’’. எனக் குறிப்பிட்டுள்ளனர். இக்கடிதம் அன்றைய கம்யூனிஸ்ட் இதழான ஜனசக்தியில் (13.01.1943) பிரசுரமாகி உள்ளது.
நால்வரின் செயலும் 29.03.1943ல் தூக்கிலிடப்படும் வரை, இதயத்துடிப்பு நிற்கும் வரை அப்படியே இருந்துள்ளது அதாவது சாவின் விளிம்பிலும் சொல்லுக்கும், செயலுக்கும் இடையே வித்தியாசம் இன்றி வாழ்ந்த நால்வரும் மிக முக்கியமானவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
The heroic saga of the Kayyur martyrs is part and parcel of the revolutionary, anti-imperialist movement led by the communists. Kayyur is a village which was in the Hosdurg sub-taluk of South Canara, adjoining the then Kannur district. It was part of the Malabar region and the Madras presidency

Leave a Reply