பொதுவுடைமை கவி தமிழ் ஒளி

தமிழ்ஒளி (இயற்பெயர்: விஜயரங்கம், 21 செப்டம்பர் 1924 – 24 மார்ச் 1965) தன் கவிதைகள் மூலம் பொதுவுடைமை சித்தாந்தத்தை தமிழுலகுக்கு தந்த முக்கியமான கவிஞர்களுள் ஒருவர்.

உலகத் தொழிலாளர் ஒற்றுமையே
நல்லுணார்வே, அன்பே, இருட்கடலில்
ஆழ்ந்திருந்து வந்த முத்தே
முழுநிலவே, மே தினமே வாராய் நீ
வாராய் உனக்கெந்தன் வாழ்த்தை
இசைக்கின்றேன்….

என்று தன் கவிதை மூலம் உழைக்கும் மக்களுக்கு சொந்தமான மே தினத்தை கொண்டாடியவர் பொதுவுடைமைக் கவிஞர் தமிழ் ஒளி.

திராவிட மாணவர் கழகத்தில் ஈடுபாடு கொண்ட தமிழ் ஒளிக்கு சென்னையில் வாழ்ந்த நாட்கள் உழைக்கும் மக்களின் பிரச்னைகளை உணர்த்தின. சாதிய சிக்கல்கள் மட்டுமல்லாமல் வர்க்க ரீதியாகவும் மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த தமிழ் ஒளியின் வாழ்க்கை கருப்பிலிருந்து சிவப்பை ( கம்யூனிஸம்) நோக்கிப் பயணித்தது.

தென்னாற்காடு மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்னும் சிற்றூரில் சின்னையா ,செங்கேணி அம்மாள் என்னும் இணையருக்குப் பிறந்தார். விசயரங்கம் என்பது தமிழ் ஒளியின் இயற்பெயர் ஆகும்.  பட்டுராசு என்றும் செல்லமாக அவரை அழைத்தனர். தமது தொடக்கக் கல்வியைப் புதுவை முத்தியால்பேட்டை நடுநிலைப் பள்ளியில் கற்றார். உயர்கல்வியைக் கலவைக் கல்லூரியில் படித்தார். மாணவரா யிருந்தபோதே பாரதியார், பாரதிதாசன் கவிதைகளில் மனம் பறி கொடுத்தார். பாரதிதாசனின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது. நாள்தோறும் குயில் தோப்புக்குச் சென்று பாரதிதாசனிடம் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றார். தமிழ் ஒளி திராவிடர் கழக மாணவர் மாநாட்டில் கலந்துகொண்டு பாரதிதாசன் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கவிதையை அம்மாநாட்டில் படித்தார். பாரதிதாசனின் பரிந்துரையின் அடிப்படையில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார்.

கவிஞர் இங்குள்ள சாதிய சிக்கல்களை தான் எழுதிய வீராயி என்ற கதையின் மூலம் உலகிற்கு திரையிட்டுக் காட்டுகிறார் . வீராயி ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண். வீராயி- வாழ்க்கை முழுவதும் துன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் கதாபாத்திரம். தன் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உற்ற துணை கிடைத்த போதும் இங்குள்ள சாதிய ஆணவத்தால் திருமண வாழ்க்கையை பார்க்காமலே இருவரும் கொல்லப்படுகின்றனர். இந்த கதையின் மூலம் சமூகத்தில் அடித்தட்டில் வாழும் மக்களுக்கு நிம்மதி என்றுமிருப்பதில்லை என்று அடித்தட்டு மக்களின் குரலாக ஒலிக்கிறார் கவிஞர்.

கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி, மே தின ரோஜா, வீதியோ? வீணையோ? மாதவிக்காவியம், கண்ணப்பன் கிளிகள், கோசலைக்குமாரி, பாடு பாப்பா போன்ற கவிதை நூல்களுக்கும்; Tamizholiசிலப்பதிகாரம் நாடகமா? காவியமா? திருக்குறளும் கடவுளும், தமிழர் சமுதாயம் ஆகிய கட்டுரைகளுக்கும் சொந்தக்காரர் தமிழ் ஒளி.  சமூகத்தின் முன்னேற்றத்துக்காக கவிதைகளை எழுதிய தமிழ் ஒளி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராவார்.

1948-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. ஜனசக்தி இதழும் வெளிவருவதில் சிக்கல் இருக்கும் பட்சத்தில் ”முன்னனி” என்ற இதழ் தான் பொதுவுடைமைக் கருத்துகளை பிரசுரித்தது. முன்னனி இதழுக்காக தமிழ் ஒளி பெரிதளவில் உழைத்தார். 1949ஆம் ஆண்டில் ‘புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்’ என்னும் கவிதை எழுதினார்.  அகில இந்திய வானொலியில் ”சுதந்திரம்” என்னும் கவிதை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் ஒளி சுதந்திரம் அடித்தட்டு மக்களின் உரிமைகளை மீட்டு அவர்கள் வாழ்க்கையை வளமாக்குவதாக இருக்க வேண்டும் என்று கவிதைகள் மூலம் வலியுறுத்தினார்.

ஐம்பதுகளின் இறுதியில் தமிழ் ஒளி திரைப்படத்துறை யில் கால் வைத்தார்.உலகம் என்னும் திரைப் படத்தில் ஒரு பாடலும் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்னும் படத்தில் ஒரு பாடலும் எழுதினார். எவரெசுட்டு மலை உச்சியில் தேசியக் கொடி ஏற்றி சாதனைப் படைத்த தேன்சிங்கைப் பாராட்டிக் கவிதை எழுதினார். நெய்வேலி யில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் தொடங்கி மின் உற்பத்தி நிலையம் அமைத்தபோதும் கவிதை படைத்தார். சோவியத்து யூனியன் புட்னிக் என்னும் விண் கலத்தை ஏவியபோது வரவேற்றும் அணுக்குண்டு அச்சுறுத்தலை எதிர்த்தும் கவிதைகள் வரைந்து வரலாறு படைத்தார். குழந்தைகளுக்கான பாடல்களையும் எழுதியுள்ளார். சக்தி நாடக சபாவுக்காக சிற்பியின் காதல் என்னும் நாடகம் எழுதினார். அக்கதை வணங்காமுடி என்னும் பெயரில் திரைப்படமாக உருவாகியது.

பொதுவுடைமை சமூகத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த கவிஞர் தமிழ் ஒளி அவர்கள் தனித்தமிழகத்துக்கான கோரிக்கையையும், தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தியும் எழுதியுள்ளார்.

“ தன்குமரி எல்லை தன்னைச் சார்ந்த தமிழகத்தில்
எல்லாம் தமிழர்க்கே என்ற போர் முரசும்
எல்லோரும் கேட்டே எழுகின்ற நேரமிது ”

என்று மொழி வாரியாக மாநிலங்கள் பிரித்த போது குமரியைத் தலைநகராகக் கொண்டு தனித்தமிழகம் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தம்மொழிக் கல்வியை கற்பதிலார் அவர் துமிழ்மொழி கற்க நமை வருத்தி வாய்மொழி பெற்று மகிழ்ந்திடுவர் அவர் வாழ்க்கையில் ஞானம் வருவதேயில்லை என்னும் பாடலின் மூலம் தாய்மொழிக்கல்வியை வலியுறுத்துகிறார்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கொள்கைக்காக கலையை தன் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திய கவிஞர் 1965-ம் ஆண்டு எழுதுவதையும் மூச்சுவிடுவதையும் நிறுத்தி கொண்டார். நாற்பத்தோரு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கவிஞர் தமிழ்ஒளி; மறைவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுயவிளக்க அறிக்கையை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இது அவரைப் பற்றிய புரிதலை நமக்குத் தரும்.

நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகிய இருவேறு வர்க்கங்களின் தீயபண்புகளை எதிர்த்துத் தமிழ்மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த காலக் கட்டத்தில், அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு இலக்கியம் படைப்பவன் என்ற முறையிலும், புதிய சமுதாய அமைப்பைக் காணப் போராடும் சிந்தனையாளன் என்ற முறையிலும் இவ்வறிக்கையை நான் வெளியிடுகிறேன்.

பணமோ, பக்கபலமோ அற்ற நிலையில், சமூகத்தின் தாழ்ந்த படியிலே வளர்ந்து, தலைநிமிர்ந்த என்னை, நிலப்பிரபுத்துவப் பிற்போக்கும், முதலாளித்துவ முற்போக்கும் இருட்டடிப்பு செய்துள்ளன. அதன் காரணமாகவே மக்கள் மன்றத்தின் முன் மறைக்கப்பட்டிருந்த என்னை, நானே அறிமுகப்படுத்திக் கொள்ள முன்வந்தேன்.

வந்த விடுதலை யாருக்கென்றே- அதை
வாங்கிய வீரரைக் கேட்டிடுவோம்.
இங்கு
நொந்து கிடப்பவர் வாழவில்லை – எனில்
நொள்ளை விடுதலை யாருக்கடா..?

Leave a Reply