தீஸ்தா செதல்வாட்- அரசமைப்புச் சட்டத்தின் காலாட் படை வீரர்.

அரசமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர் என்பது புத்தகத்தின் துணைத் தலைப்பாக இருந்தாலும், வாசிப்பின் முடிவில் ஒரு காலாட்படை வீரர் அசாத்தியமான சாதனைகளை நிகழ்த்தி யிருப்பதாகவே கருத்து ஏற்படுகிறது. தீஸ்தா செதல்வாட் தனது நினைவோடைகளை பதிவு செய்திருந் தாலும் அவை கள எதார்த் தங்களை கண் முன்னால் நிறுத்துகிறது. காவல்துறை அமைப்பு, உயர் அதிகாரிகள், அரசு நிர்வாகம், அரசியல் இயக்கத் தலைமை, புகழ் பெற்ற வழக்குரைஞர்கள், பெரும் ஊடக நிறுவனங்கள், நீதித்துறை ஆகிய அமைப்புகள் அழுகி முடை நாற்றம் எடுத்து சிதைந்து கொண்டிருப்பதை இந்த நினை வோடைகள் மூலமாக நிறுவியிருக்கிறார். மேற்கண்ட அரசமைப்புகள் நடுநிலை என்றும் மக்களுக்கானது என்றும் அரிதாரங்களை அள்ளி அள்ளிபூசிக் கொண்டாலும் ஆளும் வர்க்கத்திற்கும், வகுப்புவாதிகளுக்கும் சேவகம் செய்வதே வர்க்கக் கடமையாக உள்ளதை அம்பலப்படுத்தி யுள்ளார். அரசமைப்புச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்று விடலாம் என்று களமிறங்கிய தீஸ்தா செதல்வாட் அது சாத்தியமில்லை, மக்கள் இயக்கமும், விழிப்புணர்வும் அதற்கு அவசியமானது என தனது களத்தை விரிவுப்படுத்திக் கொண்டுள்ளார்.

இன்றளவும் அவர் மீது பொய்வழக்குகள் புனையப்பட்டு வருகிறது. மிரட்டல்கள், பாதுகாப்பற்ற பயணங்கள், இணையதள ரவுடிகளின் வசவுகள் என தொடர்ந்து தொல்லைக்கு ஆளாகிக் கொண்டே போராட்டக் களத்தில் பயணித்து கொண்டிருப்பதை இந்த புத்தகம் எடுத்துரைக் கிறதுபுத்தகத்தின் முதல் பகுதியில் வகுப்புவாத கலவரங்களின் நிகழ்வுகளை எதார்த்தமாக சொல்கிறபோது வாசிப்பவர்களின் நெஞ்சம் பதைபதைக்கிறது.

குஜராத் கலவரங்களை பற்றி புத்தகம் அதிகமாக பேசியிருந்தாலும் கலவரங்களின் அடிப்படை அரசியல் பொருளாதாரத்தையும் விளக்கியுள்ளார். 1970ம் ஆண்டுகளில் மும்பையில் பிவண்டி-மகத்ஜல்கோன் கலவரத்தில் பலர் கொல்லப் பட்டனர். சிவசேனா தலைவர் பால்தாக்ரேவின் “வந்தேறிகளை பற்றி” வெறுப்பு பேச்சுகளே கலவரத்திற்கு காரணம் என்று நிரூபிக்கப்பட்டது. 1970ம் ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் அதிகம் சேர ஆரம்பித்தனர். 1984ம் ஆண்டு வரைசிவசேனா இந்துத்துவா பற்றியோ, இந்து ராஷ்ட்டிரம் பற்றியோ வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

1984ம் ஆண்டு மே மாதம் மும்பையில் பிவண்டியில் மதக்கலவரங்களை சிவசேனாவினர் திட்டமிட்டு உருவாக்கினர். 1980ம் ஆண்டுகளில் வகுப்புவாத விஷப்பற்கள் வேகமாக வளர்ந்ததையும் இதனால் வகுப்புக்கலவரங்களின் எண்ணிக்கை 1980ம் ஆண்டில் 427 ஆகவும், 1983ம் ஆண்டில் 500ஆக உயர்ந்ததையும், மரணங்கள் 1981ல் 196 லிருந்து 1983ல் 1143 ஆக உயர்ந்ததையும் புத்தகத்தில் விவரித்துள்ளார்.

1983ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அசாம் மாநிலத்தில் நெல்லி என்ற இடத்தில் 3023 பேர் படுகொலை ‘‘நெல்லி படுகொலைகள்’ செய்யப்பட்டனர். 1984ம் ஆண்டு இந்திராகாந்தி படுகொலையின் போது நவம்பர் 1 முதல் 3 வரை தில்லியில் 3000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு 1993-94ல் மும்பையில் நடைபெற்ற கலவரம் இந்தியா முழுவதும் ஏற்படுத்தியதாக்கத்தை விவரிக்கிறார். மேற்கண்ட அனைத்துவகுப்பு கலவரங்களை விட குஜராத்தில் 2002ம்ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து நடைபெற்ற மதக்கலவரம் ஆயிரம் மடங்கு பெரியது என்பதையும்,

அது எவ்வாறு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதையும் களத்திலே நின்று ஆதாரங்களோடு அம்பலப் படுத்துகிறார். குஜராத்தில் உள்ள 25 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்ட பெரும் கலவரங்கள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் 1,68,000 பேர் அதிகாரப்பூர்வ கணக்கின்படி இடம் பெயர்ந்துள்ளனர்.

தீஸ்தா செதல்வாட் நினைவோடை-0கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன்பே குஜராத் கலவரத்திற்கு விரிவான முறையில் திட்டமிடல் நடந்துள்ளது என அம்பலபடுத்துகிறார். இறந்தவர்களின் சடலங்களை வி.எச்.பி தலைவர்கள் அகமதா பாத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றது கலவர திட்டத்தின் ஒரு பகுதியாகும். ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன்பே ஆயுத சேகரிப்பு, சிலிண்டர்கள் சேகரிப்பு போன்றவை நடைபெற்ற தையும் காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அலுவலகம், பாஜக மந்திரிகளின் கைகளில் இருந்ததும், காவல்துறை கலவரக்காரர் களோடு சேர்ந்து சிறுபான்மை மக்களைதாக்கியது, வரவழைக்கப்பட்ட இராணுவத்தை 10 மணி நேரம் கலவரப் பகுதிக்கு அனுப்பாமல்கால தாமதம் செய்தது, அதன் பிறகும் கலவரம் நடைபெறாத பகுதிக்கு திட்டமிட்டு தவறுதலாக அனுப்பப் படுவது என அடுக்கடுக்கான ஆதாரங்களை களத்திலே இருந்து கண்டவற்றை சொல்கிறபொழுது அழுகி முடைநாற்றம் எடுக்கும் அரசு எந்திரத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இதற்குமேல் தொலைக் காட்சிகள் எரிப்பு சம்பவத்தை மீண்டும் மீண்டும் காட்சிப் படுத்திய சம்பவங்களையும் நினைவு கூர்கின்றார்.

குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த எம்.எச்.கத்ரி, திவேசா போன்ற வர்கள் தாக்கப்பட்டார்கள். இவர்கள் தலைமை நீதிபதியை தொடர்புகொண்டபோது காவல்துறையை நம்பாதீர்கள் என்று கூறும் அளவிற்கு நிலைமை இருந்துள்ளது.

பல நிவாரண முகாம்களில் நடைபெற்ற கொடுமைகளை விவரிக்கிறபொழுது மனம் பதறுகிறது. சிறுபான்மை பெண்கள் சுமார் 12 மணி நேரத்திற்கு மேல் நிர்வாணமாக காவல்நிலையத் தில் வைக்கப் பட்டு சித்ரவதை செய்யப்பட்ட சம்பவங்கள் வெட்கித் தலைகுனிய வைக்கின்றன.

பெண்களுக்கு முன்னால் சிறுபான்மை சமூகத்தினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள்என அனைத்தும் அரங்கேற்றப் பட்டுள்ளது. கலவரத்தையொட்டி அன்றைய பிரதமர் வாஜ்பாய் அது விபத்துதான் என்று அறிவித்ததை யாரும் காதில் வாங்கிக் கொள்ள வில்லை. அதேநேரத்தில் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இந்துக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என்று கொலை பாதக செயலுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நிவாரண முகாம் களில் தங்கியிருந்த சிறுபான்மை மக்களை பார்த்து முதல்வர்மோடி “நிவாரண முகாம்கள் குழந்தை உற்பத்தி தொழிற்சாலையாக மாறியிருக்கிறது” என்று தரம்தாழ்ந்து பேசினார். இதை நீதிமன்றம் வரை தீஸ்தா செதல்வாட் கொண்டு சென்றுள்ளார். புத்தகத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப் பட்டுள்ள விஷயம் வழக்குகள், தண்டனைகள், நீதிமன்ற செயல்பாடுகள் பற்றியது.

சிபிஐ விசாரித்த வழக்குகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தது. புகழ்பெற்ற அதிகாரி ஜூலியஸ் ரெபைரோ எஜமானின் “கூண்டுகிளி போல் சிபிஐ இருந்ததை கிண்டலடித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் ராகவன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு எப்படி ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையும் அதன்பிறகு நடந்த கலவரத்தையும் சமப்படுத்தி பார்த்த வேலையை இந்த அமைப்பு செய்தது. கூட்டம் கூட்டமாக புதைக்கப்பட்டதையும் கோத்ரா சம்பவத்திற்கு முன்னால் நடைபெற்ற சதி வேலைகளை கூட விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் தயாராக இல்லை.

நேர்மையான அதிகாரிகள் தண்டிக்கப்பட்டதும் பழிவாங்கப் பட்டதும் நடந்து கொண்டே இருந்தததை காண முடிகிறது. இந்த கலவரங்களுக்கு பின்னால் மோடியும் கார்ப்பரேட் கம்பெனிகளும் இருந்தார்கள் என்பதையும், மோடிக்கு முன்பு குஜராத்தில் எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பதையும் படம்பிடித்து காட்டியுள்ளார்.

மும்பை கலவரத்தில் கண்ணீர் வடித்த ரத்தன்டாட்டா, குஜராத் கலவரத்திற்கு பிறகு ரத்தக் கரை படிந்த மோடியை கட்டித் தழுவினார். டாட்டா, அம்பானி, எஸ்ஸார் குழுமம் போன்றவர்க ளெல்லாம் ஒன்றுகூடி அடுத்த பிரதமர் மோடி என்ற அறிவிப்பை இவர்களே முதலில் செய்தார்கள் என்பதை செதல்வாட் பதிவு செய்துள்ளார்.

குஜராத் கலவரத்திற்கு பிராமணர்களும், படேல்களும் திட்டமிட்டார்கள். ஆனால் களத்தில் இறக்கிவிடப்பட்ட வர்கள் தாழ்த்தப் பட்டவர்களும், பழங்குடி மக்களும். ஆனால் இம்மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பொழுது அவர்களுக்கான ஜாமீன் பெறக்கூட திட்டமிட்டவர்கள் உதவி செய்யவில்லை. அகமதாபாத் நகரில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் தலித்துகள் தனியாக வாழ்வதற்கு 300க்கும் மேற்பட்ட காலனிகளை உருவாக்கியிருக்கிறார்கள். நீதிமன்றம், காவல்துறை, ஊடகம் என அனைத்தும் கலவரக்காரர்களுக்கு ஆதரவாக நின்றது. அதே நேரத்தில் 2004ம் ஆண்டு மத்தியில்ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கலவரக்காரர்களை தண்டிப்பதற்கு உரிய முயற்சிகள் செய்யவில்லை.

ஒரு வழக்கை தவிர மற்ற வழக்கிற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. 2008-ம் ஆண்டு ராஜீவ் காந்தி பவுண்டேஷன் குஜராத் அரசை சிறந்த அரசு என்று பாராட்டியது இதில் ஒரு பகுதியாகும்.

பெஸ்ட் பேக்கரி வழக்கு வருகிறபோது சாட்சிகளை களைத்த பாஜக எம்எல்ஏ மதுஸ்ரீவஸ்தவாவின் சகோதரர் காங்கிரசில் இணைந்ததால் இவ்வழக்கு பற்றி சீரிய முயற்சிகள் மேற்கொள்ள வில்லை. எனினும் குஜராத் கலவரத்தில் செதல்வாட் தலைமையிலான அமைப்பு 69 பெரும் வழக்குகளையும் 150 தண்டனைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது. நரோடா பாட்டியா வழக்கில் இரு அமைச்சர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளது.

சிதலமடைந்த அரசமைப்பு செயல்பாட்டிற்கிடையில் தீஸ்தா செதல்வாட்டும் அவரது அமைப்புகளும் குஜராத் கலவரத்தில் மோடியும் வகுப்புவாதிகளும் தொடுத்த தாக்குதலை எதிர்கொண்டு நடத்திய போராட்டங்கள் களப்போராளி களுக்கு நம்பிக்கையூட்டக் கூடியதாக இருக்கிறது.

1989ம் ஆண்டு மும்பை மதக்கலவரங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்திய பொழுது சிஐடியு தலைவர் விவேக் மாண்டிரோ, அகல்யா ரங்கனேகர் போன்ற தலைவர்கள் உடன் இருந்ததையும் நீதிமன்றத்தில் அவருக்கு பாதுகாப்பாக தலித், பழங்குடி அமைப்புகளும் மார்க்சிஸ்ட் கட்சியும் இருந்ததையும் அவர்மீது பொய் வழக்கு தொடுத்தபோது பிருந்தாகாரத் போன்ற தலைவர்கள் இருந்ததையும் ஏனைய மனித உரிமைபோராளிகள், வழக்கறிஞர்கள் உடன் இருந்ததையும் நினைவு கூர்ந்துள்ளார். புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை அதுல் செதல்வாட். தாத்தா எம்.சி.செதல்வாட் இந்தியாவின் முதல் தலைமை வழக்கறிஞர். காஷ்மீர் பிரச்சனைகளை அரசின் சார்பில் ஐ.நா.சபையில் பேசியவர். இவரது கொள்ளு தாத்தா சிமன்லால், காகா ஜாலியன் வாலாபாக் படுகொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆண்டர்சன் கமிஷனில் இடம்பெற்று ஜெனரல் டயரை குறுக்கு விசாரணை செய்தவர்.

எனினும் தன்னை ஒரு களப்போராளியாக மாற்றிக்கொண்டு பன்முக எதிர்ப்பினை சந்தித்து வெற்றிகளை ஈட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு கேள்வியை தேசத்தின் முன் எழுப்புகிறார்? 84-ம் ஆண்டு பிவண்டி கலவரத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால், 84- சீக்கியர்கள் படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப் பட்டிருந்தால், 1993 மும்பை கலவரங்கள் நடந்திருக்குமா? 93-ல் மும்பை கலவரம் கிருஷ்ணா கமிஷன் அறிக்கைபடி தண்டிக்கப்பட்டிருந்தால், 2002 குஜராத் இனக்கலவரம் நடந்திருக்குமா? இதற்கு பதில் கண்டுபிடித்தாக வேண்டும்.

இவரை பற்றி ஓய்வுப் பெற்ற நீதிபதி கே.எஸ்.வர்மா “ என்ன செய்திருக்கிறார் தீஸ்தாசெதல்வாட். நாட்டின் பிரஜை என்ற முறையில் அரசமைப்புச் சட்டத்தின் கீழான அடிப்படை உரிமைகளுக்காக முழுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நாம் ஒவ்வொருவரும் அவர் மேற்கொண்டுள்ள பாதையில் செல்வோமானால் குஜராத்தில் நடந்தது போன்ற கலவரங்கள் எங்கும் நடக்காது”

ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இந்த புத்தகத்தை தமிழில் ச.வீரமணி, தஞ்சை ரமேஷ் இருவரும் சிறப்பான முறையில் மொழிப்பெயர்த்துள்ளனர். வார்த்தை ஜாலங்கள் வர்ணனைகள் என்பதற்கு இடமே இல்லாமல் சம்பவங்களையும் சதிகளையும் வாசகர்களின் முன்னால் பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர். பாரதி புத்தகாலயம் இதை வெளியிட்டுள்ளது.

-அ.பாக்கியம்

தீஸ்தா செதல்வாட் நினைவோடை,
தமிழில்: ச.வீரமணி – தஞ்சை ரமேஷ்,
வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
விலை ரூ.200,
தொலைபேசி: 044 – 24332424

 

Leave a Reply