1920 அக்டோபர் 17 இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். ஆம். அன்று தான் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி உதயமானது.
இன்றைய உஸ்பெகிஸ்தான் தேசத்தில் தாஷ்கண்ட் நகரில் முதல்கிளை அமைக்கப் பட்டது. ஏன் அங்கு என்ற கேள்வி எழலாம். ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் மக்கள் எழுச்சியை அடக்கி, ஒடுக்கும் காலனியாதிக்க சூழலில் நாட்டுக்குள் அத்தகைய அமைப்பை உருவாக்க முடியாத சூழலில் தான் அந்த கம்யூனிஸ்ட்டுகள் லெனின் தலைமையில் அமைக்கப்பட்ட முதல் சோசலிச நாடான சோவியத் யூனியனில் ஒரு பகுதியான தாஷ்கண்ட்டில் முதல்கிளை யை உருவாக்கினார்கள். அன்றைய சூழலில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியை அமைக்க முயற்சித்தவர்கள் ஆப்கானிஸ் தான் வழியாக தலைமறைவாக அடுத்த அண்டை பகுதி யான தாஷ்கண்ட்டுக்குச் சென்று பணி முடித்திருக் கிறார்கள்.
19ஆம் நூற்றாண்டில் நாடு முழுவதும் அந்நியர் ஆட்சியை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் வீறுகொண்டு எழுந்தது. இந்திய முதல் சுதந்திரப் போர் என்று மார்க்ஸால் வர்ணிக்கப்பட்ட சிப்பாய் கலகம் 1857ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
1872ஆம் ஆண்டு பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து ஜோதிபா பூலே “குலாம்கிரி” என்ற நூலை எழுதினார். மராட்டியத்தில் சமூக சீர்திருத்த இயக்கத்தை அவர் துவக்கினார். சாதிபாகுபாடு, ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக் கொடுமை போன்றவற்றை எதிர்த்து கேரளாவில் 19ஆம் நூற்றாண்டில் ஒரு கட்டத்தில் நாராயணகுரு குரலெழுப்பினார். தமிழகத்தில் வள்ளலார் மற்றும் அயோத்திதாசர், சிங்காரவேலர், பெரியார் ஆகியோர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கிட சமூக சீர்திருத்தத்தில் ஈடுபட்டார்கள்.
அந்நியர் ஆட்சியை எதிர்த்து நாட்டின் பல பகுதி களில் பழங்குடியின மக்களும், விவசாயிகளும் வீரமிக்க பல போராட்டங்களை நடத்தினார்கள். கை நெசவு உள்ளிட்ட பாரம்பரியமான குடிசைத் தொழில்கள் அழிக்கப்பட்டு, நவீன தொழிற்சாலைகள் உருவாயின. இந்த ஆலை களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிராகவும், அந்நியர் ஆட்சிக்கு எதிராகவும் போர்க்கொடி உயர்த்தினர். உலக அளவில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்தியாவிலும் தாக்கத்தை உருவாக்கி யிருக்கிறது.
1848ஆம் ஆண்டு மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடுகிறார்கள். இந்த பிரகடனத்தை அறிந்த மேற்குவங்கத்தைச் சார்ந்த வித்யாசாகர் (1820-1891) பின்வருமாறு ஒரு கட்டுரை எழுதினார்.
“கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செல் வாக்கு பரவி வருகிறது. இதற்கு அடிப் படைக் காரணம் யாதெனில் உலகம் முழு வதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் இதயங்களைக் கவரும் வகையில் அது அமைந்துள்ளது” 1864ஆம் ஆண்டு முதல் கம்யூனிஸ்ட் அகிலம் உரு வானதையொட்டி இந்தியாவிலும் அத்தகைய அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டுமென்று கல்கத்தாவிலிருந்து ஒரு கடிதம் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு சென்றிருக்கிறது. 1871ஆம் ஆண்டு நடைபெற்ற பாரீஸ் கம்யூன் தொழிலாளர் புரட்சியின் தாக்கமும் இந்தியாவில் பிரதிபலித் திருக்கிறது.
1892ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் சோசலிசம் பற்றி கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார். “பொருட்களின் உற்பத்தியும் அவற்றின் விநியோகமும் சமுதாயத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; சக்தி படைத்த தனிமனிதர் எவரிடமும் அவற்றை விட்டு விடக் கூடாது என்று சோசலிஸ்டுகள் விரும்புகிறார்கள். செல்வத்தை உற்பத்தி செய்வதும் விநியோகிப்பதும் ஒட்டு மொத்த சமுதாயத்தின் கடமை…. சுதந்திரம் என்பது செல்வத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப் பட்டது….. ”
1919ல் வங்கத்தைச் சார்ந்த பிபின் சந்திர பால் “உலகம் முழுவதும் ஒரு புதிய சக்தி உருவாகியிருக்கிறது. அது தான் மக்கள் சக்தி. தங்களின் நியாயமான உரிமை களை உறுதியுடன் பாதுகாக்க கூடிய மக்கள் சக்தி. செல்வம் படைத்த வர்க்கங்கள், மேல்தட்டு வர்க்கங்கள் என்றெல்லாம் அழைக்கப்படும் வர்க்கங்களால் சுரண்டப் படாமல் சுதந்திரமாகவும், மகிழ்ச்சி யாகவும் வாழ்வதற்காக, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய மக்கள் சக்தி போல்ஷ்விசம்” என பேசினார்.
“ரஷ்யா அல்லது சீனாவில் நிகழக்கூடிய ஒரு கலகத்திலிருந்து தான் ஒரு புதிய யுகமே உருவாகும். எந்த நாட்டில் அது நிகழும் என்பதை இப்போது என்னால் தெளிவாக ஊகிக்க முடியவில்லை என்றாலும் இந்த இரண்டு நாடுகளில் ஒன்றில் அது நிகழத் தான் செய்யும்….. கோடிக்கணக்கில் உள்ள உழைக்கும் மக்கள் ஒரு புதிய இந்தியா உருவாவதற்குக் காரணமாக இருப்பார் கள்….” என விவேகானந்தர் 1896ல் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
நவீன சமுதாயத்தில் மேலான வர்க்கங்கள், கீழான வர்க்கங்கள் என்பதெல்லாம் எதனை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன?… செல்வத்தை அடிப்படையாக வைத்துத் தானே தீர்மானிக்கப்படுகிறது? அப்படியானால் செல்வம் என்பது என்ன? விஞ்ஞான ரீதியாக இதனை விளக்க முற்பட்டால் – ஒருமுகப்படுத்தப்பட்ட, ஒன்று திரட்ட ப்பட்ட தெளிவான வடிவம் பெற்ற ஒன்று தான் செல்வம் – மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளதைப் போல அந்த ஒன்று தான் உழைப்பு. அதுதான் செல்வம் என தி மராட்டா இதழில் (மே 1, 1881) திலகர் எழுதியிருக்கிறார்.
1912ஆம் ஆண்டு மலையாள மொழியில் காரல் மார்க்ஸ் வரலாறு வெளியிடப்பட்டுள்ளது. 1908ஆம் ஆண்டு சுதந்திரப்போராட்ட வீரர் திலகர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட போது “மக்களின் இந்தியா தனது எழுத்தாளர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஆதரவாக எழுந்து நிற்கத் தொடங்கிவிட்டது” என லெனின் குறிப்பிட்டிருக்கிறார்.
1917ஆம் ஆண்டு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி லெனின் தலைமையில் அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிசத்தை நிர்மாணிக்கத் துவங்கியது.
“ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி” என பாரதி ரஷ்யப் புரட்சியை பாராட்டி பாடினார். சுதந்திரப் போராட்டத்தின் போது டொமினியன் அந்தஸ்து சுயராஜ்யம் என்ற பெயர்களில் தெளிவற்ற கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி முன்வைத்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற தொழிலாளர், விவசாயிகள் இயக்கமும், சமூக சீர்திருத்த இயக்கமும் பொதுவாக அந்நியர் ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சியும் இந்தியாவில் ஒரு புதிய சூழலை உருவாக்கியது.
இந்திய நாடும், மக்களும் சந்திக்கும் புதிய பிரச்சனை களுக்கு பழைய முறையில் தீர்வு காண முடியாது. இந்த வரலாற்றுத் தேவையைப் பூர்த்தி செய்திட 1920 அக்டோபர் 17ல் உருவானது தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தாஷ்கண்ட்டில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து பம்பாய், கல்கத்தா, சென்னை, லாகூர், கான்பூர் போன்ற பல இடங்களில் கம்யூனிஸ்ட் குழுக்கள் தோன்ற ஆரம்பித்தன.
உதயமான இயக்கத்தை அழித்திட வேண்டுமென்ற நோக்கத்தோடு ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு கம்யூ னிஸ்ட்டுகள் மீது பல சதி வழக்குகளைப் போட்டது. 1921 முதல் 1924 வரை 4 சதி வழக்குகள் (பெஷாவர்) போடப்பட்டன. 1924ஆம் ஆண்டு சிங்காரவேலர், முசாபர் அகமது, எஸ்.ஏ. டாங்கே, எம்.என். ராய் உள்ளிட்டவர்கள் மீது கான்பூர் சதி வழக்கு போடப்பட்டது. 1925ஆம் ஆண்டு கான்பூரில் சிங்காரவேலர் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்றது.
1920க்கு பின்னர் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு செயல்படக் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு 1933ஆம் ஆண்டு உருவானது. சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நியர் ஆட்சி அகற்றப்பட்டால் மட்டும் போதாது, பொருளாதார சுதந்திரமும், சமூக விடுதலையும் வேண்டுமென்ற முழக்கத்தை கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது. இதனுடைய தொடர்ச்சியாகத் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோச லிசத்தை அடைய இந்தியாவில் தொழிலாளி வர்க்கத் தலைமையில் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றி அரசியல் மாற்றத்தை உருவாக்கிட போராடி வருகிறது. -ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > ஆவணங்கள் > சிறப்புக் கட்டுரைகள் > வரலாறு ஈன்றெடுத்த இந்திய கம்யூனிச இயக்கம் – இந்திய வரலாற்றை மாற்றியது
வரலாறு ஈன்றெடுத்த இந்திய கம்யூனிச இயக்கம் – இந்திய வரலாற்றை மாற்றியது
posted on
You Might Also Like
பிரஞ்சியரின் ஆட்சியில் புதுச்சேரி (1816-1954) கால வரிசை
November 10, 2024
அன்னியமாதல்
October 20, 2024
ஊழியர்களை பயிற்றுவித்தல் குறித்து: லெனினின் வெளிச்சத்தில்
October 4, 2024