இந்து, முஸ்லிம் உறவுகளில் 1937ஆம் ஆண்டு முக்கியப் பங்கு வகித்தது. மதம் சார்ந்த விருப்பு-வெறுப்புகள், சமூக அணுகுமுறை காரணமாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலிருந்த வேறுபாடுகள் பிறகு நிறுவனமயப்படத் தொடங்கின.
ஜின்னா இந்தச் சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டு பிரிவினைக்கான தீயை முஸ்லிம்கள் மனதில் நன்கு வளர்த்தெடுத்தார். இப்படியாக உத்தரப் பிரதேசம்தான் (ஐக்கிய மாகாணம்) பாகிஸ்தான் என்ற தனி நாடு பிறக்க, தொட்டிலாகிவிட்டது என்று ஆசாத் பிறகு சுட்டிக்காட்டினார். முஸ்லிம் லீக் கேட்டதைப் போல இரண்டு இடங்களை அமைச்சரவையில் அதற்கு அளித்திருந்தால், பிறகு அந்தக் கட்சியே காங்கிரஸில் இணைந்திருக்கும் என்றும் ஆசாத் கருதினார்.
ஆனால், கலீகுஸ்ஸமான் என்ற ஐக்கிய மாகாண முஸ்லிம் லீக் தலைவர், காங்கிரஸுடனான ஆட்சிப் பகிர்வு ஒப்பந்தத்துக்கு – ஏற்க முடியாத ஒரு நிபந்தனையை விதித்தபோது நேரு என்னதான் செய்வார்? மதம் சார்ந்த விவகாரங்களில் முஸ்லிம் உறுப்பினர்கள் அவர்களுடைய மனசாட்சிப்படி வாக்களிக்கும் உரிமை வேண்டும் (கட்சி கட்டளையிடக் கூடாது) என்று நிபந்தனை விதித்தார். மதம் சார்ந்த விவகாரங்கள் என்றால் என்ன? அதை வரையறுப்பது யார்?
இந்த நிபந்தனைக்குத் தன்னுடைய பதில் என்ன என்று கலீகுஸ்ஸமானுக்கு 1937 ஜூன் 27இல் நேரு ஒரு கடிதம் எழுதினார்: “என்னைப் பொறுத்தவரையில் இதுவரையிலும் – இனி வருங்காலத்திலும், நான் மிகவும் போற்றும் லட்சியங்களுக்காகத்தான் செயல்படுவேன், என்னுடைய செயல்களால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து கவலைப்படமாட்டேன்.
(பொது) வாழ்க்கையை நடத்துவது மிகப் பெரிய சுமையான வேலை, ஆனால் சில லட்சியங்களுக்காகத்தான் கடுமையாகப் பாடுபட்டுக் கொண்டிருக் கிறேன் என்பதே எனக்கு மனச் சாந்தி அளிக்கிறது” என்று அந்தக் கடிதத்தில் விளக்கியிருந்தார்.
நேரு ஏன் மறுத்தார்?
‘முஸ்லிம் லீகுக்குப் புத்துயிர் அளித்தது நேருவின் நடவடிக்கைதான் என்கிற புத்தகம் 1959இல் வெளியான பிறகு, முஸ்லிம் லீகுக்கு ஏன் இடம்தர மறுத்தார் என்பதற்கான விளக்கத்தை நேரு அளித்தார். “ஐக்கிய மாகாணத்தில் (உத்தரப் பிரதேசம்) நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்று ஆர்வமாக இருந்தேன். மிகப் பெரிய நிலச் சுவான்தாரர்களைக் கொண்டிருந்ததால் முஸ்லிம் லீகை ஆட்சியில் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை” என்று தெளிவுபடுத்தினார் நேரு.
முஸ்லிம் லீகின் நிபந்தனையை நிராகரித்த பிறகு நேரு அறிவித்தார், “இனி (இந்திய அரசியலில்) இரண்டு பெரிய சக்திகள்தான் களத்தில் முக்கியம், ஒன்று பிரிட்டிஷ் அரசு, இன்னொன்று காங்கிரஸ்”. ஜின்னா அவருக்குப் பதிலடி கொடுத்தார், “மூன்றாவதாக ஒரு சக்தி இருக்கிறது – அது முஸ்லிம் லீக்”. ஜின்னா எந்த அளவுக்குச் சரியாகச் சொல்லியிருக்கிறார்!
முஸ்லிம் லீக் என்கிற காற்று வீசும் திசைக்கேற்ப, பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சிக் கப்பலின் பாய்மரத் திசையை மாற்றியமைத்தது. இந்தியாவிடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோதெல்லாம், ‘முஸ்லிம் லீகுடனும் ஆலோசனை கலப்போம்’ என்று காங்கிரஸுக்கு நெருக்கடி தந்தது. இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவதை மறுக்கும் ‘ரத்து அதிகாரம்’ இப்போது முஸ்லிம் லீகிடம் – அதாவது ஜின்னாவிடம்தான் இருக்கிறது என்பதை காங்கிரஸ் தெளிவாக உணர்ந்துகொண்டது.
உள்ளார்ந்த காரணங்கள்
முஸ்லிம் லீக் உருவானதே பிரிட்டிஷாரின் தூண்டுதலால்தான். டாக்காவில் 1906 டிசம்பர் 30இல் முஸ்லிம் லீக் உருவானபோது, அதன் முதல் தீர்மானமே இதை அங்கீகரித்துத்தான் இயற்றப்பட்டது. “இந்திய முஸ்லிம்களிடையே பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாச உணர்வை வளர்ப்போம்” என்பதுதான் முதல் தீர்மானம்.
ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற பிரிட்டிஷ்காரரால் 1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்ட போதும், அந்தக் கட்சி பிரிட்டிஷ் அரசுக்கு என்றுமே விசுவாசம் தெரிவித்ததில்லை. முஸ்லிம் லீக் கட்சி முஸ்லிம்களை மட்டுமே தனது இயக்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொண்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் அனைத்து சமுதாயங்களையும் சேர்த்துக் கொண்டது. கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக 1857இல் சிப்பாய்க் கலகம் நடைபெற்ற பிறகு முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது. ஆனால், முஸ்லிம் லீக் கட்சியோ பின்னாளில் பிரிட்டிஷாருக்கு இணக்கமாக நடந்துகொள்ளத் தொடங்கியது. இனி வரும் காலத்தில் பிரிட்டிஷார் இந்தியர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரங்களையாவது தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒரு கட்டத்தில் நிலவியது.
முஸ்லிம் லீக் உருவானாதால் என்ன விளைவு களை ஏற்படுத்தியிருந்தாலும், தங்களுடைய நலனும் இந்துக்களின் நலனும் ஒன்றல்ல என்று பெரும்பாலான முஸ்லிம்கள் சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள். அதற்குப் பிறகு இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கூட்டுச் செயல்பாடு இருந்ததே தவிர, ஐக்கியமான தேசிய இயக்கத்துக்கு வழிகோலவில்லை. 1909இல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்பட்ட பிறகு இரு சமூகங்களிடையே பிணைப்பு மேலும் அரிதாகிவிட்டது.
வேறு வகையில் சொல்வதானால், இந்திய தேசத்தை சுமார் 800 ஆண்டுகள் தாங்கள் ஆட்சி புரிந்த செல்வாக்கான காலத்தை முஸ்லிம்கள் மறந்துவிடவில்லை. பல தெய்வங்களை வழிபடுகிற – பல்வேறு சாதிகளாகப் பிரிந்து கிடக்கிற இந்துக்களிடமிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருந்தனர். முஸ்லிம்களின் இந்த உணர்வை பிரிட்டிஷார் தங்களுக்குச் சாதகமாக முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
சேரவே முடியாதா?
மத அடிப்படையிலான தேசப் பிரிவினை முஸ்லிம்களின் நோக்கத்தைப் பூர்த்தி செய்து விட்டதா? எனக்குத் தெரியாது. பாகிஸ்தானில் பிரிவினை என்று சொல்வதையே மக்கள் தவிர்க்கின்றனர். ஆகஸ்ட் 14 நாளில் அவர்கள் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றோம் என்ற உணர்வைவிட, இந்துக்களின் ஆட்சி என்ற நிலையிலிருந்து விடுதலை பெற்றோம் என்ற உணர்வையே பெரிதும் கொண்டிருக்கின்றனர். இந்துக்களின் ஆதிக்கம், இந்துக்களின் அச்சுறுத்தல் இல்லாமல் தாங்கள் சுதந்திரமாக வாழ்வதாகப் பாகிஸ்தானியர்கள் கருதுவதை அந்த நாட்டுக்குச் சில முறை சென்றபோது நேரிலேயே கண்டேன்.
இந்தப் பிரிவினையால் அதிகம் இழப்புக்கு உள்ளானவர்கள் முஸ்லிம்கள் என்றே கருதுகின்றேன். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என்ற மூன்று நாடுகளில் முஸ்லிம்கள் பிரிந்து கிடக்கிறார்கள். பிளவுபடாத இந்தியாவில் அவர்களுடைய எண்ணிக்கை காரணமாக அரசியலில் அவர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய செல்வாக்கையும் அதிகாரத்தையும் எண்ணிப் பார்க்கிறேன். மூன்று நாடுகளையும் சேர்த்தால் அவர்களுடைய எண்ணிக்கையும் வாக்குகள் பலமும் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் இருந்திருக்கும்.
இந்தியத் துணைக் கண்டம் மீண்டும் ஒன்றுசேரும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், இந்த நாடுகளின் மக்கள் தங்களுடைய அச்சம், அவநம்பிக்கை ஆகியவை தீர்ந்து, நில எல்லைகளைப் பிரிக்கும் தடுப்புகளைத் தகர்த்து, தனி அடையாளங்களை மறந்து, ஒற்றுமைப்பட்டு பொது நலனுக்காகச் சேர்ந்து வாழ்வார்கள் என்று நம்புகிறேன்.
அப்படிப்பட்ட ஒரு காலம் – அவர்கள் கனவு கண்டதையும்விட நல்லதொரு வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும். ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் பாகிஸ்தானில் உள்ள என்னுடைய சொந்த ஊரான சியால்கோட்டை விட்டுப் புறப்பட்டபோது எனக்கு இருந்த – இப்போதும் நாம் வளர்த்துக்கொண்டிருக்கும் ஒரே நம்பிக்கை இதுதான். துணைக்கண்டத்தை வெகு காலமாக மூழ்கடித்துக்கொண்டிருக்கும் வெறுப்பு – விரோதம் என்ற உணர்ச்சிப் பெருங்கடலில் மூழ்கிவிடாமல், நான் பற்றிக்கொண்டு மிதக்கும் ஒரே துரும்பு இந்த நம்பிக்கை மட்டுமே!
குல்தீப் நய்யார் நன்றி: ‘தி இந்து‘ ஆவணக் காப்பகம்
தமிழில்: வ. ரங்காசாரி