மாலை வேளையில் பொன்னிற மேகத்திற்கிடையே வீசிய ஒளியில் தன் குழந்தை காக்கை அழுது கொண்டிருப்பதை பார்த்த அதன் தாய்க் காகம் “அழாதடா செல்லம்..அம்மா உன் கூட தானே இருக்கேன், உனக்கொரு கதை சொல்லட்டா” என்றது. அந்த குஞ்சு காக்கை நாற்புறம் சுற்றும் பார்த்துவிட்டு தன் தாயின் அருகே மெல்ல நடந்து சென்று “கதை சொல்லப் போறீங்களா” என ஆச்சரியித்து “அப்போ எனக்கு பேய்க் கதை சொல்லுங்க” என்று தன் அழுகையை நிப்பாட்டி கதை கேட்க ஆவல் கொண்டது.
தாய்க் காகமோ தன் குழந்தை காக்கையின் தலையை மிருதுவாக நீவி “நா சொல்லப் போறது ரொம்ப முக்கியமான கதை, பயமா இருந்த அம்மாவை கட்டிப்பிடிச்சிக்கணும் ம்ம்” என்று ஆறுதல் வார்த்தைகள் கூறி, அக்கதையை சொல்ல ஆரம்பித்தது.
பழம் பெருமையான சாதிய பாரத தேசத்தில், நரேந்திரன்னு ஒரு மன்னர் ஆட்சி செஞ்சிட்டு வராரு. காந்திய தேச பகுதியில இவர் ஒரு குறுநில மன்னரா இருந்தப்போ, நிறைய நிறைய கலவரங்களையும் படுகொலைகளையும் செஞ்சி அங்க இருக்கிற மக்களை நடுத்தெருவுல நிறுத்தினார். அதனால அவர் நல்ல பெயரும் புகழும் செல்வாக்கும் நிறைஞ்சவரா இருந்தார். அப்புறோம் தன்னோட எஜமான்களை உலக எஜமான்களாக்கவும் சனாதனத்தை பாதுகாக்கவும் ஒரு சபதம் செஞ்சி… அமெரிக்க விளம்பரக் கம்பெனி மூலம் டிவி, பேஸ்புக் வாட்ஸ் அப்-ல தவமாய் தவம் கிடந்து, மேல வந்து இப்போ ஆட்சி செஞ்சிக்கிட்டிருக்கார். அவர் பொற்கால ஆட்சியில இருக்கிற ஒரு மாநிலத்தில ஒரு மாணவன் வாழ்ந்து வந்தான், அவனுக்கு ஒரு நாள் தொண்டை வறண்டு அதிக தாகம் எடுத்தது, அப்போ பக்கத்தில் ஒரு பானையில தண்ணீர் இருக்கிறதை பார்த்திட்டு,
ஏற்கனவே நம்ம கதையை படிச்சவன்,
வேக வேகமாக போயி அந்தப் பானையில இருக்கிற தண்ணீரை குடிச்சான். இதை பார்த்த அந்த பள்ளியோட ஏகக் குருவான அவன் ஆசிரியர் ‘நம்ம சனாதனத்திற்கும் வர்ணாசிரம கோட்பாட்டுக்கும் இந்த பையன் மாபெரும் துரோகத்த செஞ்சிட்டான்’ன்னு, சொல்லி அதுக்கு தண்டனையா அவனை அடிச்சே கொன்னுட்டாரு.
இதை கேட்ட குட்டிக் காகம் உடனே பயமுற்று “என்னம்மா சொல்லுறீங்க, பாடம் சொல்லித் தர ஆசிரியர் இப்படியா செய்வாங்க?” என்று கேட்டது. அதற்கு தாய்க்காகமும் “என்ன பண்ண… தாகத்தில தவிச்ச அந்த மாணவனை அழைச்சிட்டு போயி, உனக்கு தாகமா இருந்தா இன்னும் கொஞ்சம் தண்ணீர் குடிப்பா-ன்னு சொல்லியிருக்கணும், அவரு பண்ணலையே” என்று பதில் சொன்னது.
“அப்புறம் ஏன்மா இப்படி செஞ்சாங்க” என்ற குஞ்சுக் காக்கையின் மறு கேள்விக்கு, தாய்க் காகம் மீண்டும் பதில் தந்தது.
சம்புகன் வதம் எப்படி ராமாயணத்தில் நடந்துச்சோ. அதே மாறி இந்த நரேந்திர ராஜியத்தில ஒரு வதம் நடந்திருக்கு. அதுவும் அந்த தேசத்தோட பவளவிழாவான சுதந்திர தினத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறத கேட்டா இது வர்ணாசிரம ஆட்சி நடக்கும் அந்த தேசத்தின் குல வழக்கம்.
அதனால் மனுசங்க கிட்ட எச்சரிக்கையா இருக்கனும், மனுசங்கள்ல தண்ணீர் கூட சாதியை அடிப்படையாதான் கொண்டிருக்கும், ஆனா உனக்கு தாகம் எடுக்கும் போது நீ நிச்சயமா மனுசங்களோட தண்ணீர நாடி செல்லாத… என்று அந்தத் தாய் காகம் தன் குழந்தைக்காகத்திற்கு கதை சொன்னது.
குறுக்கிட்டு “அம்மா என்னம்மா இப்படி சொல்றீங்க” என்றது குஞ்சுக் காக்கை.
ஆமா, மனுசங்க மிகவும் நல்லவங்க, அதனாலதான் நம்ம அவங்களோட சேர்ந்து பல தலைமுறைகளா வாழ்றோம். ஆனா சில பேர் சுயநலத்திற்காக மதத்தையும் சாதியையும் இனத்தையும் மொழியையும் வச்சி தங்களோட கொள்ளை இலாபத்திற்காக மக்களோட நல்ல எண்ணங்களையும் ஒற்றுமை உணர்வையும் அழிச்சிட்டு வர்றாங்க” என்றது தாய்க்காகம்.
“இதற்கு எதிராக நாம சேர்ந்து, அவங்கள திருத்த பாடுபடணும்”
“ஆமா, ஏன் மனுசங்க இப்படி இருக்கிறாங்கன்னு நான் யோசிச்சேன், நீங்க சொல்லுறப்பதான் சில கெட்டவங்க இப்படி மனுசங்கள கெட்டவங்களா மாற்றி வர்றாங்க” என்றது குஞ்சுக் காக்கை.
“சரி பார்ப்போம் இனியாவது அவங்க திருந்துவாங்களா இல்லையான்னு” என்றது தாய்க்காகம். -கார்க்கி விஜய், புதுச்சேரி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > ஆவணங்கள் > சிறப்புக் கட்டுரைகள் > கவிதை, பாடல் > தாகமெடுத்த குழந்தை பற்றி காகம் சொன்ன கதை
தாகமெடுத்த குழந்தை பற்றி காகம் சொன்ன கதை
posted on