‘மகாராஷ்ட்ராவின் கார்க்கி’ என்று புகழப்பட்ட, அன்னபாவ் சாத்தே (Anna Bhau Sathe), மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் வாடேகான் கிராமத்தில் 1920 ஆகஸ்ட் 11 அன்று பிறந்தார். இவர் பிறப்பால் பட்டியல் இனத்தவர்களாக உள்ள மாங் (Mang) சாதியில் பிறந்தார் மற்றொரு பட்டியல் மஹர் சாதியினர் இவர்களை தங்களுக்கு கீழாக நடத்துவதாக இந்த சாதியினர் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.
அண்ணா பாவுவின் பயணம் அவருடைய கிராமத்திலிருந்து, மகாராஷ்ட்ரா இலக்கியத்தில் மிகவும் போற்றுதலுக்குரிய நபர்களில் ஒருவராக பரிணமித்திருப்பது வரைக் கூறும்போது, அது ஒரு தேவதைக் கதையைக் கூறுவது போன்றே ஆச்சர்யப்படுத்தினால் அது மிகையல்ல. பம்பாயில் ஒரு தொழிலாளியாய் தன் வாழ்க்கையை ஆரம்பிக்கும் வரையிலும் எழுதப் படிக்கத் தெரியாதிருந்த ஒரு நபர், பின்னர் மாநிலத்தில் உருவான கவிஞர்களில் அற்புதமான கவிஞர்களில் ஒருவராக எழுந்தார். மாநிலத்தில் நிலவிய சாதி வேறுபாடுகளின் அடிப்படையில் இருந்துவந்த சமூக அமைப்பு முறைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களும், பஞ்சாலையில் அவருடைய பணியும், அப்போது கம்யூனிஸ்ட்டுகளுடனும், முற்போக்காளர்களுடனும் அவருக்கு ஏற்பட்ட தொடர்பும்தான் அவரை இவ்வாறு சிறந்த கவிஞராக உருவாவதற்கு உதவின.
அண்ணா பாவுவின் குடும்பம் 1930இல் பம்பாய்க்கு இடம்பெயர்ந்தது. இளம் வயதிலேயே அவர் ஒரு போர்ட்டராக வேலையைத் தொடங்கிவிட்டார். பின்னர் பஞ்சாலையில் ஒரு ஹெல்ப்பராக வேலை செய்தார். 1934இல் லால் பாவ்டா ஆலையில் ஒரு வேலை நிறுத்தம் நடைபெற்றது. அந்த வேலைநிறுத்ததில் அண்ணா பாவு, ஓர் ஆலைத் தொழிலாளியாகப் பங்கெடுத்தார். வேலை நிறுத்தம் நடைபெற்ற சமயத்தில் சிவ்தி பகுதியில் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களை அவர் கண்ணால் கண்டார். இந்த வேலைநிறுத்தத்தில் ஆலைத் தொழிலாளர்கள் மற்றம் தலித் தலைவர், பரசுராம் யாதவ், முதலானவர்கள் நினைவு கூரப்பட்டிருந்தார்கள். அவர்கள் குறித்து சுவரொட்டிகள் அனைத்து பஞ்சாலைகளிலும் ஒட்டப்பட்டிருந்தன.
அண்ணா பாவு, தொழிலாளர் இயக்கத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார். ஆனாலும், 1936இல் அவர் மாதுங்கா தொழிலாளர் முகாமில் இருந்த ஒரு சேரிக்கு குடிபெயர்ந்தபோதுதான், அங்கிருந்த கம்யூனிஸ்ட்டுகளுடன் மிகவும் நெருக்கமானார். ஆர்.பி. மோரே முகாமிலிருந்த தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்திக் கொண்டிருந்தார். பி.ஆர். அம்பேத்கர் நடத்திய ‘மகா சத்யாகிரகத்துடனும்’ அவர் தொடர்பினை வைத்திருந்தார்.
சோசலிச உணர்வுக்கு நெருக்கமானார்
மிகவும் விரிவான அளவில் நடைபெற்றுவந்த சமூக இயக்கங்களின் தலைவர்களுடன் அண்ணா பாவும் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டார். அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக சமூக இயக்கங்களில் நடைபெற்று வந்த போராட்டங்களையும் உலகம் முழுதும் நடைபெற்று வந்த போராட்டங்களையும், அக்டோபர் புரட்சி குறித்தும், ரஷ்யாவில் உருவான புதிய சமூகம் குறித்தும் அறிந்துகொள்ளத் தொடங்கினார்.
அந்த நாட்களில், தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய தலைமையின் அரசியல் உணர்வை உயர்த்திடுவதற்காக வாசகர் வட்டம் நடந்து வந்தன. இந்த வாசகத் வட்டத்தை தோழர்கள் பி.டி. ரணதிவே, ஆர்.வி. மூர், எஸ்.வி தேஷ்பாண்டே முதலானவர்கள் நடத்தி வந்தார்கள். இந்த வாசகர் வட்டத்தின் மூலமாக முதலில் உருவான முன்னணி ஊழியர்கள் என்பவர்கள் சால்வி, சங்கர் நாராயண் பகரே, கிசான் காவ்லே, சர்தாபே போன்றவர்களாவார்கள். அதன்பின்னர், அண்ணா பாவுவும் வாசகர் வட்டத்தில் பங்கேற்கத் தொடங்கினார். இந்தத் தொழிலாளர் முகாமில்தான் அண்ணா பாவு, மராத்தி மொழியை எழுதவும், படிக்கவும் தன்வாழ்நாளில் முதன்முதலாக, கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பின்னர் திரைப்பட சுவரொட்டிகள் மற்றும் அச்சிட்டு வரக்கூடிய அறிக்கைகளில் இருக்கக்கூடிய வார்த்தைகளையும் படித்துப் பார்க்கத் தொடங்கினார்.
படிப்பில் ஆர்வம் மிகுந்த அவர், பின்னர் மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலைப் படித்தார். லெனின் சரிதையைப் படித்தார், ரஷ்யப் புரட்சி வரலாற்றைப் படித்தார், கம்யூனிஸ்ட் அறிக்கை முதலான நூல்களையும் படித்தார். மராத்தி மொழியில் வந்திருந்த இந்நூல்கள் அனைத்தையும் அவரால் படிக்க முடிந்தது. பம்பாயிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘காம்கார்’ இதழையும் அவர் படித்தார். அதன்மூலம், பம்பாய் நகரத்திலும், நாட்டிலும் தொழிலாளர்களின் நிலைமை எவ்வாறிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார்.
தலித் இளைஞர் சங்கம் அமைப்பு
ஆர்.பி. மோரே மற்றும் சால்வி ஆகியோரின் உதவியுடன், அன்னா பாவு, ‘தலித் இளைஞர் சங்கம்’ என்ற பெயரில் இளைஞர் அமைப்பு ஒன்றை அமைத்தார். அதன் மூலம் நடைபெற்று வந்த அரசியல் இயக்கங்களுக்கும், சமூக இயக்கங்களுக்கும் இளைஞர்களைத் திரட்டினார். இந்தவழியில் அண்ணா பாவு கம்யூனிஸ்ட் இயக்கங்களிலும், தொழிலாளர் இயக்கங்களிலும் வேலை செய்யத் தொடங்கினார். 1936-37இல் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார்.
அவர் எழுத்துக்கள் மூலமாக அளப்பரிய அளவில் பங்களிப்புகளை ஏற்படுத்தினார். தொழிலாளர் முகாமில் கொசுக்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவர் அங்கு வாழும் தொழிலாளர்கள் படும் அவலநிலைமைகளைக் குறித்து ஒரு பாடல் இயற்றினார். சங்கர் நாராயணன் பகரே முன்முயற்சியில் அவர் ஒரு கலாச்சாரக் குழுவையும் அமைத்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சனைகள் மீது பாடல்களை எழுதத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் பஞ்சாலைகளில் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையின் கீழ் எண்ணற்ற போராட்டங்கள் நடந்து வந்தன. அண்ணா பாவு, போராட்டம் நடந்துவந்த ஆலைகளின் வாயில்கள் முன்பு, போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பாடல்களைப் பாடத் தொடங்கினார்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்
அண்ணா பாவு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் ஓர் உறுப்பினரானார். ரஷ்யப் புரட்சியின்மூலம் கிடைத்த உத்வேகத்திலிருந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டது. இதில் அந்தக்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற இலக்கியக்கர்த்தாக்களாக விளங்கிய பிரேம்சந்த், சஜ்ஜத் ஜாஹிர், ஃபைஸ் அகமது ஃபைஸ், கிர்ஷன் சந்தர், இஸ்மத் சக்தாய், மாண்டோ, மஸ்தூம் மொஜுதீன், ராஜேந்தர் சிங் பேடி, ராகுல் சாங்கிருத்தியாயன், முல்க் ராஜ் ஆன்ந்த், கைஃபி அஸ்மி, சர்தார் அலி ஜஃப்ரி, மஸ்ரூ சுல்தான்புரி முதலானவர்களும் உறுப்பினர்களாக இருந்தார்கள்.
ரஷ்ய மற்றும் இந்திய எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் சில, மராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டன. அநேகமாக அவை அனைத்தையும் அண்ணா பாவு படித்திருந்தார். இந்த வழியில் அவர் சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் எழுதுவதிலும் ருசி கண்டு, இவை அனைத்திலும் தன் திறமையை வளர்த்துக்கொண்டார். சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் ஒடுக்குமுறைக்கு எதிராக நடந்துவந்த போராட்டங்கள் அண்ணா பாவுவிடம் மிகப்பெரிய அளவில் செல்வாக்கை செலுத்தின.
அந்தக் காலகட்டத்தில் ஸ்பெயினில் பாசிசம் தலைதூக்கியது. அதற்கு எதிரான போராட்டமும் நடந்துகொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சிப்போக்குகள் அண்ணா பாவுவிடம் பெரிய அளவில் செல்வாக்கை ஏற்படுத்தி இருந்தன. இந்தப் போராட்டம் குறித்து வந்த அறிக்கைகளைப் படித்து, 1939இல் ‘ஸ்பெயின் நடப்பது என்ன’ என்பது குறித்து நாட்டுப்புறப் பாடல் வடிவத்தில் பாடல்களை இயற்றினார். இதனை ஆலைத் தொழிலாளர்கள் மத்தியில் கொண்டுசென்றபோது அவர்கள் அதனை வெகுவாகப் பாராட்டினார்கள். இவ்வாறு அண்ணா பாவு ஒரு கவிஞராக மாறினார்.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற கால கட்டத்தில், சோவியத் ரஷ்யா மற்றும் ஜெர்மனிக்கு இடையேயான போருக்குப்பின்னர், பாசிசம் முறியடிக்கப்பட்டது. அண்ணா பாவு “ஸ்டாலின்கிராட் நாட்டுப்புறப்பாடல்கள்” என்ற தலைப்பில் பாடல்களை உருவாக்கினார். கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டங்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளின்போது அண்ணா பாவுவின் நிகழ்ச்சிகள் நடைபெற்றதன் மூலம் அண்ணா பாவு பம்பாயிலும், தொழிலாளர்கள் மத்தியிலும் புகழ்மிக்க கவிஞரானார். பின்னர் ரஷ்யப் புரட்சி தொடர்பாக அவர் எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டு, ‘ஸ்டாலின்கிராடில் நடப்பது என்ன’ என்ற தலைப்பில் சிறுபிரசுரம் வெளியிடப்பட்டது.
1938இலிருந்து 43 வரையிலும் பம்பாயில் பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள் எண்ணற்றவை நடைபெற்றன. பஞ்சாலைகளின் முன்பு அண்ணா பாவுவம் அவருடைய குழுவினரும் எண்ணற்ற கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தினர். இவற்றின் மூலமாக தொழிலாளர்கள் மத்தியில் கலாச்சார விழிப்புணர்வை அவர்கள் உருவாக்கினார்கள்.
கூட்டு கலாச்சாரக் குழு
1943இல் பம்பாயில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ஒரு கூட்டு கலாச்சாரக் குழு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. சோளாபூரில்ருந்து அமர் ஷேக், புனேயிலிருந்து தத்தரேயா குவான்கர் ஆகியோர் பம்பாய்க்கு வரவழைக்கப்பட்டார்கள். அண்ணா பாவுவுடன் இணைந்து இவர்களிருவரும் மற்றும் பல கலைஞர்களுடன் “லால் பாவ்டா கலா பதக்” (“Lal Bawta Kala Pathak”) என்னும் ஒரு கலாச்சாரக் குழுவை, அமைத்தார்கள். அண்ணா பாவு தலித் பிரச்சனைகள் மீது பாடல்களை, நாட்டுப்புறப் பாடல்கள் வடிவத்திலும், லாவணி இசை வடிவத்திலும் இயற்றினார். அமர் ஷேக்கின் இனிமையான குரல் வளத்தாலும், தத்தரேயாவின் பாடல்கள் மூலமாகவும் ‘லால் பாவ்டா கலா பதக்’ பம்பாயில், குறிப்பாக தொழிலாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற குழுக்களில் ஒன்றாக மாறியது.
விவசாயிகளின் இதயங்களைத் தொட்ட பாடல்கள் 1945 ஜனவரியில் தானே மாவட்டத்தில் தித்வாலா என்னுமிடத்தில் விவசாய சங்கத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுச் செய்தியை மக்களிடம் எடுத்துச்செல்லும் பொறுப்பு, ‘லால் பாவ்டா கலா பதக்’ குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. விவசாயிகளின் அவல நிலைமைகளை விளக்கி எண்ணற்ற பாடல்கள் இயற்றப்பட்டன. அவற்றை மாநாட்டிற்கு வந்திருந்த அனைவராலும் பாடப்படக்கூடிய அளவிற்கு மிகவும் புகழ்பெற்றன. விவசாயிகளின் அவலங்கள் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கி அண்ணா பாவு. ‘அக்லேசி கோஷ்ட்’ (‘Aklechi Gosht’) என்ற பெயரில் ஒரு நாடகத்தை இயற்றினார். இந்த நாடகம் பின்னர் மகாராஷ்ட்ராவில் பல முனைகளில் அரங்கேறின. இது மிகவும் புகழ்பெற்ற நாடகமாக மாறியது.
1946இல் வங்கத்தில் பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில், அண்ணா பாவு, வங்க மக்கள் நிலைமைகள் மீது, நாட்டுப்புறப் பாடல்களை இயற்றினார். இதற்கு வங்க மக்களின் குரல் என்று தலைப்பிட்டார். இது அரங்கேற்றம் செய்யப்பட்டபோது பல லட்சம் ரூபாய்கள் வசூல் செய்யப்பட்டு வங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இந்தப் பாடல்கள், இந்திய மக்கள் தியேட்டர் சங்கத்தால் (IPTA) வங்கத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்டது. ஐபிடிஏ-யால் லண்டனில் உள்ள ராயல் தியேட்டரிலும் இது அரங்கேறியது. அங்கே பாலட் நடன வடிவத்தில் இது நடத்தப்பட்டது.
அண்ணா பாவு நிறைய எழுதியிருக்கிறார். சில நாட்டுப்புறப் பாடல்கள் வடிவத்தில் அமைந்திருக்கும். இவற்றின்மூலம் அவர் பம்பாய் ஆலைத் தொழிலாளர்கள் பிரச்சனை, போனசுக்கான போராட்டம், கந்து வட்டிக்காரர்களின் தேர்தல், சட்டவிரோத நடவடிக்கைகள் முதலானவற்றை குறித்தும் எழுதியிருக்கிறார்.
அளப்பரிய பங்களிப்புகள்
அண்ணா பாவு, உலகை மாற்றுவோம் என்று ஒரு பாடல் தொகுப்பு அளித்திருக்கிறார். அவர் அம்பேத்கரிடம், சாதி அமைப்புமுறையைத் தாக்குவதற்கு, போராட்டங்களைக் கட்டி எழுப்புங்கள் என்று கேட்பது போன்று ஒரு கட்டுரை எழுதினார். இதுபோல் பல முக்கியமான பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். இதேபோன்று, அண்ணா பாவு உழைக்கும் மக்களின் பிரச்சனைகள் குறித்தும், தலித்துகளின் பிரச்சனைகள் குறித்தும் விரிவான அளவில் எழுதியிருக்கிறார். அவருடைய நாவல்களில் ஒன்று, ‘ஃபகிரா’(‘Fakira’) என்பதாகும். இதன் பிரதான கதாபாத்திரங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடுகிறார்கள். பின்னர் இந்த நாவல் ‘சித்ரா’ என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது. பம்பாய் கப்பல்படை எழுச்சி குறித்து மற்றுமொரு நாவலை அண்ணா பாவு எழுதியிருக்கிறார். இது ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
அண்ணா பாவு சாத்தே ஓர் அர்ப்பணிப்புமிக்க கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்தார். அவருடைய எழுத்துக்களுக்காகவும், நடவடிக்கைகளுக்காகவும் அவர் பலதடவை காவல்துறையினரின் கடுங்கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சிறையிலும் அடைக்கப்பட்டார். பல இடங்களில் அவருடைய நாடகங்கள் காவல்துறையினரால் நடத்தவிடாது தடுத்த நிறுத்தப்பட்டன. அவர் கம்யூனிஸ்ட் இதழ்கள் பலவற்றில் தொடர்ந்து எழுதி வந்தார். 1949இல் இந்திய மக்கள் தியேட்டர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
-சுபோத் மூர், People’s Democracy, தமிழில்: ச.வீரமணி.