வந்தே மாதரம் 150 : மோடி கொண்டாடுவது ஏன்…?

பேராசிரியர்  அருணன்

வந்தே மாதரம் பாடலின் 150 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை மோடி அரசும்,
பாஜக மாநில அரசுகளும் விமரிசையாகத் துவங்கியுள்ளன நவம்பர் 7இல்.
ஓராண்டுக்கு இது நீடிக்கும் என்கின்றன. டில்லியில் நடந்த விழாவில்
கொண்டாட்டத்தை துவக்கி வைக்கும் முகத்தான் நினைவு தபால்தலை
மற்றும் சிறப்பு நாணயத்தை வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி. அவ்வமயம்
“வந்தே மாதரம் நமது மகா மந்திரம்” என்று முழங்கியுள்ளார்!

வந்தே மாதரம் பாடல் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சுதந்திரப்
போராட்டத்தில் ஒரு முக்கிய பங்கை வகித்தது உண்மை. அது உருவாக்கும்
எழுச்சியைக் கண்டு பாடலைத் தடை செய்தனர் ஏகாதிபத்தியவாதிகள்.
அதனாலேயே அதைப் பாடும் உத்வேகம் அதிகரித்தது. மகாகவி பாரதியும்
வந்தே மாதரம் பாடலைப் பாடினார். அவரது பாடல் மூலத்தின் வெறும்
தமிழாக்கம் அல்ல; மாறாக அவரது முற்போக்குச் சிந்தனை தாங்கிய
மற்றொரு மூலம்- நமது கம்பீரத் தமிழில்!

“வந்தே மாதரம் என்போம்- எங்கள்/ மாநிலத் தாயை வணங்குதும் என்போம்/
ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்/ ஜன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்/
வேதியராயினும் ஒன்றே- அன்றி/ வேறு குலத்தவராயினும் ஒன்றே” என்றார்.

முதல் வரிதான் மூலப் பாடல்; பிறகு எல்லாம் பாரதியின் அழகுக் கைவண்ணம்.
அதிலும் வெள்ளையர் ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் ஒற்றுமையே ஆயுதம்
என்று கண்டு சொன்னார். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே- நம்மில்/ ஒற்றுமை
நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே/ நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த/
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?” என்று அறிவறுத்தினர். வந்தே மாதரம் பாடலை சுதந்திர உணர்ச்சியை மட்டுமல்லாது, அதை அடைவதற்கான
மார்க்கத்தையும் கொண்டதாகப் படைத்தார் நமது மகாகவி.

இன்று வந்தே மாதரம் பாடலைக் கொண்டாடும் ஆர்எஸ்எஸ் பரிவாரத்திற்கு
சுதந்திர உணர்வும் இருந்தது இல்லை, ஒற்றுமை மார்க்கமும் பிடிபட்டது
இல்லை. ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவே பாஜக என்பது உலகறிந்த
ரகசியம். 1925இல் துவங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு காங்கிரஸ் நடத்திய
சுதந்திரப் போராட்டங்களில் பங்கு கொண்டதும் இல்லை, சுயேச்சையான
போராட்டங்களை நடத்தியதும் இல்லை. அதனது அதிகாரபூர்வ வலைத்தளமாகிய
rss.org யின் Vision and Mission பகுதி அதன் பிறப்பு, வளர்ப்பு வரலாறைச் சொல்கிறது.
அதில் அது சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்கு கொணடதாகவோ அல்லது
அதற்கானத் தனது சொந்த இயக்கத்தை நடத்தியதாகவோ கூறவில்லை.

மாறாக, காங்கிரஸ் நடத்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்து-முஸ்லிம்
ஒற்றுமை வலுப்படுவதே அதன் பெருங் கவலையாக இருந்தது. அதை இந்த
வார்த்தைகளில் சுட்டியது : “முஸ்லிம்களைத் தாஜா செய்யும் காங்கிரஸ்
தலைவர்களின் கொள்கை வியாதியின் ஓர் அடையாளம்… இதை முன்கூட்டியே
உணர்ந்திருந்தார் டாக்டர் ஹெட்கேவர். பல்லாண்டு சிந்தனைக்குப் பின் அவர்
வந்த முடிவு : அனைத்து துறை வளர்ச்சிக்கு மட்டுமல்லாது பாரதம் ஓர்
இறையாண்மை மிக்க நாடாக இருப்பதற்கும் தேவை வலுவான மற்றும்
ஒற்றுபட்ட ஹிந்து சமுதாயம் மட்டுமே… எழுந்திருந்த இந்த சவாலுக்கான
அவரது எதிர்வினையே1925இல் ஆர்எஸ்எஸ்சை துவக்கியது”.

வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்தில் அதை
விரட்டுவதற்காக அல்லாது முஸ்லிம்களை இரண்டாந்தரக் குடிமக்கள்
ஆக்குவதற்காக இந்து சமுதாயத்தை மட்டும் திரட்டும் எண்ணத்திலே
ஆர்எஸ்எஸ்சை உருவாக்கினார். அதனால்தான் 1925-47 காலத்தில்
இவர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடவில்லை. மாறாகத் தங்களுக்கென
வேறுவொரு பாடலை தயாரித்துக் கொண்டனர் 1939இல். அது :
“இந்துக்களின் பூமியே! இந்துராஷ்டிரத்தின் அங்கங்களாகிய நாங்கள்
உன்னை வணங்குகிறோம்! எமது தர்மத்தைக் காத்து தேசத்தை உன்னத
நிலைக்கு உயர்த்துவோம்!” (நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமி / திவ்ய
ஹிந்துபூமி சுகம் வர்திதோஹம்- rssworldwide.com)

இந்தியாவை அனைத்து இந்தியர்களுக்கான பூமியாகக் கருதாமல்
இந்துக்களுக்கானதாக மட்டும் கருதுவதில் மதத்தின் அடிப்படையில்
தேசத்தை வகுக்கும் பிளவுவாதம் பச்சையாகத் தெரிந்தது. “எமது தர்மம்”
என்கிறார்களே அது என்ன? சந்தேகம் வேண்டாம் மனு அதர்மமே. அதன்
நோக்கம் ஆகப்பெரும்பாலான இந்துக்களையும், அனைத்துப்
பெண்களையும் வருணாசிரம அடிப்படையில் தாழ்ந்த நிலையில்
வைப்பது. இன்றைக்கும் அவர்களது நிலை இதுதான். ஆர்எஸ்எஸ் எனும் தாய் அமைப்பில் இப்போதும் பெண்கள் உறுப்பினர்களாக முடியாது!

பிறகு ஏன் இப்போது வந்தே மாதரம் பாடலைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்
என்றால் சுதந்திரப் போராட்ட காலத்திய வந்தே மாதரம் வேறு, இவர்கள்
துதிக்க ஆரம்பித்திருக்கும் வந்தே மாதரம் வேறு. இதை உணர அந்தப்
பாடலின் தன்மை மற்றும் வரலாறை நாம் சற்றே புரட்டிப் பார்க்க வேண்டும்.

இதை வங்காளத்தின் பங்கிம் சந்திர சட்டர்ஜி 1875இல் எழுதினார் எனப்
படுகிறது. ஆனால் முழுப்பாடலும் 1882இல் அவர் எழுதிய “ஆனந்த மடம்”
நாவலில்தான் வெளிவந்தது. அதன் முதல் இரு சரணங்கள் இயற்கை
எழிலைச் சுட்டிக்காட்டி அந்தத் தாயை வணங்குவதாகப் பொதுவாக
இருந்தது. ஆனால் மற்றவை “அன்னை துர்க்கை நீயே / செங்கமல மலர்
இதழ்களில் உறையும் செல்வத் திருமகள் நீயே / கல்வித் திறம் அருள்
கலைமகளும் நீயே / தாயே வணங்குகிறோம்” என்றன.

1937இல் பல மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அங்கே சட்ட
சபைகளில் இந்தப் பாடலை உறுப்பினர்கள் பாட வேண்டும் என்று காங்கிரஸ்
கூறியபோது முஸ்லிம் உறுப்பினர்கள் இயல்பாகவே எதிர்த்தனர். இந்து
தெய்வங்களாக நாட்டை உருவகிப்பதை அவர்கள் எப்படி ஏற்று வணங்குவர்?
இஸ்லாம் ஏக இறைவனைக் கொண்டது மட்டுமல்லாது, அந்த இறைவனுக்கு
இணை வைக்கக் கூடாது என்று உருவ வழிபாட்டையும் மறுப்பது. அந்த
மதத்தவரை நாட்டை வணங்குதல் என்ற பெயரில் கடவுள் உருவங்களை
வணங்கச் சொல்வது என்ன நியாயம்?

சென்னை மாகாண சட்டசபையிலும் எதிர்ப்பு கிளம்பியது. இது பற்றி 1939இல்
தந்தை பெரியார் பேசியது குறிக்கத்தக்கது. அது: “காங்கிரஸ் பதவிக்கு
வந்தவுடன் எதற்காக வந்தே மாதரப் பாட்டைப் பாட வேண்டும்? ஒரு
மதஸ்தர்களின் மனத்தைப் புண்படுத்தச் செய்யும் என்று தோழர்கள்
வால்கானும் அமீர்கானும் ஆட்சேபித்தால் அவர்களை வெளியே போகும்படி
சொன்னது எவ்வளவு ஆணவமான செயல் என்பதைப் பாருங்கள்.
வங்காளத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்ட
‘ஆனந்த மடம்’ என்ற புத்தகத்தில் முஸ்லிம்களை எவ்வளவு இழிவாகவும்
கேவலமாகவும் எழுதி இருக்கிறார் என்பதைப் பாருங்கள். (அந்தப் பகுதிகளை
நினைவுபடுத்தினார்)”

இப்படி பல மாகாணங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததும் வந்தே மாதரத்தைப்
பிரபலப்படுத்திய கவி தாகூரின் கருத்தை காங்கிரஸ் நாடியது. இது பற்றி
dailypioneer.com (13-8-2015) தரும் விபரம்: “சர்ச்சை குறித்து தனது நிலைபாட்டை
விளக்கி தாகூர் சுபாஷ் சந்திரபோசுக்கு ஒரு கடிதம் எழுதினார். சந்தேகத்திற்கு
இடமின்றி இந்து தெய்வமான துர்காவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பாடலான
வந்தே மாதரத்திற்கு முஸ்லிம்கள் ஆட்சேபணை தெரிவித்தது நியாயமானது
என்று அவர் குறிப்பிட்டார். பாடல் ஆனந்தமடத்தின் கருப்பொருளுடன்
முழுமையாக ஒத்துப்போனது. ஆனால் அது ஒருபோதும் இந்திய சட்டசபையின்
தேசியப் பாடலாக இருக்க முடியாது என்று அவர் கருத்து தெரிவித்தார். 1937
அக்டோபரில் கல்கத்தாவில் நடக்கவிருந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு
சில நாட்களுக்கு முன்பு தாகூர் நேருவுக்கு அனுப்பிய அறிக்கையில் தனது
கருத்தை தெளிவுபடுத்தியிருந்தார். ‘முதல் இரண்டு சரணங்கள் மீதம்
உள்ளவற்றிலிருந்து சுயாதீனமாக நிற்க முடியும். இது எந்த மதத்தையும் அல்லது
சமூகத்தையும் காயப்படுத்த முடியாத உத்வேகக் கூறுகளைக் கொண்டுள்ளது’
என்று அதில் எழுதியிருந்தார். காங்கிரஸ் செயற்குழுவின் தீர்மானம் தாகூரின்
கருத்தை எதிரொலித்தது”. அதைத் தொடர்ந்து முதல் இரண்டு சரணங்களை
மட்டும் காங்கிரசார் பாடி வந்தனர்.

இதுதான் வரலாறு. இதையெல்லாம் சொல்லாமல் வந்தே மாதரம் முழுப்பாடலை
ஏற்காததற்கு காங்கிரசின் “பிளவுவாத மனோநிலை” காரணம் என்று பழி சுமத்தி
விழாவில் ஆக்ரோஷமாகப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. மதப்
பிளவுவாதத்தையே ஒவ்வொரு விஷயத்திலும் கடைப்பிடிக்கும் இவர் மக்கள்
ஒற்றுமைக்காகக் காங்கிரஸ் எடுத்த நியாயமான நிலைபாட்டை “பிளவுவாதம்”
என்கிறார்! யார் எதைப் பற்றிப் பேசுவது என்று விவஸ்தை இல்லாமல் போனது!

இவர் பேசுகிற வேகத்தைக் கேட்டால் அரசியல் சாசனம் ஏற்றுள்ள நமது தேசிய
கீதமாகிய “ஜன கண மன”த்தை தூக்கிவிட்டு அதன் இடத்தில் முழு வந்தேமாதரம்
பாடலை வைப்பார் போலும். அதன் மூலம் இந்துக்கள் அல்லாதவரும் இந்துக்
கடவுள்களை வணங்க வேண்டும் எனச் செய்வார் போலும். தேசத்தை தேசிய
கீதத்தாலும் பிளப்பது என்பது கர்ணகடூரமான விஷயம். ஆனால் ஆர்எஸ்எஸ்
பரிவாரத்திற்கு அதை விட்டால் வேறு எதுவும் தெரியாது. வந்தே மாதரம் பற்றிய
ஓராண்டு கொண்டாட்டத்தின் ஊடேயோ, பிறகோ இது விஷயத்தில் இந்த ஆட்சி
ஏதேனும் குழப்படி வேலை செய்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

ஜன கண மன பாடலுக்குப் பதிலாக வந்தே மாதரம் பாட வேண்டும் எனும்
ஆலோசனையை 2016இல் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் பய்யாஜி
ஜோஷி முன்வைத்தார். அதற்கு அன்று கடும் எதிர்ப்பு வந்ததும் அவர்
அப்படிக் கூறவில்லை என்று சமாளித்தார் அதன் தலைவர் மோகன் பகவத்.
அதேநேரத்தில் அதன் பிரச்சார செயலாளர் எம்.ஜி.வைத்யா ஜன கண மன
பாடலுக்கு இணையாக வந்தே மாதரத்தை மதிக்க வேண்டும் என்றார்.
இன்று அதன் 150 ஆண்டு விழாவை சங் பரிவாரம் தீவிரமாய்க்
கொண்டாடுவதன் நோக்கம் அந்த இலக்கை நோக்கி நகருவது எனலாம்.

மோடிக்கும் இத்தகைய முன்மொழிவுகள் மிக வசதியானவை. மக்களின்
மெய்யான பிரச்சனைகளிலிருந்து அவர்களது கவனத்தை திசைதிருப்பி
தனது ஆட்சியின் படுதோல்விகளை மறைத்துக் கொள்ளலாம்.
போதாக்குறைக்கு தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி திடுக்கிடும்
ஆதாரங்கள் வெளிவருகின்றன. அப்புறம் மேற்கு வங்கம், தமிழ்நாடு,
கேரளாவில் தேர்தல் வருகிறது. இந்த வேளையில் வந்தே மாதரம் என்று
மக்களை உணர்ச்சிவயமாக்குவது இவருக்கு அவசர அவசியத் தேவை.
பலியாகப் போவது என்னவோ மக்களின் ஒற்றுமை, நாட்டின் எதிர்காலம்!

Leave a Reply