வழிகாட்டும் தியாகச் சுடர் கீழ வெண்மணி – கே.பாலகிருஷ்ணன்

விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர் எழுச்சியின் வீரமிகு வரலாறு
maxist 2இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டை எழுச்சியுடன் கொண்டாடி வருகிற இந்த தருணத்தில், கீழத் தஞ்சை பூமியில் பேரெழுச்சியுடன் எழுந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டங்களின் உச்சகட்ட ரத்த சாட்சியமான கீழ்வெண்மணி தியாகிகளின் மாபெரும் வரலாறு நமக்கு மேலும் மேலும் உத்வேகத்தை அளிக்கக் கூடியதாக வழிகாட்டுகிறது.
இந்திய வரலாற்றில் அழியாப் புகழ் பெற்ற ஏராளமான சதி வழக்குகள் பற்றி நாம் அறிவோம். பெஷாவர் சதி வழக்கு,சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு ஆகிய கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான சதி வழக்குகள் துவங்கி சென்னை சதி வழக்கு, மதுரை சதி வழக்கு, நெல்லை சதி வழக்கு உட்பட கம்யூனிஸ்டுகளை குறி வைத்து, விடுதலைப் போராட்டக் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாலும், அதற்குப் பின்னரும் புனையப்பட்ட வழக்குகள் ஏராளம், ஏராளம்.
நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பேரெழுச்சிக்கு வித்திட்ட கம்யூனிஸ்டுகளின் மகத்தான போராட்ட வரலாற்றைப் பறைசாற்றுவதாக இந்த சதி வழக்குகள், சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
கீழத்தஞ்சை மண்ணில் மூன்று சதி வழக்குகள்
அத்தகைய மகத்தான சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிற மூன்று முக்கியமான சதி வழக்குகள் கீழத்தஞ்சை மண்ணின் மிகப் பிரம்மாண்டமான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் எழுச்சியை என்றென்றும் பறைசாற்றி நிற்கின்றன.
நாணலூர் சதி வழக்கு, நெடும்பலம் சதி வழக்கு, சிறுக்கை சதி வழக்கு ஆகிய அந்த மூன்று சதி வழக்குகளின் தொடர்ச்சியாக கீழத்தஞ்சை பூமியில் பேரெழுச்சியுடன் எழுந்தது விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்களின் மகத்தான போராட்ட வரலாறு.
முந்தைய சதி வழக்குகள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் புனையப்பட்டவை என்றால், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கம்யூனிஸ்டுகள் மீது புனையப்பட்ட சதி வழக்குகள் அநேகமாக கீழத்தஞ்சை மாவட்டத்தில் புனையப்பட்ட மேற்கண்ட மூன்று சதி வழக்குகள்தான் என்று குறிப்பிடலாம்.
கீழத்தஞ்சை பூமியில் 1940களில் துவங்கி, நிலப்பிரபுக்களின் கொடூரமான அடக்குமுறைகளுக்கு எதிராக விவசாயிகள், சிறு விவசாயிகள், குத்தகைதாரர்கள், பண்ணை அடிமைகளாக இருந்த விவசாயத் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருந்தனர். 1947 -இல் நாடு விடுதலை அடைந்த பிறகும் இந்தப் போராட்டம் தொடர்ந்தது.
1948 முதல் 1952 வரை இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. இந்தக் காலத்தில், கீழத்தஞ்சை பூமியில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் மீது கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில்தான் மேற்கண்ட மூன்று சதி வழக்குகள் அரங்கேற்றப்பட்டன.
நாணலூர் சதி வழக்கு
பண்ணையாளர்களை எதிர்த்து, கூலி உயர்வு கேட்டும், குத்தகைதாரர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் நிலவெளியேற்றத்தை எதிர்த்தும் விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர்களின் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. திருத்துறைப்பூண்டி வட்டம் குன்னியூரில் விக்கிரபாண்டியம் எனும் கிராமத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தினர். அங்கு, வெளியூரிலிருந்து அடியாட்களை இறக்கி, விவசாயத் தொழிலாளர்களுக்கு பதிலாக அவர்களை நிலத்தில் வேலை செய்ய வைத்தனர். இதை எதிர்த்து உள்ளூர் விவசாயத் தொழிலாளர்களை திரட்டி நடைபெற்ற போராட்டத்தின் போது, வெளியூரிலிருந்து வந்த அடியாட்களில் இரண்டு பேர் பலியாகும் நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவத்தையொட்டித்தான், விவசாயத் தொழிலாளர்களின் துடிப்பு மிக்க தலைவரான களப்பால் குப்பு மீது வழக்கு புனையப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு, சிறையிலேயே விஷம் வைத்து படுகொலை செய்யப்பட்டார். களப்பால் குப்பு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நிலப்பிரபுக்களும் பண்ணையாளர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். ‘குப்பு செத்தான்; செங்கொடி வீழ்ந்தது’ என்று பூரிப்படைந்தனர். ஊர் முழுவதும் பட்டாசு கொளுத்தி கொண்டாடினார்கள்.
களப்பால் கிராமத்திலேயே அன்றைக்கு இருந்த பெரிய பண்ணையார்கள், குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த டி.கே. சீனிவாச ஐயர், வேதாரண்யம் வேதரத்தினம் பிள்ளை போன்றவர்கள் எல்லாம் கூட்டம் போட்டு, இனிமேல் கம்யூனிஸ்ட் கட்சியில் யாரும் சேரக் கூடாது என்று, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் விதமாக பேசினார்கள்.
அந்தக் கூட்டத்தை முடித்துவிட்டு, திரும்புகிற போது நாணலூர் என்ற இடத்தில் அவர்களது காரை விவசாயத் தொழிலாளர்கள் மறித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி ஒழிந்து விட்டது என்று எப்படிப் பேசலாம் என்று பண்ணையார்களிடம் சீறிய விவசாயத் தொழிலாளர்கள், காரை நகர விடாமல் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, காவல்துறை வருகிறது. மறியலில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளுகிறது. அந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டாவதாக களப்பலியாகிறார் நாணலூர் நடேசன்.
விவசாயத் தொழிலாளர்களை கடுமையான முறையில் தாக்குகிறது காவல்துறை. இது உள்ளூர் காவல்துறை அல்ல; மலபார் போலீஸ். விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்கள் எழுச்சியை ஒடுக்குவதற்காகவே கொடூரமான அடக்குமுறையை ஏவும் நோக்கத்துடன் மலபார் போலீசை கீழத்தஞ்சையின் பல பகுதிகளில் இறக்கி இருந்தது அரசு. இதையொட்டி, பதிவு செய்யப்பட்ட வழக்குதான் நாணலூர் சதி வழக்கு.
இதன் அடிப்படை அம்சம் என்னவென்றால், விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்கள், பெரும் நிலப்பிரபுக்களிடமும் பண்ணையார்களிடமும் கூலி உயர்வு கேட்டு, குத்தகைதாரர்களின் நில வெளியேற்றத்தை எதிர்த்து, குரல் எழுப்பினாலே- போராட்டம் நடத்தினாலே , அது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் என்று அரசு கருதியது. இந்த அடிப்படையில்தான் நாணலூர் சதி வழக்கு போடப்பட்டது. ஏ.நடராஜன் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நாணலூர் சதி வழக்கில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர். மூன்றாண்டு காலம் திருச்சி சிறையில் விசாரணைக் கைதிகளாகவே அடைத்து வைத்த கொடுமையும் அரங்கேற்றப்பட்டது.
இந்த வழக்கிற்கு பின்னர் நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்களுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் மகத்தான தியாகிகளான கோட்டூர் ராஜூ, வாட்டாக்குடி இரணியன், ஜாம்பானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகியோர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவங்களும் நடந்தன.
நெடும்பலம் சதி வழக்கு
திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கிராமம் செருகளத்தூர். அங்கு, விவசாயத் தொழிலாளர்களும் சிறு விவசாயிகளும் கரம் கோர்த்து, செங்கொடியை ஏந்தி பிரம்மாண்டமான போராட்டங்களை நடத்தினார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஒரே வர்க்கமாக அணிதிரண்டு, இந்தப் போராட்டத்தை நடத்தினார்கள். இங்கும் பண்ணையார்கள் சதித் திட்டம் தீட்டுகிறார்கள். போராட்டத்தை எப்படி உடைப்பது என சூழ்ச்சி செய்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்களின் குடியிருப்பான காலனிப் பகுதிக்கு அடியாட்களை ஏவி, அவர்களது குடிசைகளையெல்லாம் சூறையாடியும் தீயிட்டுக் கொளுத்தியும் வெறியாட்டம் போடுகின்றனர்.
அதுமட்டுமல்ல, குடிசைகளையெல்லாம் பிய்த்து எறிந்து, அந்த நிலத்தை அவர்களே உழுது வாழைக்கன்றுகளையும் நடுகிறார்கள். இதை எதிர்த்து, விவசாயத் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஆவேசம் கொள்கிறார்கள். போராட்டம் இன்னும் எழுச்சி பெறுகிறது. அதில் ஒரு பகுதியினர், பண்ணையார்களின் வீடுகளை அடித்து நொறுக்குகிறார்கள். பலரது வீடுகளை தகர்த்து தரைமட்டமாக்குகிறார்கள். போலீஸ் வருகிறது. தடியடி, தாக்குதல், சூறையாடல், வெறியாட்டம் என பண்ணையார்களுக்கு ஆதரவாக போலீஸ் தாண்டவம் ஆடுகிறது. இதையொட்டி புனையப்பட்டதுதான் நெடும்பலம் சதி வழக்கு. இதில்தான் சிவராமன் உட்பட 150 மீது வழக்கு போடப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள்.
சிறுக்கை சதிவழக்கு
இதேபோல, மயிலாடுதுறைக்கு அருகில் குத்தாலம் ஒன்றியத்தில் உள்ள காஞ்சிவாய் என்ற கிராமம். அங்கு, குத்தகை விவசாயிகளின் போராட்டம் வீறுகொண்டு எழுகிறது. கூலி விவசாயிகளும் இணைந்து கொள்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்களும் கரம் கோர்க்கிறார்கள். இவர்களுக்கும் போலீசுக்கும் மோதலாகிறது. ஏராளமான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்து போலீஸ் வெறியாட்டம் போடுகிறது. நர வேட்டையாடுகிறது. ஆண்கள்-பெண்கள் அத்தனை பேரையும் கைது செய்கிறது. இதுதான் சறுக்கை சதி வழக்கு என்ற மூன்றாவது சதி வழக்கு. இதில்தான் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கோ.பாரதிமோகன், கே.ஆர்.ஞானசம்பந்தம், காஞ்சிவாய் நல்லக்கண்ணு, சம்பா ராமசாமி ஆகியோர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.
இந்த மூன்று சதி வழக்குகளும் இந்திய விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்கள் எழுச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று சொல்லலாம். வங்கத்தில் தேபாகா எழுச்சி, மகாராஷ்டிராவில் வொர்லி பழங்குடியினர் எழுச்சி, கேரளத்தின் புன்னப்புரா வயலார், தெலுங்கானா ஆகிய மகத்தான போராட்ட வரலாறுகளின் வரிசையில் கீழத்தஞ்சை விவசாயிகள் எழுச்சியும் இடம்பெறுகிறது என்றபோதிலும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டத்தின் காரணமாக, அவர்கள் மீது அடுத்தடுத்து மூன்று சதி வழக்குகள் புனையப்பட்டது என்பது அநேகமாக கீழத்தஞ்சையில் மட்டும்தான் என்று சொல்லலாம்.
1952 தேர்தல்
இத்தகைய பேரெழுச்சியும் அடக்குமுறையும் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே அரங்கேறுகின்றன. அடக்குமுறைகளால் விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்கள் எழுச்சி வீழ்ந்து விடவில்லை. மாறாக, இன்னும் வீறுகொண்டு எழுந்தது. அந்த எழுச்சியின் விளைவாக, இந்தப் போராட்டங்களின் தள கர்த்தர்களாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், 1952 தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றனர்.
கீழத்தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 19 சட்டமன்ற தொகுதிகள் அவற்றில் 6 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களும் நான்கு தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டு, 10 வேட்பாளர்களுமே மாபெரும் வெற்றி பெற்றனர்.
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில், முன்னாள் ரயில்வே அமைச்சராக இருந்த சந்தானத்தை எதிர்த்து, கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவரும் ரயில்வே தொழிலாளர்களின் உன்னத தலைவருமான கே.அனந்தநம்பியார் போட்டியிட்டு மாபெரும் வெற்றியை ஈட்டினார்.
அமைப்பாய் அணி திரண்டனர்.
இந்த தேர்தலுக்கு முன்னதாகத்தான் கீழத்தஞ்சை வர்க்கப் போராட்ட எழுச்சியின் நாயகன் தோழர் பி.சீனிவாசராவ் இந்த மண்ணுக்கு வந்து சேர்கிறார். அவர் வந்த பிறகு கீழத் தஞ்சை விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அமைப்பு ரீதியாக அணிதிரட்டுவதும், செங்கொடியின் வீரியமிக்க நிலமாக கீழத் தஞ்சை மண் மாறியதும் நடந்தது. தோழர் பி.சீனிவாசராவ் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்வேகமிக்க தலைவர்களும் ஆயிரமாயிரம் விவசாயத் தொழிலாளர் – விவசாயிகளும் கிராமங்கள் தோறும் செங்கொடியை உயர்த்திப் பிடித்தனர்.
மிகத் தெளிவான வர்க்கப் போராட்டம்
இந்த மண்ணில் கோலோச்சிய நிலப்பிரபுக்களும் பண்ணையார்களும் ஒரே சாதியை சார்ந்தவர்கள் அல்ல. அய்யர், அய்யங்கார், பிள்ளை, தீட்சிதர், தேவர், வாண்டையார், நாயுடு என பல்வேறு சாதிகளை சார்ந்தவர்கள். ஆனால் அடிப்படையில் அவர்கள் ‘நிலப்பிரபு’ என்ற ஒரே சாதியாக – ஒரே வர்க்கமாக கரம் கோர்த்திருந்தார்கள். ஈவிரக்கமற்ற சுரண்டலில் ஈடுபட்டார்கள். இதற்கு எதிராக எழுந்த விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்களும் பெரும்பாலானவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்கள். நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் கொடூர சுரண்டலுக்கு எதிராக – விவசாயி, விவசாயத் தொழிலாளி வர்க்கம் என ஒரே வர்க்கமாக ஒன்றுபட்டு செங்கொடி உயர்த்தி களத்தில் நின்றனர்.
மிகத் தெளிவான வர்க்கப் போராட்டமாக தேசத்திற்கே கீழத் தஞ்சை மண் வழிகாட்டியது என்றால் மிகையல்ல. இப்படி நிலப்பிரப்புக்கள், பண்ணையார்களின் அடக்குமுறையையும் கொடிய ராஜ்ஜியத்தையும் எதிர்த்து, வீறுகொண்டு எழுந்த இந்த நீண்ட நெடிய போராட்ட வரலாற்றின் தொடர்ச்சிதான் 1968 டிசம்பர் 25 அன்று கீழ வெண்மணியில், நடந்த நடுக்க வைக்கும் மனிதப் படுகொலையாகும்.
எங்கள் வாழ்வை உயர்த்திய செங்கொடியை எக்காரணம் கொண்டும் கீழிறக்க முடியாது என்று முழக்கமிட்ட காரணத்திற்காகவும் தான், கொடிய பண்ணையார்களால் ராமய்யாவின் குடிசையில் உயிரோடு தீ வைத்து கொளுத்தப்பட்டனர். 3 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரையிலானவர்கள் இந்த 44 தியாக தீபங்களின் ஒளிச்சுடர் என்றென்றும் போராட்ட பெருநெருப்பின் அனல் குண்டமாக விளங்குகிறது.
வெண்மணி நெருப்பை விழிகளில் ஏந்துவோம். அவர்களது கனவை நனவாக்க களமாடுவோம்.

Leave a Reply