இட ஒதுக்கீடு ஏன் எவ்வாறு.? -தோழர் இ.எம்.எஸ்

Emsகாலங்காலமாக சாதியமைப்பு “சூத்திரனுடைய நடவடிக்கைகள், அது தனிப்பட்டதோ, சமூக ரீதியானதோ அல்லது பொருளாதார ரீதியானதோ இப்படி எந்த நடவடிக்கையாயினும் அவற்றின் முக்கிய அம்சங்கள் மீது அவனுடைய தாழ்ந்த சமூக அந்தஸ்து கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தியிருந்ததது. இயல்பாகவே பிராமணர்களுக்கு மிக உயர்ந்த ஸ்தானத்தையும், சூத்திரர்களுக்கு கீழ்மட்ட அந்தஸ்தையும் உறுதிப்படுத்துகின்ற வகையில் பழங்கதைகளும், வேதங்களும் பயன்படுத்தப்பட்டன. தனி மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தின்மீதும் சாதிகள் கட்டுப்பாடு வகித்ததால் சரிசமானமில்லாத சமுதாய அமைப்பு உருவாவதற்கே இது இட்டுச் சென்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் இந்த கீழ்த்தட்டு மக்கள் சமூக ரீதியாக மட்டுமல்லாது, கல்வி அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையிலிருந்தார்கள். மறுபுறத்தில், மற்ற உயர் சாதியினர் மேற்குறிப்பிட்ட அனைத்துத்துறைகளிலும் முன்னேறியிருந்தனர். இந்த சம்பிரதாயபூர்வமான சமுதாய அடுக்கில் எந்தவொரு சாதியும் எத்தகைய – அதாவது உயர்ந்த அல்லது தாழ்ந்த இடத்தை வகித்ததோ அந்த அந்தஸ்துதான் அச்சாதியின் முன்னேற்றத்தையோ அல்லது பின்தங்கிய நிலையினையோ தீர்மானித்தது” (பக்கம் 14.17) என்கிறது மண்டல் கமிஷன் அறிக்கை.

1957-ஆம் ஆண்டு, சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்ற பின்பு, இந்தியாவில் தீண்டாமையை ஒழிப்பதற்கு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து ஆய்வு நடத்தும் நோக்கத்துடன், ஃபுல் பிரைட் ஸ்காலர்ஷிப் பெற்றுக் கொண்டேன். எனக்கு பழகிப்போயிருந்த அமெரிக்க சிவில் உரிமைகள் என்ற கண்ணாடி மூலம் ஆராய்ச்சி நடத்திய எனக்கு, இந்தியாவில் சிவில் உரிமைகளை அமுல்படுத்தும் வகையில் சிலருக்கு அதிகப்படியான சலுகைககள் அளிக்கும் திட்டம் திகைப்பூட்டுவதாக இருந்தது. சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் வேளையிலேயே வரலாற்று ரீதியாக சுரண்டப்பட்ட மக்களுக்கு திட்டமிட்ட சலுகைகள் அரசியல் சாசனத்தின் மூலம் உறுதி செய்ததும் எனக்கு திகைப்பூட்டுவதாக இருந்தது. பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற கொள்கையினை தொடர்ந்து இந்திய நாட்டின் நீண்ட கால விரிந்த அனுபவம் அமெரிக்கக் கொள்கைகளுக்கு ஒரு பாடமாக அமையக்கூடும். (மார் காலாந்தர் எழுதிய “போட்டியிடும் சமத்துவங்கள்” – பக் .17)

வேறு நாடுகளைப்போல் அல்லாமல், அத்தகைய நலிந்தவர்களின் பிரச்சினை முற்பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும் இந்தியாவில் உருவாகியிருக்கிறது. மீண்டும் மண்டல் கமிஷனின் வார்த்தைகளிலேயே கூறுவது என்றால், “பாரம்பரியமான இந்திய சமுதாயத்தில் சமூக ரீதியான பின்தங்கியநிலைமை என்பதே சாதி அந்தஸ்தின் நேரடி
விளைவாகும். மேலும் வேறு பல பின்தங்கிய நிலைமைகளும் இத்தகைய தடைகளிலிருந்துநேரடியாக பிறப்பெடுத்தவையேயாகும். (பக்.17)

மண்டல் கமிஷன் பின்வருமாறு குறிப்பிடுகிறது. “ஒடுக்கப்பட்ட அல்லது உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களுடைய நலன்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை கடந்த சுமார் நூறு ஆண்டுகளாக இந்தியாவிலுள்ள மாநில அரசாங்கங்கள் பல நிறைவேற்றி வந்திருக்கின்றன. இந்த வகையில் முதல் நடவடிக்கை 1885-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் எடுக்கப்பட்டதாகும். ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தமாணவர்களுக்கு கல்வி நிலையங்களில் பிரத்தியேக சலுகைகளை வழங்குவதற்கான நிதி மானிய விதிமுறை ஒன்றை சென்னைமாகாண அரசாங்கம் உருவாக்கியது.

அடுத்தது 1921-ஆம் ஆண்டில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் ஏற்கப்பட்ட தீர்மானம் ஒன்றின் அடிப்படையில், அரசுப் பணிகளில் பிராமணரல்லாதவர்களுக்கு அதிகப்படியான பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கும் சென்னை மாகாண அரசாங்கத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மீண்டும் 1927-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கான எல்லை மேலும் விரிவுபடுத்தப்பட்டது. மாகாணத்திலுள்ள சாதிகள் அனைத்தையும் ஐந்து பரந்தபிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும், இவ்வளவு இடஒதுக்கீடு என்று வரையறைசெய்யப்பட்டது.” (பக்.5)

அரசியல் சட்டம் அரசியல் சட்டத்தில் இரண்டு வகையான இடஒதுக்கீட்டிற்கு வகை செய்யப்பட்டுள்ளது. ஒன்று நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு; இரண்டாவது, தாழ்த்தப்பட்டமற்றும் பழங்குடி மக்கள் தவிர சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவு மக்களுக்கான இட ஒதுக்கீடு. இந்த இரண்டாவது வகை ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான், ஆந்திரபிரதேசம், பீகார், குஜராத், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப் , உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு வகைசெய்யப் பட்டிருக்கிறது. சில மாநிலங்களில் இத்தகைய இட ஒதுக்கீடுகள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இருந்துவருகின்றன.

இருப்பினும் இந்த மாநிலங்களில் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு தவிர) மத்திய அரசாங்கப் பணிகளில் இட ஒதுக்கீடு என்பது கிடையாது. நாடு முழுவதுமுள்ள, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு 27சதவீத இட ஒதுக்கீடு செய்வது என்ற வி.பி.சிங் அரசாங்கத்தின் முடிவு இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பியருக்கிறது. இவ்வாறு இட ஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டதை இயல்பாகவே சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் வரவேற்கிறார்கள்; மாறாக, பல நூற்றாண்டுகளாக அதிகாரத்ததை ஏகபோகமாக அனுபவித்தவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

வேறு வார்த்தைகளால் கூறுவதென்றால் சாதி அமைப்பு முறையின் காரணமாக ஏற்பட்ட அசமத்துவ நிலையினை போக்குவதுதான் விஷயம். பாரபட்சத்திற்கு உள்ளாகியிருந்த பிரிவினர் மட்டுமல்லாது, பல நூற்றாண்டு காலமாக அதிகாரத்தை ஏகபோகமாக அனுபவித்த பிரிவினருக்குள்ளிருக்கும் முற்போக்கு சிந்தனை கொண்டவரும், இதனை ஆதரித்து நிற்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்ட சாதியினர்தான் இரண்டுவகையான ஒடுக்குமுறையினால் பாதிக்கப்பட்டவர்கள். அதாவது அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களையும் சேர்ந்தவர்கள்.

வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால் இட ஒதுக்கீடு முன்னேறியசாதியிலுள்ள ஏழைகளின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்படவில்லை; மாறாக முன்னேறிய சாதியினர் எட்டியிருக்கும் சமூக, பொருளாதார, கலாச்சார மட்டத்தின் அளவிற்கு ஒடுக்கப்பட்ட சாதியினரையும் முன்னேற்றுவதுதான் இடஒதுக்கீட்டின் நோக்கம். மண்டல் குழு அறிக்கை குறிப்பிடுவது யாதெனில் சமூக, கல்வி அடிப்படைக்கான குறியீடுகளுடன், பொருளாதார அடிப்படைக்கான குறியீடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்ற விஷயத்தை அழுத்தமாக எடுத்துச் சொல்வதற்கு இது உதவியது.

காலேல்கர் கமிஷன், மண்டல் கமிஷன் ஆகிய இரண்டுமே, சமூக (சாதி) ஒடுக்குமுறையின் காரணமாக ஏற்பட்ட சமூக மற்றும் கல்விரீதியான பின்தங்கிய நிலைமையை ஒரு தொடக்க நிலையாகக் கொண்டு அத்துடன் பொருளாதாரநிலையையும் இணைத்துப் பார்த்தன. அதன் காரணமாகத்தான், காலேல்கர் கமிஷன் பரந்த அளவில் ஒட்டுமொத்தமான பரிந்துரைகளை வழங்கியது. “தீவிரமான நிலச்சீர்த்திருத்தம், கிராமப் பொருளாதார மறுசீரமைப்பு, பூதான இயக்கம், கால்நடை மற்றும் பால் பண்ணை வளர்ச்சி, கால்நடை இன்சூரன்ஸ், தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கிராமப்புற மற்றும் குடிசைத்தொழில் வளர்ச்சி, கிராம வீட்டு வசதி, பொது சுகாதாரம், கிராமப்புற குடிநீர் விநியோகம், முதியோர் கல்வி, பல்கலைக் கழக கல்வி, அரசாங்கப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பிரதிநிதித்துவம் முதலிய பல்வேறுதுறைகளை உள்ளடக்கிய பரிந்துரைகள் அவை” (மண்டல் அறிக்கை பக்கம் 1)

மண்டல் கமிஷனும் இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை சமூக பொருளாதார கலாச்சார முன்னேற்றத்தின் பிற அம்சங்களுடன் இணைத்தே பரிசீலித்தது. அறிக்கை கூறுகிறது. “பின்தங்கிய நிலைமையின் வேர்கள் வெட்டப்படாதவரை அரசாங்கப்பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு, அதே போன்று முடிந்த அளவிலான நிதி உதவி என்பதெல்லாம் அவ்வப்போது சுகமளிக்கும் மருந்தாகத்தான் இருக்கும். சிறுநில உடமையாளர்கள், குத்தகை விவசாயிகள், விவசாயக் கூலிகள், வறுமையிலாழ்த்தப்பட்ட கிராம கைவினைஞர்கள், தொழில் தேர்ச்சி பெறாத உழைப்பாளிகள் முதலியவர்களில் பெரும் பகுதியினர் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்ட வர்க்கங்களேயாவர்.” ( பக்.60)

“அரசாங்க அதிகாரிகள் பலரும் பெருநிலச்சுவான்தார் குடும்பங்களிலிருந்து செல்கிறவர்கள் என்பதால், அரசு அதிகாரிகளுக்கும் பெரு நிலச்சுவான்தார்களுக்கும் இடையிலான வர்க்க மற்றும் சாதி இணைப்பு உறுதியாக தொடர்கிறது. இந்த இணைப்பு சமூக – அரசியல் பலாபலங்களை பெருநிலைச்சுவான்தார்களுக்கு அனுகூலமாக மாற்றி மற்றவர்கள் மீது அவர்களுக்கிருக்கும் மேலாதிக்கத்திற்கு துணைபுரிகிறது.” (பக்.60)

வர்க்கப் பார்வை தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் என்பது விவசாயப் புரட்சிக்கான அடிப்படைக் கடமைகளுடன் தொடர்புடையது என்றும் அத்தகைய புரட்சியின் மூலம்தான், நிலப்பிரபுக்கள், கந்துவட்டிக்காரர்கள், வியாபாரிகள் மற்றும் கிராமப்புறத்திலுள்ள ஒடுக்குமுறையாளர் அனைவரின் கோரப்பிடியிலிருந்து பெரும்பான்மையான கிராமப்புற மக்களை விடுதலை செய்யமுடியும் என்ற மார்க்சிய வரையறைக்கு மண்டல் அறிக்கையின் நிர்ணயிப்புகள் இசைவானதாக அமைந்துள்ளன.

விவசாயப்புரட்சி வெற்றி பெற வேண்டுமென்றால், முன்னேறிய சாதிகளையும் பிற்படுத்தப்பட்டசாதிகளையும் சேர்ந்த கிராமப்புறம் முழுவதுமுள்ள ஏழை மக்களின் போர்க்குணமிக்க வர்க்க ஒற்றுமை மிகவும் அவசியம். முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த கிராமப்புறநகர்புற ஏழைமக்கள் அனைவரும் தங்களது வர்க்க சகோதர, சகோதரிகளே என்பதையும், நெருக்கமாக அவர்களுடன் இணைந்து நிலச்சீர்த்திருத்தங்கள், அனைவருக்கும் வேலை; அனைவர்க்கும் கல்வி மற்றும் உடனடிக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தில், கிராமப்புறத்தையும் நகரங்களையும் சேர்ந்த சுரண்டல்காரர்களுக்கு எதிராக, போர்க்குணமிக்க ஒற்றுமையை உருவாக்க வேண்டுமென்றும் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்டட சாதிகளைச் சேர்ந்தவர்களை உணரச் செய்தல் வேண்டும்.

ஆகவேதான், இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்காக போராடுவது போலவே, முன்னேறிய சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஒற்றுமைக்களும், இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயகசக்திகள் போராடுகின்றன. தகுதியும் திறமையும் இடஒதுக்கீடு காரணமாக தகுதியும் திறமையும் குறைந்து விடும் என்று வாதிடும்போது, பல நூற்றாண்டுகளாக பெரும்பான்மை மக்கள் சமூகரீதியாகவும் வலாச்சார ரீதியாகவும் பின்தங்கிய நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். (சுதந்திரத்திற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பாகவே இடஒதுக்கீடு அமலில் இருந்து வரும்) தென்மாநிலங்கள் முழுவதிலுமிருந்து இடஒதுக்கீடு அடிப்படையில் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் தகுதி, இடஒதுக்கீடு இல்லாத இந்தியாவின் மற்ற மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்படுவர்களின் தகுதியை விடகுறைவானது என எவரும் கூறிவிடமுடியாது.

இன்னும் சொல்லப் போனால், நாட்டின் மற்ற மாநிலங்களைவிட இடஒதுக்கீடு உள்ள மாநிலங்களின் நிர்வாகம் சிறந்ததாகவும் அதிக திறமையுடனுமிருக்கிறது. இடஒதுக்கீடு அடிப்படையில் இம்மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளும், ஊழியர்களும் நடைமுறைப் பணிகளில் எவரையும் விட இளைத்தவர்கள் அல்லர். தேசிய ஒற்றுமை முன்னேறிய சாதிக்காரர்கள் நடத்திய மண்டல் எதிர்ப்பு போராட்டங்களுக்கு எதிர்ப்பாக பிற்படுத்தப்பட்டவர்கள் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்று சில வட்டாரங்கள் வேண்டுகோள் விடுத்ததை இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இது முன்னேறிய சாதிக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குமிடையில் சாதியுத்தம் நடத்த வேண்டும் என்பதற்காக விடப்பட்ட வேண்டுகோளே தவிர வேறொன்றில்லை. இது கண்டிப்பாக இந்திய மக்களை பிளவுபடுத்தி, சமூக அரசியல் அமைப்பை நிலைகுலையச் செய்யும்.

ஆகவே, தேசிய ஒற்றுமையைக் காப்பதில் அக்கறை கொண்ட அனைவர்க்கும் இந்த யுத்தத்தை தவிர்ப்பது அவசியமாகிறது. முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த நியாய உணர்வு படைத்தவர்களுக்கு மன நிறைவு அளிக்கும் வகையிலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும். ஏனெனில், முன்னேறிய சாதிகளிலிருந்து தான் ஆண்களும் பெண்களும் இட ஒதுக்கீட்டுக்கெதிராக கிளர்ச்சி செய்து வருகின்றனர்.

இடஒதுக்கீட்டை ஏற்கமுடியாது என்ற அவர்களின் வாதத்தை நிராகரிக்கும்போதே, இருக்கும் இடஒதுக்கீடு மாநிலத்திலிருந்து மத்திய அரசுப் பணிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தம் போதே, முன்னேறிய சாதியினரின் நியாயமான அச்சங்களையும் போக்குவதற்கு தேவையான கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். சாதியுடன் இணைந்த பொருளாதார அடிப்படை இடஒதுக்கீட்டிற்கு சாதிதான் முக்கிய அடிப்படை என்றாலும், சாதியுடன் பொருளாதார அடிப்படையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கம்யூனிஸ்டுகளும் மற்ற இடதுசாரிகளும் கூறி வருகின்றனர்.

பீகாரில் இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் கடுமையானபோது, இடஒதுக்கீட்டை ஆதரித்தும், எதிர்த்தும் லட்சக்கணக்கானோர் தெருவில் இறங்கி போராடத்தொடங்கினர். அன்று முதலமைச்சராக இருந்த காலஞ்சென்ற கர்ப்பூரி தாக்கூர் இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என தீவிரமாக சிந்தித்தார். இயல்பாகவே, கேரளத்தில் இத்தகைய போராட்டங்களின் போது கிடைத்த அனுபவத்தையெல்லாம் பரிசீலனை செய்து, அதில் மேலும் சில முன்னேற்றங்கள் செய்தார்.

சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களை பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சாதி அடிப்படையில் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்ற பிற்படுத்தரப்பட்டவர்களுக்கு சாதி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அச்சாதிகளிலுள்ள பணக்காரர்களுக்கு அந்தச்சலுகை கிடையாது என முடிவு செய்யப்பட்டது. இடஒதுக்கீடு மிக அதிகமாக தேவைப்படுகின்ற பகுதியினருக்கு, அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் எனப்படும் ஏழை எளிய மக்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் சென்றடையும் பிற்படுத்தப்பட்டவர்களிலே வசதி படைத்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடஒதுக்கீட்டின் பலன்கள் கிட்டாது.

நீதிபதி சின்னப்பரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் கர்நாடக மாநிலத்திற்கும் இதே போன்றதொரு திட்டத்தை பரிந்துரை செய்தது. வி.பி.சிங் அரசாங்கம் அனைவரின் கருத்தையும் கேட்டறிந்த பின்பு பீகார் பாணியிலேயே, சிறிது முன்னேற்றங்களுடன் ஒரு அடிப்படையை உருவாக்கியிருந்தால், அரசாங்க பணிகளுக்கான வாய்ப்பு போய் விடுமோ என்று அச்சம் கொண்டிருக்கும் உயர்சாதிகளைச் சேர்ந்த நியாய உணர்வு படைத்தவர்களின் இடஒதுக்கீடு எதிர்ப்பினை கூர்மழுங்க செய்திருக்க முடியும். மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமுல்படுத்துவதில் வி.பி.சிங் அரசாங்கம் நடந்து கொண்ட முறை குறித்து கோட்பாடு ரீதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முன்வைக்கும் விமர்சனம் இதுதான்.

இட ஒதுக்கீடு ஏன் எவ்வாறு.?

(1990.களில் தோழர் இ.எம்.எஸ் எழுதிய சிறு பிரசுரத்தின் சுருக்கம்) 2019 பிப்ரவரி மார்க்சிஸ்ட் மாத இதழ்

Leave a Reply