அடிகாசு என்ற போர்வையில் அதிகாரிகள் அராஜகம் புதுச்சேரி முதல்வர் தலையிட சிபிஎம் வலியுறுத்தல்

வாழ்வாதாரம் இழந்துள்ள புதுச்சேரி சாலையோர  வியாபாரிகளிடம் அடிகாசு என்ற போர்வையில் அராஜகம் நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து  கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; பெருந்தொற்றால் இழந்த வாழ்வாதாரத்தை மீட்க சிறு கடை வியாபாரிகள்,கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட முறைச்சாரா தொழிலாளர்கள் அன்றாடம் போராடி வருகிறார்கள். இந்த பின்னணியில் சாலையோர சண்டே மார்க்கெட் வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தனி நபர்களிடம் தினசரி தண்டல், நாள் வட்டி, மாத வட்டி போன்ற வகையில் பணம்  பெற்று சுயமாக குறைந்த லாபத்தில் கடை நடத்தி வருகிறார்கள்.

அடிக் காசு கட்டணம் உயர்வு

புதுச்சேரி நகராட்சி சார்பில் ஏற்கனவே சாலையோர வியா பாரிகளிடம் அடி காசு, கடைக்கு ஏற்ப  ரூ.10,   ரூ.30 தொடங்கி அதிகபட்சமாக ரூ.50 வரை வசூலிக்கப்பட்டது. இதனால் நகராட்சிக்கு இதன் மூலம் கணிசமான வருவாய் வந்துள்ளது. தற்போது அடி காசு வசூலிக்க நக ராட்சி நிர்வாகம் தனியாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.  நகராட்சி நேரடியாக வசூலிக்கும் போது வருவாயை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் அடி காசு குத்தகைதாருக்கு சேவகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதி காரிகள் காவல்துறை உதவியோடு வியாபாரிகளை மிரட்டுவது, அவர்களது உடமைகளை தூக்கி வாரி செல்வது உள்ளிட்ட  மோசமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அடிக்காசு குத்தகை விட்டதில் அரசு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.  அடிகாசு என்பது பன்மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.50, ரூ.100 முதல் ரூ.200வரை வசூலிக்கப்படுகிறது. காந்திவீதி, நேருவீதி போன்ற சாலை களில் வியாபாரம் செய்பவர்களிடம் அடாவடியாக அடி காசு வசூல் செய்யும் அராஜகம் நடைபெற்று வருகிறது.

சாலையோர வியாபாரிகளிடம் வசூ லிக்கப்படும் இதுபோன்ற வரிப்பணத்தில், ஒரு பகுதியினை வியா பாரிகளின் நலன்களுக்காக செலவு செய்ய வேண்டும். குறிப்பாக நிழற்குடை அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், பொருட்களை வைத்துக்கொள்ள குடோன், கிடங்கு அமைத்துக் கொடுத்தல் போன்ற பணிகள் குறித்து  அதிகாரிகள் சிறிதும் கவலைப்படவில்லை.  வறுமையின் பிடியில் உள்ள இந்த வியாபாரிகளை இரண்டாம் தர குடிமக்களாக பாவித்து  அவர்களுக்கு எதிராக நகராட்சி அதிகாரிகள் செயல்படுவதை உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.  கேபிள் டிவி உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் பேர்வழிகள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி உரிமையாளர்கள், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகமே மீண்டும் அடி காசு வசூலிக்கும்  நடைமுறையை கொண்டுவரவேண்டும். இந்த பிரச்சனையில்  முதல்வர் ரங்கசாமி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

Leave a Reply