அடிப்படை வசதிகள் இன்றி அவலநிலையில் கிராம நிர்வாக அலுவலகங்கள்

புதுவை இந்திரா நகர் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

புதுச்சேரி கவுண்டன்பாளையம், வழுதாவூர் சாலையில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ரெட்டியார்பாளையம், உழவர்கரை, தட்டாஞ்சாவடி பகுதிகளுக்கான கிராம நிர்வாக அலுவலகங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றன.

 1.7 லட்சம் பேர்: இப்பகுதியில் மொத்தம் 1.70 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். தங்களுக்குத் தேவையான சாதி, வருவாய், இருப்பிட, குடிரிமை உள்பட பல்வேறு  சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.

 3 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட 4 பேர் இக்கட்டடத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த வருவாய்த்துறை அலுவலகம் மிகவும் பழுதான நிலையில், விஷ ஜந்துக்கள் நடமாடும் இடமாக காட்சியளிக்கிறது.

 அண்மையில் பெய்த தொடர் மழையால் இக்கட்டடங்களின் நிலை மேலும் மோசமாகிவிட்டது. எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் அலுவலர்களும், சான்றிதழ் பெற வருவோரும் இருந்து வருகின்றனர். வளாகத்தின் உள்ளே காணப்படும் மரங்கள் கட்டடத்தின் மேலேயே விழும் வகையில் உள்ளன.

 மேலும் அலுவலகத்தின் உள்ளேயே ஆவணங்களும் வைத்திருப்பதால் அவை இயற்கை சீற்றங்களாலும், எலிகளாலும் சேதமடைகின்றன. சான்றிதழ்களை பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை உள்ளது.

 முதல்வர் ரங்கசாமி கடந்த தேர்தலில் கதிர்காமம், இந்திரா நகர் என இரு தொகுதிகளில் நின்று வென்றார். பின்னர் இந்திரா நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அவரது சகோதரர் மகன் தமிழ்ச்செல்வன் வென்றார். இந்திரா நகர் தொகுதியில் இந்த 3 கிராம நிர்வாக அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

 2 முறை அடிக்கல் நாட்டு விழா: பழமையான கிராம நிர்வாக அலுவலகங்களை இடித்து விட்டு அங்கேயே புதிதாகக் கட்டடம் கட்ட 2 முறை அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டது. ஆனால் கடந்த 4.5 ஆண்டுகளில் சிறிய கட்டடம் கூட கட்டப்படவில்லை. இதனால் வருவாய்த் துறை ஊழியர்கள், பொதுமக்கள் இரு தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர்.  புதிய கட்டடம் கட்டும் வரை அருகே உள்ள சமுதாய நலக் கூடத்துக்கு அலுவலகத்தை மாற்றித் தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் சமுதாயக் கூடத்தில் திருமணம், வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன எனக்கூறப்பட்டது.

 அருகே உள்ள தொழிலாளர்த் துறை வளாகத்தில் காலியாக உள்ள அறைகளை ஒதுக்கி கிராம நிர்வாக அலுவலகங்கள் தாற்காலிகமாக இயங்கச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

Leave a Reply