புதுவையில் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கியுள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளை போர்க்கால அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்து வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ரூ. 5 லட்சம் செலவில் கல்வீடு கட்ட ஆதிதிராவிட வரைநிலை மேம்பாட்டு கழகம் முடிவு செய்தது. அதன்படி ஹட்கோ வங்கி மூலம் ரூ 83 கோடி நிதியுதவியுடன் வீடு கட்டும் பணிகள் துவங்கியது.
புதுச்சேரி பகுதியில் அரியூர், பிச்சவீரன்பேட்டை, செம்பியம்பாளையம், கோர்காடு, கரிக்கலாம்பாக்கம், குடியிருப்புபாளையம், கிருமாம்பாக்கம், கரையாம்புத்தூர், மணலிப்பட்டு, காட்டேரிக்குப்பம், சின்னப்பட்டு, பெரியப்பட்டு, கூனிச்சம்பட்டு ஆகிய 15 இடங்களிலும், காரைக்காலில் வரிச்சிக்குடி வடக்கு, தெற்கு ஆகிய இரு பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 1250 கல்வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பணிகள் முழுமை பெற்று பயனாளிகளுக்கு தேவையான குடிநீர் இணைப்பு, சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சில இடங்களில் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பணிகள் மட்டுமே மீதமுள்ளது. பணிகள் முழுமை பெற்றும், வீடுகளை ஆதிதிராவிடர் நலத்துறையிடம் ஒப்படைக்காதது மற்றும் அரசியல் ரீதியான காரணங்களால் வீடுகளை பொதுமக்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தங்களுக்கு வேண்டியப்பட்டவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் பிரச்னை ஏற்பட்டது. இதற்கிடையே ரங்கசாமி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதும், இதற்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் முறைப்படி வீடுகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர எந்த நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த வீடுகள் பல ஆண்டுகளாக காட்சிப்பொருளாகவே இன்றும் உள்ளது.
செம்பியம்பாளையத்தில் மட்டும் வீடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மக்கள் பயன்பாட்டுக்கு விடாததால் குடியிருப்புகளில் அனைத்துவிதமான சட்டவிரோத செயல்களும் நடந்து வருகிறது. விபசாரம், சூதாட்டம், மது விருந்து, மாட்டுக்கொட்டகையாக பயன்படுத்துதல், அங்குள்ள இரும்பு பொருட்களை திருடிவிற்பது என மக்கள் வரிப்பணம் சூறையாடப்படுகிறது. இதற்கு சாட்சியாக கரையாம்புத்தூரில் கட்டப்பட்ட 230 வீடுகளின் பூட்டுகளும் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
மர்ம நபர்கள் இதனை கேளிக்கை விடுதியாகவும், வீடுகளை திறந்தவெளி கழிப்பிடமாக்கியுள்ளனர். கட்டி முடித்தும் உரிய நேரத்தில் பயனாளிகளுக்கு போய் சேராததுதான் இந்த அவலத்துக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. சிலரோ அரசை எதிர்பார்க்காமல் அவர்களாகவே வீடுகளை திறந்து குடியேறியுள்ளனர். அவர்கள் தகுதியானவர்கள்தானா? என்பது கூட யாருக்கும் தெரியாது. சமீபத்தில் பெய்த தொடர் மழையில் பல குடிசை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஆனால் அதற்கு சில அடி தூரத்தில் கவனிப்பார் யாருமின்றி சமூக விரோதிகளின் கையில் குடியிருப்புகள சிக்கி கொண்டிருப்பதுதான் அவலத்தின் உச்சம். 5 ஆண்டுகளாக குடியிருப்புகளின் நிலைமை எப்படி உள்ளது என்பதைக்கூட எந்த அதிகாரியும் எட்டிப்பார்க்கவில்லை. இதே நிலை நீடித்தால் குடியிருப்புகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துவிடும். எனவே மக்கள் வரிப்பணத்தை காப்பாற்ற உரிய காலத்தில் குடிநீர், மின் இணைப்புகளை வழங்க வேண்டும். கட்சி வித்தியாசம் பார்க்காமல் உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வீடுகளை ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சின்னப்பொன்னு: தொடர் மழையால் குடிசை வீட்டில் வெள்ள நீர் புகுந்துவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோட்ரஸ் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதே நேரத்தில் இங்கு 230 வீடுகள் யாரும் குடியேறாமல் நாதியற்று கிடக்கிறது. அனைத்து வீடுகளின் கதவுகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் நடக்கும் அக்கிரமங்கள், அநியாயத்தை எப்படி சொல்வது என தெரியவில்லை. சமீபத்தில் பெய்த மழையில் இருக்க இடம் இல்லாததால், திறந்து கிடந்த ஒரு வீட்டை சுத்தப்படுத்தி தற்காலிகமாக குடியிருந்து வருகிறேன். பல வீடுகளில் மாடுகள், ஆடுகள் கால்நடைகளை கட்டி வைக்கின்றனர். இதனை யாரும் தட்டிக்கேட்பது கிடையாது.
குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். உண்மையான பயனாளிகளுக்கு வீடு வழங்க வேண்டும் என ஆதங்கத்தோடு கூறினார். சுமதி: இப்பகுதியில் ஆடு மேய்த்து வருகிறேன். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை, அதிகாரிகள் எட்டிப்பார்க்கவில்லை. மழை, வெள்ளத்தால் குடிசை வீட்டில் குழந்தைகளை வைத்துக்கொண்டு பலர் கஷ்டப்படுகின்றனர். அதே நேரத்தில் யாருக்கும் பயனற்று இந்த குடியிருப்புகள் உள்ளது. பல வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு, சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என
கவலையோடு கூறினார்.
இது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜவேலுவிடம் கேட்டபோது: புதுச்சேரியில் ஆதிதிராவிட மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது. சாலை, குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் இல்லாத இடங்களில் பயனாளிகள் குடியேறாமல் உள்ளனர். அரியூர், பிச்சவீரன்பேட்டில் மட்டும் தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் கிடைக்கவில்லை என கூறி வழக்கு தொடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதி மட்டும் கிடப்பில் உள்ளது. காரைக்காலில் இரு இடங்களில் கட்டப்பட்ட வீடுகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் வீடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னாள் அமைச்சர் கந்தசாமி கூறுகையில், ஆதி திராவிட மக்களின் மேம்பாட்டுக்காக கட்டப்பட்ட இந்த குடியிருப்புகளை காலத்தோடு மக்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். இதனை அரசு செய்யாததால், குடியிருப்புகள் நிலைமை மோசமான நிலையில் உள்ளது. செம்பியம்பாளையத்தில் வேண்டியவர்களுக்கு மட்டுமே வீடுகளை வழங்கியுள்ளனர். உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வீடுகளை வழங்குவதுதானே நியாயம். இதனை அரசு உணர்ந்திருந்தால், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்கும். குடியிருப்புகளுக்கு தேவையான மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அரசு போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடற்று தவிக்கும் மக்களுக்கு வீடுகளை வழங்க முன்வர வேண்டும். அதுவரை சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்றார்.
ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தின் சேர்மன் பிரசாந்த்குமார் கூறுகையில், ஆதி திராவிடர் மேம்பாட்டு கழகம் மூலம் வீடுகளை கட்டித்தருவது, சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை செய்து தருவது மட்டுமே எங்கள் வேலை. பணிகள் முடிந்த பிறகு ஆதிதிராவிடர்நலத்துறையிடம் சாவிகளை ஒப்படைத்துவிடுவோம். பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் நாங்கள் தலையிடமாட்டோம். குடியிருப்புகளை நலத்துறைக்கு ஒப்படைத்துவிடுவதோடு எங்கள் பணி நின்றுவிடுகிறது, என்றார்.பல கோடியில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை, உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
நன்றி தினகரன்