உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதி மறுசீரமைப்பு பரிந்துரை அறிக்கை மீது அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தை நடத்திடுக.

புதுச்சேரி மாநிலத்தில் 1968க்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் போராட்டம், மற்றும் நீதிமன்ற தலையீட்டால் 2006ல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2011 ஜூனில் முடிவடைந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை என்.ஆர். காங்கிரஸ் அரசு நடத்த முன்வரவில்லை. மாறாக என்.ஆர். ஆட்சியின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது எனத் தீர்மானித்தது.

மாநில என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின் ஜனநாயக விரோத, மக்கள் அதிகாரத்தை மறுக்கிற நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டன. உயர்நீதிமன்ற உத்தரவினை செயல்படுத்தாமல் பொறுத்தமற்ற காரணங்களை சொல்லி உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதை மாநில அரசு தள்ளிபோட்டது. இறுதியாக 2013ல் உச்சநீதிமன்றம் 2 மாத காலத்தில் சம்மந்தப்பட்ட மத்திய துறையிடம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை பெறவும், 2 மாத காலத்தில் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இடஒதுக்கீடு பணியை முடிப்பது, 3 மாத காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 7 மாத காலத்தில் நட்த்தியிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை 3 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை அல்லது ஆட்சேபணைகள் கோரப்பட்டுள்ளன. மேற்படி பரிந்துரை அறிக்கையும், அரசியல் கட்சிகளுக்கு வழங்காமல் அந்தந்த கொம்யூன் அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பொறுத்தமற்றதாகும்.

ஆகவே, மாநில அரசு தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இடஒதுக்கீடு பரிந்துரை நகல்களை அரசியல் கட்சிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மேலும் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தையும் நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில அரசினை வலியுறுத்துகிறது.

இவண்

ஆர்.இராஜாங்கம்

பிரதேச செயலாளர்

Leave a Reply