காரைக்காலில் ரூ. 28 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சாலையோர சாக்கடை தடுப்புச் சுவரின் ஒரு பகுதி சுமார் 100 மீட்டருக்கு புதன்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
காரைக்கால் வடக்குத் தொகுதிக்குள்பட்ட சின்னக்கோயில்பத்து, அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு எதிர்புறம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியின் ஓரத்தில் சாக்கடை தடுப்புச் சுவர் கட்டுவதற்கு சட்டப்பேரவை உறுப்பினர் முயற்சி மேற்கொண்டு, புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியிடம் அனுமதி பெற்றார்.
அதன்படி, சுமார் 800 மீட்டருக்கு ரூ. 28.55 லட்சத்தில் சாக்கடைக்கு தடுப்புச் சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முறைப்படி ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் முடிக்கப்பட்டன.
இந்நிலையில், புதன்கிழமை இரவு சாலையோர சாக்கடை தடுப்புச் சுவரின் ஒரு பகுதி 100 மீட்டருக்கு சரிந்து விழுந்தது. மழை ஓய்ந்த பிறகு ஏற்பட்ட இந்த நிலை தரமற்ற பணியாகவே இருக்க முடியுமென அந்த பகுதி மக்கள் குறை கூறினர்.