(இருநூறு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. பெரும் அளவில் மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிக்க போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தினார். 1919-21ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், 1930-31இல் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கம், 1942இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் முதலியவை வரலாற்றில் தடம் பதித்தவை.) நாடு பிரிவினை செய்யப்பட்டபோது, பாகிஸ்தானுக்கு சேர வேண்டிய 55 கோடி ரூபாய் பணத்தை இந்திய அரசாங்கம் கொடுக்க மறுத்தது.
இந்திய அரசு நாணயமாக நடந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை உடனே கொடுத்துவிடுமாறு காந்தி கோரினார். ஆனால் நேருவும், பட்டேலும் இதற்கு உடன்படவில்லை. 78 வயதைக் கடந்த காந்தி தனது வாழ்நாளில் கடைசி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.* இந்தியாவில் வாழும் முஸ்லீம்களின் பாதுகாப்பை உறுதி செய்வது,* முஸ்லீம்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை, மசூதிகளை அவர்களிடமே திரும்பவும் ஒப்படைப்பது,* இந்தியா, பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாய் பணத்தை உடன் கொடுத்துவிடுவது, * இந்து, முஸ்லீம் தலைவர்கள் அமைதியை ஏற்படுத்திட உறுதிபூண்டு கையொப்பமிடுவதுஉள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.
துவக்கத்தில் காந்தியின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.
காந்தி சாகட்டும், விட்டுவிடுங்கள் என்று பலவாறாக வசைபாடி உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு முன்னர் முழக்கங்களை எழுப்பினர்.உண்ணாவிரதம் தொடங்கிய மூன்றாவது நாள் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மக்கள் பல்லாயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் திரண்டு, “காந்தியைக் காப்பாற்றுங்கள்’’ என்று முழக்கமிட்டார்கள். இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்க ஒப்புக்கொண்டது. இந்து, முஸ்லீம், இந்திய அமைப்புகளின் தலைவர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் உள்ளிட்டு அமைதி ஏற்பட, ஒற்றுமையுடன் வாழ, உறுதிமொழி ஏற்று கையொப்பமிட்ட கடிதம் காந்தியிடம் அளிக்கப்பட்டது. அமைதி திரும்பியதை உறுதி செய்துகொண்ட காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.இதேகாலத்தில் மக்களிடம் பிளவினை ஏற்படுத்தும் வகையில், வெறுப்புணர்ச்சியையும் பகைமையுணர்வையும் தூண்டும் வகையில் இந்துத்துவா முழக்கத்துடன் ஒரு குழு செயல்பட்டு வந்தது. இதற்கு சூத்ரதாரியாக இருந்து செயல்பட்டு வந்தவர் வி.டி. சாவர்க்கர் ஆவார். கொலை அரசியல் இவருடைய வழிமுறையாக இருந்தது.
இருவேறு கொலை வழக்குகளில் பம்பாய் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு 1911இல் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்தபோது ஐந்து முறை மன்னிப்புக்கோரி கருணை மனுக்களை பிரிட்டன் அரசாங்கத்திற்கு அனுப்பினார். மனுவில் அவர் குறிப்பிட்டிருந்த விவரம் வருமாறு:“அரசாங்கத்தில் அவர்கள் விரும்பும் நிலையில் சேவகம் புரியத் தயாராக உள்ளேன். எனது மாற்றம் மனசாட்சியின் குரலுக்கு ஏற்ப ஏற்பட்டுள்ளது.
எனது எதிர்கால நடத்தை அதற்கு ஏற்பத்தான் இருக்கும். தந்தை போன்ற அரசின் வாசலுக்குக் கெட்டழிந்துபோன மகன் திரும்ப வருவதற்கு கருணை காட்ட வேண்டும்,’’ என்று தரம் தாழ்ந்திருந்தார். பிறகு எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார். பம்பாய் ஆளுநருக்கு தன்னை விடுவிக்கக்கோரி மனுச் செய்தார். அதில் அரசு விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.“எனது வழக்கு விசாரணை நியாயமாக நடந்தது.
எனக்கு வழங்கப்பட்ட தண்டனை உரிய அளவில் இருந்தது என ஒப்புக்கொள்கிறேன். கடந்த காலத்தில் மேற்கொண்ட வன்முறை வழிகளை மனதார வெறுக்கிறேன். தற்போது தான் கடமை உணர்வு உள்ளவனாகவும், சட்டத்தையும் அரசியல் அமைப்பையும் எனது முழு வலிவுடன் நிறைவேற்றுவேன். மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் வெற்றி பெற உழைக்க விரும்புகிறேன் எனவும் உறுதியளிக்கிறேன்.’’
சதித்திட்டத்தின் மூளை
1924 ஜனவரி 6 அன்று கடுமையான நிபந்தனைகளுடன் எரவாடா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.பிரிவினையை ஒட்டி நாட்டில் ஏற்பட்டிருந்த பதற்றமான நிலையைப் பயன்படுத்திக்கொண்டு இந்துக்கள் மத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பையும், பகைமையையும் ஏற்படுத்தும் சதிச் செயல்களில் இந்துமதவெறி அமைப்புகளான ஆர்எஸ்எஸ், இந்து மகா சபை முதலானவை செயல்பட்டன. இவர்களுடைய சதிச்செயல்கள் முழுவதும் காந்தியின் சமாதான முயற்சிகளின் மூலமாக முறியடிக்கப்பட்டன. காந்தி உயிரோடு இருக்கும்வரை தங்கள் எண்ணம் நிறைவேறாது என இந்துத்துவாவாதிகள் எண்ணினர். எனவே காந்தியைக் கொல்வதற்கான சதித்திட்டங்களில் இறங்கினர். இந்த சதித் திட்டத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் சாவர்க்கர். இந்த சதித்திட்டத்தை நிறைவேற்றும் நபர்களாக செயல்பட்டவர்கள் நாதுராம் விநாயக் கோட்சே, நாராயண் ஆப்தே மற்றும் சிலர்.
பம்பாயில் உள்ள சாவர்க்கர் சதன் எனும் சாவர்க்கர் வீட்டில் சாவர்க்கர், கோட்சே, ஆப்தே ஆகிய மூவரின் கூட்டுச் சதித் திட்டமே காந்தியின் கொலை என ஷா கமிஷன் அறிக்கை தெளிவுபடுத்தியது. 1948 ஜனவரி 28ஆம் தேதியே காந்தியைக் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொண்டனர். ஆயினும் அது வெற்றிபெறவில்லை. இதில் ஈடுபட்டவர்களில் மதன்லால் என்பவனைத் தவிர மற்றவர்கள் தப்பிவிட்டனர்.தனது சொந்த வாழ்வில் பல்வேறு தோல்விகளைச் சந்தித்தவன் கோட்சே. தற்போது சாவர்க்கரால் தனக்கு அளிக்கப்பட்ட காந்தியைக் கொலை செய்யும் திட்டத்தை நிறைவேற்றுவதில் வெறியோடு இருந்தான். போலீசாரிடம் சிக்குவதற்கு முன்பாக காந்தியைக் கொன்றுவிடத் திட்டமிட்டான். வேறு யாரையும் நம்புவதைவிட தானே செயலில் ஈடுபடத் தீர்மானித்தான். ஜனவரி 30 அன்று மாலை 5.20 மணியளவில் காந்தி தங்கியிருந்த பிர்லா மாளிகையிலிருந்து பிரார்த்தனைக் கூடத்திற்கு நடந்து வந்தபோது, மேடை அருகே காந்தியின் காலைத் தொட்டு வணங்குவதுபோல் குனிந்தான். காந்திக்குத் துணையாக வந்த மனு காந்தி, “பாபுஜிக்கு நேரமாகிவிட்டது, வழிவிடுங்கள்’’ எனக்கூறி கோட்சேயைத் தொட்டபோது மனுகாந்தியின் கையை முரட்டுத்தனமாக விலக்கிவிட்டு, காந்தியை மூன்றுமுறை நெஞ்சில் சுட்டான்.
காந்தி, “ஹே ராம்’’ என முனகியபடியே தரையில் சாய்ந்தார்.காந்தி எதிர்பார்த்த மரணத்தை கோட்சே பரிசாக அளித்துவிட்டான். மக்களின் மனங்களில் அன்பு, சத்தியம், அஹிம்சை, சகிப்புத்தன்மை இவற்றைப் பரவச் செய்திட 125 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று விரும்பிய காந்தி கோட்சேயால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொலையை கொண்டாடியவர்கள்
காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கேட்டு உலகமே துக்கத்தில் ஆழ்ந்தது. இந்திய மக்கள் துயரக்கடலில் மூழ்கினர். ஆனால் ஆர்எஸ்எஸ், இந்து மகா சபை அலுவலகங்களில் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தை இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். காந்தியைப் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஷா கமிஷன் பல உண்மைகளை வெளிப்படுத்தியது. காந்தி கொலைக்கு சூத்ரதாரியாகச் செயல்பட்ட சாவர்க்கர் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் தனக்கிருந்த பல்வேறு அரசியல் தொடர்புகளை, செல்வாக்கைப் பயன்படுத்தி தந்திரமாக வழக்கிலிருந்து தப்பித்துள்ளார்.
நாதுராம் விநாயக் கோட்சேயின் சகோதரனான கோபால் கோட்சே 1964இல் விடுதலையான பிறகு அளித்த பேட்டியில், சாவர்க்கரே காந்தியின் கொலைக்கு மூளையாக இருந்து செயல்பட்டார் என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.ஆனால் இந்த சாவர்க்கரைத்தான் இன்றைய பாஜக அரசாங்கம் தேசத் தலைவராக அறிவித்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அந்தமான் போர்ட் பிளேர் விமானத்தளத்திற்கு சாவர்க்கர் பெயரைச் சூட்டி மகிழ்ச்சி கொள்கிறது.
காந்தியைக் கொலைசெய்த நாடு முழுவதும் சிலை வைக்க ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக அரசாங்கம் ஒருபக்கம் காந்தியின் புகழைப் பாடிக்கொண்டே, மறுபக்கத்தில் காந்தியின் கொள்கைகளான சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை கோட்பாடுகளைக் குழிதோண்டிப் புதைத்து வருகிறது.மக்கள் ஒற்றுமையை மதச்சார்பின்மையை பாதுகாப்பதே காந்திஜிக்கு செலுத்தும் மெய்யான அஞ்சலியாகும்.
(ஜனவரி 30 : மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள்) கட்டுரையாளர் : கோ,நீலமேகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்.