சிபிஎம் கட்சி புதுச்சேரி 14வது சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை 2016

12pdycpmஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி  14வது சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை

புதுச்சேரி வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பணிவான் வேண்டுகோள்

புரட்சிக்கவி பாரதிதாசன், மக்கள் கவி தமிழ்ஒளி, மக்கள் தலைவர் வ.சுப்பையா ஆகியோர் பிறந்து வாழ்ந்த புதுச்சேரி, மகாகவி பாரதியும், அரவிந்தரும் வாழ்ந்த புதுச்சேரி நாம் பெருமைகொள்ளும் அளவிற்கு உயர்ந்த கலாச்சாரம், பண்பாடு மற்றும் வரலாற்று பாரம்பரியங்களை தன்னகத்தே கொண்டது.

புதுச்சேரி தொழிலாளி  வர்க்கம் வேலை நேர உரிமை, சங்கம் அமைக்கும் உரிமைக்காக போராடி 12 தொழிலாளர் உயிர்தியாகம் செய்த தெற்கு ஆசியாவில் முதல்முதலில் 8 மணி நேர வேலை உரிமையை நிலைநாட்டினார்.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் தோழர்.வ.சுப்பையா தலைமையில் தொழிலாளர்கள், விவசாயிகள், வாலிபர்கள், மாணவர் பங்கேற்ற விடுதலைப் போராட்ட்த்தால் 1954 நவம்பர் 1ல் புதுச்சேரி விடுதலை பெற்றது.

ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் வலுவாக நடத்திய பூமி புதுச்சேரி.

பிரிட்டிஸ் இந்திய விடுதலைப் போராட தலைமறைவிற்கு புகலிடம் அளித்து அரவனைத்த பூமி…..

என பல வரலாற்று இறுப்பிடமாக கொண்டது புதுச்சேரி. விடுதலைக்கு பிறகு 1955ல் நடந்த முதல் சட்டமன்ற பேரவை தேர்தலில் தோழர். வ. சுப்பையா தலைமையிலான மக்கள் முன்னணி அருதிப்பெரும்பான்மை பெற்றது. கம்யூனிஸ்ட்கள் தலைமையில் ஆட்சி அமைவதை விம்பாத காங்கிரஸ் கட்சி அரசியல் சதி செய்து பிரஞ்சு ஏகதிபத்தின் ஆதரவாளர் ஏதுவார் குபேர் தலையில் காங்கிரஸ் ஆட்சி வழி செய்தது. அது முதல் ஆட்சி கவிழ்பு, அரசியல் சந்தர்பவாதம், அரசியல் கிரிமினல்மாவம் என அரசியல் தன்மை மாறியுள்ளது. இந்நிலையில் இருந்து மாநிலத்தை மீட்க வேண்டியது அனைவரின் கடமையாகும். மக்கள் நலன் சார்ந்த கொள்கை மாற்று மாநிலத்தில் வலுவாக முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  CPI-CPI(M), VCK, MDMK, RSP ஆகிய கட்சிகள் மக்கள் நலன் சார்ந்த குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் , மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியுள்ளது. தமிழகத்தை பின்பற்றி மக்கள் நலக் கூட்டணியை தே.மு.தி.க – தா.மா.க அணி புதுச்சேரியிலும் அரசியல் அணி சேர்க்கையாக எழுந்துள்ளது என்றாலும் மார்க்சிஸ்ட் தனது மக்கள் நலன் சார்ந்து மாற்றுக் கொள்கையை 14வது சட்டப் பேரவைத் தேர்தல் அறிக்கையாக மாநில மக்கள் முன் வைக்கிறது.

ஊழல் ஒழிப்பு

நேர்மையான வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி நிர்வாகம் உறுதிசெய்யப்படும். அனைத்து மட்டத்திலும் நடைபெறும் ஊழல், முறைகேடுகள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும்(2006-2011), என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும்(2011-20160  நடந்துள்ள ஊழல்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த கால ஆட்சிகளின் ஆடம்பர செலவுகள் முறைப்படுத்தப்பட்டு சிக்கன நிர்வாகம் மேற்கொள்ளப்படும்.

  1. மாநில அந்தஸ்து – சிறப்பு நிதி உதவி

        மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் புதுச்சேரி சட்டப்பேரவை அதிகாரம் இல்லாத அமைப்பாகவே உள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு புதுச்சேரிக்கு வழங்கிவந்த மானியம், கொடைகள் உள்ளிட்ட மத்திய நிதி உதவி 70 சதமாக இருந்தது 30 சதமாக குறைந்துவிட்டது. மத்திய வரிவருவாயிலும் புதுச்சேரிக்கு உரிய பங்கீடு வழங்கப்படுவதில்லை. இயற்கை பேரிடர் நிவாரணங்கள் பெயரளவிற்கே மத்திய அரசு வழங்கிவருகிறது. ஒப்புக்கொண்ட தொகையை முழுமையாக வழங்குவதுமில்லை.  மேலும் மாநில அரசின் தவறான நிதி நிர்வாகம் –இலக்கு இல்லாத செயல்பாடு ஆகியவற்றால் மாநில அரசின் கடன் ரூ.6700 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆகவே, மக்களின் நலன், மாநிலத்தின் முன்னேற்றம், என்ற இலக்குகளை அடைய புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தப்படும். பிரெஞ்சு இந்திய ஒப்பந்தம் மற்றும் மறைந்த பிரதமர் நேரு அவர்களின் உறுதிமொழி அடிப்படையில் புதுச்சேரி வளர்ச்சிக்கு மத்திய அரசின் கடன்களை ரத்துசெய்து ரூ.15000 கோடி ரூபாய் சிறப்பு நிதி உதவி புதுச்சேரிக்கு வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

  1. சட்டப்பேரவையின் ஜனநாயக செயல்பாடு

          புதுச்சேரி சட்டப்பேரவையின் ஜனநாயக செயல்பாடு பாதுகாக்கப்படும். மக்கள் பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆழமாக விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும். தனிநபர் அதிகாரத்தை ஒழித்து, கூட்டு செயல்பாடு உருவாக்கப்படும். அசாதாரணமான சூழலில் குறிப்பிட்ட பிரச்சனைகளை விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மேற்கொள்ளப்படும்.

        கடந்த கால ஆட்சிகளின் ஆடம்பர செலவு முறைகள் தவிர்க்கப்படும். சிக்கன நிர்வாகம் மேற்கொள்ளப்படும். அரசு விழாக்கள் கட்சி சார்பற்ற அரசு விழாவாக நடத்தப்படும்.

  1. மதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடிப்போம்

        மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மக்கள் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் கேடுவிளைவிக்கும் மதவெறி அரசியலை தீவிரப்படுத்திவருகின்றது. பசுவதை தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சியை பயன்படுத்தி படுகொலைகளும், பதற்றமும் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

        கருத்துரிமை மீதான தாக்குதலும், சகிப்பற்றத்தன்மையும் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக முற்போக்கு சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்களாக வாழ்ந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்தன. புதுச்சேரியிலும் சிறுபான்மை கல்வி நிறுவனத்தின் மீதான தாக்குதல் உள்பட மதவெறி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதவெறி சக்திகளை தனிமைப்படுத்திட, மக்கள் ஒற்றுமையை பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாய் போராடும்.

முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து மதவெறி சாதிவெறி சக்திகளுக்கு எதிராக வலுவான போராட்டம் கட்டமைக்கப்படும். சாதிவெறி சக்திகளை எதிர்த்து சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தை பேண உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  1. மது ஒழிப்பு

        அரசு சார்பில் புதிய மதுபானக்கடைகள் திறக்கப்படாது. மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தனியார் மதுபான கடைகள் திறக்க விதித்துள்ள தடையாணை உறுதியாக அமல்படுத்தப்படும். அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகள் படிப்படியாக மூடப்படும்.

        மது ஒழிப்பு பிரச்சாரம் மக்கள் இயக்கமாக மாற்றப்படும்.போதை ஒழிப்புக்கான சிகிச்சை மையங்கள் பரவலாக அமைக்கப்படும்.

  1. விவசாய மேம்பாடு

        புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 31000 ஹெக்டேர் நிலம் 25247 ஹெக்டேராக குறைந்துள்ளது. இதில் ஒரு முறைக்கு மேல் சாகுபடி செய்யும் நிலம் 9832 ஹெக்டேராக உள்ளது. ஆகவே தற்போதுள்ள விளைநிலத்தை பாதுகாக்க நிலப் பயன்பாடு சட்டம் இயற்றப்படும். நிலவணிகம் கட்டுப்படுத்தப்படும். விவசாயம் இலாபகரமான தொழிலாக மாற்ற சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்படும்.

        நிலசீர்திருத்த சட்டத்தின் கீழான வழக்குகளை விரைந்து முடிக்கப்படும். உபரிநிலம், தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்திட பொறுத்தமான செயல்திட்டம் உருவாக்கப்படும்.

        கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000 கொள்முதல் விலை வழங்கப்படும். சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.18 கோடியை 15 சத வட்டியுடன் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

        நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 விலை நிர்ணயம் செய்யப்படும். நெல் மற்றும் இதர வகை தானியங்கள் கொள்முதல் செய்யும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வியாபாரிகள் தங்களுக்குள் சிண்டிகேட் வைத்து கொள்ளையடிப்பது முற்றாக ஒழிக்கப்படும். உடனடியாக பணப்பட்டுவாட செய்வது உறுதிசெய்யப்படும்.

இயற்கை வேளாண்மை மற்றும் தோட்டப்பயிர் வகைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நச்சு இல்லாத காய்கறிகள் மக்களுக்கு பரவலாக வழங்க சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும். மனித உயிருக்கும், பல்லுயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து தடைசெய்யப்படும்.

  1. தொழில் வளம்

        வேலைவாய்ப்பிலும், தொழில் உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கும் சிறு, குறு தொழில்கள் துவங்கிட முன்னுரிமை வழங்கப்படும். சிறுகுறு தொழில் நிறுவனங்களிடமிருந்து அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் 15 சதம் கொள்முதல் செய்வது நடைமுறைப்படுத்தப்படும். மேற்படி தொழில் உற்பத்தியை சந்தைப்படுத்தவும் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

        விவசாயம் சார்ந்த தொழில்களான பஞ்சாலை, சர்க்கரை ஆலை…. போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ரோடியர், சுதேசி, பாரதி பஞ்சாலைகளை நவீனப்படுத்தி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நூற்பு, நெசவு, ஆயத்த ஆடை தயாரிப்பு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய ஜவுளிப்பூங்கா அடைக்கப்படும். ஜவுளி தொழில்நுட்ப கல்லூரி ஒன்றும் துவக்கப்படும். எல்.ஆர். பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்தி அறவைத்திறன் அதிகரிக்கப்படும். பாரம்பரிய தொழிலான நெசவுத் தொழில் பாதுகாக்கப்படும்.

புதுச்சேரி காரைக்காலில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனம் அமைந்திட மத்திய அரசை வலியுறுத்தப்படும். மூடியுள்ள தொழிற்சாலைகள் திறக்கவும், புதிய தொழில் துவங்கவும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  1. பொதுவினியோகத்திட்டம்

          விலைவாசி உயர்வில் இருந்து மக்களை பாதுகாத்திட, விலை உயர்வை கட்டுப்படுத்திட பொதுவினியோகத்திட்டம் வலுப்படுத்தப்படும். இத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, அரிசி, சர்க்கரை, கோதுமை, ரவை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும். பொதுவினியோகத் திட்டத்தை கண்காணித்து முறைப்படுத்த கண்காணிப்புக்குழு அமைக்கப்படும். பொருளுக்குப் பதில் பணம் வழங்கும் மத்திய அரசின் கொள்கையை கடுமையாக எதிர்க்கும்.

  1. சட்டம் ஒழுங்கு மேம்பாடு

        புதுச்சேரி மாநிலத்தில் கொலை, கொள்ளை, பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள், திருட்டு, ஆள்கடத்தல்… போன்ற குற்றங்களை கட்டுப்படுத்தவும், சீரான சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

        வீடு, நில அபகரிப்பு, கட்டபஞ்சாயத்து, கந்துவட்டி ஆகிய குற்ற நடவடிக்கை தடுத்திட, உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காவல் நிலையங்களில் கைதிகள் சித்திரவதை, லாக்கப் மரணங்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இத்தகைய அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படும். தவறிழைக்கும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

        பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மீது விரைந்து வழக்கு பதிவு செய்யவும், மேற்படி வழக்குகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல்துறையினருக்கு சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நேர உரிமை உறுதிசெய்யப்படும்.

  1. அனைவருக்கும் தரமான மருத்துவம்

        அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைத்திட மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 6 சத நிதி ஒதுக்க வலியுறுத்தப்படும். அரசு மருத்துவமனையில் நவீன மருத்துவ வசதிகள் உறுதிசெய்யப்படும். காலியுள்ள மருத்துவர், செவிலியர், டெக்னிசியன் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும்.

        தனியார் மருத்துவமனைகளில் விழுக்காடு ஏழை எளிய நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சேவை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

        குறைந்த விலையில் உயிர்காக்கும் மருந்துகள் அரசு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

        கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களை சமுதாய நலவழி மையங்களாக தரம் உயர்த்தி 24 மணி நேரம் செயல்படும் மருத்துவமனைகளாக மாற்றப்படும்.

          மரபுவழி மருத்துவ முறைகளான சித்தமருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் யுனானி உள்ளிட்ட மாற்று மருத்துவமுறைகள் மேம்படுத்தப்படும்.

  1. அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி

          மாநில பட்ஜெட்டில் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்திட அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனங்கள் செய்யப்படும். ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:30 என்ற அளவில் உறுதிச்செய்யப்படும். விளையாட்டு, நூலக பயன்பாடு, செய்முறை கற்றல் ஆகியவை உறுதிசெய்யப்படும்.

        தனியார் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளை ஆய்வு செய்து முறைப்படுத்தப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டாய நன்கொடை தடை, கல்விக் கட்டண நிர்ணயம், ஆசிரியர்-ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் இயற்றப்படும்.

        கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சத ஒதுக்கீட்டை ஒற்றைச் சாளர முறையில் அரசே நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

        புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைக்கப்படும். மத்திய அரசின் மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்சி), கேந்திர வித்யாலயா பள்ளிகளின் பாடத்திட்டத்திற்கு இணையாக சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும்.

  1. உயர்கல்வி

        மாநில மக்களின் நீண்ட கனவான மாநிலப் பல்கலைக்கழகம் துவங்கப்படும். மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய நுழைவுத் தேர்வு முறை மாநிலங்களின் உரிமையை பறிப்பதாகும். மேலும் கிராமப்புற மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை கடுமையாக பாதிக்கும். ஆகவே, அகில இந்திய நுழைவுத்தேர்வு முறையை ரத்துசெய்ய, மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடும்.

        தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சத அரசு இடஒதுக்கீடு உறுதிசெய்யப்படும். செண்டாக் மானவர் சேர்க்கை வெளிப்படைத் தன்மையோடு நடைபெறுவது உறுதி செய்யப்படும். தனியாருக்கு புதிய மருத்துவக் கல்லூரி துவங்க அனுமதி வழங்கப்பட மாட்டாது.

மதகடிப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் அரசு கலைக் கல்லூரி, வில்லியனூர் கஸ்தூரிபாய் அரசு கலைக்கல்லூரி, தவளக்குப்பம் ராஜீவ் காந்தி அரசு கலைக்கல்லூரி ஆகியவைகளுக்கு சொந்த கட்டிடம் எழுப்பவும், புதியப் பாடப்பிரிவுகள் துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்விக்கட்டணம் முறைப்படுத்தப்படும்.

கல்வி உதவித்தொகை கல்வியாண்டின் காலாண்டு துவக்கத்தில் வழங்கப்படும். மாணவர்களின் தங்கும் விடுதிகள் நவீனப்படுத்தப்படும். புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சத இடஒதுக்கீடு வழங்க மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மாணவர் அமைப்புகளின் போராட்டத்தால் பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புக்கொண்டது. 25 சத இடஒதுக்கீடு வழங்கிட மத்திய மனிதவளத்துறையின் அனுமதி பெற்றிட வலுவாகப் போராடும்.

  1. வலுவான உள்ளாட்சி அமைப்பு

          1968க்குப்பிறகு 2006 மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைப்பெற்றது. தொடர்ந்து 2011ல் நடத்த வேண்டிய தேர்தலை நடத்தாததின் விளைவாக மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்றது. 2016 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது உறுதிசெய்யப்படும்.

        புதுச்சேரியின் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் சாலை வசதி, கழிவுநீர் வடிகால், சுத்தமான குடிநீர்…. உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நகராட்சி, பஞ்சாயத்து அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம், பட்ஜெட்டில் 30 சத நிதி ஒதுக்கீடு வலியுறுத்தப்படும்.

        தனியாருக்கு அளிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மைத்திட்ட உடன்பாடு ரத்து செய்து, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நேரடியாக துப்புரவு பணி மேற்கொள்ளப்படும்.

 சமூக நீதி

        சமூக நீதிக் கொள்கைக்கு எதிரான இந்துத்துவ சக்திகளின் சூழ்ச்சியை முறியடித்திட ஜனநாயக முற்போக்கு சக்திகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மை மக்களும் ஒன்றிணைந்து வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

        கல்வி, வேலைவாய்ப்புகளில் 69 சத இடஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் துறை மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பெற்றிட மத்திய அரசை வலியுறுத்தப்படும். நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு பெற முயற்சிக்கப்படும்.

அரசுத்துறைகளில் மாநில அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை குறித்து அவ்வப்போது வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தப்படும்.

  1. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்

        பெண்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்த பட்ஜெட்டில் பெண்களுக்கு அனைத்து துறைகள் மூலம் நிதி ஒதுக்கிட (Gender Budget) நடவடிக்கை எடுக்கப்படும்.

பணியிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்திட புகார் குழுக்கள் அமைக்கப்படும். பெண்கள் தொடர்பான சட்டங்கள் மற்றும் பாலின சமத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

        உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சத இடஒதுக்கீடு வலியுறுத்தப்படும். பெண்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.

பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி, வழக்கு உதவி, பாதுகாப்பு ஆகியவை உறுதிச் செய்யப்படும்.

பெண்கள் சுய உதவிக்குழுவிற்கு குறைந்த வட்டியில் கடன் பெற, சுயதொழில் துவங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  1. தாழ்த்தப்பட்ட மக்கள் நலன்

புதுச்சேரி மாநிலத்தில் பல வடிவங்களில் நிலவும் தீண்டாமை கொடுமைகளை ஒழித்திட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சமூக சமத்துவம் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தலித்மக்கள் சிறப்பு கூறு நிதியை வேறு திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்வது உறுதியாகத் தடுக்கப்படும். தலித்மக்களின் சமூகப் பொருளாதார அந்தஸ்தை உருவாக்க பொறுத்தமான திட்டங்கள் உருவாக்கி செயல்படுத்தப்படும். வன்கொடுமை தடுப்பு சட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும்.

பழங்குடி இனத்தவர் பட்டியலை மத்திய அரசு வெளியிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தலித் கிறித்தவர்களுக்கு தமிழகம் போல தலித் மக்களுக்குரிய உரிமைகள், சலுகைகள் வழங்கப்படும். 1964 குடியிருப்பு ஆதாரம் இல்லாத தலித் மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளில் தலித் இடஒதுக்கீட்டில் உரிய நியாயம் கிடைக்க பொறுத்தமான நடவடிக்கை எடுக்கப்படும்.

  1. சிறுபான்மை மக்கள் நலன்

          சிறுபான்மை மக்களின் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும். நீதியரசர் ராஜேந்திர சச்சார் குழு மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு அளித்துள்ள பரிந்துரைகள் படி சிறுபான்மை மக்களின் சமூக பொருளாதார மேம்பாடு உயரவும், கல்வி, வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

        இந்துத்துவ சக்திகள் சிறுபான்மை மக்களுக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் எதிராக மேற்கொள்ளும் சகிப்புதன்மையற்ற, மதவெறி நடவடிக்கைகளை உறுதியாக எதிர்த்திட ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகளை ஒருங்கிணைக்க வலுவான முயற்சி மேற்கொள்ளப்படும்.

  1. தொழிலாளர் நலன்

        அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18000 வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு உரிய சட்டதிருத்தம் இயற்றப்படும்.

முறைசாரா தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முறைசாரா நலச் சங்கத்தை நலவாரியமாக மாற்றப்படும்.

        கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைந்திடவும், போராடும் தொழிற்சங்க அமைப்புகளுக்கு நலவாரியத்தில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதிய திட்டம் செயல்படுத்தப்படும். ஓய்வு ஊதியம் ரூ.3000 வழங்கப்படும். பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதியம் பெறும் வயது 55 ஆக நிர்ணயிக்கப்படும்.

        குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் செயல்படுத்தப்படும். அரசுத்துறை, பொதுத்துறை, தனியார் துறைகளில் நிரந்தர பணித்தன்மையில் ஒப்பந்தக்கூலி, தினக்கூலி, கேசுவல்… உள்ளிட்ட உழைப்புச் சுரண்டல் முறைக்கு முடிவு கட்டப்படும். மற்ற மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

        ரோடியர், சுதேசி, பாரதி, பஞ்சாலைகளில் பணியாற்றி 2008 – 2015 வரையில் ஓய்வு பெற்ற 1128 தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பணப்பயன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  1. விவசாயத் தொழிலாளர் நலன்

        விவசாயத் தொழிலாளர் நலச்சங்கம் நலவாரியமாக மாற்றப்படும். ஓய்வு ஊதியம் ரூ.3000, பணியின்போது மரணம் ஏற்படாமல் ரூ.3 இலட்சம் நிவாரணம், இயற்கை மரணம் ஏற்பட்டால் நிவாரணம் ரூ. 1 இலட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  1. மீனவர் நலன்

        மீனவர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். தற்போது வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் இரட்டிப்பாக்கப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு விசைப்படகுகளை பயன்படுத்த ஊக்கப்படுத்துவதுடன், மீனவர்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்.

மீனவர்கள் காணாமல் போவதும், உயிரிழப்பதும் அவ்வப்போது நடக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு மீனவர்களுக்கு சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

கடலோர காவல்படை உள்ளிட்ட கடல் சார்ந்த அரசுப் பணிகளில் மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முயற்சிக்கப்படும்.

  1. அரசு ஊழியர்கள் நலன்

        மாநில அரசு ஊழியர்களின் பணிநிலை, பதவி உயர்வு, ஊதிய முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளில் சுமூகத்தீர்வு காண தலைமைச் செயலாளர் தலைமையில் கூட்டு ஆலோசனைக்குழு அமைக்கப்படும்.

        20004 முதல் நடைமுறையில் இருந்துவரும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்து பழைய பென்ஷன் திட்டம் தொடர்ந்திட மத்திய அரசை வலியுறுத்தப்படும். ஊழியர்களின் வைப்பு நிதி அரசு திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுவது தடுக்கப்படும்.

        அரசுத் துறைகளில் பணியாற்றும் பகுதிநேரம், தினக்கூலி, தொகுப்பூதிய, மதிப்பூதிய ஊழியர்களின் பணித்தன்மை பரிசீலிக்கப்பட்டு பணிநிரந்தரம் செய்யப்படும்.

  1. கூட்டுறவு

        அனைத்து கூட்டுறவு அமைப்புகள் மற்றும் சங்கங்களின் செயல்பாடுகளை, திறனை அதிகப்படுத்த உயர்மட்ட ஆய்வுக்குழு அமைக்கப்படும். ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து கூட்டுறவு துறையை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டுறவு அமைப்பு மற்றும் சங்கங்களில் ஆட்சியாளர்களின் தேவையற்ற தலையீடுகளை கட்டுப்படுத்திட முயற்சிக்கப்படும். கூட்டுறவு அமைப்புகளின் ஜனநாயக செயல்பாடுகளை உறுதிப்படுத்த  தேர்தல் நடத்தப்படும்.

  1. இளைஞர் கொள்கை

        இளைஞர்களின் நலன்களை பாதுகாத்திட, அவர்களின் ஆற்றலை மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்திட இளைஞர் கொள்கை வகுக்கப்படும்.

        இந்திய ஆட்சிப்பணி உள்ளிட்ட மத்திய மாநில அரசுப் பணி மற்றும் வங்கிப்பணிக்கான் தேர்வு பயிற்சி அளிக்கப்படும். பல மொழிகளை கற்பிக்கும் சிறப்பு பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்.

        விளையாட்டுத் திறனில் ஆர்வம் உள்ள இளைஞர்களை கண்டறிந்து விளையாட்டுத்திறனை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

        கொல்லைப்புறமாக நடைபெறும் சட்டவிரோத பணிநியமனங்கள் முற்றாக ஒழிக்கப்படும். வேலைவாய்ப்பகம் மூலம் பணிநியமனம் செய்யப்படும்.

        மாநில இளைஞர்களுக்கு மாநில அரசின் உயர்பதவிகளில் வேலையை உறுதிசெய்திட மாநில பணிதேர்வானையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  1. பத்திரிகையாளர் நலன்

        புதுச்சேரி பத்திரிகையாளர் நலன்களைப் பாதுகாத்திட பத்திரிகையாளர்களையும் உள்ளடக்க்கிய உயர்மட்ட ஆலோசனைக்குழு அமைக்கப்படும்.

        பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் ரூ.7500 ஆக உயர்த்தப்படும். பணியின்போது ஏற்படும் விபத்து மரணத்திற்கு ரூ.3 இலட்சம், இயற்கை மரணத்திற்கு ரூ.1 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

  1. சுற்றுலாத்துறை

        புதுச்சேரி சுற்றுலாத்துறையை மேம்படுத்த மத்திய அரசின் கூடுதல் நிதி உதவி வலியுறுத்தப்படும். வெளிமாநிலம் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் சுற்றுலாத்திட்டங்கள் உருவாக்கப்படும்.

        திரைப்பட நகர் உருவாக்குதல், பாகூர், ஊசுடு ஏரிகள் சுற்றுலா மையமாக வளர்த்தெடுக்க முயற்சிக்கப்படும். காரைக்காலில் திருநள்ளாறு கோயில் நகரம் மற்றும் புதுச்சேரி சுற்றுலா தளங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து, தங்கும் விடுதிகள் உள்ளிட்ட வசதிகள் மற்றும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.

  1. மாற்றுத்திறனாளிகள்

          புதுச்சேரி மாநிலத்தில் 20,952 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கான சமூக நலத்திட்டங்கள் மேம்படுத்தப்படும். கல்வி, வேலைவாய்ப்பில் 3 சத இட ஒதுக்கீட்டிற்கு வலியுறுத்தப்படும். பொது இடங்களில் இவர்கள் தடையின்றி புழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தங்கும் வசதியோடு சிறப்பு கல்விக்கான திட்டம் உருவாக்கப்படும்.

  1. வணிகர் நலன்

        சிறுவணிகர்கள், சுயதொழில் புரிவோருக்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்நாட்டு சில்லறை வணிகத்தை பாதுகாத்திட, அந்நிய நேரடு முதலீட்டு கொள்கையை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முயற்சியினை உறுதியாக எதிர்ப்போம். வரிவிதிமுறைகள் எளிமைப்படுத்தப்படவும், நலவாரியத்தை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  1. மின்சாரம்

மின் கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்படுவது தடுக்கப்படும். மின்சார கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஏற்படும் 30 சத மின்திருட்டு, மின் இழப்பு 10 சதத்திற்கும் கீழாக கட்டுப்படுத்தப்படும்.

மரபுசாரா எரிசக்தி திட்டமான சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒரிசா மாநிலத்தில் புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கத்தை மறு ஒதுக்கீடு பெறவும், அதைப் பயன்படுத்தி கூடுதல் மின்சாரம் பெறவும் உபரி மின்சாரத்தின் மூலம் அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருமானம் ஈடுபடவும் முயற்சிக்கப்படும்.

வீடுகளில் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்து பயன்படுத்த ஊக்கப்படுத்தப்படும். அதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும். ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் மின்சார சட்டம்(2003) ரத்து செய்ய வலியுறுத்தப்படும்.

  1. போக்குவரத்து

        புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 6265 சாலைவிபத்துக்களில் 1076 பேர் மரணமடைந்துள்ளனர். இது சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தாத ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.  போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண, தொலைநோக்கு பார்வையோடு திட்டங்கள் உருவாக்கிட வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்.

        சென்னையில் இருந்து மகாபலிபுரம் வழியாக கடலூருக்கு இரயில் போக்குவரத்து திட்டம் செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தப்படும்.

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் ஆகிய நகரங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தை ஒழுங்குபடுத்தி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்து போகாத கிராமங்களுக்கும் பேருந்து வசதிகள் உறுதிசெய்யப்படும்.

  1. வீட்டு வசதி

        வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்கு மனைப்பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்க செயல்திட்டம் உருவாக்கப்படும். தகுதியான பயனாளிகள் குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தி வெளிப்படைதன்மையுடன் பட்டியல் தயாரிக்கப்படும். பட்டா மாறுதல் செய்து தரும் பணி எளிதாக்கப்படும்.

        அரசு புறம்போக்கு நிலங்கள், தரிசு நிலங்கள் எவ்வளவு, எவ்வளவு நிலம் ஆக்கிரமப்பில் உள்ளது என்பது குறித்து ஆய்வுச் செய்யப்படும். அரசு புறம்பொக்கு இடங்களில் குடியிருக்கும் ஏழைகளுக்கு பட்டா வழங்கப்படும்.

  1. சுற்றுச்சூழல்

        புதுச்சேரியின் சுற்றுச்சூழலை பாதுகாத்திட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

        புதுச்சேரியின் ஆறு, ஏரி வாய்க்கால்களை தூர்வாறி நீர்நிலைகள் பாதுகாக்கப்படும். நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆறுகளில் மணல் எடுப்பது கட்டுப்படுத்தப்படும்.

        காரைக்காலில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கவும், புதிய ஏரிகள் வெட்டவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் சேகரிப்பிற்கு உரிய திட்டம் வகுத்து செயல்படுத்தப்படும்.

        மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், மின்னணுக்கழிவுகள், ஏரி, வாய்க்கால்களில் கொட்டப்படுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் பொருள் பயன்பாடும் மட்டுப்படுத்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எடுக்கப்படும். சுற்றுசூழலை பாதுகாப்பு மக்கள் இயக்கமாக மாற்றப்படும்.

  1. மாநிலத்தில் சமச்சீரான வளர்ச்சி

        புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களும் தனித்தனிப் பகுதிகளாக அமைந்துள்ளபோதிலும் மாநிலத்தில் சமச்சீரான வளர்ச்சி உறுதிசெய்யப்படும். 4 பிரதேசங்களிலும் முன்னுரிமை அளிக்க வேண்டிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தப்படும். பிராந்தியங்களுக்கிடையேயான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த, கலாச்சாரம், பண்பாடு விளையாட்டு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2011ல் மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிப்பட்டு என்.ஆர். காங்கிரஸ் அரசு அமைந்தது. கடந்த 5 ஆண்டு கால என்.ஆர். காங்கிரஸ் அரசு காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கு நிவாரணம் அளிக்கிற வகையில் செயல்படவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளையும், எண்ணங்களையும் பிரதிபலிக்கவில்லை. மாறாக முந்தைய காங்கிரஸ் ஆட்சியை அப்படியே பிரதிபலித்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தவில்லை. அனைத்து துறைகளிலும் என்.ஆர். காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துவிட்டது.

காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் தவறான கொள்கையால் 2007ல், ரூ.2300 கோடியாக இருந்த மாநில அரசின் கடன் கடந்த 8 ஆண்டுகளில் 6700 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் அரசு நலத்திட்டங்களில் வெட்டும், மாநில வளர்ச்சியில் பின்னடைவும் ஏற்பட்டுள்ளன.

மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கு 15 கிலோ, சிவப்பு ரேஷன் 25 கிலோ இலவச அரிசி என்ற தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக 10 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்பட்டன. அதுவும் கூட 20 மாதங்கள் மட்டுமே அரிசி வழங்கப்பட்டன. நடைமுறையில் இருந்துவந்த ரொட்டிப்பால் திட்டம், மாணவர்களுக்கு பாக்கெட் மணி திட்டங்கள் கைவிடப்பட்டன. மாற்றுத்திறனாளிக்கு மாதம் 15 கிலோ அரிசி திட்டத்தில் 16 மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்த கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், திருட்டு சம்பவங்கள் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்கிறது. 5 ஆண்டு ஆட்சியில் 143 கொலைகள் நடந்துள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் கடந்த 3 ஆண்டுகளில் 96 வழக்குகள் பதிவாகியுள்ளன. சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் – பாலியல் உறவு கொண்ட 8 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவ்வழக்கை மத்திய புலனாய்வுக் கழகத்திடம் ஒப்படைக்க என்.ஆர்.காங்கிரஸ் முன்வரவில்லை. இதனால் பல அரசியல் பிரபலங்கள், அதிகாரிகள் தப்பவைக்கப்பட்டனர்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 90 புதிய மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்க முடிவெடுத்தது. மார்க்சிஸ்ட் கட்சி சென்னை உயர்நிதிமன்றத்தில் தொடந்த வழக்கால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் தனியாருக்கு புதிய உரிமம் வழங்கவும் தடைசெய்தது. ஆனால் என்.ஆர். காங்கிரஸ் அரசு 50க்கும் மேற்பட்ட அரசு சார்பு மதுக்கடைகளை நகரம், கிராமம் என பரவலாக திறந்துள்ளது. மதுக்கடை விரிவாக்கம் இளம் விதவைகள், அனாதை குழந்தைகள் அதிகரிக்கச் செய்துள்ளது. மாணவர்களும் மதுப்பழக்கத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

விவசாயம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 5000 ஹெக்டேர் நிலங்கள் விவசாயம் சாராதவற்றிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. நிலவணிகம் விளைநிலங்களை தின்று தீர்ந்துவிட்டன. கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய ரூபாய். 18 கோடி வழங்கப்படாமல் மாநிலத்தில் உள்ள இரு சர்க்கரை ஆலைகளும் முடப்பட்டுள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்த ஆலை மூடல், என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்கிறது. புதிய தொழிற்சாலைகள் துவங்கப்படவில்லை. 2006ல் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தொழிற்சாலைகள் துவங்கப்படவில்லை. 2011ல் மூடிய ரோடியர் பஞ்சாலை திறக்கப்படவில்லை. 2008 முதல் 2015 வரை ஓய்வுபெற்ற பஞ்சாலை தொழிலாளர்கள் 1128 பேருக்கு பணிக்காலப் பயன்கள் வழங்கப்படவில்லை.

சட்டவிரோத பணி நியமனத் திணிப்பு ஒருபுறம், மறுபுறம் அரசு சார்பு துறைகளில் பணியாற்றும் சுமார் 5000 ஊழியர்களுக்கு பல மாதம் சம்பளம் வழங்கப்படாத நிலைத் தொடர்கிறது. காங்கிரஸ் ஆட்சியைப் போலவே, என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியிலும் நலத்திட்டங்கள் மற்றும் அரசு, தனியார் கூட்டுத் திட்டங்களிலும் ஊழல், முறைகேடுகள் தொடர்கின்றன.

வரி உயர்வால் புதுச்சேரியில் அனைத்துப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வணிகம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு என மக்கள் மீது நிதிச்சுமையை ஏற்றப்படுகிறது.

அனைவருக்கும் கட்டாய கல்விச் சட்டம் செயல்படுத்தவில்லை . தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணக் கொள்ளை , கட்டாய நன்கொடைகள் கட்டுபடுத்தவில்லை. முறைசாரா தொழிலாளிக்கு நலவாரியம் அமைக்கவில்லை.

என்.ஆர். காங்கிரஸ் அரசு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி ஜனநாயக செயல்பாட்டை உறுதிப்படுத்த  முன்வரவில்லை. மாறாக முன்னெப்போதும் இல்லாத வகையில் 27 வாரியத் தலைவர்களை நியமித்து தேவையற்ற நிர்வாக சீர்கேட்டையும், செலவினத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி பெரும்பாலும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடராகவே நடைபெற்றுள்ளன.  மிக குறுகிய நாட்களே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றதால் மக்கள் பிரச்சனைகள் அதிகம் விவாதிக்கப்படவில்லை. காங்கிரஸ், திமுக, அதிமுக ஆக்கப்பூர்வமான எதிர்கட்சிகளாகவும் செயல்படவில்லை.

ஆகவே, என்.ஆர்.காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுகட்ட மாநில மக்கள் முன்வரவேண்டுமென வேண்டுகிறோம்.

புதுச்சேரி மாநிலத்தில் அதிக ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ், காங்கிரஸ் ஆட்சியிலும் மாறி மாறி அங்கம் வகித்த திமுக, அதிமுக கட்சிகளை மற்றும் தனித்தனியாகவும் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். மதவெறி பாஜக, மற்றும் சாதி அரசியலுக்கு வழிவகுக்கும் பாமகவை தனிமைப்படுத்திட வேண்டுகிறோம்.

மக்கள் நலன் சார்ந்த மாற்றுக் கொள்கை, மாற்று செயல்திட்டத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள மக்கள் நலக்கூட்டணி – தேமுதிக – தமாக அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறோம்.

இலாசுப்பேட்டை, திருபுவனை, பாகூர், நிரவி-திருமலைராயன்பட்டினம் ஆகியத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறோம்.

மக்கள் நலக்கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக மற்றும் தேமுதிக கட்சி வேட்பாளர்களுக்கு அவரவர்கள் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டுகிறோம்.

Leave a Reply