சிபிஎம் சார்பில் டிசம் 25 முதல் 30 வரை நடைபயண இயக்கம்

பத்திரிக்கை செய்தி:-

கட்சியின் பிரதேச குழு கூட்டம் 10 /12 /2017 ல் செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வம் தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி மக்களின் கோரிக்கையினை ஆட்சியாளர்கள் நிறைவேற்றிட வலியுறுத்தி டிசம்பர் 25 முதல் 30 வரை காரைக்கால் உள்ளிட்டு புதுச்சேரி முழுவதும் மக்கள்நலன், மாநில வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன்வைத்து நடைபயண இயக்கத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மக்கள் பிரச்சனைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அரசு சார்பு நிறுவனங்களில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மாதக்கணக்கில் சம்பளம் வழங்கப்படவில்லை. மக்கள் நல திட்டங்கள் மற்றும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட உத்தரவுகள் அமுல்படுத்தப்படவில்லை. ரேஷன் அரிசி, நூறு நாள் வேலை, விவசாயிகளின் விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம், பயிர்கடன் ரத்து, வறட்சி நிவாரணம் போன்றவை அமுலாக்கப்படவில்லை. மின் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவைகள் பல மடங்கு அரசு உயர்த்தியதன் காரணமாக அனைத்து பகுதி மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். விவசாயத்தொழிலாளர்கள், கிராமப்புற ஏழை மக்கள் நூறு நாள் வேலைக்காக தவித்து கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி மக்கள் ஆட்சியாளர்களிடம் வாழ்வில் அமைதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவைகளை பற்றி ஆட்சியாளர்களும், அதிகாரத்தில் உள்ளவர்களும் சிந்தித்ததாக தெரியவில்லை. துணைநிலை ஆளுநர் பா.ஜ.க கட்சி தலைமையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது, அரசின் செயல்பாட்டை முடக்குவது என்று செயல்பட்டு வருகிறார். நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் இது அப்பட்டமாக வெளிப்பட்டது. தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக கூறி வரும் இவர் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கடந்த கால ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கையின் காரணமாக மாநிலத்தின் கடன் சுமை 8000 கோடியாக அதிகரித்துள்ளது. மத்திய அரசிடமிருந்து தேவையான நிதியினை பெற ஆளுநர் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. ஆளும் அரசும் அமைச்சர்களும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியாக எதையும் மேற்கொள்ளவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நலத்திட்டங்களை அமுல்படுத்துவதில் ஆளுநரை கையை காட்டி தங்கள் கடைமையை தட்டி கழித்து வருகின்றனர். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்கள் தலையில் சுமைகளை ஏற்றிவருகின்றனர்.

பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., நவீன தாராளமயகொள்கை அமுலாக்கம், உணவு உரிமை பறிப்பு போன்ற மத்திய பி.ஜே.பி.அரசின் நாசகார திட்டங்களால் வாழ்க்கை சுமையினை சமாளிக்கமுடியாமல் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரிக்கு வந்த பா.ஜ. க தேசிய செயலாளர் எச். ராஜா புதுச்சேரி ஆளுநரின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் பேசி பா.ஜ. க வின் வன்முறை அரசியலை வெளிப்படுத்தி உள்ளார். அமித்ஷா முடிவெடுத்தால் புதுச்சேரியில் இன்றே பா.ஜ. க ஆட்சி என மக்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டல்களை வெளியிட்டுள்ளார். ஜனநாயகத்தை கேள்வி கூத்தாக்கும் இத்தகைய கருத்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும் புதுச்சேரி நிதி நிலைமை சீராக்கப்படவும், புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தவும், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கபடவும், உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணம், குடிநீர் கட்டணம் உயர்வுகள் திரும்ப பெறவும். ரேஷன் கடை மூலம் அத்தியாவசிய உணவு பண்டங்கள் தடையின்றி வழங்கிடவும், முறைசாரா தொழிலாளர்கள் சிறுவணிகர்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோர்களின் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளாட்சி தேர்தலை நடத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ள நடைபயண இயக்கத்திற்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு நல்க வேண்டுகிறோம்.

இவண்,
இரா. ராஜாங்கம்,
பிரதேச செயலாளர்.
12/10/2017

Image may contain: text

Leave a Reply