சிபிஎம் புதுச்சேரி பிரதேச 22வது மாநாட்டு தீர்மானங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு பாகூரில் தியாகி தாண்டவசாமி நினைவரங்கத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்-1

கூட்டாட்சி கோட்பாட்டை சிதைத்து போட்டி ஆட்சி நடத்தும் துணைநிலை ஆளுநரை திரும்ப பெறுக

       LGபுதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் பொறுப்பேற்றது முதல் அதிகார அத்துமீறல்கள் செய்து போட்டி ஆட்சியை நடத்தி வருகிறார்.  தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக பொதுவெளியில் பேசுவதும், அரசின் அன்றாட நட்வடிக்கைகளை முடக்குவதும் தொடர்கிறது. துணைநிலை ஆளுநரின் இந்த செயல் அரசியலமைப்பு சட்டம்  வழங்கியுள்ள கூட்டாட்சி கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானதாகும்.

கடந்த 09.11.2017 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நிதிபதிகள் சிக்ரி கான்வில்கர், சந்திரசூட், அசோக் பஷன் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் டெல்லி யூனியன்  அரசு தொடர்ந்த வழக்கில் முக்கியதுவம் வாய்ந்த தீர்ப்பைவழங்கி  உள்ளது. அதில் சட்ட   விதிகளுக்கு  உட்பட்டு கவர்னர் நடந்து கொள்ளவேண்டும்.

அரசு ஒரு முடிவுவை எடுக்கும்போது அதுபற்றி கவர்னருக்கு தகவலாக தெரிவிக்க வேண்டும் ஆனால் அனைத்து விஷயங்களும் தனது ஆலோசனைக்கு கொண்டுவரவேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கவர்னர் தலையிட கூடாது.

அதேபோல் அரசு அன்றாடம் எடுக்கும் முடிவுகளுக்கும் தடைவிதிக்க கூடாது அரசு எடுக்கும்  முடிவு என்பது தனிநபர் எடுக்கும் முடிவு அல்ல அமைச்சர்கள், முதலமைச்சர்  கூடி ஒரு முடிவு எடுக்கிறார்கள் அதைத்தடுக்கும் வகையில் செயல்பாடுகள் இருக்க  கூடாது. கவர்னருக்கு மாற்று கருத்து இருக்கிறது என்பதற்காக அரசின் அனைத்து முடிவுகளை  தடுக்க கூடாது.

புதுச்சேரி காங்கிரஸ் அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை ரீதியாகவும்,நடைமுறை பிரச்சனைகளிலும் முரண்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் செயல்பாட்டை முடக்குவதை ஜனநாயகம் கேலிகூத்தாக்ப்படுவதை அனுமதிக்காது.

 மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் முடிவை செயல்படுத்த ஒத்துழைப்பதும், உதவுவதும் துணைநிலை ஆளுநருக்கு கடமை உண்டு. மேலும் அமைச்சரவைக்கு,  துணைநிலை ஆளுநருக்கும் மாறுபாடு உள்ள விஷயத்தில் ஜனாதிபதியின் வழிகாட்டுதல் பெற்று  செயல்படுத்த யூனியன் பிரதேசங்களுக்கான சட்டம் குறிப்பிடுகிறது. பொதுவாக அமைச்சரவையின்  நிலை ஆளுநரின் அணுகுமுறை என்று மத்திய அமைச்சகம் ஏற்கெனவே வழிகாட்டு தலை வழங்கியுள்ளது. மேற்கன்ட உச்சநீதிமன்ற தீர்ப்பும் உறுதிப்படுத்துகிறது. ஆனால் எதையும்  மதிக்காமல் தன்னிச்சையாக ஆளுநர் செயல்படுவது ஏற்புடையதல்ல  கடும் கண்டனத்திற்குரியதாகும்.

புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றதிலிருந்து  ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோததிட்டங்களை புதுச்சேரியில் அமுல்படுத்தும் விதத்திலும் செயல்பட்டு வருகிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட எனக்கே வானளாவிய அதிகாரம் உள்ளதென கூறுகிறார். பாஜகவை சேர்ந்த மூன்று நபர்களை வரம்புகளை மீறி கவர்னரின் பரிந்துரையின் பேரில் மத்திய பாஜக அரசு   சட்டமன்ற  உறுப்பினர்களாக  நியமனம்  செய்துள்ளது.

நடைமுறை மற்றும் வரம்புகளை மீறி தன்னிச்சையாக இரவோடு இரவாக கவர்னர்  பதவிப்பிரமாணம் செய்துள்ளது கண்டனத்திற்குஉரியதாகும்.  ஆளுநரின் இத்தகைய செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதும் ஜனநாயக படுகொலைக்கு ஒப்பானதாகும். புதுச்சேரி பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக பதவியில் உள்ள அரசு தான் தார்மீக அடிப்படையில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை பரிந்துரை செய்து நியமித்துக் கொள்ளும் நடைமுறை நீண்ட நாட்களாக பின்பற்றப்படுகிறது. மாநில உரிமைகளை கேள்விக்குறியாக்கும் வகையில் துணைநிலை ஆளுநர் செயல்பட்டு வருவது மிகப்பெரிய ஜனநாயக படுகொலையாகும்.

ஆகவே, மத்திய அரசு உடனடியாக ஆளுநர் பதவியிலிருந்து அவரை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் ஜனநாயக மாண்புகள் பாதுகாக்கப்பட அனைத்து  ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச 22வது மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம்-2

மாநில தேர்தல் ஆணையரை நியமித்து உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்திடுக

Localபுதுச்சேரி மாநிலத்தில் 1968 டிசம்பர் 16க்கும் பின் நீண்ட காலம் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் மார்க்சிஸ்ட் கட்சி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால் 2006ஆம் ஆண்டு ஜூலையில் நடந்தது. 2011ல் ஆட்சியில் இருந்த என்.ஆர். காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயலவில்லை.மாறாக என்.ஆர். காங்கிரஸ்  முதல்  அமைச்சரவைக் கூட்டத்தில்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அமைப்புகளிடம் பொறுப்பை ஒப்படைப்பதற்கு மாறாக தனி  அதிகாரிகளை நியமித்து  உள்ளாட்சியை நிர்வகித்திட முடிவெடுத்தது. இந்தப் பின்னணியில் மக்களுக்கு அதிகாரம் மற்றும் ஜனநாயக உரிமை கிடைத்திட மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் 2011 செப்டம்பர் மற்றும் 15.03.2012 தேதிகளில் இரண்டு முறை தீர்ப்பு வழங்கியும் உள்ளாட்சித் தேர்தலை என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடத்த முன்வரவில்லை. மாறாக, என்.ஆர். காங்கிரஸ் அரசு தனது கட்சி ஆதரவாளர் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டளை  மனு தாக்கல் செய்தது.

2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு  இடஒதுக்கீடு வலியுறுத்தப்பட்டது. இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 13.12.2012ல் வழங்கிய  இறுதி தீர்ப்பில் 2 மாதங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை மத்திய அரசிடம் இருந்து பெறுவது, தொகுதி மறுசீரமைப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு செய்து முடித்தவுடன் அடுத்த 3 மாத காலத்தில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில் தொகுதி மறுசீரமைப்பிற்கான கால கெடுவை நீதிமன்றம் நிர்ணயிக்கவில்லை. இதனால் 14.12.2012ல் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் ஆனது.

அன்றைய தினமே வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் 2  மாத காலத்தில் தொகுதி மறுசீரமைப்பிற்கான காலகெடுவை நிர்ணயித்து வழக்கினை முடித்து வைத்தது.

தொகுதி சீரமைப்பு குழு காலம் தாழ்த்தி அமைக்கப்பட்டது. காலம் கடந்தே தனது பரிந்துரையை 16.12.2016ல் அரசுக்கு அளித்தது. ஆனால். என்.ஆர். காங்கிரஸ் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. புதுச்சேரி  மாநிலத்தில் 75% மேல் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். புதுச்சேரியில் இயற்கையாகவே  பிற்படுத்தபட்ட பகுதியினர் தான் மக்கள் பிரதிநிதிகளாகவே தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும்  சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை மத்திய அரசு வெளியிட மறுத்துள்ள நிலையில் என்.ஆர்.  காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் தடுத்திட மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் மூலம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் குடியாட்சி அமைப்பில் முடியாட்சி  அணுகுமுறை ஜனநாயக  விரோத, மக்கள் விரோத அணுகுமுறையாகும்.

2016ல் அதிகாரத்திற்கு வந்துள்ள காங்கிரஸ் அரசும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வரவில்லை. மாறாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணமாக முன்னிறுத்துவது மோசடித்தனமாகும்.

அரசியல் அமைப்பு சட்டத்தில் 73, 74வது திருத்தங்கள்  செய்யப்பட்டு  உள்ளாட்சித்  தேர்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. ” இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் வாழ்கிறது.

நிஜமான ஜனநாயகம் டெல்லியில் இருக்கும் 20 பேரால் நடத்தப்படவில்லை. இந்தியாவின் 7 இலட்சம் கிராமங்களுக்கும் ஜனநாயகம் பரவலாக்கப்பட வேண்டும்” என்ற மகாத்மா காந்தியின் கனவும், திரு.ராஜீவ்காந்தி காலத்தில் கொண்டுவரப்பட பஞ்சாயத்து  ராஜ் சட்டம் 1995 ஆகியவையும் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேறாதது கவலையளிக்கிறது.

ஆகவே, மாநில  அரசு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்ப பெறவும், தொகுதி மறுசீரமைப்பு விபரத்தை அரசிதழில் வெளியிடவும், மாநில தேர்தல் ஆணையரை நியமிக்கவும் மார்க்சிஸ்ட்கட்சி வலியுறுத்துகிறது. அதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அட்டவணையை  வெளியிட்டு தேர்தலை நடத்திட மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச 22வது வலியுறுத்துகிறது.

        Local

தீர்மானம்-3

 பல மாதங்களாக புதுவை அரசின் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள சம்பள பாக்கியையும், அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்படாமல் உள்ள 7வது ஊதியகுழு அமலாக்க நிலுவைத் தொகை மற்றும் கிராக்கிப்படி நிலுவைத் தொகைகளை உடனே வழங்கிடக் கோரும் தீர்மானம்

 புதுவை அரசால் நடத்தப்படும் நிறுவனங்களான விவசாய பண்ணை (கே.விகே) பாசிக், பாப்ஸ்கோ, பாண்டெக்ஸ், வீட்டு வசதி வாரியம், பாண்பேப், பிரதான கூட்டுறவு கைத்தறி சங்கங்கள், ரேஷன் கடைகள், போன்றவற்றில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பல மாதங்களாக, மற்றும் சிலவற்றில் ஆண்டுக்கு மேலும் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்களின் குடும்பங்கள் வறுமையின் விளிம்பில் உழல்கிறார்கள். ஒரு சிலர் இறந்தும் தங்கள் உயிரினை மாய்த்தும் உள்ளார்கள். இந்நிலை சென்ற என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியிலும் இருந்தது. தற்போதைய காங்கிரஸ் அரசிலும் தொடர்கிறது. சம்பள பாக்கியை வழங்கக் கோரி தொடர்ந்து எண்ணற்ற போராட்டங்கள் என். ஆர். காங்கிரஸ் அரசின் போதும் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியிலும் நடத்தப்பட்டன, நடந்து கொன்டும் உள்ளன. ஆனாலும் சம்பள பாக்கி வழங்கப்படவில்லை. மேற்கண்ட நிறுவனங்களை திறமையான நிர்வாக நடவடிக்கைகள் மூலமும், பணியாட்களின் உழைப்புத்திறனை பலனளிக்கும் வகையில் பயன்படுத்துவதன் மூலமும் செழுமையாக நடத்த இயலும். அவ்வகையில் செயல்படுத்தி அந்நிறுவனப் பணியார்ளர்களுக்கு உடனடியாக சம்பள பாக்கியை வழங்கிட வேண்டுமென்று புதுவை அரசினை இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

நிதியில்லை என்று கூறி புதுவை அரசு, தன் ஊழியர்களுக்கும், புதுவை அரசு ஓய்வூதியர்களுக்கும் 7வது ஊதியக்குழு அமலாக்க நிலுவைத் தொகையையும் பஞ்சப்படி நிலுவைத் தொகையையும் வழங்காமல் இருப்பதை ஏற்க இயலாது. எனவே மேற்கண்ட நிலுவைத் தொகைகளை உடனே வழங்கிட வேண்டுமென்று இம்மாநாடு புதுவை அரசை கேட்டுக் கொள்கிறது.

புதுவை அரசால் நடத்தப்படும் எல்லா நிறுவனங்களின் ஊழியர்களுக்கும், புதுவை மாநில உள்ளாட்சித் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் 7வது ஊதியக்குழு அமலாக்க ஆணைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு புதுவை அரசை கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம்-4

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை உறுதியாக முழுமையாக அமலாக்கவும், 150-200 நாட்கள் வேலை மற்றும் ரூ. 400 கூலி உத்தரவாதம் கோரியும், விவசாயத் தொழிலாளர் நலச் சங்கத்தை நலவாரியமாக மாற்றக் கோரும் தீர்மானம்

100மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சி மற்றும் ஆதரவின் மூலம் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி கிராமப்புறா ஊரக வேலை உறுதி திட்டம் (காந்தி கிராமப்புற ஊரக வேலை உறுதி திட்டம் (MNREGA)) 2005ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டு 2007 முதல் அமலாக்கத்தில் உள்ளது. தற்போது உள்ள பாஜக அரசு இத்திட்டத்திற்கு கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதியை படிப்படியாக குறைத்து வருகிறது.

மத்திய அரசு தொடர்ந்து நிதியை வெட்டுவதினால் மாநிலங்களில் இந்த திட்டத்தை அமலாக்குவதில் பல சிரமங்கள் இருப்பினும் 200 நாட்களுக்கான வேலையும் ஒரு நாளுக்கு ரூ.203 என உள்ளதை உயர்த்தி ரூ. 400 வீதம் வேலை வழங்க வேண்டும், அதை நகர்ப்புறங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் என்றும் இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் 60 ஆயிரம் ஹெக்டேராக இருந்த விளைநிலம் தற்போது 18 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் நவீன தாராளமய கொள்கையின் விளைவாலும் ரியல் எஸ்டேட் கல்லூரிகளுக்கு நிலம் மாற்றம் செய்யப்படுவதாலும், விவசாய விளைநிலம் வெகுவாக குறைந்து வருகிறது. விவசாயத் தொழிலை நம்பியுள்ள 150 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி இடம்பெயரும் நிலை உருவாகியுள்ளது. இவற்றை ஓரளவுக்கு ஈடு கட்ட கூடிய வகையில் கொண்டு வரபட்ட கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் மூலம் தற்போது 20 முதல் 30 நாட்கள் வேலை மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வேலைக்கான கூலியும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதும் தொடர்கிறது. புதுச்சேரியில் உள்ள 101 விவசாய கிராமங்களில் உள்ள 60 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு அச்சட்டத்தில் உள்ள 30 வகையான வேலைகளை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். 200 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், ஒரு நாளைக்கு ரூ 400 என வீதம் உயர்த்திடவும், அதை நகர்ப்புறத்திற்கு விரிவுபடுத்தவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மேலும் கடந்த 10 12 ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கப்பட்ட விவசாயத் தொழிலாளர் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும். துவக்க காலத்தில் புதுச்சேரியில் 28758, காரைக்காலில் 6476 உறுப்பினர்கள் அந்தந்த ஆண்டுகளில் புதுப்பிக்கப்படவில்லை. அவர்களையும் புதுப்பித்து விவசாய நலச்சங்கத்தை தொடர்ந்து செயல்படுத்தி நலவாரியமாக மாற்றவும் மார்க்சிஸ்ட் கட்சியின் 22வது பிரதேச மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம்-5

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலை உடனே நடத்திட கோரும்

society புதுவை அரசு கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் தலைமை மற்றும் கீழ்நிலை கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக முறைப்படி தேர்தல் என்பது நடத்தபடவில்லை. புதுவை மாநிலக் கூட்டுறவு வங்கி, நுகர்வோர் கூட்டுறவு இணையம், மாநில கூட்டுறவு ஒன்றியம், கூட்டுறவு பால் ஒன்றியம் (பாண்லே), கிராம பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், கிராம கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளுக்கும் இந்தியன் காபி ஹவுஸ் போன்றவைகளுக்கு தேர்தல் நடத்த ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் விரும்பாத சூழ்நிலையில் தேர்தல் என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

கைநிறைய ஊதியம் பெறும் கூட்டுறவு அதிகாரிகள் ஒவ்வொருவரும் மூன்றிலிருந்து ஐந்து கிராமக் கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டு, சங்கப் பணம் கையாடல் மற்றும் சங்க வாகனங்களை சொத்துக்களை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவதால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிர்வாக குழுவின் தேர்தலில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாத நிலை நிலவி வருகிறது.

சில சங்கங்களுக்கு அமைச்சரின் எடுபிடிகள் தேர்தல் நடத்தாமல் மூன்று பேர் குழு (3 man committee ) அமைத்து சுரண்டும் நிலை உள்ளது. இது போன்ற கூட்டுறவு சங்கங்களில் வேலை வாய்ப்பகத்திற்கு தெரியாமல், கொல்லைப்புறமாக தாந்தோன்றித்தனமான நியமனங்கள் நடைபெறுகின்றன.

எனவே, ஜனநாயக முறைப்படி கூட்டுறவு சங்கங்கள் செயல்பட, உடனடியாக அனைத்து நிலை கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் புதுவை மாநில கூட்டுறவுத்துறை நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது பிரதேச மாநாடு கோருகிறது

தீர்மானம்-6

 காரைக்கால் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கோரும் தீர்மானம்

fisherman issue புதுவை மாநிலம் காரைக்காலில் மீனவர் கிராமங்கள் 11 உள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகின்றது. காரைக்கால் பகுதி மீனவர்கள் நமது நாட்டின் எல்லைக்குள்ளே மீன் பிடிக்க செல்லும்போதும் இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்களது வலைகளை அறுக்கப்படுவதும், தாக்குதலுக்கு உள்ளாவதும் தொடர்கதையாகிறது. இதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்டு கொடுப்பதில் மத்திய மாநில அரசுகள் போதிய முயற்சிகள் எடுக்காமல் அலட்சியம் காட்டப்படுகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் நமது பகுதி மீனவர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவ்வப்போது மாநில அரசு நிவாரணம் வழங்குவதாக அறிவிக்கும். இன்று வரையில் துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர்களுக்கு நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை. அதே போன்று மீனவர்களுக்கு கூட்டுறவு சொசைட்டி மூலம் (குறிப்பாக படகு, வலை, கயிறு, இன்ஜின் போன்றவைகள்) பொருட்கள் மானிய விலையில் வழங்கி வந்ததை கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி விட்டது.

எனவே, காரைக்கால் மற்றும் புதுவை மீனவர்கள் நம் நாட்டின் கடல் எல்லையில் தங்கு தடையின்றி மீன் பிடிப்பதற்கும், அவர்களின் படகுகளுக்கும், உடமைகளுக்கும் உயிருக்கும் உரிய உத்திரவாதமும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கும், மீனவர்கள் மானிய விலையில் பொருட்கள் வாங்குவதற்கு நிறுத்தப்பட்டுள்ள கடன் உதவிகளை உடனடியாக வழங்கிடவும் புதுவை பிரதேச 22வது மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம்-7

 தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் போக்கை கைவிட கோரும் தீர்மானம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேவைக்கும் அதிகமாக தனியார் பள்ளிகள் மிக அதிகமாக உள்ளதால் புதுச்சேரி அரசும் கல்வித்துறையும் மேலும் புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி தரக் கூடாது என்றும் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

அதே நேரத்தில் உயர்கல்வித் தகுதிகளுடன் பணியாற்றுகின்ற தனியார் பள்ளி தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டுமென்றும், அதுவரையில், அரசு தொழிலாளர் துறை அறிவிக்கை செய்துள்ள குறைந்தபட்ச ஊதியமாவது முன்கால தேதியிட்டு வழங்க வழிவகை செய்ய வேண்டுமென்று இம்மாநாடு புதுச்சேரி அரசைக் கேட்டுக் கொள்கிறது.

மேலும் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் உயர அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்திடவும், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவித்தும், ஆய்வாளர்கள் குறித்த கால இடைவெளியில் அரசுப் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு நடத்திடவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியப் பணி இன்றி வேறு வேலைகளுக்கு பயன்படுத்துவதை தடுத்திடவும், அரசு துவக்க பள்ளிகள் உள்ளிட்டவைகளின் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஊழியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட அரசும் கல்வித்துறையும் போதிய நடவடிக்கைகளை எடுத்திடவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

அரசு உதவி பெறுகின்ற பள்ளிகளில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் ஆசிரியர் மற்றும் ஊழியர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், அங்கு பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தையும், பஞ்சப்படியையும் மேலும் கால தாமதமின்றி வழங்கிடவும் மேலும் அரசு உதவி பெறுகின்ற பள்ளிகளில் புதுச்சேரி அரசின் பள்ளி கல்வி சட்டம் மற்றும் விதிகளின்படி அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஊதிய விகிதங்களை 01.01.2016 முதல் முன்கால தேதியிட்டு வழங்கிட புதுவை அரசினை புதுவை பிரதேச 22வது மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம்-8

அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியம் அமைத்து நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்திட கோரும் தீர்மானம்

புதுச்சேரி பிரதேசத்தில் உழைத்து வரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சமூகப் பாதுகாப்பை உத்திரவாதபடுத்தும் வகையில் அவர்களுக்கென நல வாரியம் அமைக்கப்பட வேண்டுமென கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அருகாமை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா ஆகியவற்றில் தொழில்வாரியான நலவாரியங்கள் அமைத்து இயங்கி அவர்களுக்கு ஓய்வூதியம் மருத்துவ உதவி ஆகியவைகள் கூட தந்து வரும் சூழ்நிலையில் புதுச்சேரியில் நலவாரியம் அமைக்காமல் தொழிலாளர்களை புதுவை அரசு வஞ்சித்து வருகிறது. இந்த ஆண்டின் பட்ஜெட் உரையில் அமைப்புசாரா நல வாரியம் அமைக்கப்படுமென்று முதல்வர் அறிவித்தார். ஆனால் இன்றுவரை அந்த அறிவிப்பு வெற்று அறிவிப்பாக நலவாரியம் அமைக்கப்படாத நிலையே நீடிக்கிறது.

எனவே, அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் உடனடியாக அமைத்து, அந்த வாரியத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடும் செய்து செயல்படுத்திட  புதுவை அரசினை புதுவை பிரதேச 22வது மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம்-9

 புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமையும் மற்றும் ஜனநாயக உரிமைகள் கிடைத்திட கோரும் தீர்மானம்

புதுச்சேரியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை பல்வேறு இடங்களில் மறுக்கப்படுகிறது. அதையும் மீறி சங்கம் அமைக்கும் இடங்களில் தொழிலாளர்கள் பழிவாங்கப்படும் நிலை, குறைந்தபட்ச கூலி சட்டம் கூட பல தொழிற்சாலைகளில் அமல்படுத்தப்படுவதில்லை. மிக குறைந்த கூலிக்கு வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல் அவர்களது உரிமைகள் மறுக்கப்படும் அவலம், ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தொழிற்சாலைகளில் உரிமம் பெறுவதில் ஒப்பந்ததாரர்கள், அரசியல் பிரமுகர்கள் இடையே போட்டி ஆகிய அவலங்கள் தொழிற்சாலைகளில் நிலவுகின்றன. சமீபத்தில் ஒரு ஒப்பந்ததாரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இதன் தீவிரத்தை உணர்த்துவதாகவே உள்ளது.

எனவே, உள்ளூர், வெளியூர் ஒப்பந்த தொழிலாளர்கள் பாதுகாக்கப்படவும், அவர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட சட்டப்பூர்வமான சலுகைகள் வழங்கப்படுவதை உத்திரவாதப்படுத்தவும், அரசியல் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகள் தொழிற்சங்கம் அமைப்பது உட்பட இவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு புதுச்சேரி அரசினையும், தொழிலாளர் துறையையும் புதுவை பிரதேச 22வது மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்-10

புதுச்சேரி கரும்பு விவசாயிகளை பாதுகாப்பதற்கு இரண்டு சர்க்கரை ஆலையையும் இயக்குவது, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனே வழங்கிட கோரும் தீர்மானம்

புsugarதுச்சேரி மாநிலத்தில் ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலையும், ஒரு தனியார் சர்க்கரை ஆலையும் உள்ளது. ஆனால் இரண்டு ஆலையும் தற்போது இயங்காமல் உள்ளன. மேலும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கு சுமார் ரூ.13 கோடியே 30 இலட்சம் பாக்கி வைத்துள்ளது. இந்த ஆண்டு (2016-17) மட்டும் விவசாயிகளிடம் வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ. 3 கோடியை வங்கிக்கு அனுப்பாமல் உள்ளது. விவசாயிகளுக்கு ரூ. 7 கோடி ரூபாய் பாக்கி ஆலை நிர்வாகம் வைத்துள்ளது. விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனை ஆலை நிர்வாகம் பிடித்தம் செய்தும் வங்கிக்கு செலுத்தாததால் புதுச்சேரி மற்றும் தமிழக விவசாயிகள் அபராத வட்டி மற்றும் மறு லோன் வாங்க இயலாத நிலை உள்ளது. வங்கியும் இந்த ஆலையை நம்பி விவசாயிகளுக்கு கடன் கொடுக்க மறுக்கிறது. கடந்த காலங்களில் நல்ல நிலையில் இயங்கி லாபத்தை ஈட்டிய இந்த ஆலை கடந்த ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட மூவர் குழு நியமனத்திற்கு பிறகு நிர்வாக சீர்கேடு, ஊழல் காரணமாக தற்போது நட்டத்தில் இயங்கி வருகிறது.

மேலும் அந்த காலத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் சம்மந்தமாக விசாரணைக்கு உட்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு சேர வேண்டிய பாக்கித் தொகையை வட்டியோடு வழங்கி ஆலையை திறம்பட இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் 30 கோடி நிதி ஒதுக்கி வெட்டி அனுப்பிய கரும்புக்கு உடனுக்குடன் பணம் கிடைக்க உத்திரவாதம் அளித்தால் விவசாயிகள் கரும்பு வெட்டி இந்த ஆலைக்கு அனுப்புவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரி மாநிலம் அரியூர் இஐடி பாரி தனியார் சர்க்கரை ஆலை புதுச்சேரி அரசு அறிவிக்கும் கரும்பு விலையை (டன் ஒன்றுக்கு ரூ.2950) தர மறுப்பதோடு விவசாயிகள் அனுப்பிய கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2400 தருவேன் என்று கொடுத்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக அரியூரில் உள்ள ஆலையை இயக்காமல் இந்த ஆலைக்கு பதிந்த கரும்புகளை நெல்லிக்குப்பம் ஆலைக்கு அனுப்பி அரவை செய்கின்றனர். இதனால் மாநில அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகளும் கூடுதல் செலவை சந்திக்க நேரிடுகிறது.

எனவே, புதுச்சேரியில் கரும்பு பயிர் செய்யும் விவசாயிகளை பாதுகாக்க அரியூர் ஆலையை துவக்கவும், இல்லையேல் அரசு ஏற்று நடத்தவும் அரசு அறிவித்த விலையை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை பிரதேச 22வது மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்-11

புதுவையில் உயர்கல்வி குறித்த தீர்மானம்

Higher education புதுவை உயர்கல்வியில் அரசு சார் கல்வி நிலையங்கள் குறைவாகவும், தனியார்துறை கல்விகூடங்கள் அதிகரித்த வண்ணம் இருப்பது, கல்வி வணிகமயமாதல் உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளது. பள்ளி இறுதி கல்வி தேர்வு பெறுவோர் எண்ணிக்கைக்கும், நிலவும் மேற்படிப்பு வாய்ப்புக்குமான இடைவெளி அதிகரித்துள்ள சூழலில் ஏராளமான ஏழை மாணவர்களின் மேற்கல்வி கனவு கருகி வருகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டு பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பல புதிய பாடப்பிரிவுகளுக்கான தேவையிருந்த போதும் உள்கட்டுமான குறைபாடுகள் மற்றும் விரிவாக்கமின்மையால் உயர்கல்வி தேங்கி நிற்கிறது. வரும் கல்வியாண்டிலேயே புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றை துவங்க வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது. மேலும் சொசைட்டியின் கீழ் இயங்கிவரும் கிராமப்புற கல்லூரிகளின் விரிவாக்கத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில பல்கலைக்கழகத்திற்கான கோரிக்கை பலகாலமாக மக்கள் மத்தியில் வலுவாக உள்ள சூழலில், மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மாணவர்களுக்கான வாய்ப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், புதுவை மாணவர்களின் கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகளை மனதில் கொண்டு உடனடியாக மாநில பல்கலைகழக உருவாக்க பணிகளை அரசு துவங்க வேண்டும்.

தனியார் மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளின் கட்டண முறைப்படுத்துதல், மற்றும் மாணவர்கள் சேர்ப்பு முறைகளை முறைப்படுத்துதலில் அரசு தன் பொறுப்பு உணர்ந்து செயலாற்றிட வேண்டும் எனவும் புதுவை பிரதேச 22வது மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம்-12

புதுச்சேரி சுற்றுச்சூழலில் அரசின் தலையீடு கோரும் தீர்மானம்

இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுத்து சென்றிட கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்திட இம்மாநாடு புதுச்சேரி அரசை கேட்டுக் கொள்கிறது  :

  1. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து இடங்களில் தீவிரமான முறையில் பொதுமக்களையும், பொதுநல அமைப்புகளையும் அணிதிரட்டி மரம் மற்றும் காடு வளர்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமல்படுத்திட வேண்டும்.
  2. நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்திட பெருமளவில் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
  3. காலாகாலத்தில் ஏரிகளையும் குளங்களையும் தூர்வாரி பராமரிப்பதோடு, ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வாய்க்கால்களையும், தூர் வாரியும் அவைகளின் மீதான ஆக்கிரமிப்புகளையும் கண்டுபிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  4. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் சூழலில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் விரிவாக அரசு எடுத்து செல்ல வேண்டும். அனைத்து கட்டிட வளாகங்களிலும் மழைநீர்ச் சேமிப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். இனிவரும் காலங்களில் ஒவ்வொரு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகு, கட்டிடம் திறந்து குடியிருக்க பயன்படுத்துவதற்கு முன், மழைநீர் சேமிப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்று இறுதிபடுத்திய பிறகே, குடியிருப்பு சான்று புதுச்சேரி நகர குழுமம் வழங்க வேண்டும்.
  5. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் உள்ள பெரும் கல்வி வளாகங்களில் விழும் மழை நீரை அந்தந்த வளாகளங்களிலேயே சேமித்து நிலத்தடி நீரை பாதுகாத்து உயர்த்திட அனைத்து நிறுவனங்களையும் அரசின் வேளாண்துறை நிலத்தடி நீர் பிரிவு வழியாக அறிவுறுத்த வேண்டும்.
  6. நச்சுபுகை கட்டுப்படுத்துதல், தொழிற்சாலை கழிவுகளை முறையாக கையாளுதல், ஆகியவை குறித்து உள்ள சட்டங்களை அமலாக்குவதில் அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உறுதி காட்ட வேண்டும் என புதுவை மாநிலத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்திட புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம்-13

புதுவை அரசே தமிழ் ஆட்சி மொழிச்சட்டத்தை அமல்படுத்துக !

Tamilபுதுச்சேரி யூனியன் ஆட்சிப்பரப்பில் 93.3 சதவீதம் மக்கள் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டுள்ளனர். நடுவனரசு சட்டம் 34ம் பிரிவின்படி மத்திய அரசு நேரடியாக நிர்வகிக்கும் பகுதியிலும் அப்பகுதி மக்களின் தாய்மொழியே அலுவல் மொழியாக இருக்க வேண்டுமெனச் சொல்கிறது. ஆட்சிப்பரப்பின் வேறு பகுதிகளிலும் அலுவல்மொழியாக அந்தந்த மக்கள் பேசும் மொழியாக இருக்கலாம் எனவும் கூறுகிறது. மேற்கண்ட சட்டத்தின் அடிப்படையில் புதுவை மாநிலத்தில் ஆட்சி மொழி தமிழே ஆகும்.

1969ஆம் ஆண்டு இச்சட்டத்தின் அடிப்படையில் அப்போதைய அமைச்சரவை தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்த 89 துறைகளுக்கு ஆணை பிறப்பித்தது. வேற்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உயர் அதிகாரிகளாக இருந்த காரணத்தினால் அந்த ஆணை அமல்படுத்தப்படவில்லை. தமிழ் தெரியாத அதிகாரிகள் 3 மாதத்தில் தமிழ் கற்று தமிழ் மூலம் மக்களோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்ற உத்தரவும் அமலாகவில்லை. நாளடைவில் தமிழ்மொழி பேசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் ஆணையும் காணாமல் போனது.

நடுவண் அரசு சட்டம் 34 பிரிவின்படி  எல்லா துறைகளுக்குமோ அல்லது சில துறைகளுக்குமோ தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். தேவைப்படின் ஆங்கிலத்தை பயன்படுத்தலாம். மாஹே, ஏனாம் பகுதிகளில் அந்தந்த பிரதேச மொழியோ தேவை ஏற்படின் ஆங்கிலம் பயன்படுத்தலாம். ஆங்கிலம் பயன்படுத்த கட்டாயமில்லை. ஒட்டுமொத்தமாக தமிழ் ஆட்சி மொழி என்பதே. தமிழ், பிரஞ்சு, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளும் ஆட்சி மொழியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அரசும் அதிகாரிகளும் புதுச்சேரி மொழிகளை உதாசீனப்படுத்தி ஆங்கிலத்தை மட்டுமே ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்துவது பிரதேச மக்களை அவமதிப்பதாகும்.

இம்மாநிலத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தமிழ் வளர்ச்சி சிறகம் செயல்படாமல் மூடு விழா கண்டது. இதற்காக மூத்த தமிழ்மொழி அறிஞர்கள் தாங்கள் பெற்ற விருதுகளையும், ரொக்கத்தொகையினையும், புதுவை அரசிடமே திருப்பிக் கொடுத்த அவலமும் நிகழ்ந்தது. தமிழ்மொழிக்கான அமைப்புகள், கலை இலக்கிய அமைப்புகள், தமிழறிஞர்கள் தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை அமல்படுத்தக் கோரி தொடர்ச்சியாக இயக்கங்களை நடத்தியது. பத்திரிகைகள் வாயிலாகவும் வலியுறுத்தி கட்டுரைகள் வந்தன. ஆட்சியாளர்கள் கேளாச் செவியினராகவே இருந்தனர்.

தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை அமல்படுத்த எவ்விதமான முயற்சியையும், ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை. புதுச்சேரியில் பெரும்பாலான அலுவலகங்களில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக கோலோச்சுகிறது. இந்நிலையை போக்கிட புதுச்சேரி அரசு உடனடியாக தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை அமல்படுத்தி தமிழ் மொழி வளர்ச்சி துறையை உருவாக்கிட வேண்டும். ஏற்கெனவே இயங்கி வந்த “தமிழ்மொழி வளர்ச்சி சிறகம்” தொடங்கப்பட வேண்டும்.

மக்களாட்சி நெறியை மேம்படுத்தவும் புதுச்சேரி பெரும்பான்மை மக்களின் தாய்மொழியான தமிழ் புதுச்சேரி மாநிலத்தில் செழித்து ஓங்க புதுச்சேரி ஆட்சி மொழி சட்டத்தை அமல்படுத்த புதுவை பிரதேச 22வது மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம்-14

புதுவை அரசே புதுவை மாநில சுகாதாரத்திற்கு அதிக செலவிடுக, காண்ட்ராக்ட் முறையில் மருத்துவர்கள், ஊழியார்கள் பணிக்கு அமர்த்துவதை கைவிடுக

சுகாதாரம் என்பது வெறும் நோயற்ற வாழ்வு மட்டுமல்ல, அது சுற்றுப்புற தூய்மை, மனமாற்றம் உடல் ஆரோக்கியத்தின் நிலைதான் என்பது உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது.

நோயற்ற வாழ்வே! குறைவற்ற செல்வம்! எனும் முதுமொழிக்கேற்ப மக்களின் சுகாதாரம் அவர்கள் செல்வத்தில் அளவுகோலாக மாறியுள்ளது என்பது சுகாதாரத்திற்கான நிதி செலவினத்தில் 80% சதமானத்தை மக்களே எதிர்கொள்கிறார்கள். அதற்காக தங்களின் வாழ்நாள் சேமிப்புகளையும், உடமைகளையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதன் மூலம் தெளிவாகிறது. புதுவை மாநிலத்தில் கழிப்பறைகள் வசதி என்பது 65% தான் என்று என்றும் இது கிராமப்புறத்தில் வெறும் 46% தான் என்று ஒரு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

60 வயதுக்குட்பட்டவர்கள் கிட்டத்தட்ட 50 சதமானத்திற்கும் அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் இரத்த சோகை நோயினால் பதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 86% பேர் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதயநோய், சுவாசமண்டல நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்று அல்லாத நோய்களால் பாதிக்கப்படுகின்ற நமது மாநில மக்களின் எண்ணிக்கை மிக அதிகாமக உயர்ந்து வருகிறது. மேலும் 60 சதமான உயிரிழப்புகள் இந்த நோயால் ஏற்படுகின்றன. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மேலும் நமது புதுவை மாநிலம் வாய் மற்றும் தொண்டை புற்றுநோயில் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. ஒரு இலட்சம் ஆண்டுகளில் 8.9 பேருக்கு இந்நோய் உள்ளது.

மேலும் அரசு சுற்றுப்புற தூய்மையை பராமரிக்காதது, திறந்த வெளி கழிப்பிடங்கள் மற்றும் நோய் தடுப்பில் போதிய கவனம் செலுத்தாதும் சுகாதாரத்திற்கான நிதியை ஆண்டு தோறும் குறைத்து வருவதும் டெங்கு போன்ற நோய்கள் மிக வேகமாக பரவ வாய்ப்பாக அமைவதோடு புதுவை மக்களின் சுகாதார குறியீடு மிக மோசமாக பாதிக்கப்படுகிறது.

எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக போதுமான நிதியினை ஒதுக்கி அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான ஆய்வகங்கள், மருத்துவ உபகரணங்கள் நிறுவுவதோடு, மருத்துவப் பணியாளர்களை (மருத்துவர், செவிலியர் உட்பட) காண்ட்ராக்ட் முறையில் பணியமர்த்துவதை கைவிட்டு நிரந்தர பணியமர்த்தி மக்களின் சுகாதாரத்தை பேண காங்கிரஸ் அரசு முன்வர வேண்டும் என இந்த மாநாடு கோருகிறது.

 

தீர்மானம்-15

தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேன்டும் என்பதை வலியுறுத்தி

உலகில் தரமான, மகிழ்ச்சியான கல்வியைக் கொடுக்கும் நாடாக பின்லாந்து விளங்குகிறது. அங்கே எல்லாமே அரசுப் பள்ளிகள்தான். தாய்மொழிவழியில்தான் கல்வி கொடுக்கப்படுகிறது. கியூபா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் உள்ளிட்ட மிகப் பெரும்பான்மையான நாடுகளில் கல்வி தாய்மொழி வழியாகத்தான் அளிக்கப்படுகிறது.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலும் தாய்மொழிவழிக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏன், முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் கூட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அவரவர் தாய்மொழியில் பேச வேண்டும் என்றே அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டிலும், புதுவையிலும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆங்கில வழி கல்விக்கான முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்பட்டு, பல பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகளில் மாணவர்கள் குறைந்து வருகிறது அல்லது தமிழ்வழி வகுப்புகள் மூடப்பட்டு வருகிறது. மாறாக, ஆங்கில வழி வகுப்புகளில் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்களின் புரிதலிலும் குறைபாடு ஏற்படுகிறது; கல்வித் தரமும் குறைந்து மனப்பாடக் கல்வியே மேலோங்கி வருகிறது. தேவையில்லாத மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. பல மாணவர்கள் தன்னம்பிக்கை இழந்து தங்களது கல்வியை இடையிலேயே நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தாய்மொழி வழியில் படித்தவர்கள் பலரும் அறிவுஜீவிகளாக மட்டுமல்லாது (ஏ.பி.ஜே. அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டவர்கள்) சமூகத்திற்கு பயன்பாடு உள்ளவர்களாகவும் உருவாகியுள்ளார்கள்.

எனவே, கல்வி நிலையங்களில் தாய்மொழி வழியிலேயே கல்வி அளித்து சமூகத்திற்குப் பயனுள்ள மக்களை உருவாக்கிட புதுவை அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம்-16

பொதுக்கல்வியை பாதுகாத்து வலுப்படுத்துவதை வலியுறுத்தி

உலகின் மிகப் பெரும்பான்மையான நாடுகளில் பொதுப் பள்ளிகளுக்கே (அரசுப் பள்ளிகளுக்கே) முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அங்குதான் மகிழ்ச்சியான தரமான கல்வி கொடுக்கப்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களுக்கு கல்வியும், மருத்துவமும் கொடுப்பது அரசின் பொறுப்பு. அரசு தன் பொறுப்பைக் கைவிட்டு வருகிறது. அரசுப் பள்ளிகள் சரியாகச் செயல்படாததே இதற்கு காரணம் என்று பொய்யான காரணத்தை அரசு கூறிவருகிறது. அரசுப் பள்ளிகள் தோல்விக்கு ஒரு பக்கம் ஆசிரியரும் இன்னொரு பக்கம் பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகளின் மீதுள்ள மோகமும்தான் காரணம் (அதாவது ஆங்கிலவழிக் கல்வியின் மீது) என்று அரசு ஒரு பொய்யான தோற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது.

தனியார் பள்ளிகளைத் தாராளமாக திறக்க அனுமதி அளித்து ஆங்கிலவழிக் கல்வியையும் மக்கள் மத்தியில் திணித்தது அரசே. திட்டமிட்டு அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்ததும் இந்த அரசுதான். மக்கள் யாரும் இதைக் கேட்கவில்லை. ஒரு சில ஆசிரியர்களின் செயல்பாடு சரியில்லை என்றால், அதைத் கண்காணித்து திருத்துவதற்குப் பதிலாக பொதுக்கல்வியே ஆசிரியர்களால்தான் தோற்றுப் போய்விட்டது என்று சொல்வது அபத்தமாகத்தான் இருக்கும். ஏழை, எளிய மாணவர்களுக்கு குறிப்பாக கிராமங்களில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு, கல்வி இலவசமாகக் கிடைத்தால்தான் அவர்களால் கல்வி கற்க முடியும்.

எனவே, பொதுக்கல்வியைப் பாதுகாக்க வேண்டும்; வலுப்படுத்த வேண்டும் என்று இந்த மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது. இதை நடைமுறைப்படுத்த உதவியாக பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது போல ஆட்சியாளர்கள், அரசின் நிர்வாகத்தின் மேல்தட்டில் உள்ளவர்கள் முதலாக அரசில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று முறைப்படுத்தினால், பொதுகல்வியைப் பாதுகாப்பது என்பத சாத்தியமாக்கும் முதற்படியாக இருக்கும் என்று புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு புதுவை அரசை கோருகிறது.

Leave a Reply