சூறையாடப்படும் புதுச்சேரி அமுதசுரபி நிறுவனம்.

 “கூட்டுறவே நாட்டுயர்வு” என்ற வாக்கியம் கூட்டுறவு நிறுவனங்களில் அனைவரது  கண்ணில் படுமாறு எழுதி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம்.  கூட்டுறவால் நாடு உயர்வு  பெறுகிறதோ இல்லையோ புதுவை அரசில் உள்ள அமைச்சர்ககளும், உயர் அதிகாரிகளும் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள். பெயர்தான் அமுதசுரபி நாளும் பொழுதும் சுரண்டப்பட்டு தற்போது பிச்சை பாத்திரமாக மாறிக் கொண்டிருக்கிறது. அமுதசுரபி நிறுவனத்தை கொள்ளையடிப்பதற்கு வெளியில் இருந்து யாரும் வரவில்லை. அந்த நிறு வனத்திடம் கடன் வாங்கும் புதுச்சேரி அரசின் பல் வேறு அரசு துறைகளே தாங்கள் வாங்கிக்கொண்ட பொருட்களுக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுக்காமல் பல ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை கீழ்வரும் பட்டியல் உங்களுக்கு விளக்கும் : ஏறக்குறைய 6 ரூபாய் கோடி மதிப்பிலான பொருட்கள் அரசு துறைகளால் அமுத சுரபியில் கடனாக வாங்கப்பட்டு பல ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இந்த முறைகேட்டை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அதை செய்யவில்லை. இப்படி வருடக்கணக்கில் வாங்கிய கடனை கொடுக்காமல் இருந்தால் அமுதசுரபி நிறுவனத்தை எப்படி லாபகரமானதாக நடத்த முடியும்?  அமுதசுரபியில்  200க்கும் மேல் வேலைசெய்கின்ற அடிமட்ட ஊழியர்களுக்கு 24 மாதங்களாக சம்பளம்  கொடுக்கப்படவில்லை என்றால் அமுதசுரபி ஊழியர்களும் அவர்களது குடும்பங்களும் எந்த அளவுக்கு அமைச்சர்கள் அறியாதவர்களா?  

பல லட்சங்களை மாதாமாதம் சம்பளமாக, சலுகைகளாக வாங்குகின்ற துணைநிலைஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு   கொஞ்சமாவது இரக்கம், மனசாட்சி இருந்தால் 24 மாதங்களாக சம்பளம் இல்லாமல் நொந்து நூலாகி வரும் இந்த ஊழியர்கள் நிலைமையை எண்ணி வருந்தவேண்டாமா? அவர்களுக்கு விரைந்து சம்பளம் கிடைக்க உடனே  நடவடிக்கை எடுக்க வேண்டும். அமுதசுரபி நிறு வனத்தின் ஒவ்வொரு பிரிவிலும் இதேபோன்று மோச மான நிலைதான் தொடர்கிறது. உதாரணத்திற்கு புதுவை அரசு பெட்ரோல் பங்க் நிறுவனத்தின் நிலையை பாருங்கள் ஆக அரசு பெட்ரோல் பங்குக்கு மட்டுமே வர வேண்டிய கடன் தொகை ஒருகோடிக்கு மேல். அமுதசுரபி நிர்வாகத்தில் 14 மதுபானக்கடைகள் நடத்தப்படுகின்றன.

அங்கு நடக்கும் ஊழலோ ஒருதனி ரகம். வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்ற மது பானங்களான எம்.சி, எம்எச், 5000,2000 போன்றவற்றை அதிகமாக வாங்கி வைக்க மாட்டார்கள். சரியாக விற்பனை யாகாத காலாவதி சரக்குளைத்தான் வாங்கி விற்பார்கள். அந்த சரக்குகளை வாங்கி விற்றால்தானே அதிக கமிஷன் கிடைக்கும்.  அமுதசுரபி நஷ்டமாவதை பற்றி அவர்களுக்கு கவலையில்லை. வியாபாரத்தில் தான் ஊழலோ ஊழல் என்றால் இங்கு வேலை செய்யும் ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதிலும் அமுதசுரபி அதிகாரிகள் தவறுவதில்லை. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு 2019  ஜூலை முதல் 35 மாதங்களாக ஈபிஎப் பங்குத்தொகை கட்டுவதில்லை. இதனால் ஓய்வு பெறும்  ஊழியர்களுக்கு  ஓய்வூதியப்பலன்கள் சரிவர கிடைப்பதில்லை. அதேபோல் 2019 மார்ச் மாதம் முதல் 38 மாதங்களாக ஈஎஸ்ஐ பங்குத் தொகை  கட்டப்படவில்லை.

அதன்   விளைவாக ஊழியர்களோ அவர்களின் குடும்பத்தி னரோ ஈஎஸ்ஐ மருத்துவ வசதி பெற முடியாமல் விரட்டியடிக்கப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட புதுவை அரசு அதிகாரிகள் இதையெல்லாம் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? எடுக்க வேண்டும்.  அமுதசுரபி மற்றும் இதுபோல் உள்ள கூட்டுறவு நிறவனங்களும் முறையாக செயல்பட்டால் தான் மக்களுக்கு தேவையான பொருள்கள் தரமாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும். வேலை வாய்ப்பின்றி கஷ்டப்படும் புதுவை மாநில இளைஞர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என்பதோடு இவற்றில் பணிபுரியும் ஊழியர்களும் அவர்கள் குடும்பங்களும், தங்கள் துயரநிலையிலிருந்து மீளும் வழி ஏற்படும்.  புதுவை மாநில ஆட்சியாளர்கள் உறுதியாக தலையிட்டு கூட்டுறவு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு. S.கோவிந்தராஜன்,  அலுவலக செயலாளர், சிபிஐ (எம்), புதுச்சேரி

கட்டுரையாளர்
S.கோவிந்தராஜன், அலுவலக செயலாளர்,
சிபி( ஐ )எம், புதுச்சேரி.

Leave a Reply