ஜனநாயகத்தை வழிமறிக்கும் கிரண்பேடி – வெ.பெருமாள்

வி.பெருமாள்
V.Perumal

மத்திய அரசு, அரசியல் சார்புடனும், தன்னிச்சையாகவும் செயல்படும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சர்க்காரியா கமிஷன்பரிந்துரைப்படி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவும், மாநில முதல்வரால் பரிந்துரைக்கப்படும் மதிப்புமிக்க 3 நபர்களில் ஒருவரை மாநில ஆளுநராக நியமிக்கவும் மத்திய அரசு முன்வரவேண்டும்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் (16.06.2017) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநரின் ஜனநாயக அத்துமீறல்கள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டுக்கு எதிரான போட்டி ஆட்சியின் விளைவாகவே அதிக அதிகாரம் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஒரு கட்சியும், மாநிலத்தில் வேறொரு கட்சியும் ஆட்சி அமையும் போதெல்லாம் இப்பிரச்சனை முன்னுக்கு வருகிறது. மத்தியில் காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்தபோதும் துணைநிலை ஆளுநரை கருவியாக பயன்படுத்தி தனது அரசியலுக்கு சாதகமான நிலைமை உருவாக்கப்பட்டது. அது பாஜக ஆட்சியிலும் தொடர்கிறது. ஆனால்தற்போது நடப்பது நுட்பமான செயல்திட்டம் கொண்டதும், இதுவரையில் மக்கள் பார்த்திராத அப்பட்டமான கூட்டாட்சி கோட்பாட்டு மீறலுமாகும்.

கிரண்பேடி நியமனம்

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியும்,பாஜகவின் தில்லி முதல்வர் வேட்பாளராகமுன்னிறுத்தப்பட்டு தோல்வியடைந்தவருமான கிரண்பேடி புதுச்சேரி துணைநிலை ஆளுநராக அறிவிக்கப்பட்டார். பெரும்பாலான ஊடகங்கள் கிரண்பேடியின் வாழ்க்கைகுறிப்புகளை வெளியிட்டு சிலாகித்துக் கொண்டன. அதே சமயம், தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பார் என குறிப்பிடவும் தவறவில்லை. ஊடகங்கள் கணித்தது போலவே பதவியேற்புக்கு முன்பாக உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டு சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து நெருக்கடி குறித்து பொதுமக்களுடன் கலந்தாய்வு, அனைத்து மட்ட அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி தூய்மை இந்தியா திட்டத்தினை மேற்கொள்வது; அன்றாட தூய்மைப் பணி குறித்து வாட்ஸப்பில் தகவல் பரிமாற உத்தரவு; ஏரி குளம் கண்மாய்களை பார்வையிடல்; மக்களை சந்தித்து புகார் பெற்று சம்பவ இடத்திலேயே அதிகாரிகளுக்கு உத்தரவு…. என தடாலடியாக அதிகாரத்தை கையெடுத்துக் கொண்டு மாநிலம் முழுவதும் வலம்வரத்தொடங்கினார். ஊடகங்களில் கிரண்பேடியின் நடவடிக்கைகள் அன்றாடச் செய்தியாயின.

முடங்கிய மாநில நிர்வாகம்

துணைநிலை ஆளுநரின் தன்னிச்சையான செயல்பாடு அரசுக்கும், ஆளுநருக்குமான மோதலாக மாறியது. அரசின் முடிவுகள், சட்டமன்ற அறிவிப்புகள் முடங்கின. அதிகாரிகள் மத்தியில் பிளவு ஏற்பட்டது. விவசாய நெருக்கடி, பயிர்கடன் தள்ளுபடி, கிராமப்புற வேலைத்திட்டம், இலவச அரிசி திட்டம், வேலையின்மை, நிதிநெருக்கடி, அரசுஊழியர் சம்பளப் பாக்கி… என மக்கள் பிரச்சனைகள் பின்னுக்கு தள்ளப்பட்டன. அதிகார போட்டியில் மக்கள் நலன்களும், மாநிலவளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகாரம் இழந்த மக்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு சுதந்திரமாக செயல்பட அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்கிறது. ஆனால் புதுச்சேரி அரசு பற்றாக்குறை ஜனநாயகமும், மத்திய அரசால் வழிநடத்தப்படும் அதிகாரமற்ற அரசாகவும் இருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குஅதிகாரமில்லை எனில் மக்களின் வாக்குரிமைக்கு மதிப்பில்லை என்றே பொருள்.பொருளாதார வளர்ச்சிக்கு சுதந்திரமாக திட்டமிடுகிற, வளர்ச்சியின் பயனை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிற ஜனநாயக உரிமையும், அதிகாரமும் இல்லாத எந்த ஒரு மாநிலமும் முன்னேற முடியாது.

ஆட்சி அதிகாரம்யாரிடம் உள்ளது, அவர்கள் யாரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், ஏழை, எளியமக்களுக்கு முன்னுரிமை அளித்து சமுகநலத் திட்டங்கள் அமலாக்கப்படுகிறதா என்பதெல்லாம் முக்கியமான அம்சங்கள்தான். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஜனநாயகம் மற்றும் அதிகாரம் இருப்பது முதன்மையானதாகும்.மாநில அரசு சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதும், ஆட்சியின் சரி, தவறுகளை முறையான வழியில் எதிர்கொள்வதும்தான் ஜனநாயகத்தின் பலம். குறிப்பாக, மக்களை பாதிக்கும் அரசின் கொள்கைக்கு எதிராகபோராடுவதற்கும், புதிய அரசை தேர்ந்தெடுக்கவும் ஜனநாயகம் மக்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது.

ஆனால் போராடும் உரிமை மறுக்கப்படுவதும், போராடும் மக்களை வன்முறையால் ஒடுக்குவதும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் குறைபாடாகும். எனினும் ஜனநாயக உரிமை உறுதியான மக்கள் இயக்கங்களால் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. இந்த ஜனநாயக நிகழ்முறை வழியாக, மக்கள் பங்கேற்போடு சமூக மாற்றத்தை நோக்கிநகரமுடியும். ஆனால் பாஜக செயல்திட்டமும், கிரண்பேடியின் செயலும் ஜனநாயகத்தை வழிமறித்து அதிகாரம் மற்றும் பணபலம் வழியாக பலவந்தமாக புதுச்சேரியில் பாஜககாலூன்ற நடக்கும் முயற்சியாகும். அதன் ஒருபகுதியாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் வருகையும், அவரது பேச்சும் இதைத்தான் வெளிப்படுத்துகிறது.

நுட்பமான செயல்திட்டம்

மக்களாட்சியை முடக்குவதன் மூலம்தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதையும் செய்யவில்லை என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. அரசியல்வாதிகள், ஊழல் பேர்வழிகள், கடவுள்தான் மக்களை காப்பாற்ற வேண்டும், அரசின் அனைத்து முடிவுகளுக்கும் கையெழுத்துப் போட நான் ரப்பர் ஸ்டாம்பு இல்லை……போன்ற ஆளுநரின் ஒருவகையான சாகச அறிக்கைகளால் அரசின் மீது நம்பிக்கை இழக்கச் செய்கிறது. மறுபுறத்தில் ஆளுநர் மாளிகை அதிக அதிகாரம் கொண்ட மையமாகவும், நேர்மை மற்றும் திறன் கொண்ட நிர்வாக அமைப்பாகவும் கட்டமைக்கப்படுகிறது. ஆளுநர் மாளிகையில் மக்களை சந்திப்பது, வாழிடத்தில் மக்களை சந்திப்பது போன்ற அணுகுமுறைகள் மூலம் உளவியல் ரீதியாகபாஜக மீது நம்பிக்கை உருவாக்க முயலுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அமித்ஷாவின் பயணத்திட்டம் அமைந்தது. அமித்ஷா சில சமூக ஜனநாயக இயக்கங்களை சேர்ந்தவர்கள் தனித்தனியாக சந்தித்ததும், அரசின் மீது கடும் குற்றச்சாட்டு எழுப்பியதும் நுட்பமான செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

வேடம் கலைந்தது

மாநில வளர்ச்சி, மக்கள் நலன் என பேசிக்கொண்டே போட்டி ஆட்சி நடத்தும் கிரண்பேடியின் வேடம் கலைந்தது. மக்கள் நலத்திட்டங்களை விரைவுப்படுத்தவும், நிர்வாக வசதிக்காகவும் முதல்வர் மற்றும் துறைசெயலாளர்களுக்கு வழங்கப்பட்ட நிதி அதிகாரத்தை ஆளுநர் ரத்து செய்து உத்தரவிட்டார். அடுத்த அதிரடியாக மாநில அரசின் பரிந்துரையின்றி பாஜக கட்சி தலைவர்கள் 3 பேரைநியமன எம்எல்ஏவாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளார். இதன் மூலம் கிரண்பேடியின் மாநில உரிமைக்கு எதிரான எதேச்சதிகார நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. தான் ஒரு பாஜக கட்சியின் தீவிர ஊழியர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே, அரசியலமைப்புச் சட்டஅந்தஸ்து கொண்ட துணைநிலை ஆளுநர்பொறுப்பில் நீடிக்க கிரண்பேடி தகுதியிழந்துவிட்டார். எனவே அவரே பணியில் இருந்துவெளியேற வேண்டும். அல்லது மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

நியமன சட்டமன்ற உறுப்பினர்கள்

யூனியன் பிரதேச ஆட்சிபரப்பு சட்டம்1963 பிரிவு 3(3)ல் மத்திய அரசு 3 நபருக்கு மிகாமல் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்கலாம். அவர்கள் அரசு ஊழியர்களாக இருக்கக் கூடாது என்று குறிப்பிடுகிறது. மத்தியஅரசு என்பது மாநில நிர்வாகி அதாவது துணைநிலை ஆளுநரை குறிக்கிறது. துணைநிலை ஆளுநர் அமைச்சரவையின் முடிவின்படி நியமன உறுப்பினர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேற்படி விதியின் கீழ் 1985 முதல் நியமன உறுப்பினர்கள் புதுச்சேரியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 1996ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு நேரடியாக புதுச்சேரி மாநில மகளிர் ஆணையத் தலைவராக மேற்குவங்கத்தை சேர்ந்த நபரை நியமித்தது. அதைத் தொடர்ந்து பாஜகவை சேர்ந்தவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க முயற்சித்தது. எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டது.

2011 இல் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மத்திய காங்கிரஸ் அரசு நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்க அனுமதிக்கவில்லை. 2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு நியமன எம்எல்ஏ பதவியை பாஜகவிற்கு வழங்கி, இரண்டு எம்எல்ஏக்களை நியமிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானது. தற்போது பாஜக மத்திய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஒருஎம்எல்ஏ கூட இல்லாத பாஜகவிற்கு 3 நியமனஉறுப்பினர்களை நியமிப்பது எதேச்சதிகாரமாகும். ஆட்சி அதிகாரம், பணபலம் வழியாகபாஜக விரும்புகிற ஆட்சியை ஏற்படுத்த முனைகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரியமும் தொழிலாளர் உரிமை மற்றும் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதில் தனித்துவமும் பெற்ற புதுச்சேரி மக்கள் பாஜகவின் எதேச்சதி கார அரசியலை முறியடிப்பார்கள்.

மோடி அரசின் மாநில உரிமை பறிப்பு

பல மாநிலங்களை ஒன்றிணைந்த கூட்டரசாக மத்திய அரசு அமைந்துள்ளது. மத்திய,மாநில அரசுகளின் உரிமைகள், பொறுப்புகள் வரையறுக்கப்பட்டு மத்தியில் கூட்டாட்சி,மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டை அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால் நடைமுறையில் மத்திய அரசு மாநிலங்களின் அதிகாரங்களை ஆக்கிரமித்துவருகிறது. நிதி மற்றும் சட்ட திருத்தங்கள் மூலம் மாநிலங்களின் உரிமைகளை பறித்துமத்தியில் அதிகாரங்களை குவித்துவருகிறது.

தனது அரசியல் நோக்கத்திற்கு ஏதுவாகமத்திய புலனாய்வு துறை (சிபிஐ), அமலாக்கப்பிரிவுகளை பயன்படுத்திவருகிறது. மோடி அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆளுநர்களை பயன்படுத்தி தனது அரசியலை முன்னெடுத்துச் செல்கிறது. அருணாச்சலப் பிரதேசம், உத்தர்கண்ட்மாநிலங்களில் ஆளுநர் மூலம் ஆட்சிகள் கலைக்கப்பட்டன. இச்செயலை உச்சநீதிமன்றம் கண்டித்ததை நாடறியும். தில்லி மாநில அரசின் செயல்பாடு முடக்கப்படுகிறது. கோவா, மணிப்பூர் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கூடுதல்இடங்களில் வெற்றிபெற்றிருந்த போதிலும் சூழ்ச்சி, பண பலம் ஆகியவை மூலம் ஆளுநர் உதவியோடு பாஜக ஆட்சியை கைப்பற்றியது. கேரளம் மற்றும் திரிபுராவில் வன்முறை மற்றும் மதவெறி நடவடிக்கைகள் மூலம் இடது முன்னணி அரசுகளை குறிவைத்து நெருக்கடிகளை உருவாக்கிவருகிறது.தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நடைபெறும் அதிகாரச் சண்டையை பயன்படுத்தி பாஜக காலூன்ற முயற்சிக்கிறது. அதிமுக 3 அணிகளையும் தன்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பாஜக தனது அரசியலை தடையின்றி மேற்கொண்டுவருகிறது. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மூலம் மாநில அரசின் செயல்பாட்டை முடக்கி வருகிறது.

அதன் உச்சமாக துணைநிலை ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏவாக தன்னிச்சையாக பரிந்துரைத்தார். மத்திய உள்துறை அமைச்சகம் 3 பேரையும் நியமனம் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 3 நியமன எம்எல்ஏக்களையும் அவசர அவசரமாக துணைநிலை ஆளுநர் 4ஆம் தேதி இரகசியமாக பதவிப் பிரமாணம் செய்துள்ளார். இது மோடி அரசின் கொடூரமான ஜனநாயக படுகொலையாகும். தொடர்ந்து புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் முயலுகிறது. பாஜக வலுவில்லாத மாநிலங்களில் காலூன்றவும் அதிகாரத்தில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றவும் அதிகாரம், பணபலம், வன்முறைகளைப் பயன்படுத்தி வருகிறது.

இந்தியாவுடன் புதுச்சேரி இணைப்பு

பிரஞ்சு ஏகாதிபத்தியத்திடம் இருந்து புதுச்சேரி பகுதிகள் 1954 இல் விடுதலை பெற்றுஇந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. பிரஞ்சு இந்திய ஒப்பந்தப்படி பிரஞ்சு நாடாளுமன்றம் 1962 இல் புதுச்சேரியை இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல் வழங்கியது. 1962 ஆகஸ்ட்16இல் சட்டப்பூர்வமாக புதுச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்றம் 1963 இல் யூனியன் பிரதேசங்கள் சட்டம் நிறைவேற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை மற்றும் அமைச்சரவை செயல்பட அதிகாரம் வழங்கியது. பொருளாதார வளர்ச்சி மற்றும் மாறியஅரசியல் சூழலுக்கு ஏற்ப யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் இருந்த அருணாசலப் பிரதேசம், சிக்கிம், மிசோரம், திரிபுரா, கோவாஎன அனைத்தும் மாநில அந்தஸ்து பெற்றுவிட்டன. புதுச்சேரியில் அதிகாரப்பூர்வ சட்டப்பேரவை அமைந்து 54 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையிலும் மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை.

மாநில அந்தஸ்து வலியுறுத்தல்

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 1970களிலேயே கூடுதல் அதிகாரம் வேண்டும் என சட்டப்பேரவை மூலம் வலியுறுத்தப்பட்டு வந்தது. 1987 முதல் 2012 வரை 11 முறை மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மாநில உறவுகள் குறித்து சர்க்காரியா கமிஷன்பரிந்துரையில் யூனியன் பிரதேசங்களின் துரித வளர்ச்சிக்கு சட்டம், நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்கள் வழங்க வலியுறுத்தியது. 2005 இல் அமைக்கப்பட்ட மத்திய உள்துறை விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தியது.

ஆனால் மத்தியில் ஆட்சிகள் மாறினாலும் புதுச்சேரியின் நிலைமையில் மாற்றம் இல்லை. புதுச்சேரி மத்திய ஆட்சியாளர்களின் கொள்கை மற்றும் திட்டங்களை பரிசோதிக்கும் சோதனைக் கூடமாக தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. மறுபுறத்தில் ஜனநாயக நெறிமுறைகளை நிராகரித்து தங்களது சொந்த அரசியலை திணித்துவருகிறது. மேற்படி நடவடிக்கைகளால் புதுச்சேரியில் திட்டமிட்ட அரசியல் நெருக்கடியும் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அசாதாரணமான அரசியல் சூழலில் இருந்து புதுச்சேரி மீள வேண்டியது அவசர தேவையாகும். ஆகவே மத்திய அரசு, அரசியல் சார்புடனும், தன்னிச்சையாகவும் செயல்படும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சர்க்காரியா கமிஷன்பரிந்துரைப்படி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவும், மாநில முதல்வரால் பரிந்துரைக்கப்படும் மதிப்புமிக்க 3 நபர்களில் ஒருவரை மாநில ஆளுநராக நியமிக்கவும் மத்திய அரசு முன்வரவேண்டும். மேலும் புதுச்சேரியின் கடன்களை ரத்து செய்திட வேண்டும். இந்த இலக்கை நோக்கி அனைத்துஅரசியல் மற்றும் ஜனநாயக சக்திகளும், ஒன்றிணைந்து மக்கள் இயக்கத்தை உருவாக்க முன்வரவேண்டியது காலத்தின் தேவையாகும். மக்கள் சக்தியால் மட்டுமே மாநில உண்மையை மீட்க முடியும். பிரஞ்சிந்திய விடுதலைப் போராட்ட பாரம்பரியம் கொண்ட புதுச்சேரி மக்களால் மாநில உரிமை வசப்படுவது உறுதி.

கட்டுரையாளர் : தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் சிபிஎம்.

Leave a Reply