கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் தனி வார்ப்புகள்: தனித் தாதுக்களால் ஆக்கப்பட்டவர்கள்; உலகப் பாட்டாளி வர்க்கப் படையின் நேர்நிகரற்ற போர்த்தந்திரியான தோழர் லெனின் அணியில் அங்கத்தினர்கள். இந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதைவிட சிறந்த பெருமை எங்களுக்கு வேறெதுவும் இல்லை. தோழர் லெனினினால் அமைக்கப் பெற்று, அவரது தலைமையில் இயங்கிய கட்சியில், இயக்கிய கட்சியில் உறுப்பினர் என்பதைவிட சிறந்த பெருமை வேறொன்றும் இல்லை. இப்படித் தொடங்குகிறது. லெனின் மறைந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரால் தோழர் ஸ்டாலின் எடுத்துக்கொண்ட சபதம். ஆம்! நாங்கள் தனி வார்ப்புகள், ஏனென்றால் நாங்கள் மக்கள்.
கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் வாழ்க்கையை நேசிக்கிறோம். எனவேதான் மகிழ்ச்சியும், நிறைவும், சுதந்திரமும் கூடிய இலட்சிய வாழ்வுக்கான பாதையை அமைக்கும் பொழுது குறுக்கிடும் தடைகளைத் தகர்த்தெறிவதில் எங்கள் உயிரையும் தியாகம் செய்ய எந்த நேரத்திலும் நாங்கள் தயங்குவதில்லை. அடிமைத்தனம், சுரண்டல் என்னும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு முழந்தாளிட்டு வாழ்தல், வாழ்க்கையே அல்ல. அது மனிதன் என்ற பெயருக்கே அவமானம் தருவதாகும். இந்த அவல வாழ்வில் ஒரு கம்யூனிஸ்டு, ஒரு உண்மையான மனிதன் என்ற வகையில் திருப்தியடைய ஒன்றும் இல்லை. ஒருபோதும் இல்லை. எனவேதான், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் உண்மையான வாழ்வுக்காக நடைபெறும் போராட்டத்தில் எத்தகைய தியாகத்தையும் செய்ய பின்வாங்குவதில்லை.
கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் மனிதனை நேசிக்கிறோம். மனிதத் தன்மையுள்ள எதுவும் எங்களுக்குப் புறம்பானதல்ல. மிகச்சாதாரண மனித இன்பங்களின் மதிப்பை நாங்கள் அறிவோம். அவற்றிலும் நாங்கள் மகிழ்ச்சி காண முடியும். எனவேதான், மனிதன் உழைப்பை மனிதன் பறிக்கும் அராஜக அமைப்பின் கொடுமை யிலிருந்து – அதாவது பயங்கரப் போரின் துன்ப துயரங்கள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய கொடுமைகளிலிருந்து – விடுவிக்கப்பட்டு மகிழ்ச்சியும், நிறைவும், ஆரோக்கியமும், சுதந்திரமும் உள்ள மனிதனுக்கு இந்தப் பரந்த உலகில் ஒரு இடம் அளிப்பதற்காக எங்கள் சுகபோகங்களைத் தியாகம் செய்ய நாங்கள் ஒருபோதும் தயங்குவதில்லை.
இன்பம், அதிக லாபம் மீண்டும் இன்னும் அதிக இலாபம் இதையே குறிக்கோளாகக் கொண்ட ஓர் அமைப்பு மக்களுக்கிடையே நேச உறவு நிலவுவதற்குப் பதிலாக, பண உறவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பை நிலைநிறுத்தப் பார்க்கிறது. அது, மனிதனைக் காட்டிலும் பணத்திற்கே அதிக மதிப்பைத் தருகிற மனிதத் தன்மையற்ற அமைப்பாகும். மனிதனை நேசிக்கிற ஒரு மனிதனுக்கு, ஒரு கம்யூனிஸ்டுக்கு மக்களின் மனிதத்தன்மை பறிக்கப்படுகிற பொழுது, சும்மா இருக்க முடியுமா? முடியாது. எனவேதான் நிறைவும், சுதந்திரமும், பண்பும், பொருந்திய மனிதனுக்காகப் போராடுவதில் தங்கள் முழு வலிமையைப் பயன்படுத்தவோ தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் பின்வாங்குவதில்லை.
கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் சுதந்திரத்தை விரும்புகிறோம். எனவேதான், உண்மையான சுதந்திரத்தை விரிவான சுதந்திரத்தை சுதந்திரம் என்ற வார்த்தைக்கு உரிய இலட்சணங்களோடு கூடிய சுதந்திரத்தை மனித குலம் முழுமையும் பெறுவதற்கான எங்கள் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு தோழர் லெனின் படையின் கட்டுப்பாட்டுக்கு இஷ்டபூர்வமாகப் பணிவதற்கு நாங்கள் ஒரு வினாடியும் தயங்குவதில்லை.
ஒரு சிலருக்கு மட்டுமே சுதந்திரம் – கொள்ளையடிக்க ஒரு தரப்பினருக்குச் சுதந்திரம். மற்றவர்களுக்குப் பட்டினியால் மடிய சுதந்திரம். இவை சுதந்திரம் அல்ல. அடிமைத்தனம். இந்த நிலைமைகளைக் கண்ட பிறகும் வாளா இருக்க ஒரு கம்யூனிஸ்டுக்கு முடியுமா? சில தனிநபர்களுக்கு இதய கீதமாக விளங்கும் அத்தகைய சுதந்திரத்தால் திருப்தி அடைய முடியுமா? முடியாது. ஒருபோதும் முடியாது. எனவேதான் உண்மையான சுதந்திரத்திற்காக, விரிவான சுதந்திரத்திற்காகப் போராடுவதில் தங்களுடைய முழு வலிமையைப் பயன்படுத்தவோ தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் தயங்குவதில்லை.
கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் ஆக்க வேலையை நேசிக்கிறோம். எனவேதான் மனிதனின் மகத்தான சிருஷ்டி சக்திகளுக்குக் குறுக்கே நிற்பவற்றைத் தகர்த்தெறிய ஒரு விநாடியும் தயங்குவதில்லை.
ஆயிரம், பல்லாயிரக் கணக்கான திறமையுடைய மனிதர்கள் மனித கலாச்சாரத்தைப் பல மடங்கு பெருக்கியிருக்க முடியும். மனித ஸ்தாபனத்தைச் சீர்திருத்தியிருக்க முடியும். மனிதன் தொழில் நுட்ப சதானங்களைக் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயர்த்தியிருக்க முடியும். அத்தகைய திறமைகள் இன்று பாழ்பட்டுக் கிடக்கின்றன. மனித குலத்திற்குத் தேவையுள்ள அனைத்தையும் ஏராளமாக அளிக்கும் திறமையும், வலிமையும் படைத்த ஆயிரம் ஆயிரம் கரங்கள் இன்று வேலையின்றி, சோம்பிக்கிடக்கின்றன. அடிக்கடி நிகழ்கின்ற நெருக்கடியான காலங்களில், அத்தகைய கரங்கள் சோம்பிக் கிடக்கும்படி நிர்பந்ததிக்கப்படுகின்றன. இதனால், மனித சமுதாயத்திற்கு நேரிடுகிற நஷ்டத்தைத் தடுக்காமல் உட்கார்ந்திருக்க ஒரு கம்யூனிஸ்டுக்கு எப்படி முடியும்? முடியாது. எனவேதான், மனித குல சிருஷ்டி சக்திகள் அனைத்தையும் முழுமையையும் பயன்படுத்தி முழு வளர்ச்சி அடையும்படி செய்யும் ஒரு அமைப்பைப் பெறுவதற்கான போராட்டத்தில் தங்கள் முழு வலிமையைப் பயன்படுத்தவோ தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் தயங்குவதில்லை.
கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் சமாதானத்தை நேசிக்கிறோம். எனவேதான் நாங்கள் போராடுகிறோம். போர் மூளுவதற்கான சூழ்நிலைகள் அனைத்தையும் நாங்கள் எதிர்த்துப் போராடுகிறோம். சில தனி நபர்களின் சொந்த நலன்களுக்காக நடைபெறும் பயங்கரப் போரில் கோடிக்கணக்கான மக்கள் மாண்டு மடிவற்கும் மனித வாழ்வுக்கு அவசியமான செல்வங்களை அழிப்பதற்கும் காரணமாகும் ஒரு குற்றவாளி கூட இல்லாத உலக அமைப்புக்காக நாங்கள் போராடுகிறோம். ஒருவாய்ச் சோற்றுக்காக மனிதனை எதிர்த்து மனிதன் சண்டை போட வேண்டிய நிலைமை எங்கே இருக்கிறதோ அங்கே சமாதானம் இருக்காது. இருக்கவும் முடியாது. எனவேதான் உண்மையான சமாதானத்திற்காக, மனித சமுதாயத்தின் புதிய ஸ்தாபனத்தால் உத்தரவாதம் செய்யப்படும் சமாதானத்திற் காகப் போராடுவதில் தங்கள் முழு உரிமையைப் பயன்படுத்தவோ தியாகம் செய்யவோ கம்யூனிஸ்டுகள் தயங்குவதில்லை.
கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் எங்கள் நாட்டைநேசிக்கிறோம். ஏனென்றால், எந்வொரு நாடு அடக்கி ஒடுக்கப்பட்டாலும் மனிதனின் ஆக்க சக்திகள் சுயேட்சையாக வளர்ச்சி அடைய முடியாது; இறுதியான சமாதானத்திற்கு உத்தரவாதம் இருக்காது. ஒரு நாடு மற்றொரு நாட்டை அடக்கி ஆண்டால் உண்மையான சுதந்திரம் இருக்க முடியாது. நமது மாபெரும் இலட்சியங்களை நாட்டின் ஜீவித அமைப்புக்குள்ளேயே அடைய விரும்புகிறோமே தவிர, அதற்கு அப்பாற்பட்டல்ல. இல்லாவிட்டால் அவை எதார்த்தமாக முடியாது.
உண்மையான புதல்வர்களின் நேசத்தோடு நாங்கள் தாய்நாட்டை நேசிக்கிறோம். எனவேதான் மனிதகுல மேன்மைக்காகவும் வளர்ச்சிக்காவும் எங்கள் நாடு வழங்கிய, இன்னும் வழங்குகிற எல்லா காரியங்களுக்காகவும், அதன் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் உதவியாக உள்ள அனைத்திற்காகவும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் நாட்டை இழிவுபடுத்துகிற கொள்ளையிட விரும்புகிற, அதன் இரத்தத்தை உறிஞ்சுகிற, அதை பலவினப்படுத்துகிற அனைத்தையும் நாங்கள் அழித்து விட விரும்புகிறோம். எனவேதான், உலகில் சுதந்திரம் பெற்ற சமத்துவ நாடுகளின் மத்தியில் சம அந்தஸ்த்தோடு சுயேட்சையாக வாழும் பொருட்டு எங்கள் நாட்டின் பரிபூரண விடுதலைக்கான போராட்டத்தில் எங்கள் முழு வலிமையை ஈடுபடுத்தவோ சர்வ பரிதியாகம் செய்யவோ நாங்கள் தயங்குவதில்லை. நாங்கள் நிறைவேற்ற வேண்டிய வேலைகள் மகத்தானவை.
மகிமை வாய்ந்த உலகப் பாட்டாளி வர்க்கப் போர்த்தந்திர நிபுணரின் பட்டாளத்தைச் சார்ந்த – தோழர் லெனின் பட்டாளத்தைச் சார்ந்த – நாங்கள் இப்பொறுப்புக்களை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆகவே, இந்தப் பட்டாளத்தின் ஒற்றுமையையும், தூய்மையையும் கம்யூனிஸ்டு கட்சியின் ஒற்றுமையையும், புனிதத் தன்மையையும் கண்ணின் கருமணி போன்று பாதுகாப்பது, மனித குலத்தில் சிறந்தவர்களையும், நாட்டின் சிறந்த சக்திகளையும் மேலும், மேலும், திரட்டுவது, எங்கள் கூட்டாளிகளின் எண்ணிக்கையை மேலும் மேலும் அதிகரிப்பது, வரலாற்றின் வளர்ச்சி எதை நோக்கிச் செல்கிறது. தங்களின் ஜீவாதார நலன்களுக்காக அது மக்களிடம் வேண்டி நிற்பது என்ன என்பவற்றை இடைவிடாது உணர்த்தி மக்களுடன் ஒன்றுகலந்து சலிப்பின்றி பொறுமையோடு அவர்களுக்கு வழிகாட்டுவது, உண்மையான உணர்வு, தைரியம், கருத்தில் உறுதி, தியாகம், சஞ்சலம் இன்மை ஆகிய சிறந்த மனிதப் பண்புக்கு இருப்பிடமாக விளங்குவது போன்றவையே நாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும்.
கம்யூனிஸ்டு தோழர்களே! இது உங்களுக்கும் பொருந்தும்! ஏனென்றால், நீங்கள் லெனின் படையைச் சேர்ந்தவர்கள். நீங்கள் எந்தப் பகுதியில் வேலை செய்து கொண்டிருப்பினும், மனிதகுலத்தின் விடுதலைக்காகப் புரட்சியின் எந்த அரணில் நின்று போராடிக் கொண்டிருப்பினும், தன்னந்தனியாக கடமையைச் செய்து கொண்டிருப்பினும், கொடிய வர்க்கங்களால் இருண்ட சிறைகளில் பூட்டப்பட்டிருப்பினும் ஒவ்வொரு நாளும் உங்கள் செயல்களையும், எண்ணங்களையும் விமர்சனம் செய்யுங்கள். மாபெரும் லெனின் பட்டாளத்தில் ஒரு போர் வீரனாக இருக்க நான் தகுதி உள்ளவனா? தோழர் ஸ்டாலின் பெயரால் எடுத்துக்கொண்ட சபதத்தை விசுவாசத்துடன் மரியாதை செய்யத் திறமை உள்ளவனா? வரலாறு நம் மீது சுமத்துகிற எதிர்காலக் கடமைகளை நிறைவேற்றக் கூடிய அளவுக்கு நான் வளர்ச்சி அடைந்திருக்கிறேனா? இவையே நாம் விமர்சனம் செய்ய வேண்டிய எண்ணமும் செயலும் ஆகும்.
எங்களிடம் அனுதாபம் உள்ள நண்பர்களே! அது உங்களுக்கும் பொருந்தும். போராடுகிற மக்கள் அணியில் நீங்கள் எங்கு நின்றாலும் எந்தப் பகுதியில் இருந்தாலும் உங்கள் அனுதாபத் தைச் செயலில் காட்டுவது எப்படி, கட்சியோடு நெருங்கிய தொடர்புகொள்வது எப்படி? என்பனவற்றைப் பற்றி அடிக்கடி சிந்தியுங்கள். அவ்வாறு சிந்திப்பதனால் கட்சியின் அணிவகுப்பு முன்னேறிச் செல்லும் பொழுதும், அதனுடன் சேர்ந்து நீங்களும் முன்னேற முடியும். அதனால், உங்களுக்கு வழிகாட்டியாக இருந்து கொடிய போரில் உயிர் நீத்த தியாகிகளுக்குப் பதிலாக நீங்களே கட்சி அணியில் இடம்பெறுவீர்கள்.
சமீப காலம் வரை எங்களைப்பற்றி அறிந்து கொள்ளாதவர்களுக்கும், எங்களுக்கும், கட்சியை சந்தேகத்துடன் பார்த்து வந்தவர்களுக்கும், ஹிட்லரின் நாசகார கும்பலை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நின்றவர்களுக்கும் இது பொருந்தும். நீங்கள் மிக உன்னிப்பாக எங்களைக் கவனித்து வருகிறீர்கள். எங்கள் செயல்களைக் கூர்ந்து கவனிக்கிறீர்கள். ஆம், வெகுநுட்பமாக கவனியுங்கள். எங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் பாருங்கள். எங்களுடைய ஒவ்வொரு செயலையும் அலசி அலசி ஆராயுங்கள், விமர்சியுங்கள்.
உங்களுக்குத் தெரியாமல் மறைக்க வேண்டியது ஒன்றுமில்லை. மக்களுக்குத் தெரியாமல் மூடிமறைக்க வேண்டியது யாதொன்றும் எங்களுக்கு இல்லை. உங்களுக்கு முன்னால் நாட்டு மக்களுக்கு முன்னால் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் மிகக்கடுமையான அக்கினிப் பரிட்சையில் நாங்கள் இறங்கியிருக்கிறோம்.
நாங்கள் போரில் புறமுதுகு காட்டினோம் என்றோ, ஏதோ ஒன்றில் தவறினோம் என்றோ, எங்களின் நேர்மையற்ற விரோதி கூட சொல்லத் துணியமாட்டான். கூர்ந்து கவனியுங்கள். இதற்கான காரணத்தை அறிவீர்கள். உலகின் பெரும் பகுதி இன்றைக்கு எங்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்.
மனிதகுலம் சுதந்திரமாகவும், சமாதானமாகவும், ஆனந்தமாகவும் வாழ்வதற்கு நாங்கள் கடைபிடிக்கும் வழியைத் தவிர, வேறு வழியே இல்லை. எங்களுடன் வராத ஒருவன் தனக்கே விரோதமாகப் போகிறான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்!
ஜூலியஸ் பூசிக்