கட்சியின் செயற்குழு கூட்டம் தோழர் இரா.இராஜாங்கம் தலைமையில் 25.10.2014 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க – மழையின் பாதிப்பை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுத்திடுக
வடகிழக்கு பருவமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. விவசாய பயிர்களான நெல், மரவள்ளி ஆகியவை அழுகிவிட்டன. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சில குடியிருப்புகள் இடிந்துவிழுந்தும், சேதமடைந்தும் உள்ளன. முறைசாரா தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடரும் நிலையில் மழைப்பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மாநில அரசு கிராமப்புறங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால், நகரப்பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியிருந்தால் மழைநீர் பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்க முடியும். மாநில அரசு மழைக்காலத்தை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத்தவறியது கவலையளிப்பதாகும்.
ஆகவே, மாநில அரசு, விவசாய பயிர் சேதங்களை முழுமையாக மதிப்பீடு செய்து முழு நிவாரணத் தொகையை வழங்கிட வேண்டும். இடிந்து விழுந்துள்ள, சேதமடைந்த வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மழைநீர் பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாத்திட உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத் துறை இணைந்து செயல்பட போர்கால நடவடிக்கைகளை மாநில அரசு துவங்கிட வேண்டும். பாகூர் கொம்யூன் குமுந்தாமேடு கிராமத்தில் ஆற்று நீர் தேக்கத்திற்காக கட்டப்பட்ட தடுப்பணை சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்களை காவல்துறை விரைந்து கைது செய்திடவும் மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயற்குழு வலியுறுத்துகிறது.
இலவச வேட்டி சேலைக்குப் பதிலாக பணம் வழங்கும் திட்டத்தை கைவிடுக :
புதுச்சேரி ஆதிதிராவிடர் மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச வேட்டி சேலைத் திட்டம் செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கு பணமாக வழங்குவதும், நபர் ஒருவருக்கு குறைந்த தொகை ரூ.300 வழங்குவதும் பொருத்தமற்றதாகும். பணம் வழங்குவதால் பயனாளிகள் வேறு செலவினங்களுக்கு பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். பலர் மதுக்கடைகளில் செலவழிப்பார்கள்.
ஆதிதிராவிடர் மக்களுக்கு தீபாவளி பண்டிகையின் போது பாண்டெக்ஸ், பான்பேப் நிறுவனங்களில் இருந்து ஆடைகள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வந்தது. இதனால் அனைவருக்கும் தரமான கைத்தறி ஆடை வழங்கப்பட்டது. கைத்தறியும் பாதுகாகப்பட்டது. தொலைநோக்கு பார்வையோடும், சமூக பொருளாதார வளர்ச்சியுடனும் இணைந்த இத்திட்டத்தை முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சீரழிக்கப்பட்டது. தனியார் ஜவுளி நிறுவனத்திடம் துணிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில் மிகப்பெரும் முறைகேடுகள் நடந்ததை மக்கள் அறிவார்கள். தற்போது என்.ஆர். காங்கிரஸ் அரசு ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வேட்டை சேலைத் திட்டத்திற்கு பதிலாக பணமாக வழங்கப்படுவது திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைப்பதாகும்.
ஆகவே, அனைத்து ஆதிதிராவிடர் மக்களுக்கும், தரமான பாண்டெக்ஸ், பான்பேப் கூட்டுறவு நிறுவன்ங்கள் மூலம் கைத்தறி துணிகளை கொள்முதல் செய்து வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயற்குழு வலியுறுத்துகிறது.
இவண்
{ வெ. பெருமாள் }
பிரதேச செயலாளர்